திங்கள், 16 மார்ச், 2015

கஸாலித்துவம் - வாசகர் விமர்சனம்


நூலின் பெயர்      : கஸாலித்துவம்
ஆசிரியர்          : ரஹீம் கஸாலி
வகை             : பொது (அரசியல், நகைச்சுவை, சமூக சிந்தனைகள்)
விமர்சகர்          : கீழூர் த.இளம்பருதி
விலை            : ரூ.70 /-
நூலின் அட்டை    : (முன் மற்றும் பின் அட்டை)

விமர்சனம் :

அது என்ன கஸாலித்துவம்.!? இது உங்களில் பலருக்கு கேள்வியாக இருக்கும். முகநூலில் திரு.இரஹீம் கஸாலி அவர்கள் எழுதிய பதிவுகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். ஒவ்வொரு பதிவின் முடிவிலும் “#”-குறியிட்டு, அது எதை நோக்கிய பதிவு எனக்குறிப்பிட்டு அதனுடன் “த்துவம்” என முடிப்பதுதான் அவர் வழக்கம்.

எடுத்துக்காட்டாக, பாசத்தை வெளிப்படுத்தும் பதிவை எழுதினால் இறுதி வரியில் ‘#பாசத்துவம்’ என எழுதி முடித்திருப்பார். அதன் வெளிப்பாடுதான் இந்த “கஸாலித்துவம்” எனும் பெயர்.

இந்த நூலிற்கு இயக்குனர் கே.பாக்கியராஜ், எழுத்தாளர் சுரா மற்றும் இயக்குனர் முரளி அப்பாஸ் ஆகியோர் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.

பத்திரிக்கைகளில் தொடர்ச்சியாக எழுதிவந்ததை தொகுத்து புத்தகமாக வெளியிடுவார்கள் அல்லவா.! அதன் பரிணாம வளர்ச்சிதான் இந்த கஸாலித்துவம் (முகநூல் பதிவுகளின் தொகுப்பு).

அரசியல், நகைச்சுவை, நையாண்டி, பாசம், கோவம் என பல பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் சாமானியனின் பார்வை பிரதிபலிப்பு. அதாவது எடுத்துக்காட்டாக : ஒரு சோக நிகழ்வென்றால், அதனை ஒரு எதார்த்தமான மனிதனாக நாம் எப்படி உணர்கிறோம் என்பது மாதிரியான உணர்வு தொகுப்புதான் இந்த நூல்.

ஆசிரியரின் எழுத்தாளுமை பாரட்டப்பட வேண்டியது. ஒரு பதிவை படிக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவிற்க்குமேல் பெரிதாக இருந்தால் படிப்பதையே தவிர்க்கும் பழக்கம் பலரிடம் இருக்கும். ஆனால், கஸாலித்துவத்தில் அப்படி எந்த ஒரு பதிவையும் உங்களால் தவிர்க்க முடியாது. ஏனெனில், அந்த இடத்தில்தான் நூல் ஆசிரியரின் சொற்க்கோர்வைகள் சுயத்தை காட்டுகின்றன. உண்மையில் இந்நூல் ஆசிரியரின் வெற்றியும் அதுதான். அதற்க்காக நிச்சயம் பாராட்டவே வேண்டும்.

பெருவாரியாக அரசியல் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அரசியல்கட்சிகளின் தவறினை சுட்டிகாட்டியும் நையாண்டி செய்தும் உரையாடல் வடிவிலும், சிறு பதிவுகளாகவும், சில பத்திகளைக் கொண்ட பதிவுகளாகவும் சுவாரசியமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. வேறு மாதிரியாக சொல்ல வேண்டுமானால் அரசியல் பதிவுகள் சற்று ஆழமானவை, எடுத்துக்காட்டாக :

அரசாங்கம் காசுக்கு கொடுக்க வேண்டியதை இலவசமாக கொடுத்தால் அது அரிசி. இலவசமாக கொடுக்க வேண்டியதை காசுக்கு கொடுத்தால் அது தண்ணீர். இம்புட்டுத்தாங்க.
#அரசியல்த்துவம்.

எனது தனிப்பட்ட பார்வையில், இந்த புத்தகம் கருணநிதி, ஜெயலலிதா, இராமதாசு என அனைத்து அரசியல் தலைவர்களும் நிச்சயம் படிக்க வேண்டும் என்பது என் எண்ணம். சாதாரண மனிதனின் பார்வையில் இந்த தலைவர்கள் மற்றும் அவர்களது செயல்கள் மீது எப்படிப்பட்ட பேச்சுகள் இடம்பெறுகிறது என்பதை அவர்கள் அறிய இம்மாதிரியான நூல்கள் உதவி புரியும்.

ஆசிரியரின் அபாரமான நகைச்சுவை உணர்வு வெகு அழகாக அவரது பதிவுகளில் வெளிப்பட்டுள்ளது. ஒரு நல்ல படைப்பாளிக்கு அது கூடுதல் மதிப்பும் கூட. எடுத்துக்காட்டுக்காக :

அந்த அமைச்சரை ஏன் சி.பி.ஐ கைது பண்ணினாங்க?
பண வீக்கத்தை கட்டுப்படுத்த அயோடெக்ஸ் வாங்கிய செலவுன்னு நூறு கோடி ஊழல் பண்ணிட்டாராம்.
#நகைச்சுவைத்துவம்.


படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதை விட, பஸ்சிலும், ஃப்லைட்டிலும் ரிலீஸ் செய்வதற்காக ஏன் அந்த தயாரிப்பாளர் இவ்வளவு மெனக்கெடுறாரு?
அப்பதான் படம் பிடிக்கலேன்னாலும் யாரும் பாதிலேயே எழுந்திருச்சு வெளியே போக மாட்டாங்களாம்.
#நகைச்சுவைத்துவம்.

இப்படியாக நூல் முழுமையும் நம்மை தொடர்ந்து இடைவிடாமல் படிக்கவைத்து மனக்கண்ணில் சிம்மாசனம் போட்டு அமர்கிறார் ஆசிரியர்.

சாமானியர்களின் பார்வை வெகு இயல்பானது. ஆனால் அதை பகிர்ந்துகொள்ளும்போது அவை பெரிய சேதிகளாக தெரியும். உண்மையில் அவை பெரிய சேதிகள்தான். சில எதார்த்த பதிவுகள் சுட்டிக்காட்டும் சேதிகளில் நமது வணக்கத்தை பெறுகிறார்.

எல்லோர் மனசும் ஒரு அங்கீகாரத்துக்காக ஏங்கும் மனசுதான். அங்கீகாரம் யாரிடமிருந்து என்பதில் தான் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறோம்.
#அங்கிகாரத்துவம்

யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் குழந்தைகளுக்கு
மாடர்ன் ஆர்ட் வரைய...
சுவரெல்லாம் கிறுக்கல்கள்.

இடையிடையே இப்படியான ஹைக்கூ கவிதைகளை காண முடியும். தான் ஒரு இரசனைக்காரன் என்பதை சொல்லாமல் சொல்லி அசத்தியிருக்கிறார்.

புகழ்ந்தது போதும் இனி சறுக்கல்களுக்கு வருவோம்.!

பொதுவாக சொல்ல வேண்டுமானால் சறுக்கல்கள் ஏதும் இல்லாமல் சீராகவும் நிதானமாகவும் செயல்பட்டு வெற்றி அடைந்திருக்கிறார் நூல் ஆசிரியர் இரஹீம் கஸாலி என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால்,

தொகுப்பில் சில பதிவுகளை தவிர்த்திருக்கலாம். உதாரணமாக,

சென்னையில் __த்தா என்ற வார்த்தை ஒருவரை கோபப்படுத்தினாலோ, கலவரப்படுத்தினாலோ அவர் சென்னைக்கு புதுசுன்னு அர்த்தம்.  ”

காக்கை உட்காராவிட்டாலும் பழுத்திருந்தாலும் பனம்பழம் விழத்தான் செய்யும்.
#பழத்துவம்

இதுபோன்ற பதிவுகள் முகநூலுக்கு சரியாக இருக்கலாம். இந்த நூலுக்கு தேவையில்லாதவையே.!

மேலும் மற்றும் ஒரு செய்தி. அதனை இந்த நூலுக்கு ஒரு பெரிய குறையாகவே கருத முடியும். பதிவுகள் வகைப்படுத்தப்படவில்லை. பதிவுகளை பொதுவாக வகைப்படுத்தி அவ்வகைகளின் கீழ் பதிவுகள் இடம்பெறுமாறு செய்திருக்க வேண்டும். மேலும் அவ்வகைகளை முகப்பில் பொருளடக்கம் எனும் பக்கம் ஒதுக்கி அங்கு காட்டி முறையே அவற்றிற்கான பக்கங்களையும் காண்பித்திருக்க வேண்டும்.

இது வாசகருக்கு ஒரு சங்கடமே.! தான் வாசித்த தனக்கு பிடித்த பதிவு எங்கு என தேட இருக்கும் வசதி இல்லாமல் இருப்பது நூலில் உள்ள ஒரு குறை.

ஒருவேளை முதல் புத்தகம் என்பதால் இத்தகைய தவறு நிகழ்ந்திருக்கலாம்.

-X-

மொத்தத்தில் “கஸாலித்துவம்” படிப்பதற்க்கு தகுத்த அருமையான நூல். மகிழ்ச்சி, சோகம், இயல்பு, நகை, முரண் என நம்முடைய அனைத்தையும் ஒருகணம் தூசு தட்டி பார்க்க வைக்கும் ஒரு நல்ல நூல் “கஸாலித்துவம்”.

நிச்சயம் தயக்கமில்லாமல் வாங்கி படிக்கலாம். விலையும் கட்டுக்குள்தான் இருக்கிறது.

==================================================
நூல் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய இடம் :

ரிஸால் பப்ளிகேஷன்ஸ்,
இஸ்மாயில் தெரு, அரசர்குளம், புதுக்கோட்டை மாவட்டம்.
ஃபோன் : +91 74011 30507
மின்னஞ்சல் : rizalpublications@gmail.com
=================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக