திங்கள், 29 ஏப்ரல், 2013

என்னுடைய கிராமம் - கீழுர் - பெயர் காரணம்.


நான் முதன்முதலில் எழுதிய ஒரு கட்டுரை. எனது ஊர் (My Village) என தலைப்பு கொடுத்து எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போதைய கீழுர் கிராமத்திற்க்கு பாளையக்காரர்களின் வரவையும், கீழுர் கிராம உருவாக்கத்தையும் ஏற்க்கனவே எனது ஊர் : கீழூர் - சிங்கநகர் (செவி வழிச் செய்தி) எனும் பதிவில் எழுதியிருந்தேன். மேலும் கீழுருக்கான பெயர் காரணம் தெரியாது எனவும் தெரிவித்திருந்தேன். இப்போது கீழூருக்கான பெயர் காரணம் அறிந்துகொண்டேன். அதை உங்களுடன் பகிர்கிறேன்.



கீழுர் பாளையக்காரர்களின் வருகைக்கு முன்னர் ஆயிபேட்டை, கீழுர், நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, விழப்பள்ளம், எல்லப்பன்பேட்டை, கோயில்குப்பம், பாச்சாரபாளையம் முதலான கீழுர் பாளையக்காரர்களுக்கு சொந்தமான எட்டு கிராம பகுதிகளும் வடகுத்து ஜமீனுக்கு சொந்தமானவைகளாக இருந்தன.

இப்பகுதிகளில் யாதொன்றை செய்வதற்க்கும் வடகுத்து ஜமீனின் அனுமதி பெற வேண்டும். மேற்சொன்ன எட்டு கிராமங்களும் சூழ்ச்சியால் கீழுர் பாளையக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. ஆனால், வழக்கமாக அனுமதி பெற வடகுத்து ஜமீனை மக்கள் அனுகும்போது “கீழையூராரிடம்” அனுமதி பெற வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

அதாவது வடகுத்து கிராமத்திற்க்கு கிழக்கு திசையில் இருக்கும் ஊரில் உள்ள பாளையக்காரரிடம் அனுமதி வாங்கிகொள்ளுங்கள். அப்பகுதிகளை ஆளும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்திருக்கிறார்.

இப்படியாக வடகுத்துக்கு கிழக்கில் இருக்கும் ஊர் கீழையூர் என்பது மருவி கீழூர் என மாறியுள்ளது.

வியாழன், 11 ஏப்ரல், 2013

மறுமொழி மற்றும் பின்னூட்டமிட பயமாயிருக்கிறது..!!?


வணக்கம்,

எந்த ஒரு பதிவிற்க்கும் பின்னூட்டமிடுவதற்க்கு முன் அதிகமாக யோசிக்க வேண்டியுள்ளது. நேர்மறை பின்னூட்டத்திற்க்கு பெரிதாக யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எதிமறை பின்னூட்டத்திற்க்கு நிச்சயமாக யோசித்தே ஆக வேண்டும்.

அதுவும் பல கட்டமாக யோசிக்க வேண்டும். முதலில் பதிவர் பிரபலமானவரா..!!? என்பதை அறிய வேண்டும். ஏன் சொல்றேனா..!!? பல பிரபல பதிவர்கள் நம்ம மறுமொழிக்கு எப்படி பதில் சொல்லுவாங்கனே தெரியாது. பொதுவா நெறைய பேர்கிட்ட ஒரு நக்கல் இருக்கு. அவங்க பதிவு பத்தின நம்மளோட புரிதல் தப்புனா.. நீங்க தவறாக புரிஞ்சிகிட்டு இருக்கீங்கனுகூட சொல்லமாட்டாங்க.. நம்மள காய்ச்சிடுவாங்க.. அதுவும் அவங்களுக்கு தமிழ் கொஞ்சம் நல்லா தெரிஞ்சிட்டா அவ்ளோதான்.. வெகுவாக உங்களை பாதிக்ககூடிய அதே சமயம் மென்மையான வார்த்தையை போன்ற வன்மையான வார்த்தைகளை பிரயோகித்து கிழி கிழினு கிழிச்சிடுவாங்க.

இங்கு எதிர்மறை கருத்துகளுக்கு மென்மையான பதிலளிப்போர் மிக்க் குறைவு. நீங்கள் எதிர் கருத்தை பதிவு செய்கிறீர்கள் என்றால் அதற்க்கு உங்களை திட்டுவதைப் போலவே பதிலளிப்பர். இரு மாதிரியான நிலைகொண்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவர்.

தமிழில் பாடல்களுக்கு சுவை கூட்ட வஞ்ச புகழ்ச்சி அணி என்ற ஒரு அணி இருக்கிறது. அவ்வணியை உரைநடையில் மிகச் சிறப்பாக இவர்கள் பயன்படுத்துவதை காணலாம். ஆகமொத்தம் நீங்க அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் எதிர்கருத்தை நிறுத்த வேண்டும். இன்னும் ஒரு சிலபேரு இருக்காங்க உங்களோட மறுமொழியை சீண்டவேமாட்டாங்க. இல்லனா உங்களுக்கு விளக்கம் சொல்றேன்ற பேருல திட்டுவாங்க.



“மாப்புள இவந்தான் எங்கயோ செமத்தியா வாங்கியிருக்கான். இங்க வந்து வேற எவனோ வாங்குனா மாதிரி அவுத்துவிடுறான் பாத்தியா..!!”   அப்படினு நீங்க நெனைக்கறது எனக்கு தெளிவா கேக்குது. சொல்றன்..

ஒரு மூனு நாலு மாசத்துக்கு முன்னாடினு நெனைக்கிறன், நான் ஒருத்தரோட பதிவுல ஒரு எதிர்மறை மறுமொழி எழுதினேன். எழுதினதுக்கு அப்புறம் ஏன்டா எழுதினோம்னு ஆகிபோச்சு.. சேதி என்னனா, அவரு தன்னோட வலைப்போவோட தலைப்பை தான் சார்ந்த வருணாசிரம வகுப்பின் படி மாத்தி ஒரு பதிவு எழுதியிருந்தாரு. நான் எனக்கே சொந்தமான தெரிஞ்ச கொஞ்சோண்டு அறிவை வைத்துக்கொண்டு ஒரு கேள்வி கேட்டேன். “ ஏங்க நீங்க இந்த மாதிரி சொல்றதால மத்தவங்கள இழி பிறவிகள்னு சொல்ற மாதிரி ஆகாதானு ” கேட்டேன்
அவ்ளோதான்.. இதுல நான் கேட்ட கேள்வியில எழுத்து பிழை வேற இருந்துடுச்சி, அதையும் குத்திகாட்டி பேசினாரு. நான் அந்த பதிவிற்க்கு என் கருத்தை பதிந்ததை நினைக்கும் போது இப்பவும் எனக்கு அருவெறுப்பா இருக்கு..

“என்னங்க இது, நான் உங்ககிட்ட என்ன கேட்டேன் நீங்க ஏன் இப்படி பேசுரீங்கனு கேட்டன்” இதுக்கும் சரியான பதில் இல்லை. என்ன.., ஏற்கனவே சொன்ன பதிலுக்கு இது கொஞ்சம் தேவலாம்னு இருந்துச்சு. அதுக்கு மேல பதில் எழுத எனக்கு புடிக்கல.. அதுக்கு அப்புறம் அந்த பக்கத்துக்கு போறதையே விட்டுடேன்.

அதனாலேயே எந்த பதிவுக்கும் மறுமொழி எழுத ரொம்ப பயமா இருக்கு..



ஏம்பா பிரபல பதிவர்கள் யாரும் மென்மையா பதிலளிக்காத மாதிரியே சொல்றியேனு நீங்க கேக்கலாம். இருக்காங்க, மென்மையா பதில் சொல்றவங்க கொஞ்சம் பேரு இருக்காங்க. ஒரு ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒரு பதிவர் சாதி பத்தின தன்னோட நிலைபாட்டை ஒரு பதிவா எழுதியிருந்தாரு. அவர போட்டு பிய்யு பிய்யுனு பிச்சி எடுத்துட்டாங்க. ஆனால், அவரு எந்த எதிர் கருத்துக்கும் வன்மமான பதிலை அளிக்கவில்லை. அவரு பேர மறந்துட்டேன். அடுத்து இன்னொருத்தர், இவர் ரொம்ப பிரபலமானவர். செங்கொடி நு பேரு. பொது சேதிகளையும், இசுலாம் பத்தின தனது நிலைப்பாட்டையும், புரிதலையும் எழுதி வருகிறார். இவரது பதிலுரைகளும் மிக நேர்த்தியாக இருக்கும்.

இன்றைய பதிவுலகத்தில் பகிர்தல் என்ற எண்ணத்தில் பதிவுகள் எழுதப்படுவது இல்லை. நான் ஒரு நிலை கொண்டுள்ளேன். என் நிலை சரி என்பவன் என்னுடன் வா. தவறு என்பவன் சரியென உணர்ந்து என்னுடன் வா. இல்லையேல் விலகிப் போ என்பதே இன்றைய பதிவுலக நிலை. யாரும் தான் கொண்டுள்ள நிலை குறித்து பகிர்ந்து, விவாதித்து திருத்திக்கொள்ள மாற்றிக்கொள்ள தயாராக இல்லை. பதிவுலகிலும் அடுத்தவருக்கு உபதேசிக்கவே விரும்பிகின்றனறே தவிர உபதேசம் பெற யாரும் இல்லை.

இரண்டாவதாக நான் பார்க்கறது பதிவர் முதியவரா என்று. இவங்கலாம் வாழ்வியல் அனுபவசாலிகள். இவங்ககிட்டலாம் கொஞ்சம் தள்ளி இருக்கறதே நல்லது. வயசான காலத்துல தங்களின் மன அமைதிக்காக பதிவெழுதுபவர்கள் பலர் உண்டு. இவர்கள் பொதுவாக எப்பொழுதுமே சரியாகவே இருப்பார்கள். பொதுவாகவே அடுத்தவர்களை விமர்சிப்பதை தவிர்ப்பவர்கள். எனக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. இவர்கள் மிகவும் பெரியவர்கள், நான் ரொம்ப சின்ன பையன் இவங்க நம்மளையெல்லாம் மதிப்பாங்களானு..!!?. அதே சமயம் நான் எதாவது எடக்கு மடக்கா சொல்லி அவங்கள கடுப்பேற்றிவிடுவேனோனு ஒரு பயம். அதனாலேயே எந்த கருத்தும் இடுவதில்லை. அவர்கள் பதிவு பிடித்திருந்தால் ஒரு விருப்பம்(தமிழ்மணம், தமிழ்10, ...) தெரிவிப்பேன். ரொம்ப புடிச்சிருந்தா முகநூலில் பகிர்ந்துகொள்வேன்.

சரி, அப்ப யாருக்குதான்டா மறுமொழி இடுறதுனு கேக்கறீங்களா..? சொல்றன்.

“மனோபாலா : கொஞ்சம் ஓபனா பேசலாமா பாஸ்கர்,
பாஸ்கர்      : சொல்லுங்கண்ணே..
மனோபாலா   : நாம யார அடிச்சிருக்கோம்
பாஸ்கர்      : எவ்ளோ..
மனோபாலா   : கோயில் குருக்கள், தமிழ் வாத்தியாரு, பழைய துணிக்கு பக்கெட் விக்கிறவன். இப்படி சாஃப்ட் கேரக்டரா போட்டு அடிச்சி ரவுடியா டெவலப் ஆயிருக்கோம்”


நானும் அதையேதான் சொல்லுறன். நமக்குனு ரெண்டு வகையான புள்ள பூச்சிங்க இருக்குங்க. ஒன்னு புதுசா பதிவு எழுத வந்திருக்கிற புதுவரவு சின்ன பசங்க புள்ள பூச்சி. இந்த வகை புள்ள பூச்சிங்க அதிகமா பயப்படும். ஒரு சில புள்ள பூச்சிங்கதான் திடீர்னு வெவரம் பத்தாம பேசிடும். அதுவும் போக போக திருந்திடும். ஆனால், ஒரு எச்சரிக்கை வளர வளர புள்ள பூச்சி, புள்ள பூச்சியா இருக்காது..!!

இந்த ரெண்டாவது வகை புள்ள பூச்சிதாங்க நமக்கு எல்லா கால நிலைகளிலும் ஏத்தது. இருக்கறதுலேயே ரொம்ப சாதுவான புள்ள பூச்சிங்க இதுங்கதான். புள்ள பூச்சினாலே எந்த தொந்தரவும் கொடுக்காது, கடிக்காதுனு நமக்கு தெரியும். அதுலயும் இதுங்க பரம சாது. பொதுவா புள்ள பூச்சிய அடிக்க கூடாதுனு சொல்லுவாங்க. இந்த புள்ள பூச்சிங்கள பாத்து ஒரு வார்த்தைகூட கடினமா பிரயோகிக்க நமக்கு மனசு வராது. யாருனு கேக்கறீங்களா.. அதாங்க கவிதை எழுதறேன்ற பேருல கண்ணு, காது, மூக்கு, வாயினு எல்லா பாகத்திலேருந்தும் இரத்தம் வர்ற அளவுக்கு எழுதுவாங்களே அவங்கதான். கவிதை எழுதற புள்ள பூச்சிதானேனு அவங்களோட அரசியல் பக்கத்துக்கு போயிடாதீங்க.. அங்கயும் இவங்க அதே மாதிரிதான் இருப்பாங்கனு என்னால உத்திரவாதம் கொடுக்க முடியாது.

குறிப்பு : நான் யார் மனமாவது புண்படும்படி எழுதியிருந்தால் தயவுகூர்ந்து பொருத்தருளவும்.

வெள்ளி, 22 மார்ச், 2013

என் அன்பு கோவை மின்சார வாரியத்திற்க்கு..


என் அன்பு கோவை மின்சார வாரியத்திற்க்கு,
               ஒரு கடுமையான தாழ்மையான.. யோவ் உங்கள கெஞ்சி கேட்டுகறன்.. தயவுசெஞ்சி இரவு நேரத்துல மின்சாரத்தை நிறுத்தாதீங்க..

முடியல...

அலுவலக நேரம் முடிஞ்சி உணவகம் போய்ட்டு சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்பும்போது சரியா மணி 10 ஆகிடும். அறைக்கு உள்ள நுழஞ்சு மின்விசிறி இணைப்பை கொடுக்கறதும் நீங்க மின்சார இணைப்பை துண்டிக்கிறதும் சரியா ஒருசேர இருக்கு.

அடுத்த 1 மணி நேரத்துக்கு மின் இணைப்பு இல்லை. 11 மணி வரைக்கும் காத்திருக்கனும். கதவை திறந்து வச்சிட்டு உள்ள தூங்க முடியாது; கொசு கொன்னுடும். சாத்திவச்சிட்டும் தூங்க முடியாது; வேர்த்து விறுவிறுத்துடும்.

கதவை சாத்திட்டு வெளிய வந்து மீண்டும் மின்சாரம் வரும் வரை மொட்டைமாடியில் உலாவிகிட்டு இருப்போம். சரியா 11 மணிக்கெல்லாம் மின்சாரம் வந்திடும். உடனே உள்ள போயி மின்விசிறிக்கு இணைப்பு குடுத்திட்டு, எல்லா ஒளி விளக்குகளையும் அணைச்சிட்டு படுத்திடுவேன்.

எனக்கு படுத்த உடனே தூக்கம் வராது. அதிகபட்சம் ஒரு அரைமணி நேரம் ஆகும். 11.30 மணிக்குள்ள தூங்கிடுவேன்னு வச்சிக்கோங்களேன். இதுல என்னடா பிரச்சனைனு கேக்கறீங்களா..!!? இதுவரைக்கும் இருந்தது பெரிய பிரச்சனை இல்ல இனிமேதான் பிரச்சனையே..!!!

சரியா 12 மணிக்கெல்லாம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அடுத்த 5, 10 நிமிசத்துல முழிச்சுக்குவன். கிட்டதட்ட அரை மணி நேரத்துக்கு தூங்கிட்டதால வெளிய எழுந்துபோக மனசு வராது. உள்ளேயே படுத்து தூங்கவும் முடியாது. அறையில் விசிறி மட்டையும் கிடையாது.

மறுபடியும் மின்சாரம் வரும்வரை கையாலேயே முகத்துகிட்ட விசிறிகிட்டு காத்திருப்பேன். அலுவலகத்திலிருந்து ஏற்க்கனவே சோர்வாக வந்திருக்கும் எனக்கு தூக்கமும் கெட்டு அதீத சோர்வுடன் இருப்பேன். 1 மணிக்கு மின்சாரம் வரும் அதிகப்படியான களைப்புடன் இருப்பதால் அடுத்த 5 நிமிசத்துல தூங்கிடுவேன். இதுக்கு அப்புறம் எப்ப மின்சாரம் போகும் வரும்னெல்லாம் தெரியாது. உடம்பு அதிக களைப்போட இருக்கறதால ஆழ்ந்த தூக்கத்துக்கு போயிடுவேன்னு நெனைக்கிறேன்.

விடிஞ்சதும் காலைல 6.45க்கு நண்பர் தேனீர் தயாரித்துவிட்டு எழுப்புவார். எழுந்திருக்கும்போது மின்சாரம் இருக்கானு பார்ப்பேன். இருக்கும். வாய் கொப்பளித்துவிட்டு வந்து தேனீர் அருந்திவிட்டு திரும்பும்போது மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கும் சரியாக 7 மணியளவில். மீண்டும் மின்சாரம் வராது. உடைகளுக்கு இஸ்த்திரி போட முடியாது. நான் 9.30க்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

பொதுவா எல்லோருடைய வீடும் இந்த காலை 6 – 9 மணி வரைக்கும் ரொம்ப சுறுசுறுப்பா இருக்கும். இந்த நேரத்துல மின்சார தேவை பல வீடுகளில் அவசியமானதா இருக்கும். இந்த நேரத்துல மின்சாரத்தை துண்டிச்சு ஏன்யா கடுப்பேத்துறீங்க..!!?

எனக்கு காலைல கூட பெருசா பிரச்சனை இல்ல. ஆனா, இராத்திரி நேரத்துல மின்சாரத்தை துண்டிக்கும்போது வரும் பாருங்க ஒரு கடுப்பு..!! அடிமட்டத்திலேருந்து “Line Man,”Wire Man”,”AE”,”JE”, மின்சாரத்துறை அமைச்சர்  நத்தம் விஸ்வனாதன்னு முதலமைச்சர் ஜெயலலிதா வரைக்கும் கன்னா பின்னானு மோசமான வார்த்தைகளால திட்டனும் போல இருக்கும். உங்களோட நல்ல நேரம் எனக்கு அந்தமாதிரியான வார்த்தைகள் இதுவரைக்கும் பேசி பழக்கம் இல்ல. அதனால தப்பிசிட்டீங்க.

இருந்தாலும் உங்கள விடமாட்டேன். நல்லா கொடூரமா மோசமான வார்த்தைகள பேச தெரிஞ்சவன கூப்பிட்டு வந்து ஒரு 10 ரூபாயை கொடுத்து ஒரு அரை மணி நேரம் உங்க எல்லோரையும் காதே புளிச்சி போற அளவுக்கு கேவலமான வார்த்தைகளால பேச சொல்லுவேன்னு எச்சரிக்கிறேன்.

நல்லாதான போய்கிட்டு இருந்துச்சி இப்ப திடீர்னு உங்களுக்கு என்ன ஆச்சு..!!?

என்னுடைய கோரிக்கையை மீண்டும் ஒரு முறை உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன். தயவுசெய்து இரவு நேரங்களில் மின்சாரத்தை துண்டிக்காதீர்கள்.

இப்படி நான் அல்லல்படும் பகுதி கோவை சிங்காநல்லூர் ESI  மருத்துவமனை பகுதி ஆகும். எனது கோரிக்கைக்கு ஆவண செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
நான் (ME).

வியாழன், 7 மார்ச், 2013

தொல்.திருமாவளவன் : பேச்சும் எனது எண்ணமும்.

//**
மக்களவையில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசினார்.
 
அவர்,  ‘’அனைத்துக் கட்சி நண்பர்களும் இங்கு பேசும்போது ஈழத்தமிழர்கள் படும் அவலத்தை எடுத்துச் சொன்னார்கள். இலங்கையை கண்டித்தால் இருநாட்டு நட்புறவு பாதிக்கும் என்று இந்தியா கவலைப்படுகிறது. அங்கே ஒரு இனம் அழிந்து வருவது பற்றி நாங்கள் கண்ணீர் வடிக்கிறோம். எனவே, இனியும் இலங்கையை நட்பு நாடாக இந்தியா கூறி வருவது வேதனை அளிக்கிறது.
 
ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்றபோது அவரை கொலை செய்யும் நோக்கில் தாக்க முயன்ற அந்த சம்பவம் வெட்கக்கேடானது. ராஜீவ்காந்தி-ஜெயவர்தனே ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கு மாநிலங்களைச் சேர்த்து ஒரே மாநிலமாக அமைக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், சிங்கள அரசு அதனை வடக்கு, கிழக்கு என தனி மாநிலங்களாக பிரித்ததன் மூலம் ராஜீவ் ஒப்பந்தத்தை மதிக்கவில்லை.


தமிழக மீனவர்கள தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். இதுவரை ஏராளமான மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியாகியிருக்கிறார்கள். நேற்று கூட துப்பாக்கி சூட்டில் நாகை மீனவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். 30 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இன்னும் வாடுகிறார்கள். இதுதான் நட்பு நாட்டின் இலக்கணமா?


இன்னைக்கு நீங்க எனக்கு ரொம்ப புடிச்ச மாதிரி பேசியிருக்கீங்க..
 
அங்கு இலங்கை அரசு மனிதநேயத்துடன் நடந்துகொள்ளவேயில்லை. இலங்கை நடத்தியிருப்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல, ஒரு இனத்தையே அழிக்கும் செயல். தமிழ் இனம் முழுவதையுமே அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ராஜபக்சே அரசு நடந்துகொண்டிருக்கிறது.


ரொம்ப தாமதமா இந்திய நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ள வாசகங்கள் இவை. இருந்தபோதிலும் உமக்கு நன்றிகள்..
 
இந்தியா ஒரு பெரிய நாடு. இலங்கையில் நடந்து வரும் இந்த படுகொலைகளை ஏன் இன்னும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்? ஜெனிவா மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று அனைவரும் சொல்கிறார்கள். அது ஒரு உப்புச்சப்பு இல்லாத தீர்மானம். தமிழர்கள் நச்சுக்குண்டு வீச்சில் அழிக்கப்பட்டனர்.
 
எனவே, இந்த கொலைகாரர்கள் சர்வதேச நீதிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இந்தியா இந்தப் பிரச்சினையில் தலையிட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். இன்னும் தலையிடாமல் இருக்கக்கூடாது.


இதை நீங்க உண்மையிலேயே உங்க உள்மனசுலேர்ந்து சொல்றீங்களோ இல்ல அரசியலுக்காக சொல்றீங்களோ..!! என்ன கத்து கத்தி கூப்பாடு போட்டாலும் சோனியா அரசாங்கம் கண்டுகொள்ள போவதில்லை.. 

இத்தனை கொடுமை செய்தவர்களுக்கு இந்தியா வரும்போது ரத்தினக் கம்பள வரவேற்பு கொடுப்போம். அங்குள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி  கொடுப்போம் என்றெல்லாம் சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி தமிழனின் வலியை கேளிக்கையாய் வேடிக்கை பார்த்தவர்கள். இவர்கள், இலங்கை அரசை கூண்டிலேற்றுவார்களா..!!? நம்மைதான் குற்றவாளியாக்கி கூண்டிலேற்றி குறுக்கு விசாரணை இல்லாமலே தண்டனையும் வாங்கி கொடுப்பார்கள்..
 
செப்டம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ளக்கூடாது என்று 117 இங்கிலாந்து எம்.பி.க்கள் கூறியிருக்கிறார்கள். அந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது.

இங்கிலாந்தில் இருப்பவர்கள் கொஞ்சம் மனசாட்சியுள்ளவர்கள்னு நெனக்கிறன். நம்ம ஆளுங்களுக்கு அது கிடையாது..
 
இன்னும் இலங்கை நட்பு நாடு என்று இந்தியா அடம்பிடிக்குமேயானால் நாங்கள் இந்தியர்கள் இல்லை என்று தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் சொல்லும் நிலை உருவாகும்.

நான் இதை எப்பவோ சொல்லிட்டேன். என்னோட நாடு இந்தியானு சொல்ல அசிங்கமா இருக்கு. அதனால இப்பலாம் என்னோட நாடு தமிழ்நாடுனுதான் சொல்லிகிட்டு இருக்கேன்..
 
இலங்கையில் பாலச்சந்திரன் என்ற 12 வயது குழந்தை மட்டுமல்ல, பெண்கள், ஏராளமான குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைக் காரணமாகக் காட்டி ஒரு இனத்தைப் பழி வாங்க இலங்கை அரசை அனுமதிக்கக்கூடாது.

இந்த வெங்காயங்கள் இதற்க்கெல்லாம் செவிசாய்க்க போவதில்லை..
 
இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டும். ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் இந்தியா பழி சுமக்க நேரிடும். தமிழர்கள் இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடும் நிலை உருவாகும்.


இலங்கைக்கு எதிராக தனிதீர்மானம் கொண்டுவந்தா மகிழ்ச்சியடையலாம். நாம சந்தோசப்பட்டா மத்திய அரசாங்கத்துக்கு புடிக்காதே. அப்புறம் எப்படி செய்வாங்க..!!? 

இந்தியாவை தாய்நாடாகக் கருதி அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றால் வெளிநாட்டுக் கொள்கையை இந்தியா மாற்ற வேண்டும்’’ என்று பேசினார்.

எனக்கு என்னமோ பிரிவினையை உண்டுபண்றீங்கனு சொல்லி இந்திய புலனாய்வு துறை மூலமா உங்களை கைது பண்ணுவாங்கனு நெனைக்கிறேன்..
**//  

குறிப்பு : திருமாவளவன் நடிக்கிறார், அரசியலுக்காக இப்படி பேசுகிறார் சொல்றவங்களுக்கு :  அவர் உண்மையில் நடிக்கவே வேண்டுமானாலும் செய்யட்டும். அவர் சுத்தமான தமிழன். உண்மையை அறிந்த ஒவ்வொரு தமிழனின் உள்ளமும் நிச்சயம் குமுறிக்கொண்டுதான் இருக்கும். அவர் இருக்கும் இடமும், சூழலும் அவரது வார்த்தைகளையும் செயல்களையும்  ஒருவேளை கட்டிப்போடலாம். ஆனால், தமிழனின் ஆதங்க உணர்வு நிச்சயம் அவருள் இருக்கும்.  

நான் எதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க.. 

நன்றி : கூகிள்[படம்], நக்கீரன்[செய்தி-சிவப்பு வண்ணத்தில் இருப்பவை]

புதன், 6 மார்ச், 2013

அம்மா சொல்லிய கதைகள் - 2


 

இந்த கதை 10, 15 வருசத்துக்கு முன்னாடி எங்க அம்மா எங்களுக்கு சொன்னது. இந்த கதை முழுக்க பேச்சு நடையில் எழுதியிருக்கிறேன். பொங்கலுக்கு ஊருக்கு போனப்ப அம்மாகிட்ட கதைகளை கேக்க மறந்துட்டேன். திடீர்னு ஞாபகத்துக்கு வந்த ஒரு கதையைதான் நான் இங்க உங்களுக்கு சொல்லபோறன்.

இனி கதையை கேளுங்க..

ஒரு ஊருல ஒரு முட்டாள் இருந்தானாம். அவன் அந்த ஊருல இருக்குற ஒரு செட்டியார்கிட்ட வேலை செஞ்சிகிட்டு இருந்தானாம். ஒரு நாள் அந்த செட்டியார் தானியங்களை விற்ப்பதற்க்கு தன் முட்டாள் வேலைக்காரனை அழைத்துக்கொண்டு வெளியூருக்குப் போனாராம். தானியங்கள் எல்லாத்தையும் வித்துட்டு பண மூட்டையோட ரெண்டு பேரும் ஊருக்கு காட்டு வழியாக திரும்பிகிட்டு இருந்தாங்களாம்.

அப்பலாம் எங்க போனாலும் நடந்து இல்லனா மாட்டுவண்டிலதான போவாங்க. இப்பதான சைக்கிள் இருக்கு..

அப்படி திரும்பி வந்துகிட்டு இருக்கும்போது, ரொம்ப இருட்டிடிச்சுனு ஒரு எடத்துல படுத்து தூங்கிட்டு விடியகாலைல எழுந்து போகலாம்னு சொல்லிட்டு அங்கேயே படுக்க தயாரானாங்கலாம்.
அப்ப அந்த செட்டியாரு தன்னோட வேலைக்காரங்கிட்ட சொன்னாராம்.

டேய், நீ இந்த வழி ஓரமா படுத்துக்க, எங்கிட்ட பணமூட்டை இருக்கு அதனால நான் அந்த செடி மறைவுல பண மூட்டையை தலைக்கு வச்சு படுத்துக்கறன். இது இராத்திரி நேரமா இருக்கறதால திருடனுங்க நடமாட்டம் இருக்கும். யாராச்சும் வந்தாங்கனா..! என்ன எழுப்பிவிடு நாம ஓடிப்போய் ஓளிஞ்சுக்கலாம். அப்படினு..

சரிங்க மொதலாளினு சொல்லிட்டு அந்த முட்டாள் வேலைக்காரன் அந்த வழியிலயே படுத்துகிட்டான். செட்டியாரு செடி மறைவுல படுத்துகிட்டாரு. பாஞ்சுஇராத்திரி ஆச்சு, செட்டியாரும், வேலைக்காரனும் நல்லா தூங்கிட்டாங்க. அப்போ அஞ்சு,ஆறு திருடனுங்க அந்த வழியா திருடறதுக்குப்போனாங்க.

அப்போ ஒரு திருடன் வழியில படுத்திருக்குற முட்டாளோட கால்ல தடுக்கி கீழ விழுந்திட்டான். கீழ விழுந்த திருடன் எழுந்திரிச்சி, முட்டாப் பய வழியில படுத்திருக்கான் பாருனு திட்டினானாம்.
முட்டாள் வேலைக்காரனுக்கு கோவம் வந்துடிச்சு..! யாரப் பாத்து முட்டாள்னு சொன்ன.. பண மூட்டையை தலைக்குய் வச்சிகிட்டு செடி மறைவுல படுத்துகிடக்கும் செட்டியார கேட்டுப்பாரு நான் யாருனு தெரியும்னு சொன்னானாம்.


உடனே திருடனுங்க செட்டியாரை அடிச்சிபோட்டுட்டு பனத்தை எடுத்துகிட்டாங்க. டேய் இவன் கோவக்காரனாவும் இருக்கான், நெறைய விஷயம் தெரிஞ்சும் இருக்கு. இவன் பலே கில்லாடியா இருப்பான் போல இவனையும் நம்ம கூட சேத்துக்கலாம்னு முடிவு பன்னி முட்டாள் கிட்ட கேட்டாங்கலாம். அவனும் சரினு சொல்லிட்டு திருடனுங்க கூட கெளம்பிட்டான்.

கொஞ்ச நேரத்துல பக்கத்துல இருக்குற ஊருக்கு வந்து சேர்ந்துட்டாங்க. எந்த வீட்டுல திருடலாம்னு சொல்லி அவனுங்களுக்குள்ள ஒரு குழப்பம். சரி புதுசா வந்திருக்குற நம்ம கில்லாடிகிட்ட கேக்கலாம் அவந்தான் விசயம் தெரிஞ்ச ஆளாச்சேனு அவன்கிட்ட கேட்டாங்க.

நம்ம முட்டாள் வேலைக்காரன், குறட்டை சத்தம் பயங்கரமா வர்ற ஒரு வீட்டைகாட்டி இங்க திருடலாம்னு சொன்னானா.. எல்லாரும் சரினு சொல்லி அந்த வீட்டுக்குள்ள நுழஞ்சி அடுக்குபானை, சட்டி பாத்திரம்னு எல்லா எடத்துலையும் தேடிப்பாத்தாங்க ஒரு குண்டுமணிகூட கெடைக்கல. ஒரு கெழவி மட்டும் படுத்து கொறட்டை விட்டு தூங்கிகிட்டு இருந்துச்சு.


இந்த சமயத்துல நம்ம முட்டாள் மட்டும் ஒரு கலையத்தை எடுத்துவந்தான். அதுல தங்கம் இருக்குமோனு நெனச்சி பாத்தவங்களுக்கு ஏமாற்றம்தான். அதுல கொள்ளு-தான் இருந்துச்சி. இவ்ளோதூரம் நடந்து வந்தது ரொம்ப களைப்பா இருக்கு இந்த கொள்ளையாவது வறுத்து சாப்பிடலாம்னு முட்டாள் சொன்னான். அதுக்கு எல்லோரும் சரினு சொன்னாங்க.

முட்டாள் அடுப்ப மூட்டி வாணல வச்சி கொள்ள வறுத்துகிட்டிருந்தான். அந்த நேரம் பாத்து அந்த கெழவி வாய பொளந்துகிட்டு சத்தமா கொறட்டவிட்டுது. அத பாத்த நம்ம முட்டாள் கிழவி கொள்ளுதான் கேக்குதுனு நெனச்சிகிட்டு, இரு கெழவி கொள்ளு இன்னும் சரியா வறுவல கொஞ்ச நேரம் பொருத்துக்கோனு சொன்னான்.

கிழவிக்கு அதெல்லாம் எங்க தெரியபோகுது. அது கொறட்டை இல்ல விட்டுகிட்டிருக்கு. அது தொடர்ச்சியா கொரட்ட விட்டுகிட்டே இருந்துச்சி.

முட்டாள் கொள்ள வறுத்து முடிச்சதும், ஆனாலும் உனக்கு ரொம்பதான் அவசரம் கெழவினு சொல்லிகிட்டே அடுப்புலேருந்து ஏறக்குன சூட்டோட திறந்திருக்குற கிழவியோட வாயில சுட சுட கொள்ளை கொட்டினான்.

அவ்ளோதான், கெழவி அய்யய்யோ...!!! னு கத்தி அலப்பறை பன்னி போட்ட சத்தத்துல அக்கம் பக்கத்துல இருக்குற எல்லோரும் முழிச்சிகிட்டு ஓடி வந்தாங்க. திருடனுங்க எல்லோரும் மாட்டிகிட்டாங்க.



திருடனுங்கள புடுச்சி கட்டிபோட்டு செம்ம அடி அடிச்சாங்களாம். முட்டாளுக்கு அடிதாங்க முடியாம நான் திருடன் இல்லீங்க இந்த மாதிரி நானும் எங்க முதலாளியும் படுத்துகெடந்தோம், எங்க மொதலாளிய அடிச்சிபோட்டுட்டு பணத்தையும் எடுத்துகிட்டு என்னையும் கூட்டிகிட்டு வந்துட்டாங்கனு எல்லா உண்மையையும் சொன்னான்.

அப்புறமா செட்டியாரு எங்க இருக்காருனு தேடிபுடிச்சி கூட்டிகிட்டு வந்து அவருகிட்ட அவரோட பணத்தை குடுத்துட்டு, திருடனுங்கள அடி அடினு அடிச்சு இனிமே இந்த பக்கமே வரக்கூடாதுனு அடிச்சி தொரத்திட்டாங்களாம்..


அவ்ளோதான் கதை முடிஞ்சிடுச்சு, தூங்குங்க..

குறிப்பு : கதை எப்படி இருந்துச்சுனு மறக்காம சொல்லுங்க..

நன்றி : கூகிள் [படம்]