கோவை மாகரில் போக்குவரத்துக்கு நான்கு வகையான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. அவை :
1. சாதாரண கட்டண பேருந்து. (நகர பேருந்து - Town Bus)
இவற்றை அடையாளம் காண்பது மிகவும் எளிது. பேருந்து பார்ப்பதற்கு பழைய இரும்புக்கடையில் போட வேண்டிய தகர டப்பா மாதிரியே இருக்கும். தனியார் பேருந்துகள் அனைத்தும் இவ்வகையில்தான் அடங்கும். ஆனால் அரசுப்பேருந்துகளுக்கு எதிராக புத்தம் புதியவைகளாக மின்னிக்கொண்டிருக்கும்.
2. LSS - Limited Stop Service.
இதுவும் தகர டப்பா மாதிரிதான் இருக்கும் ஆனால் சாதாரண கட்டண பேருந்தைவிட தேவலாம் என்று இருக்கும். பெயரில் மட்டும்தான் குறைந்த நிறுத்த பேருந்து மற்றபடி அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும். பேருந்தில் எழுதப்பட்டிருக்கும் வழி தட எண்ணிற்கு கீழே LSS என எழுதப்பட்டிருக்கும். பொதுவாக LSS என்பது அவ்வளவு எளிதில் எவர் கண்களுக்கும் புலப்படாத மாதிரியே எழுதி இருப்பார்கள், அவ்வளவு நேர்த்தி..
3. Express.
பெயரை படித்தவுடன், இது விரைவாக பயணிக்கக்கூடியது,குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் என்பது மாதிரியான எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பில்லை. சாதாரண கட்டண பேருந்து வடிவத்தில் புதிதாக விடப்பட்ட பேருந்துகள்தான் இந்த எக்ஸ்பிரஸ் பேருந்துகள். புதிய பேருந்து என்பதை தவிர்த்து பெரிதாக சொல்வதற்கு ஏதும் இல்லை.
4. தாழ்தள சொகுசு பேருந்து.
இதைப்பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் கட்டண கொள்ளைக்காக விடப்பட்ட பேருந்து. தொடர் பேருந்தும் இவ்வகையை சார்ந்ததே.!
பார்த்த உடன் யாரும் சொல்லாமலே கண்டுகொள்ளலாம். மேலும் பெயர் பக்கவாட்டில் எழுதப்பட்டிருக்கும். போக்குவரத்து கழகத்தாரால் விரும்பி அதிகம் இயக்கப்படும் பேருந்து.
கட்டண விவரம் :
ஒரு நிறுத்தத்தில் ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்கு வசூலிக்கப்படும் குறைந்தபட்ச கட்டண விவரம் :
சாதாரண பேருந்து : ரூ.3
LSS : ரூ.4
EXPRESS : ரூ.5
சொகுசு பேருந்து : ரூ.7
அடுத்தடுத்த கட்டணங்களாக முறையே ரூபாய் 1,1,1 மற்றும் 2 என கூட்டிக்கொள்ளுங்கள்.
பொதுவாக பேருந்துகளில் சில்லரை பிரச்சனை என்பது சில சமயங்களில் ஏற்படக்கூடியதுதான். ஆனால் எப்போதுமே சில்லரை தட்டுப்பாட்டுடன் பிரச்சினையாகவே இருப்பது கோவை மாநகர சாதாரண கட்டண பேருந்துகளில்தான். ஓரளவிற்கு பிரச்சினையாக இருந்த சில்லரைத் தட்டுப்பாடு கடந்த சில வருடங்களாக பெருந்த பிரச்சினையாக இருக்கிறது.
கோவையை பொறுத்தமட்டில் மக்கள் அதிகமாக பயணிக்க விரும்புவது சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டும்தான். சம அளவு நேரத்தில் 3 ரூபாயில் பயணிக்ககூடிய இடத்திற்கு ஏன் 7 ரூபாய் கொடுக்க வேண்டும் என தங்கள் பயணத்திற்காக சாதாரண பேருந்துகளையே அதிகம் நாடுகின்றனர்.
கோவையில் தாழ்தள சொகுசு பேருந்துகளை அறிமுகப்படுத்திய புதிதில் பல பகுதிகளில் இப்பேருந்துகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில பகுதிகளில் தொடர்ச்சியாக சொகுசு பேருந்துகளை 'பஞ்சர்' செய்யவும் செய்தனர். இதற்கு காரணம் கூடுதலான பேருந்தாக சொகுசு பேருந்துகளை இயக்காமல், சாதாரண பேருந்துகளுக்கு மாற்றாக இயக்கியதுதான்.
மக்களின் தொடர் எதிர்ப்பினை தொடர்ந்து மீண்டும் சாதாரண பேருந்துகளை இயக்கி கூடுதல் பேருந்துகளாக சொகுசு பேருந்துகளை இயக்க தொடங்கியது. ஆயினும் இன்றுவரையிலும், சொகுசு பேருந்துகளில் பயணம் எண்பது மக்களின் விருப்பத்திற்க்குட்பட்ட பயணமாக இல்லை. சாதாரண பேருந்திற்க்கு காத்திருக்க முடியாமல் சொகுசு பேருந்தில் பயணிப்போரே அதிகம்.
சொகுசு பேருந்துகளில் வருமானத்தை அதிகப்படுத்த முடியாமல் அதற்கு ஈடுகட்ட கொண்டுவரப்பட்டதே Express பேருந்துகள். LSS பேருந்துகள் இருந்தாலும், சாதாரண மற்றும் LSS பேருந்துகளை அதிகப்படுத்தாமல் புதிதாக விட்ட பேருந்துகளுக்கு Express எனப்பெயரிட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
மேலும் சில்லரைப் பிரச்சினையை மையமாகக் கொண்டு சாதாரணப் பேருந்துகளில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்கி வைத்துள்ளனர். 4 ரூபாய் பயணச்சீட்டிற்கு 10 ரூபாயை நீட்டியவர்களை பேருந்திலிருந்து இறக்கிவிடும் கொடுமையும் அவ்வப்போது ஆங்காங்கே இன்றும் நடந்துவருகிறது.
தினமும் குறைந்தபட்சம் ஒரு பயணியாவது நடத்துனரிடம் சில்லரைப் பிரச்சினையால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இது ஒவ்வொரு சாதாரணப் பேருந்திலும் நடக்கிறது. சொகுசுப் பேருந்துகளில் அத்தகைய பிரச்சினை ஏற்படுவதில்லை. எப்போதும் மக்கள் கூட்டத்தைக் கிடித்து செல்லும் தனியார் பேருந்து நடத்துநர்கள்கூட மக்களிடம் அப்படி கடிந்துகொள்ளமாட்டார்கள். காலையில் பேருந்தை எடுத்ததிலிருந்து இரவு பேருந்து நிறுத்தும் வரை எப்போதும் சில்லரைப் பிரச்சினை இருந்துகொண்டேயிருக்கும். பையில் சில்லரை இருந்தாலும்கூட முகம் சுளிக்காமல் சில்லரை தரும் நடத்துநரை காண்பது அரிது.
4 ரூபாய் பயணச்சீட்டிற்கு 5 ரூபாய் கொடுத்துவிட்டு மீதி சில்லரை கேட்கமுடியாமல் இறங்கிப்போகும் பயணிகள் எண்ணிக்கை அதிகம் இங்கே.! அதே சமயம் 5 ரூபாய் சீட்டிற்கு 4 ரூபாய் கொடுத்து பயணிப்பவர் எவரும் இலர். ஏனெனில் அத்தகைய சூழல் இல்லை, மக்கள் நாணயமானவர்கள்.
கோவையில் மூன்று முக்கிய பேருந்து நிலையங்கள் இருக்கின்றன. இவ்வளவு சில்லரைத் தட்டுப்பாடு இருக்கும் கோவையில் ஒரு இடத்தில் கூட சில்லரை வழங்கும் இயந்திரத்தைப் பொருத்தவில்லை இந்த நிர்வாகம்.
குறிப்பு: தயவுசெய்து சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுடன் கோவையை ஒப்பிடாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக