நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 செப்டம்பர், 2015

கலாய்க்கப்படும் கருணாநிதியின் மகன்

ஸ்டாலின் இந்த அளவிற்கு கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டு பகடி பேசப்படுவார் என்று தி.மு.க வினர் மட்டுமல்ல யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

நமக்கு நாமே என்ற திட்டத்தை ஏற்படுத்தி மக்களை நேரடியாக சந்திக்கப்போகிறேன் பேர்வழி என கிளம்பி மிகக் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டு அவமானப்பட்டு நிற்கிறார்.

ஏன் திடீரென இப்படி ஒரு திட்டம்.!? உண்மையிலேயே மக்கள் மீது அக்கரைகொண்டா.!? ஆம் என்றால் இத்தனை ஆண்டுகளாக எங்கே சென்றார்.!? திடீரென எப்படி இந்த ஞானோதயம்.!? உண்மையில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதல்ல இவர்கள் திட்டம்.

இவர்களின் திட்டமே வேறு.!

இவர்களின் இத்திட்டத்திற்க்கு காரணம், பாட்டாளி மக்கள் கட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசுதான்.! ஆமாம், தி.மு.க வின் செயல்பாடுகளை கவனிப்பீர்களேயானால், பா.ம.க வின் கொங்கு மண்டல மாநாட்டிற்க்கு பிறகு தி.மு.க வில் ஒரு பாரிய மாற்றத்தை நீங்கள் காணலாம்.

கொங்கு மண்ணில் பா.ம.க விற்கு கிடைத்த மக்கள் செல்வாக்கை கண்டு வெதும்பி பா.ம.க-வை மக்கள் மத்தியில் மறக்கடிக்க செய்ய நடத்தப்பட்டதுதான் “உரிமை மீட்பு பேரணி” எனும் பெயரில் கடலூர் புதுசத்திரத்தில் நடத்தப்பட்ட 18 மாவட்ட மாநாடு. இம்மாநாட்டில் “இது கோவிந்தசாமி படையாட்சியார் பிறந்தமண்”, “இது இராமசாமி படையாட்சியார் பிறந்தமண்” எனப் பேசிய ஸ்டாலினின் வார்த்தைகளிலிருந்து தி.மு.க வின் சாதீய பித்தலாட்டத்தை வெளிப்படையாகவே உணரலாம்.

உண்மையில் தி.மு.க பாட்டாளி மக்களின் வளர்ச்சியை கண்டு உள்ளபடியே பெரிதாக அச்சப்படுகிறது.! மேலும் தி.மு.க காலாவதியான மருந்தாக மாறிவிட்டது. அதனாலேயே பா.ம.கவின் அனைத்து செயல்பாடுகளையும் அப்படியே படியெடுத்து கொஞ்சமாக மாற்றி தி.மு.க-வின் செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றனர்.

பா.ம.க வின் மது ஒழிப்பு கொள்கையை மக்கள் மத்தியில் நீர்த்துபோக செய்ய தி.மு.க வும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அது ஒருவார காலத்துக்கு ஊடகங்களில் பெருத்த விவாதத்திற்கு ஆட்படுத்தப்பட்டது என்றால் அது மிகையாகாது. அவ்வாறு பேசி சிறிது பரபரப்பை ஏற்படுத்திவிட்டு பின் அமைதியானது தி.மு.க. அந்த அமைதிக்கும் காரணமில்லாமலில்லை. தமிழ்நாடு அரசுக்கு மது உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பாதி தொழிற்சாலைகள் தி.மு.க-வினருடையதுதான். மீதி அ.தி.மு.க-வினருடையது. தி.மு.க-வினருடைய தொழிற்சாலைகள் பற்றி பேச்சு கிளம்பியதும் மது ஒழிப்பு பேச்சை தீவிரமாக பேசாமல் அப்படியே அமையாகிக்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக அன்புமணியை எப்படியேனும் வீழ்த்தியாக வேண்டும் என்பதற்காக தீட்டப்பட்ட திட்டம்தான் நமக்கு நாமே திட்டம். அதுவும் மருத்துவர் அன்புமணியின் பாணியிலேயே.! இத்திட்டத்தின் விளம்பர பதாகைகூட பா.ம.க உருவாக்கிய அமைப்பு முறை மாதிரியே கிட்டதட்ட அதே மாதிரியாக.!

இத்தனை ஆண்டுகள் ஆகியும் தனக்கு கிடைக்காத ஒரு வரவேற்பு எப்படி அன்புமணிக்கு கிடைத்தது என்பதன் விளைவாக வந்தது தான் பொதுமக்களை நேரடியாக எதார்த்தமாக சந்திக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் இந்த மாற்றம். ஆனால் இதிலும்கூட இவர்களின் போலித்தனத்தை காட்டியுள்ளனர். மொத்தத்தில் இவர்கள் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதை இவர்களே தோலுரித்து காட்டிக்கொள்கின்றனர். “நுணலும் தன் வாயாற் கெடும்” எனும் முதுமொழிக்கு தக்க உதாரணமாக தற்போதைய தி.மு.க-வின் செயல்பாடுகள் அமைகிறது.
மேலும் பா.ம.க-வின் முதல்நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்ற அறிவிப்பு மக்களிடையே பெருத்த வரவேற்ப்பு பெற்றதையடுத்து தாங்களும் ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என அறிவித்திருக்கின்றனர்.

தேர்தல் என்றால்தான் இவர்களுக்கு மக்களும் மக்களுக்கான பிரச்சினைகளும் நினைவுக்கு வரும் போலிருக்கிறது.!

சரி, தலைப்புக்கு வருவோம்...

இந்த மனுசன் நமக்கு நாமே கிளம்புனாலும் கிளம்பினாரு, இணைய சமூக தள பயன்பாட்டாளர்களுக்குதான் செம கொண்டாட்டம்.. இவர் ஊர் சுற்ற ஆரம்பித்த பிறகு வடிவேலு, கவுண்டமணி, சந்தானம் என அனைத்து நகைச்சுவை நடிகர்களுக்கும் ஏக போட்டியாக உருவெடுத்துவிட்டார்.

இந்த நகைச்சுவை நடிகர்களின் படங்களில் வரும் காட்சி அமைப்போடு ஸ்டாலின் அவர்களின் உடை, உடல்மொழி, சூழல் என ஏறக்குறைய எல்லாமுமே பொருந்திப்போவதுதான் சால ஆச்சரியம்.

சமூக ஊடகங்களான முகநூலிலும், ‘டிவிட்டரிலும்’ சில ஒளிப்படங்களை நீங்களும் காண்டு களியுங்கள்...













திராவிடத்தின் வீழ்ச்சியில்தான் தமிழரின் எழுச்சி அடங்கியிருக்கிறது.! தமிழ் வீறுகொண்டு எழ எழ திராவிடம் வீழும்.! விழித்திடு தமிழா விடியல் காண.!

படங்கள் : ஒளிப்படங்களை உருவாக்கி இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும்படி வெளியிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. 




திங்கள், 16 மார்ச், 2015

கஸாலித்துவம் - வாசகர் விமர்சனம்


நூலின் பெயர்      : கஸாலித்துவம்
ஆசிரியர்          : ரஹீம் கஸாலி
வகை             : பொது (அரசியல், நகைச்சுவை, சமூக சிந்தனைகள்)
விமர்சகர்          : கீழூர் த.இளம்பருதி
விலை            : ரூ.70 /-
நூலின் அட்டை    : (முன் மற்றும் பின் அட்டை)

விமர்சனம் :

அது என்ன கஸாலித்துவம்.!? இது உங்களில் பலருக்கு கேள்வியாக இருக்கும். முகநூலில் திரு.இரஹீம் கஸாலி அவர்கள் எழுதிய பதிவுகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். ஒவ்வொரு பதிவின் முடிவிலும் “#”-குறியிட்டு, அது எதை நோக்கிய பதிவு எனக்குறிப்பிட்டு அதனுடன் “த்துவம்” என முடிப்பதுதான் அவர் வழக்கம்.

எடுத்துக்காட்டாக, பாசத்தை வெளிப்படுத்தும் பதிவை எழுதினால் இறுதி வரியில் ‘#பாசத்துவம்’ என எழுதி முடித்திருப்பார். அதன் வெளிப்பாடுதான் இந்த “கஸாலித்துவம்” எனும் பெயர்.

இந்த நூலிற்கு இயக்குனர் கே.பாக்கியராஜ், எழுத்தாளர் சுரா மற்றும் இயக்குனர் முரளி அப்பாஸ் ஆகியோர் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.

பத்திரிக்கைகளில் தொடர்ச்சியாக எழுதிவந்ததை தொகுத்து புத்தகமாக வெளியிடுவார்கள் அல்லவா.! அதன் பரிணாம வளர்ச்சிதான் இந்த கஸாலித்துவம் (முகநூல் பதிவுகளின் தொகுப்பு).

அரசியல், நகைச்சுவை, நையாண்டி, பாசம், கோவம் என பல பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் சாமானியனின் பார்வை பிரதிபலிப்பு. அதாவது எடுத்துக்காட்டாக : ஒரு சோக நிகழ்வென்றால், அதனை ஒரு எதார்த்தமான மனிதனாக நாம் எப்படி உணர்கிறோம் என்பது மாதிரியான உணர்வு தொகுப்புதான் இந்த நூல்.

ஆசிரியரின் எழுத்தாளுமை பாரட்டப்பட வேண்டியது. ஒரு பதிவை படிக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவிற்க்குமேல் பெரிதாக இருந்தால் படிப்பதையே தவிர்க்கும் பழக்கம் பலரிடம் இருக்கும். ஆனால், கஸாலித்துவத்தில் அப்படி எந்த ஒரு பதிவையும் உங்களால் தவிர்க்க முடியாது. ஏனெனில், அந்த இடத்தில்தான் நூல் ஆசிரியரின் சொற்க்கோர்வைகள் சுயத்தை காட்டுகின்றன. உண்மையில் இந்நூல் ஆசிரியரின் வெற்றியும் அதுதான். அதற்க்காக நிச்சயம் பாராட்டவே வேண்டும்.

பெருவாரியாக அரசியல் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அரசியல்கட்சிகளின் தவறினை சுட்டிகாட்டியும் நையாண்டி செய்தும் உரையாடல் வடிவிலும், சிறு பதிவுகளாகவும், சில பத்திகளைக் கொண்ட பதிவுகளாகவும் சுவாரசியமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. வேறு மாதிரியாக சொல்ல வேண்டுமானால் அரசியல் பதிவுகள் சற்று ஆழமானவை, எடுத்துக்காட்டாக :

“ அரசாங்கம் காசுக்கு கொடுக்க வேண்டியதை இலவசமாக கொடுத்தால் அது அரிசி. இலவசமாக கொடுக்க வேண்டியதை காசுக்கு கொடுத்தால் அது தண்ணீர். இம்புட்டுத்தாங்க.
#அரசியல்த்துவம். “

எனது தனிப்பட்ட பார்வையில், இந்த புத்தகம் கருணநிதி, ஜெயலலிதா, இராமதாசு என அனைத்து அரசியல் தலைவர்களும் நிச்சயம் படிக்க வேண்டும் என்பது என் எண்ணம். சாதாரண மனிதனின் பார்வையில் இந்த தலைவர்கள் மற்றும் அவர்களது செயல்கள் மீது எப்படிப்பட்ட பேச்சுகள் இடம்பெறுகிறது என்பதை அவர்கள் அறிய இம்மாதிரியான நூல்கள் உதவி புரியும்.

ஆசிரியரின் அபாரமான நகைச்சுவை உணர்வு வெகு அழகாக அவரது பதிவுகளில் வெளிப்பட்டுள்ளது. ஒரு நல்ல படைப்பாளிக்கு அது கூடுதல் மதிப்பும் கூட. எடுத்துக்காட்டுக்காக :

“ அந்த அமைச்சரை ஏன் சி.பி.ஐ கைது பண்ணினாங்க?
பண வீக்கத்தை கட்டுப்படுத்த அயோடெக்ஸ் வாங்கிய செலவுன்னு நூறு கோடி ஊழல் பண்ணிட்டாராம்.
#நகைச்சுவைத்துவம். ”


” படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதை விட, பஸ்சிலும், ஃப்லைட்டிலும் ரிலீஸ் செய்வதற்காக ஏன் அந்த தயாரிப்பாளர் இவ்வளவு மெனக்கெடுறாரு?
அப்பதான் படம் பிடிக்கலேன்னாலும் யாரும் பாதிலேயே எழுந்திருச்சு வெளியே போக மாட்டாங்களாம்.
#நகைச்சுவைத்துவம். ”

இப்படியாக நூல் முழுமையும் நம்மை தொடர்ந்து இடைவிடாமல் படிக்கவைத்து மனக்கண்ணில் சிம்மாசனம் போட்டு அமர்கிறார் ஆசிரியர்.

சாமானியர்களின் பார்வை வெகு இயல்பானது. ஆனால் அதை பகிர்ந்துகொள்ளும்போது அவை பெரிய சேதிகளாக தெரியும். உண்மையில் அவை பெரிய சேதிகள்தான். சில எதார்த்த பதிவுகள் சுட்டிக்காட்டும் சேதிகளில் நமது வணக்கத்தை பெறுகிறார்.

“ எல்லோர் மனசும் ஒரு அங்கீகாரத்துக்காக ஏங்கும் மனசுதான். அங்கீகாரம் யாரிடமிருந்து என்பதில் தான் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறோம்.
#அங்கிகாரத்துவம் ”

“ யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் குழந்தைகளுக்கு
மாடர்ன் ஆர்ட் வரைய...
சுவரெல்லாம் கிறுக்கல்கள். ”

இடையிடையே இப்படியான ஹைக்கூ கவிதைகளை காண முடியும். தான் ஒரு இரசனைக்காரன் என்பதை சொல்லாமல் சொல்லி அசத்தியிருக்கிறார்.

புகழ்ந்தது போதும் இனி சறுக்கல்களுக்கு வருவோம்.!

பொதுவாக சொல்ல வேண்டுமானால் சறுக்கல்கள் ஏதும் இல்லாமல் சீராகவும் நிதானமாகவும் செயல்பட்டு வெற்றி அடைந்திருக்கிறார் நூல் ஆசிரியர் இரஹீம் கஸாலி என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால்,

தொகுப்பில் சில பதிவுகளை தவிர்த்திருக்கலாம். உதாரணமாக,

“ சென்னையில் __த்தா என்ற வார்த்தை ஒருவரை கோபப்படுத்தினாலோ, கலவரப்படுத்தினாலோ அவர் சென்னைக்கு புதுசுன்னு அர்த்தம்.  ”

“ காக்கை உட்காராவிட்டாலும் பழுத்திருந்தாலும் பனம்பழம் விழத்தான் செய்யும்.
#பழத்துவம் ”

இதுபோன்ற பதிவுகள் முகநூலுக்கு சரியாக இருக்கலாம். இந்த நூலுக்கு தேவையில்லாதவையே.!

மேலும் மற்றும் ஒரு செய்தி. அதனை இந்த நூலுக்கு ஒரு பெரிய குறையாகவே கருத முடியும். பதிவுகள் வகைப்படுத்தப்படவில்லை. பதிவுகளை பொதுவாக வகைப்படுத்தி அவ்வகைகளின் கீழ் பதிவுகள் இடம்பெறுமாறு செய்திருக்க வேண்டும். மேலும் அவ்வகைகளை முகப்பில் பொருளடக்கம் எனும் பக்கம் ஒதுக்கி அங்கு காட்டி முறையே அவற்றிற்கான பக்கங்களையும் காண்பித்திருக்க வேண்டும்.

இது வாசகருக்கு ஒரு சங்கடமே.! தான் வாசித்த தனக்கு பிடித்த பதிவு எங்கு என தேட இருக்கும் வசதி இல்லாமல் இருப்பது நூலில் உள்ள ஒரு குறை.

ஒருவேளை முதல் புத்தகம் என்பதால் இத்தகைய தவறு நிகழ்ந்திருக்கலாம்.

-X-

மொத்தத்தில் “கஸாலித்துவம்” படிப்பதற்க்கு தகுத்த அருமையான நூல். மகிழ்ச்சி, சோகம், இயல்பு, நகை, முரண் என நம்முடைய அனைத்தையும் ஒருகணம் தூசு தட்டி பார்க்க வைக்கும் ஒரு நல்ல நூல் “கஸாலித்துவம்”.

நிச்சயம் தயக்கமில்லாமல் வாங்கி படிக்கலாம். விலையும் கட்டுக்குள்தான் இருக்கிறது.

==================================================
நூல் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய இடம் :

ரிஸால் பப்ளிகேஷன்ஸ்,
இஸ்மாயில் தெரு, அரசர்குளம், புதுக்கோட்டை மாவட்டம்.
ஃபோன் : +91 74011 30507
மின்னஞ்சல் : rizalpublications@gmail.com
=================================================================

புதன், 15 அக்டோபர், 2014

சில்லரை தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதா கோவை மாநகர போக்குவரத்து கழகம்.!?

கோவை மாகரில் போக்குவரத்துக்கு நான்கு வகையான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. அவை :

1. சாதாரண கட்டண பேருந்து. (நகர பேருந்து - Town Bus)
இவற்றை அடையாளம் காண்பது மிகவும் எளிது. பேருந்து பார்ப்பதற்கு பழைய இரும்புக்கடையில் போட வேண்டிய தகர டப்பா மாதிரியே இருக்கும். தனியார் பேருந்துகள் அனைத்தும் இவ்வகையில்தான் அடங்கும். ஆனால் அரசுப்பேருந்துகளுக்கு எதிராக புத்தம் புதியவைகளாக மின்னிக்கொண்டிருக்கும்.

2. LSS - Limited Stop Service.
இதுவும் தகர டப்பா மாதிரிதான் இருக்கும் ஆனால் சாதாரண கட்டண பேருந்தைவிட தேவலாம் என்று இருக்கும்.  பெயரில் மட்டும்தான் குறைந்த நிறுத்த பேருந்து மற்றபடி அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும். பேருந்தில் எழுதப்பட்டிருக்கும் வழி தட எண்ணிற்கு கீழே LSS என எழுதப்பட்டிருக்கும். பொதுவாக LSS என்பது அவ்வளவு எளிதில் எவர் கண்களுக்கும் புலப்படாத மாதிரியே எழுதி இருப்பார்கள், அவ்வளவு நேர்த்தி..

3. Express.
பெயரை படித்தவுடன், இது விரைவாக பயணிக்கக்கூடியது,குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் என்பது மாதிரியான எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பில்லை. சாதாரண கட்டண பேருந்து வடிவத்தில் புதிதாக விடப்பட்ட பேருந்துகள்தான் இந்த எக்ஸ்பிரஸ் பேருந்துகள். புதிய பேருந்து என்பதை தவிர்த்து பெரிதாக சொல்வதற்கு ஏதும் இல்லை.

4. தாழ்தள சொகுசு பேருந்து.
இதைப்பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் கட்டண கொள்ளைக்காக விடப்பட்ட பேருந்து. தொடர் பேருந்தும் இவ்வகையை சார்ந்ததே.!
பார்த்த உடன் யாரும் சொல்லாமலே கண்டுகொள்ளலாம். மேலும் பெயர் பக்கவாட்டில் எழுதப்பட்டிருக்கும். போக்குவரத்து கழகத்தாரால் விரும்பி அதிகம் இயக்கப்படும் பேருந்து.

கட்டண விவரம் :
ஒரு நிறுத்தத்தில் ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்கு வசூலிக்கப்படும் குறைந்தபட்ச கட்டண விவரம் :

சாதாரண பேருந்து   :  ரூ.3
LSS                                 :  ரூ.4
EXPRESS                        :  ரூ.5
சொகுசு பேருந்து      :  ரூ.7
அடுத்தடுத்த கட்டணங்களாக முறையே ரூபாய் 1,1,1 மற்றும் 2 என கூட்டிக்கொள்ளுங்கள்.

பொதுவாக பேருந்துகளில் சில்லரை பிரச்சனை என்பது சில சமயங்களில் ஏற்படக்கூடியதுதான். ஆனால் எப்போதுமே சில்லரை தட்டுப்பாட்டுடன் பிரச்சினையாகவே இருப்பது கோவை மாநகர சாதாரண கட்டண பேருந்துகளில்தான். ஓரளவிற்கு பிரச்சினையாக இருந்த சில்லரைத் தட்டுப்பாடு கடந்த சில வருடங்களாக பெருந்த பிரச்சினையாக இருக்கிறது.

கோவையை பொறுத்தமட்டில் மக்கள் அதிகமாக பயணிக்க விரும்புவது சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டும்தான். சம அளவு நேரத்தில் 3 ரூபாயில் பயணிக்ககூடிய இடத்திற்கு ஏன் 7 ரூபாய் கொடுக்க வேண்டும் என தங்கள் பயணத்திற்காக சாதாரண பேருந்துகளையே அதிகம் நாடுகின்றனர்.

கோவையில் தாழ்தள சொகுசு பேருந்துகளை அறிமுகப்படுத்திய புதிதில் பல பகுதிகளில் இப்பேருந்துகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில பகுதிகளில் தொடர்ச்சியாக சொகுசு பேருந்துகளை 'பஞ்சர்' செய்யவும் செய்தனர். இதற்கு காரணம் கூடுதலான பேருந்தாக சொகுசு பேருந்துகளை இயக்காமல், சாதாரண பேருந்துகளுக்கு மாற்றாக இயக்கியதுதான்.

மக்களின் தொடர் எதிர்ப்பினை தொடர்ந்து மீண்டும் சாதாரண பேருந்துகளை இயக்கி கூடுதல் பேருந்துகளாக சொகுசு பேருந்துகளை இயக்க தொடங்கியது. ஆயினும் இன்றுவரையிலும், சொகுசு பேருந்துகளில் பயணம் எண்பது மக்களின் விருப்பத்திற்க்குட்பட்ட பயணமாக இல்லை. சாதாரண பேருந்திற்க்கு காத்திருக்க முடியாமல் சொகுசு பேருந்தில் பயணிப்போரே அதிகம்.

சொகுசு பேருந்துகளில் வருமானத்தை அதிகப்படுத்த முடியாமல் அதற்கு ஈடுகட்ட கொண்டுவரப்பட்டதே Express பேருந்துகள்.  LSS பேருந்துகள் இருந்தாலும், சாதாரண மற்றும் LSS பேருந்துகளை அதிகப்படுத்தாமல் புதிதாக விட்ட பேருந்துகளுக்கு Express எனப்பெயரிட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

மேலும் சில்லரைப் பிரச்சினையை மையமாகக் கொண்டு சாதாரணப் பேருந்துகளில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்கி வைத்துள்ளனர். 4 ரூபாய் பயணச்சீட்டிற்கு 10 ரூபாயை நீட்டியவர்களை பேருந்திலிருந்து இறக்கிவிடும் கொடுமையும் அவ்வப்போது ஆங்காங்கே இன்றும் நடந்துவருகிறது.

தினமும் குறைந்தபட்சம் ஒரு பயணியாவது நடத்துனரிடம் சில்லரைப் பிரச்சினையால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இது ஒவ்வொரு சாதாரணப் பேருந்திலும் நடக்கிறது. சொகுசுப் பேருந்துகளில் அத்தகைய பிரச்சினை ஏற்படுவதில்லை. எப்போதும் மக்கள் கூட்டத்தைக் கிடித்து செல்லும் தனியார் பேருந்து நடத்துநர்கள்கூட மக்களிடம் அப்படி கடிந்துகொள்ளமாட்டார்கள். காலையில் பேருந்தை எடுத்ததிலிருந்து இரவு பேருந்து நிறுத்தும் வரை எப்போதும் சில்லரைப் பிரச்சினை இருந்துகொண்டேயிருக்கும். பையில் சில்லரை இருந்தாலும்கூட முகம் சுளிக்காமல் சில்லரை தரும் நடத்துநரை காண்பது அரிது.

4 ரூபாய் பயணச்சீட்டிற்கு 5 ரூபாய் கொடுத்துவிட்டு மீதி சில்லரை கேட்கமுடியாமல் இறங்கிப்போகும் பயணிகள் எண்ணிக்கை அதிகம் இங்கே.! அதே சமயம் 5 ரூபாய் சீட்டிற்கு 4 ரூபாய் கொடுத்து பயணிப்பவர் எவரும் இலர். ஏனெனில் அத்தகைய சூழல் இல்லை, மக்கள் நாணயமானவர்கள்.

கோவையில் மூன்று முக்கிய பேருந்து நிலையங்கள் இருக்கின்றன. இவ்வளவு சில்லரைத் தட்டுப்பாடு இருக்கும் கோவையில் ஒரு இடத்தில் கூட சில்லரை வழங்கும் இயந்திரத்தைப் பொருத்தவில்லை இந்த நிர்வாகம்.

குறிப்பு: தயவுசெய்து சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுடன் கோவையை ஒப்பிடாதீர்கள்.