செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

முற்ப்போக்குச் சிந்தனையின் முதல் படி வன்னியர் புராணம்.


இந்தப் பதிவை பொதுப்புத்தியுடன் கூடிய பார்வை இல்லாமல் சற்று மாற்றி பார்க்குமாறு நண்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பதிவு சிறு ஒப்பீட்டின் அடிப்படையில் எழுதப்படுகிறது. வருணாசிரமக் கோட்பாட்டிற்க்கும் வன்னியர் புராணத்திற்க்கும் இடையேயான முரண்களின் அடிப்படையில் எழுதப்படுகிறது.

வருணாசிரமத்தின் அடிப்படைக் கோட்பாடான பிறப்பு குறித்த கோட்பாட்டையே அடித்து நொறுக்குகிறது வன்னியர் புராணம்.

வருணாசிரமத்தின் படி மனிதனின் பிறப்பினை நான்காக வகைப்படுத்தி முறையே தலை, தோள், இடை, கால் எனப் பிரித்து பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்கிறது. 

ஆனால், வன்னியர் புராணமோ நெருப்பிலிருந்து பிறந்ததாக கூறுகிறது.

இங்கு நெருப்பிலிருந்து பிறப்பதெல்லாம் எப்படி சாத்தியம் என்பது மாதிரியான பகுத்தறிவு கேள்விகள் வேண்டாம். தலை, தோள், இடை, கால் போன்றவற்றிலிருந்து எப்படி பிறப்பு எனப்படுகிறதோ அதேபோல்தான் நெருப்பும். இங்கு இவர்கள் வருணாசிரம கோட்பாட்டிற்க்குள் வரமாட்டார்கள் என்பதை நிறுவுவதற்கே இது.  

இங்கு இவர்கள் ஏன் நெருப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.? அதாவது உலகிலேயே மிகவும் தூய்மையானது நெருப்புதான். எதனுடனும் கலந்துவிடாது மேலும் அசுத்தத்தையும் சேர்த்து அழித்துவிடும். ஆகவே நாங்கள் தூய்மையானவர்கள் உங்களின் வருணாசிரம கோட்பாடு எங்களுக்கு பொருந்தாது என்பதேயாகும்.

உயர் குலத்திற்க்கும் ஒழுக்கத்திற்கும் குறியீடாக சொல்லப்படுவது பூணூல். வருணாசிரமத்தின் படி பூணூல் தலையில் பிறந்தவர்களுக்கு உரித்தானது. வன்னியர் புராணத்தின் படி பூணூல் வன்னியர்களுக்கு சொந்தமானது. வன்னியர் தோற்றமே தூய்மையின் சின்னமான நெருப்பு என்பதால் தோற்றத்தின்போதே பூணூலோடு வருகிறார். ஆக இவர்கள் உயர் குலத்திலும், ஒழுக்கத்திலும் எவருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்பதை நிறுவுகிறது வன்னியர் புராணம்.

ஆக, ஒழுக்கத்திலும் பண்பிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. எமக்கென்று ஒரு உயர் பண்பு இருக்கிறது என்று பறைசாற்றி வருணாசிரமத்திற்க்கு எதிராக இருக்கிறது வன்னியர் புராணம்.

பூணூல் அணியும் நபர்களின் தொழிலாக பிச்சையெடுப்பதை சொல்கிறது வருணாசிரமம். ஆனால், வன்னியர் புராணம் போர் புரிவதற்க்காகவே படைக்கப்பட்டதாகவும் அரச குடியாகவும் சொல்கிறது. அதாவது சத்ரியர்.

யாசித்து வாழ்வது என் குலத்திற்க்கு இழுக்கென தனது தொழில் போர் புரிவது நான் அரச குடியினன் என வருணாசிரமத்தின் தொழில் குறித்த கோட்பாட்டினையும் உடைக்கிறது.

ஆக வருணாசிரமத்திற்க்கு எதிராக அவர்களுடைய போக்கிலேயே நாங்கள் உங்களுடைய கோட்பாட்டிற்க்குள் வரமாட்டோம் என எழுதப்பட்ட ஒரு புராணமாக வன்னியர் புராணம் இருக்கிறது. மேலும் வன்னியர் புராணம் எவரையும் தங்களை விட தாழ்ந்தவர்கள் என கூறவில்லை. அதேசமயம் தாங்களும் யாருக்கும் தாழ்ந்தவ்ர்கள் இல்லை என்றே கூறுகிறது.

வருணாசிரம கோட்பாடுகளுக்கு எதிராக எழுதப்பட்டு இந்து புராணங்களாகிய 18 புராணங்களில் 4வது புராணமாக இடம்பெற்றிருப்பது ஆச்சரியம்தான். இயற்றுவதோடல்லாமல் அதனை அனைவரையும் ஏற்க்கும்படி செய்தல் மிகப்பெரிய காரியம். அதைதான் வன்னியர் புராணம் செய்திருக்கிறது.

வருணாசிரமத்தின் அடிப்படையான பிறப்பு, தொழில், உயர் குலம் ஆகியவற்றை வன்னியர் புராணம் அடியோடு தகர்த்திருக்கிறதல்லவா.!!  

என்னுடைய பார்வையில் வன்னியர் புராணம் தெரிவிப்பது இதுதான்: “நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை. நீ எப்படி என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும்.”


ஆகவே, வன்னியர் புராணம் முற்ப்போக்குச் சிந்தனையின் முதல் படி என்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக