இந்த கதை 10, 15 வருசத்துக்கு முன்னாடி எங்க அம்மா எங்களுக்கு
சொன்னது. இந்த கதை முழுக்க பேச்சு நடையில் எழுதியிருக்கிறேன். பொங்கலுக்கு ஊருக்கு
போனப்ப அம்மாகிட்ட கதைகளை கேக்க மறந்துட்டேன். திடீர்னு ஞாபகத்துக்கு வந்த ஒரு கதையைதான் நான் இங்க உங்களுக்கு சொல்லபோறன்.
இனி கதையை கேளுங்க..
ஒரு ஊருல ஒரு முட்டாள் இருந்தானாம். அவன் அந்த ஊருல இருக்குற ஒரு
செட்டியார்கிட்ட வேலை செஞ்சிகிட்டு இருந்தானாம். ஒரு நாள் அந்த செட்டியார்
தானியங்களை விற்ப்பதற்க்கு தன் முட்டாள் வேலைக்காரனை அழைத்துக்கொண்டு
வெளியூருக்குப் போனாராம். தானியங்கள் எல்லாத்தையும் வித்துட்டு பண மூட்டையோட
ரெண்டு பேரும் ஊருக்கு காட்டு வழியாக திரும்பிகிட்டு இருந்தாங்களாம்.
அப்பலாம் எங்க போனாலும் நடந்து இல்லனா மாட்டுவண்டிலதான போவாங்க.
இப்பதான சைக்கிள் இருக்கு..
அப்படி திரும்பி வந்துகிட்டு இருக்கும்போது, ரொம்ப இருட்டிடிச்சுனு
ஒரு எடத்துல படுத்து தூங்கிட்டு விடியகாலைல எழுந்து போகலாம்னு சொல்லிட்டு அங்கேயே
படுக்க தயாரானாங்கலாம்.
அப்ப அந்த செட்டியாரு தன்னோட வேலைக்காரங்கிட்ட சொன்னாராம்.
டேய், நீ இந்த வழி ஓரமா படுத்துக்க, எங்கிட்ட பணமூட்டை இருக்கு அதனால
நான் அந்த செடி மறைவுல பண மூட்டையை தலைக்கு வச்சு படுத்துக்கறன். இது இராத்திரி
நேரமா இருக்கறதால திருடனுங்க நடமாட்டம் இருக்கும். யாராச்சும் வந்தாங்கனா..! என்ன
எழுப்பிவிடு நாம ஓடிப்போய் ஓளிஞ்சுக்கலாம். அப்படினு..
சரிங்க மொதலாளினு சொல்லிட்டு அந்த முட்டாள் வேலைக்காரன் அந்த வழியிலயே
படுத்துகிட்டான். செட்டியாரு செடி மறைவுல படுத்துகிட்டாரு. பாஞ்சுஇராத்திரி ஆச்சு,
செட்டியாரும், வேலைக்காரனும் நல்லா தூங்கிட்டாங்க. அப்போ அஞ்சு,ஆறு திருடனுங்க
அந்த வழியா திருடறதுக்குப்போனாங்க.
அப்போ ஒரு திருடன் வழியில படுத்திருக்குற முட்டாளோட கால்ல தடுக்கி கீழ
விழுந்திட்டான். கீழ விழுந்த திருடன் எழுந்திரிச்சி, முட்டாப் பய வழியில
படுத்திருக்கான் பாருனு திட்டினானாம்.
முட்டாள் வேலைக்காரனுக்கு கோவம் வந்துடிச்சு..! யாரப் பாத்து
முட்டாள்னு சொன்ன.. பண மூட்டையை தலைக்குய் வச்சிகிட்டு செடி மறைவுல
படுத்துகிடக்கும் செட்டியார கேட்டுப்பாரு நான் யாருனு தெரியும்னு சொன்னானாம்.
உடனே திருடனுங்க செட்டியாரை அடிச்சிபோட்டுட்டு பனத்தை
எடுத்துகிட்டாங்க. டேய் இவன் கோவக்காரனாவும் இருக்கான், நெறைய விஷயம் தெரிஞ்சும்
இருக்கு. இவன் பலே கில்லாடியா இருப்பான் போல இவனையும் நம்ம கூட சேத்துக்கலாம்னு
முடிவு பன்னி முட்டாள் கிட்ட கேட்டாங்கலாம். அவனும் சரினு சொல்லிட்டு திருடனுங்க
கூட கெளம்பிட்டான்.
கொஞ்ச நேரத்துல பக்கத்துல இருக்குற ஊருக்கு வந்து சேர்ந்துட்டாங்க.
எந்த வீட்டுல திருடலாம்னு சொல்லி அவனுங்களுக்குள்ள ஒரு குழப்பம். சரி புதுசா
வந்திருக்குற நம்ம கில்லாடிகிட்ட கேக்கலாம் அவந்தான் விசயம் தெரிஞ்ச ஆளாச்சேனு
அவன்கிட்ட கேட்டாங்க.
நம்ம முட்டாள் வேலைக்காரன், குறட்டை சத்தம் பயங்கரமா வர்ற ஒரு
வீட்டைகாட்டி இங்க திருடலாம்னு சொன்னானா.. எல்லாரும் சரினு சொல்லி அந்த
வீட்டுக்குள்ள நுழஞ்சி அடுக்குபானை, சட்டி பாத்திரம்னு எல்லா எடத்துலையும்
தேடிப்பாத்தாங்க ஒரு குண்டுமணிகூட கெடைக்கல. ஒரு கெழவி மட்டும் படுத்து கொறட்டை
விட்டு தூங்கிகிட்டு இருந்துச்சு.
இந்த சமயத்துல நம்ம முட்டாள் மட்டும் ஒரு கலையத்தை எடுத்துவந்தான்.
அதுல தங்கம் இருக்குமோனு நெனச்சி பாத்தவங்களுக்கு ஏமாற்றம்தான். அதுல கொள்ளு-தான்
இருந்துச்சி. இவ்ளோதூரம் நடந்து வந்தது ரொம்ப களைப்பா இருக்கு இந்த கொள்ளையாவது
வறுத்து சாப்பிடலாம்னு முட்டாள் சொன்னான். அதுக்கு எல்லோரும் சரினு சொன்னாங்க.
முட்டாள் அடுப்ப மூட்டி வாணல வச்சி கொள்ள வறுத்துகிட்டிருந்தான். அந்த
நேரம் பாத்து அந்த கெழவி வாய பொளந்துகிட்டு சத்தமா கொறட்டவிட்டுது. அத பாத்த நம்ம
முட்டாள் கிழவி கொள்ளுதான் கேக்குதுனு நெனச்சிகிட்டு, இரு கெழவி கொள்ளு இன்னும்
சரியா வறுவல கொஞ்ச நேரம் பொருத்துக்கோனு சொன்னான்.
கிழவிக்கு அதெல்லாம் எங்க தெரியபோகுது. அது கொறட்டை இல்ல
விட்டுகிட்டிருக்கு. அது தொடர்ச்சியா கொரட்ட விட்டுகிட்டே இருந்துச்சி.
முட்டாள் கொள்ள வறுத்து முடிச்சதும், ஆனாலும் உனக்கு ரொம்பதான் அவசரம்
கெழவினு சொல்லிகிட்டே அடுப்புலேருந்து ஏறக்குன சூட்டோட திறந்திருக்குற கிழவியோட
வாயில சுட சுட கொள்ளை கொட்டினான்.
அவ்ளோதான், கெழவி அய்யய்யோ...!!! னு கத்தி அலப்பறை பன்னி போட்ட
சத்தத்துல அக்கம் பக்கத்துல இருக்குற எல்லோரும் முழிச்சிகிட்டு ஓடி வந்தாங்க.
திருடனுங்க எல்லோரும் மாட்டிகிட்டாங்க.
திருடனுங்கள புடுச்சி கட்டிபோட்டு செம்ம அடி அடிச்சாங்களாம்.
முட்டாளுக்கு அடிதாங்க முடியாம நான் திருடன் இல்லீங்க இந்த மாதிரி நானும் எங்க
முதலாளியும் படுத்துகெடந்தோம், எங்க மொதலாளிய அடிச்சிபோட்டுட்டு பணத்தையும்
எடுத்துகிட்டு என்னையும் கூட்டிகிட்டு வந்துட்டாங்கனு எல்லா உண்மையையும் சொன்னான்.
அப்புறமா செட்டியாரு எங்க இருக்காருனு தேடிபுடிச்சி கூட்டிகிட்டு
வந்து அவருகிட்ட அவரோட பணத்தை குடுத்துட்டு, திருடனுங்கள அடி அடினு அடிச்சு இனிமே
இந்த பக்கமே வரக்கூடாதுனு அடிச்சி தொரத்திட்டாங்களாம்..
அவ்ளோதான் கதை முடிஞ்சிடுச்சு, தூங்குங்க..
குறிப்பு : கதை எப்படி இருந்துச்சுனு மறக்காம சொல்லுங்க..
நன்றி : கூகிள் [படம்]
நன்றி : கூகிள் [படம்]
ரைட்டு...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி. இங்கே வந்து படித்து பார்த்து கருத்தெழுதி என்னை ஊக்குவிப்பதற்க்கு நன்றி..
நீக்கு