ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தமிழக ஊடகங்களும் அரசியலும் திரைத்துறையும்

நபர் 1 : விஜய T.இராஜேந்தர்
--------------------------------------
தமிழ்நாட்டில் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் பிரபலமான ஒரு நபர். திரைத்துறையை சார்ந்தவர் மிகவும் திறமை வாய்ந்த மனிதர். கதை, திரைக்கதை, இசை, வசனம், பாடல்கள், இயக்கம் என பல பரிணாமங்களில் ஜொலித்த ஒரு குட்டி திரைத்துறை பல்கலைக்கழகம் இவர். முன்னணி நாயகர்களின் துணை இல்லாமலேயே பல வெற்றிகளை கொடுத்திருக்கிறார். நாயகனாகவும் களமிறங்கி ஜெயித்துக்காட்டினார். இவருடைய படங்களும் பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன. முழுக்க முழுக்க தன் திறமையால் மாபெரும் வளர்ச்சி பெற்ற மாபெரும் மனிதர்.

இப்படி பல திறமைகளை கொண்ட இவர், 2004 ஆண்டு வாக்கில் தான் இருந்த கட்சியிலிருந்து விலகி "அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்" எனும் அரசியல் கட்சியை நிறுவி நிர்வகித்து வருகிறார். இவருடைய இந்த கட்சி பெரும்பான்மை மக்களை சென்றடையவேயில்லை. இன்று பலரால் பல இடங்களில் கேலி பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நபர் 2 :  கார்த்திக்
-----------------------
இவரும் திரைத்துறை பிரபலம்தான். நடிகர் முத்துராமலிங்கம் அவர்களுடைய மகன். நாயகனாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். 'நவரச நாயகன்' என்ற அடைமொழியோடு எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர். இவரும் அனைவராலும் அறியப்பட்ட, மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற மனிதர்தான்.

2006ம் ஆண்டு முதல் ஃபார்வார்டு ப்ளாக் கட்சியில் இருந்த இவர், 2009ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி "அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி"  எனும் அரசியல் கட்சியை நிறுவி, நிர்வகித்து வருகிறார். இவரை அறிந்த அளவிற்கு இவருடைய கட்சி அறியப்படவில்லை. இக்கட்சியும் பலரால் கேலி கிண்டல் செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது.

நபர் 3 : சரத்குமார்
------------------------
தமிழ் திரைத்துறை நாயகர்களில் முக்கியமானவர்களில் இவரும் குறிப்பிட தகுந்தவர். இன்றுவரையிலும் வெற்றிகரமானதொரு கதாநாயகன். பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் என்றால் மிகையாகாது. தமிழக திரைத்துறையில் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்பட்ட இவர் தற்போது புரட்சி நாயகனாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் இரசிகர் மன்றம் அமைக்கப்பட்ட நாயகர்களில் இவரும் ஒருவர்.

ஆகஸ்ட் 31, 2007ம் ஆண்டு "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி" எனும் கட்சியை தொடங்கி முதல் தேர்தலை சந்தித்து கட்சியின் முதல் சமஉ வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  கட்சிக்கு ஒரு சமஉ இருந்தாலும் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை. ஏன்! பல பேருக்கு இப்படி ஒரு கட்சி இருப்பதே தெரியாது என்று சொன்னாலும் அது மிகையாகாது.

நபர் 4 : விஜயகாந்த்
---------------------------
எங்கள் ஊருக்கு பக்கத்து கிராமமான சேராக்குப்பத்தை சேர்ந்த ஒருவரால் திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு பல வெற்றிப் படங்களில் நடித்தவர். ஒரு காலத்தில் இரஜினிக்கு கடுமையான போட்டியாக விளங்கியவர். இவரும் மேற்சொன்ன மூவரைப் போலவே தமிழகம் முழுவதும் அனைவராலும் அறியப்பட்டவர் .

அதுவரை எந்த கட்சியிலும் இல்லாத இவர் 2005ம் ஆண்டு "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" எனும் அரசியல் கட்சியை தோற்றுவித்து, இரு சட்டமன்றத் தேர்தலை சந்தித்து, முதல் தேர்தலில் ஒரு சமஉ-ம் இரண்டாவது தேர்தலில் 27 சமஉ-க்களையும் பெற்று தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்.

!------------------!

இந்நான்கு பேரையும் அவர்களது அரசியல் வளர்ச்சியையும் உற்றுநோக்கும் போது சில சேதிகளை மிக எளிதாகவே விளங்கிக்கொள்ள முடியும். மூவருமே திரைத்துறையை சார்ந்தவர்கள்தான். நான்கு பேருமே மக்களால் நன்கு அறியப்பட்டவர்கள்தான். ஆனால், முதல் மூன்று நபர்களுக்கு கிடைக்காத அரசியல் வெற்றி விஜயகாந்த்துக்கு மட்டும் எப்படி கிடைத்தது.!?

நால்வருமே தங்களது துறையில் சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள்தான். ஆனாலும் இவர்களது அரசியல் வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் வேறு சில முரண்பட்ட கூறுகளை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

இந்நால்வரில் முதல் மூவரும் தமிழர்கள். அதாவது முதல் மூவருக்கும் தாய்மொழி தமிழாகவும் விஜயகாந்த்துக்கு தாய் மொழி தெலுங்காகவும் இருக்கிறது. தெலுங்கர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போதும் அவர் சந்தித்த தேர்தல்களின்போது விஜயகாந்த்-க்கும் அவருடைய கட்சிக்கும் ஊடகங்களால் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் முன்னுரிமையும் தமிழர்களாகிய T.இராஜேந்தர், கார்த்திக், சரத்குமார் போன்றோர் கட்சி ஆரம்பித்தபோதோ, தேர்தல்களை சந்திக்கும்போதோ வழங்கப்படவில்லை. மாறாக ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டு கேலி செய்யப்பட்டனர்/செய்யப்படுகின்றனர்.

என்னுடைய கேள்வி, இந்த மூன்று தமிழர்களும் விஜயகாந்த்தைவிட எந்த வகையில் தகுதி குறைந்தவர்களாக இருக்கின்றனர்.!? விஜயகாந்த்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏன் இவர்களுக்கு அளிக்கப்படவில்லை.!?

இவற்றை காணும்போது அடிப்படையிலேயே சில கேள்விகள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. ஊடகங்களின் நடுநிலைமை என்பது காணல் நீர்தான். ஆனால், ஐயப்பாடு அடிப்படை நுண் அரசியல் சார்ந்ததாக இருக்கிறது. அதாவது, ஊடகங்கள்/ஊடக பெரு முதலாளிகள் தமிழர் அரசியலில் பெரும்புள்ளியாக வளர்வதை விரும்பவில்லையா..!?

விஜயகாந்த்தின் தகுதி என்னவென்று அறியாமலா அவரை உயர்த்திப்பிடித்தனர். ஆம் என்றால், பிறகு ஏன்
இவர்கள் பத்திரிக்கை நடத்த வேண்டும்!?. அதெப்படி தமிழர் ஒருவர் கட்சி ஆரம்பித்தால், அது சாதிக்கட்சியாகவும், தகுதியற்ற கட்சியாகவும், மக்கள் ஆதரவு பெரிதாக ஒன்றும் இல்லாததைப் போன்றும் எழுதறீங்க..!? அதுவே தமிழரல்லாத ஒருவர் கட்சி ஆரம்பித்தால், அவருக்கு ஏகத்துக்கும் முன்னுரிமை கொடுத்து தூக்கி பிடிக்கறீங்க..!!

இது நேற்று இன்றைக்கல்ல பல ஆண்டுகளாகவே தமிழக ஊடகங்கள் இப்படிதான் நடந்துகொள்கின்றன. ஒரே தேர்தலில் ஆட்சியை பிடித்தார் மலையாளி எம்.ஜி.ஆர்.,  தன் கட்சியை கலைத்தார் சிவாஜி. 

தமிழினத்திற்கு எதிரான இந்த ஊடகங்களின் போது அரசியலில் மட்டுமல்ல அனைத்து சேதிகளிலும் பிரதிபலிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஈழ விவகாரத்தில் என்னைப் பொருத்த வரையில் மிகப்பெரிய குற்றவாளி இந்த தமிழக ஊடகங்கள்தான். எங்கோ ஒரு நாட்டிலிருக்கும் தமிழனுக்கு பெரிதாக எந்த தொடர்பும் இல்லாத அல்ஜசீரா, சேனல்4 போன்ற ஊடகங்கள் செய்த வேலையை தமிழக ஊடகங்கள் செய்திருக்க வேண்டும். புரட்சி தீ தமிழகத்தில் பற்றி எரிந்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் செய்தது சேதி உணர்ச்சி கொண்ட தமிழனின் உணர்ச்சிகளை மழுங்கடித்தது மட்டுமே.!

தமிழன் உயர் அதிகாரம் பெறுவதை, தமிழக ஊடகங்கள் என சொல்லும் இவர்கள் விரும்புவதே இல்லை. தகுதியில்லாத தமிழரல்லாதவரை உயர்த்திப்பிடிக்கும் இவர்கள் முழுத்தகுதி கொண்ட தமிழர்களை தாழ்த்தவே எண்ணுகின்றனர். தமிழன் எழுச்சிபெறும்போது மட்டுமே இவர்களுக்கு சாதியும், மதமும், இனமும், சமத்துவமும், சமாதானமும், தேசப்பற்றும் மற்றும் பல சங்கதிகளும் பெருகி வரும். இவர்களிடமிருந்து எப்படி விழிப்புறுவது என்பதுதான் தெரியவில்லை.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக