பழைய நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழைய நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 மார்ச், 2013

அம்மா சொல்லிய கதைகள் - 2


 

இந்த கதை 10, 15 வருசத்துக்கு முன்னாடி எங்க அம்மா எங்களுக்கு சொன்னது. இந்த கதை முழுக்க பேச்சு நடையில் எழுதியிருக்கிறேன். பொங்கலுக்கு ஊருக்கு போனப்ப அம்மாகிட்ட கதைகளை கேக்க மறந்துட்டேன். திடீர்னு ஞாபகத்துக்கு வந்த ஒரு கதையைதான் நான் இங்க உங்களுக்கு சொல்லபோறன்.

இனி கதையை கேளுங்க..

ஒரு ஊருல ஒரு முட்டாள் இருந்தானாம். அவன் அந்த ஊருல இருக்குற ஒரு செட்டியார்கிட்ட வேலை செஞ்சிகிட்டு இருந்தானாம். ஒரு நாள் அந்த செட்டியார் தானியங்களை விற்ப்பதற்க்கு தன் முட்டாள் வேலைக்காரனை அழைத்துக்கொண்டு வெளியூருக்குப் போனாராம். தானியங்கள் எல்லாத்தையும் வித்துட்டு பண மூட்டையோட ரெண்டு பேரும் ஊருக்கு காட்டு வழியாக திரும்பிகிட்டு இருந்தாங்களாம்.

அப்பலாம் எங்க போனாலும் நடந்து இல்லனா மாட்டுவண்டிலதான போவாங்க. இப்பதான சைக்கிள் இருக்கு..

அப்படி திரும்பி வந்துகிட்டு இருக்கும்போது, ரொம்ப இருட்டிடிச்சுனு ஒரு எடத்துல படுத்து தூங்கிட்டு விடியகாலைல எழுந்து போகலாம்னு சொல்லிட்டு அங்கேயே படுக்க தயாரானாங்கலாம்.
அப்ப அந்த செட்டியாரு தன்னோட வேலைக்காரங்கிட்ட சொன்னாராம்.

டேய், நீ இந்த வழி ஓரமா படுத்துக்க, எங்கிட்ட பணமூட்டை இருக்கு அதனால நான் அந்த செடி மறைவுல பண மூட்டையை தலைக்கு வச்சு படுத்துக்கறன். இது இராத்திரி நேரமா இருக்கறதால திருடனுங்க நடமாட்டம் இருக்கும். யாராச்சும் வந்தாங்கனா..! என்ன எழுப்பிவிடு நாம ஓடிப்போய் ஓளிஞ்சுக்கலாம். அப்படினு..

சரிங்க மொதலாளினு சொல்லிட்டு அந்த முட்டாள் வேலைக்காரன் அந்த வழியிலயே படுத்துகிட்டான். செட்டியாரு செடி மறைவுல படுத்துகிட்டாரு. பாஞ்சுஇராத்திரி ஆச்சு, செட்டியாரும், வேலைக்காரனும் நல்லா தூங்கிட்டாங்க. அப்போ அஞ்சு,ஆறு திருடனுங்க அந்த வழியா திருடறதுக்குப்போனாங்க.

அப்போ ஒரு திருடன் வழியில படுத்திருக்குற முட்டாளோட கால்ல தடுக்கி கீழ விழுந்திட்டான். கீழ விழுந்த திருடன் எழுந்திரிச்சி, முட்டாப் பய வழியில படுத்திருக்கான் பாருனு திட்டினானாம்.
முட்டாள் வேலைக்காரனுக்கு கோவம் வந்துடிச்சு..! யாரப் பாத்து முட்டாள்னு சொன்ன.. பண மூட்டையை தலைக்குய் வச்சிகிட்டு செடி மறைவுல படுத்துகிடக்கும் செட்டியார கேட்டுப்பாரு நான் யாருனு தெரியும்னு சொன்னானாம்.


உடனே திருடனுங்க செட்டியாரை அடிச்சிபோட்டுட்டு பனத்தை எடுத்துகிட்டாங்க. டேய் இவன் கோவக்காரனாவும் இருக்கான், நெறைய விஷயம் தெரிஞ்சும் இருக்கு. இவன் பலே கில்லாடியா இருப்பான் போல இவனையும் நம்ம கூட சேத்துக்கலாம்னு முடிவு பன்னி முட்டாள் கிட்ட கேட்டாங்கலாம். அவனும் சரினு சொல்லிட்டு திருடனுங்க கூட கெளம்பிட்டான்.

கொஞ்ச நேரத்துல பக்கத்துல இருக்குற ஊருக்கு வந்து சேர்ந்துட்டாங்க. எந்த வீட்டுல திருடலாம்னு சொல்லி அவனுங்களுக்குள்ள ஒரு குழப்பம். சரி புதுசா வந்திருக்குற நம்ம கில்லாடிகிட்ட கேக்கலாம் அவந்தான் விசயம் தெரிஞ்ச ஆளாச்சேனு அவன்கிட்ட கேட்டாங்க.

நம்ம முட்டாள் வேலைக்காரன், குறட்டை சத்தம் பயங்கரமா வர்ற ஒரு வீட்டைகாட்டி இங்க திருடலாம்னு சொன்னானா.. எல்லாரும் சரினு சொல்லி அந்த வீட்டுக்குள்ள நுழஞ்சி அடுக்குபானை, சட்டி பாத்திரம்னு எல்லா எடத்துலையும் தேடிப்பாத்தாங்க ஒரு குண்டுமணிகூட கெடைக்கல. ஒரு கெழவி மட்டும் படுத்து கொறட்டை விட்டு தூங்கிகிட்டு இருந்துச்சு.


இந்த சமயத்துல நம்ம முட்டாள் மட்டும் ஒரு கலையத்தை எடுத்துவந்தான். அதுல தங்கம் இருக்குமோனு நெனச்சி பாத்தவங்களுக்கு ஏமாற்றம்தான். அதுல கொள்ளு-தான் இருந்துச்சி. இவ்ளோதூரம் நடந்து வந்தது ரொம்ப களைப்பா இருக்கு இந்த கொள்ளையாவது வறுத்து சாப்பிடலாம்னு முட்டாள் சொன்னான். அதுக்கு எல்லோரும் சரினு சொன்னாங்க.

முட்டாள் அடுப்ப மூட்டி வாணல வச்சி கொள்ள வறுத்துகிட்டிருந்தான். அந்த நேரம் பாத்து அந்த கெழவி வாய பொளந்துகிட்டு சத்தமா கொறட்டவிட்டுது. அத பாத்த நம்ம முட்டாள் கிழவி கொள்ளுதான் கேக்குதுனு நெனச்சிகிட்டு, இரு கெழவி கொள்ளு இன்னும் சரியா வறுவல கொஞ்ச நேரம் பொருத்துக்கோனு சொன்னான்.

கிழவிக்கு அதெல்லாம் எங்க தெரியபோகுது. அது கொறட்டை இல்ல விட்டுகிட்டிருக்கு. அது தொடர்ச்சியா கொரட்ட விட்டுகிட்டே இருந்துச்சி.

முட்டாள் கொள்ள வறுத்து முடிச்சதும், ஆனாலும் உனக்கு ரொம்பதான் அவசரம் கெழவினு சொல்லிகிட்டே அடுப்புலேருந்து ஏறக்குன சூட்டோட திறந்திருக்குற கிழவியோட வாயில சுட சுட கொள்ளை கொட்டினான்.

அவ்ளோதான், கெழவி அய்யய்யோ...!!! னு கத்தி அலப்பறை பன்னி போட்ட சத்தத்துல அக்கம் பக்கத்துல இருக்குற எல்லோரும் முழிச்சிகிட்டு ஓடி வந்தாங்க. திருடனுங்க எல்லோரும் மாட்டிகிட்டாங்க.



திருடனுங்கள புடுச்சி கட்டிபோட்டு செம்ம அடி அடிச்சாங்களாம். முட்டாளுக்கு அடிதாங்க முடியாம நான் திருடன் இல்லீங்க இந்த மாதிரி நானும் எங்க முதலாளியும் படுத்துகெடந்தோம், எங்க மொதலாளிய அடிச்சிபோட்டுட்டு பணத்தையும் எடுத்துகிட்டு என்னையும் கூட்டிகிட்டு வந்துட்டாங்கனு எல்லா உண்மையையும் சொன்னான்.

அப்புறமா செட்டியாரு எங்க இருக்காருனு தேடிபுடிச்சி கூட்டிகிட்டு வந்து அவருகிட்ட அவரோட பணத்தை குடுத்துட்டு, திருடனுங்கள அடி அடினு அடிச்சு இனிமே இந்த பக்கமே வரக்கூடாதுனு அடிச்சி தொரத்திட்டாங்களாம்..


அவ்ளோதான் கதை முடிஞ்சிடுச்சு, தூங்குங்க..

குறிப்பு : கதை எப்படி இருந்துச்சுனு மறக்காம சொல்லுங்க..

நன்றி : கூகிள் [படம்]

புதன், 19 டிசம்பர், 2012

அம்மா சொல்லிய கதைகள் - 1


இந்த பதிவை படிக்க ஆரம்பிக்கறதுக்கு முன் நீங்க உங்களோட குழந்தை பருவத்திற்க்கு போய்விடுவது நல்லது. ஏன்னா இந்த பதிவை குழந்தை மனப்பான்மையுடன் படித்தால் மட்டுமே நல்லா இருக்கும். உங்களுடைய தற்ப்போதைய வயதை கொண்டு படிப்பீர்களேயானால் இப்பதிவு மரண மொக்கையாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.

நமக்கு சின்ன வயசா இருக்கும்போது, நம்ம எல்லோருக்குமே இந்த அனுபவம் இருக்கும். இரவில் நம்மல தூங்க வைக்க அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், பாட்டி, தாத்தா-னு யாராவது ஒருத்தவங்க கதை சொல்லுவாங்க. சில நாட்கள்ல அடம்புடிச்சு கதை சொல்ல சொல்லி தூங்குவோம். சில சமயம் ஏற்கனவே சொன்ன கதையையே திரும்ப திரும்ப சொல்ல சொல்லி கேட்போம்.

அந்த மாதிரி நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்க அம்மா எங்களுக்கு சொன்ன கதைகள் சிலவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

எங்க அம்மா எனக்கு சொன்ன சொன்ன பல கதைகள் மறந்து விட்டன. இருப்பினும், வரும் பொங்கலுக்கு வீட்டுக்கு போய் அம்மாகிட்ட மறுபடியும் கதையெல்லாம் கேட்டுட்டு வந்து ஒவ்வொரு கதையையும் ஒரு ஒரு பதிவா கொடுக்கறன்.

அப்புறம், ஊர்லேர்ந்து எங்க தாத்தா(அம்மாவின் அப்பா) வந்தாருனா, அன்னைக்கு அவர்தான் கதை சொல்லுவாரு. தாத்தா எப்பவும் இராமாயணம், மகாபாரதம்-னு புரானக்கதைகள்தான் சொல்லுவாரு. உதாரனமா, நரகாசூரன் கதை, பத்மாசூரன் கதை, சூரபத்மன் கதை...

அடுத்தது அப்பா, பொதுவாவே அப்பாகிட்ட கதை சொல்ல கேட்டா பல சமயம் அம்மாகிட்ட கேளுனு சொல்லி தப்பிச்சுக்குவாரு. சில நாட்கள்ல நம்ம தொந்தரவு தாங்காம கதை சொல்லியே ஆகவேண்டிய நிலமை வந்துடும். பொதுவா அப்பாவுக்கு கதை சொல்லவே தெரியாது..!!

அந்த மாதிரியான சமயத்துல எங்க அப்பா ஒரு வரி கதை சொல்லுவாரு. தொடக்கத்துல ரொம்ப விறுவிறுப்பான கதை சொல்ல போற மாதிரியே ஆரம்பிச்சு பொசுக்குனு முடிச்சிடுவாரு.

அந்த மாதிரி எங்களுக்கு சொன்ன கதையை உங்களுடன் இப்பதிவின் தொடக்க கதையாக அன்றைய இரவு நிகழ்வுடன் பகிர்கிறேன்.

அப்போ எங்க வீடு கூரை வீடுதான். பனி, மழை அல்லாத காலங்களில் வீட்டின் வாசலில் அமர்ந்து குமிழ் விளக்கு(குண்டு பல்ப்) மற்றும் நிலா வெளிச்சத்தில் விண்ணில் நட்சத்திரங்கள் மின்ன சாப்பிடுவதுதான் வழக்கம்.

பொதுவாக எப்பொதுமே 9 மணிக்கு முன்னதாகவே தூங்க ஆரம்பித்துவிடுவோம். நானும் அண்ணனும் ஆளுக்கு ஒரு புறமாக அப்பாவின் இரு கைகளிலும் தலை வைத்துதான் தூங்குவோம். அப்பா வீட்டில் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகளில் தூங்குவோம்.

அப்படி ஒரு நாள் அப்பாவின் கைகளில் படுத்துக்கொண்டு கதை சொல்ல சொல்லி நச்சரித்துக்கொண்டிருந்தேன். ஏனோ அன்று அம்மாவிடம் கேட்கவில்லை. ஒரு வழியாக அப்பாவும் சொல்ல ஆரம்பித்தார் அந்த ஒரு வரி கதையை..

“ ஒரு ஊர்ல ஒரு நரியாம்..

ம்ம்..

அதோட கதை சரியாம்..!!!!!!!! ”

அப்பா இந்த கதையை சொல்லி முடித்தவுடன் அங்கே சிரிப்பும் சந்தோசமும் ஆரவாரத்துடன் இருந்தது. ஆனாலும் இத்துடன் விட்டுவிடவில்லை மீண்டும் வேறு கதையை சொல்ல சொல்லி அடம்பிடித்து தூங்கினோம். ஆனால் அப்பா அன்று வேறு என்ன கதையை சொன்னார் என்பது நினைவில் இல்லை.

அடுத்த சில நாட்களில் அப்பா சொன்ன அந்த ஒரு வரி கதையை அடிப்படையாக கொண்டு நாங்களும் ஒரு ஒரு வரி கதையை கண்டுபிடித்தோம். அது,

“ ஒரு ஊர்ல ஒரு ரப்பராம்..

அதோட கதை ரிப்பேராம்..!!!! ”

குறிப்பு : அம்மா சொல்லிய கதைகள்-னு தலைப்பை வச்சிட்டு அப்பா சொன்ன கதையை சொல்லியிருகிறேனேனு நெனைக்காதீங்க. அம்மா சொன்ன எந்த கதையும் சரியா ஞாபகத்துல இல்ல. பொங்கலுக்கு பிறகு சொல்றன். எங்க அம்மா எங்களுக்கு பாடிய தாலாட்டு முதற்க்கொண்டு எல்லாத்தையும் சீக்கிரமாவே இங்க பதிவிடவிருக்கிறேன்.


நமது குழந்தை பருவ நினைவுகள் எப்போதும் நமக்கு மகிழ்வையே தரும். நீங்களும் நினைத்துப்பாருங்கள் உங்கள் குழந்தைப் பருவத்தை. எவ்வளவு கவலைகள் இருந்தாலும் மனம் இலேசாகிவிடும்.


மீண்டும் சந்திப்போம் அடுத்த பதிவில்...

திங்கள், 8 அக்டோபர், 2012

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1998-1999] (ஏழாம் வகுப்பு 'ஈ' பிரிவு)

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - 1992-1997

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1997-1998] (ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவு)

ஏழாம் வகுப்பு  "ஈ" பிரிவு : VII -D

இதுவரை ஆறாம் வகுப்பு முழுவதும் மரத்தடியிலேயே பாடம் படித்த எங்களுக்கு புதிதாக ஒரு தற்காலிக வகுப்பறை கிடைத்தது. பள்ளியின் தெற்கு நுழைவு வாயிலின் அருகிலுள்ள கட்டிடத்தின் மாடியில் உள்ள முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டது.
 
அடுத்த சில நாட்களில், எங்கள் பள்ளியில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட வகுப்புகளில் ஒன்று எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவும் தற்காலிகம்தான். ஓரிரு நாள்களில் இந்த வகுப்பும் மாற்றப்பட்டு எங்களுக்கான நிரந்தர வகுப்பு கிடைத்தது. அதே கட்டிடத்தின் தரைத்தளத்தில் படிக்கட்டுக்கு அருகிலுள்ள வகுப்பு எங்களின் VII - D.

எங்கள் வகுப்புக்கு ஒரு சிறப்பு இருந்துது. அது என்னனா..!? ஒட்டுமொத்த பள்ளியிலேயே ஏழாம் வகுப்பு தொகுப்புகளில் தர வரிசையில் முதல் பத்து இடங்களில் எங்கள் வகுப்பு மாணவர்கள்தான் இருப்பார்கள். என் நினைவுகளில் இருக்கும் அவர்களின் பெயர்கள்.

1. A.அருண்ராஜ் - I
2. S.கபிலன்  - II
3. ஜேம்ஸ் - III, IV
4. S.ஆனந்தவேலு - III , IV , V
5. நடராஜன் - III , IV , V
6. சிவானந்தம் -  III , IV , V , VI
7. குமரேசன் -  IV , V ,VI , VII,VIII , IX, X
8.  L.சுந்தரகணேசன்  -IV , V ,VI , VII ,VIII , IX, X
9. சத்யராஜ் - IV , V ,VI , VII ,VIII , IX, X
10. C.பாலசுப்ரமணியன் - V ,VI , VII ,VIII , IX, X
11. அந்தோனி ராஜ் (Antony Raj) -- V ,VI , VII ,VIII , IX, X

இதுல என் பேர் இருக்காது. எப்புடி இருக்கும். அதுக்கெல்லாம் நல்லா படிக்கனுமில்ல..!?
சரி விடுங்க. இங்க நான் ஒரு சாதனையை பண்ணியிருக்கன். அது என்னன்னா தொடர்ந்து, முதல் பருவத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு என அனைத்திலும் 15 வது இடத்தைப் பிடித்ததுதான். எல்லாம் சரி வகுப்புல மொத்தம் எத்தனை பேருன்னு தெரியனுமில்ல. அனால் அது சரியா எத்தனை பேருனு தெரியல. 60 லேர்ந்து 75 பேரு வரைக்கும் இருந்தோம்.


ஏழாம் வகுப்பு 'ஈ' பிரிவில் எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களின் பட்டியல் பாட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏழாம் வகுப்பு [VII-D](1998-1999)
பள்ளிக்கூடம் :ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.
வ.எண்பாடம்ஆசிரியர்

1

2
3
4
5
6
7
8
தமிழ்

ஆங்கிலம்
கணிதம்
அறிவியல்
சமூக அறிவியல்
ஓவியம்
தறி
உடற்கல்வி (P.E.T)
புலவர்.திரு.தேவராஜ் மற்றும்
திரு. இராஜமோகன் 
திரு.T.இராமசாமி (T.R)*
திரு.T.இராமசாமி (T.R)
திரு.C.முருகவேல் (C.M)
திரு.இரமேஷ்
திரு.இரவிச்சந்திரன்
---?---
திரு.வேலாயுதம்
* : வகுப்பாசிரியர்,                  ---?--- : பெயர் நினைவில் இல்லை.

எங்கள் பள்ளியின் மிகவும் கண்டிப்பான ஆசிரியர்களில் எங்களின் வகுப்பாசிரியர் திரு.T.இராமசாமி அவர்களும் ஒருவர். அவரைப் பார்த்தாலே ஒரே பயமாக இருக்கும். தமிழாசிரியர் புலவர்.திரு.தேவராஜ் அவர்களின் மகன் தான் திரு. இராஜமோகன் அவர்கள். அச்சமயம் அவர் எங்கள் பள்ளியில் தற்காலிகமாக சேர்ந்திருந்தார் என நினைக்கிறேன். அடுத்தது திரு.இரமேஷ் அவர்கள். பொதுவாக எங்கள் வகுப்பின் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்த ஆசிரியர்.

சரி, இனி ஏழாம் வகுப்பில் எனக்கு ஏற்ப்பட்ட சில மறக்க முடியாத சம்பவங்களைப் பார்க்கலாம்.

சம்பவம் 1 :

இந்த வகுப்பில் முதலில் ஒதுக்கப்பட்ட அறையில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இது. ஆறாம் வகுப்பிலிருந்து தேர்ச்சிபெற்று பள்ளி திக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், எங்களின் வகுப்பாசிரியர் எதோ ஒரு சூழ்நிலையில் ஆங்கில எழுத்துக்கள் மொத்தம் எத்தனை எனக் கேட்டார். அதாவது "A B C  D ..."  மொத்தம் எத்தனை எழுத்துக்கள் என வினவினார். வகுப்பிலுள்ளவர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவர்களை எழுப்பி பதில் அளிக்க சொன்னார். ஒருவன் 27 எழுத்துக்கள் என்றான். இன்னொருவன் 26 எழுத்துக்கள் என்றான். கேட்க்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் 26 என்றே சொன்னார்கள். எனக்கு மனசுக்குள் ஒரே பயம். எங்கே நம்மையும் கேட்டுவிடுவாரோ என்று. இதில் 26 எழுத்துக்களா 27 எழுத்துக்களா என்ற சந்தேகம் வேறு. விரல் விட்டு எண்ணி பார்த்து முடிவுசெய்தேன் 26 எழுத்துக்கள்தான் என்று. இருந்தாலும் பயமாகத்தான் இருந்தது. நல்லவேளை என்னை எந்த கேள்வியும் கேட்கவில்லை என சந்தோசம் அடைந்தேன் பாடவேளை முடிவில்.

சம்பவம் 2:


ஆங்கில வழி மாணவர்களுக்காக கட்டப்பட்ட வகுப்பில் அமர்ந்திருந்த சமயம், காலையில் இரண்டாவது பாடப்பிரிவின் போது ஆசிரியர் இரமேஷ் அவர்கள் எங்களை இது கணினி பாடவேளை என அழைத்துச்சென்றார். நாங்களும் அறையை நெருங்கினோம். நீல நிற பின்புலனில் வெள்ளை நிறத்தில் எழுதியிருந்தது "கணினி அறை" என்று.
ஒரு பாட வேலை என்பது 45 நிமிடங்கள். எங்கள் வகுப்பிலிருந்து 5 நிமிடத்தில் கணினி அறைக்கு வந்துவிட்டோம். அடுத்த 40 நிமிடங்கள் கணினி அறையில்தான் செலவிடப்பட்டது. அந்த அறையில் இருந்தது ஒரே ஒரு கணிப்பொறி. கணிப்பொறி இயக்கப்பட்டது 15 நிமிடங்களுக்குமேல் ஆனது கணினி திரையில் "Windows Loading Image " தெரிவதற்கு. சிறிது நேரத்தில் கணினி தானாகவே அணைந்துவிட்டது. மீண்டும் இயங்குவதற்க்குள் பாடவேளை நேரம் முடிந்துவிட்டது. 
நான் முதன் முதலாக கணிப்பொறியை கண்டது அப்போதுதான்.இன்னைக்கு என் பொழப்பே அதுலதான் ஓடிகிட்டிருக்கு. 

சம்பவம் 3:

இந்த சம்பவம் நடந்தது எங்களுக்கு இறுதியாக ஒதுக்கப்பட்ட அறையில். இங்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் பசுங்காரையால்(CEMENT) செய்யப்பட்டவை. ஒருமுறை இருக்கைகளின் மீது ஏறி விளையாடும்போது விழுந்து என் வலது முழங்காலிலும் இடது முழங்காலிலும் பெரிய காயங்கள் ஏற்ப்பட்டது. அந்த காயங்கள் என் முழங்காலில் எலும்பு வெளியே தெரியுமளவுக்கு இருந்தது. இன்றும் அந்த தழும்புகள் இந்த சம்பவத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். 


இந்த வகுப்புல நான் யாருகிட்டயும் பெருசா அடி வாங்கலிங்க. பெருசான்னு இல்ல கிட்டத்தட்ட யாருகிட்டையுமே அடி வாங்கல அப்படிதான் சொல்லணும்.
ஆனால் சில பசங்க கூட சண்டை சச்சரவு இருந்துச்சி. 
எல்லா வகுப்புலயும் ஒழுங்கா படிக்காம, ஒழுங்கா பள்ளிக்கு வராம ஒரு கெட்ட பசங்க குழு (Bad  Boys Team) இருக்குமில்ல. அந்த மாதிரியான ஒரு குழுவுல இருக்குற ஒருத்தனுக்கும் எனக்கும்தான் பிரச்சனையாயிடுச்சு. அன்னிலேர்ந்து எனக்கு அவனுங்கள புடிக்காது. ஆனால் இன்னைக்கு அந்த முழு குழுவும் என் அண்ணன் ஒருவரின் நண்பர்கள் அப்டிங்கறது ஒரு ஒரு வருசத்துக்கு முன்னாடிதான் தெரிய வந்துச்சு.

என்ன கொடுமை "Sir" இதெல்லாம்..!

சரி... மீண்டும் எட்டாம் வகுப்பில் சந்திப்போம்...

திங்கள், 16 ஜூலை, 2012

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1997-1998] (ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவு)


பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - 1992-1997


ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி :
           ஐந்தாம் வகுப்பு முடிஞ்சிடுச்சு... ஆறாவது சேர்க்கணும். எந்த பள்ளிகூடத்துல சேர்க்கணும்னு ஏற்கனவே வீட்ல முடிவு பண்ணியிருந்தாங்க. ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப்பள்ளி(S.K.V Hr. Sec. School). எங்க சுற்றுவட்டாரதுல தமிழ் வழி கல்விகூடங்களில் சிறந்த பள்ளி இதுதான். தமிழ் வழி என்பதால் அரசு பள்ளி என நினைத்துவிட வேண்டாம். இது தனியார் பள்ளிக்கூடம் ஆனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் மட்டும் அரசாங்கம் வழங்கும். பள்ளிக்கட்டணம் ஆண்டிற்கு ஒருமுறை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது ரூ.240 கட்டியதை போல ஞாபகம். எங்க ஊருலேர்ந்து குறுக்கு வழியாக வந்தா 5 கி.மீட்டர்ல பள்ளிகூடத்துக்கு வந்துடலாம். பேருந்து தடத்தின் வழியா வந்தா 7 கி.மீட்டர்.
           ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப்பள்ளியில சேரருதுனா சாதாரண விஷயம் இல்ல.ஏன்னா அப்பவே நீங்க எத்தினாவது வகுப்புல சேருறதா இருந்தாலும் அவங்க ஒரு நுழைவுத் தேர்வு வப்பாங்க அதுல தேர்ச்சி பெறனும்.இடம் கேட்டு வரும் எல்லா பசங்களையும் சேர்த்துக்கொள்ள சொல்லி மனிதசங்கிலி போராட்டம்லாம் நடந்துச்சி.
           அடுத்து நுழைவுத்தேர்வு. நுழைவுத்தேர்வில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக உன் பெயர் என்ன?, உன் அப்பா பெயர் என்ன?, உன்னோட ஊரு எது? என ஒரு 20 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. ஒருசில மக்கு பசங்க மாதிரி இல்லாம எனக்கு ரொம்ப நல்லாவே தமிழ் எழுத படிக்க தெரியும். அதனால தமிழில் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்குமே பதில் எழுதிட்டன். ஆனால் ஆங்கிலத்தில கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தட்டு தடுமாறி பதில் எழுதினன். 
           எனக்கு ஆங்கில அறிவு அந்த சமயத்தில் ஒன்னும் பெருசா இல்ல. என் பேரு, எங்க அப்பா பேரு, எங்க அம்மா பேரு, எங்க ஊரு பேருலாம்,"My Name is..., My Father Name is..., My Mother Name is..., My Native is..." னு போட்டு எழுதுவன் அவ்ளோதான். "One, Two, Three" மூணு வரைக்கும் பாக்காம எழுதுவன், பத்து வரைக்கும் சொல்லுவன். "A,B,C,D..." முழுசா தெரியும். எனக்கு தெரிஞ்ச ஆங்கிலம் அவ்ளோதான்.
           நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: அந்த பள்ளிகூடத்துல எங்க சொந்தகாரர் ஒருத்தர் ஆசிரியரா பணியாற்றிக்கிட்டிருந்தாரு. அவரு கிட்ட எங்க அப்பா என்னோட தேர்ச்சிக்காக சிபாரிசு செய்ய சொல்லி கேட்டிருந்தார். அவர் தான் தேர்வு முடிவ எங்ககிட்ட சொன்னார். பையன் ஏற்கனவே முதல் வகுப்புல தேர்ச்சி பெற்றுவிட்டான் அவனுக்கெல்லாம் சிபாரிசு தேவை இல்லைங்க என்று எங்க அப்பாகிட்ட அவரு சொன்னாரு.
           நுழைவுத்தேர்வின் தேர்ச்சியை தொடர்ந்து, ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன்.
இனி...


ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவு :(VI-D)
           ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவில் எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களின் பட்டியல் பாட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆறாம் வகுப்பு [VI-D](1997-1998)
பள்ளிக்கூடம் : ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.
வ.எண் பாடம் ஆசிரியர்

1
2
3
4
5
6
7
8
தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
அறிவியல்
சமூக அறிவியல்
ஓவியம்
தறி
உடற்கல்வி (P.E.T)
புலவர்.திரு.தேவராஜ்
திரு.சிவபெருமாள்*
திரு.சிவபெருமாள்
திரு.C.முருகவேல் (C.M)
திரு.வேல்முருகன்
திரு.இரவிச்சந்திரன்
---?---
திரு.வேலாயுதம்
* : வகுப்பாசிரியர், ---?--- : பெயர் நினைவில் இல்லை.


ஆறாம் வகுப்பின் முதல் நாள், எங்களை வேதியியல் ஆய்வக கட்டிடத்தின் மாடியில் உள்ள ஒரு வகுப்பில் உக்கார வச்சு, இனிமே இதுதான் உங்களுக்கான வகுப்புனு சொன்னாங்க. ஒரு ஒரு மாசம் அங்க இருந்திருப்போம்.. ஒரு மாசம் கூட இருக்காது. அதுக்கு அப்புறம், வேதியியல் ஆய்வகத்தோட முன்னாடி இருக்கிற வேப்பமரமும், ஆய்வகத்திற்கு பின்னாடி இருக்குற தறி வகுப்போட முன்னாடி இருக்கிற வேப்பமரமும்தான் ஆறாவது 'ஈ' பிரிவு வகுப்பா இருந்துச்சி. 
இங்க தான் வருகைப் பதிவு அழைப்பின் போது "வணக்கம் அண்ணா" என்று சொல்லிகொண்டிருந்த எனக்கு " Present Sir " என சொல்ல வேண்டும் என கற்றுக்கொடுத்தார்கள்.

மறக்க முடியாத சம்பவங்கள் :


சம்பவம் 1:
ஒரு நாள் எங்கள் வகுப்பாசிரியர் ஆங்கில பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ஒரு குறிப்பிட்ட வரியை படிக்கும்போது, அவ்வரியை அடிக்கோடிட சொன்னார். அதாவது, "நான் இப்ப படிக்கிற வரியை Underline பண்ணுங்க" அப்டின்னு சொன்னார். எனக்கு என்ன சொல்றாருன்னு ஒன்னும் புரியல. அப்பலாம் நம்ம ஆங்கில அறிவுதான் அதிபயங்கரமாச்சே..! பேந்த பேந்த அவர் மூஞ்சியையே பார்த்தன். அடுத்த சில வினாடிகளில் என் முதுகுல மர அளவுகோலால் "சளார்"னு ஒரு அடி. "Underline பண்ண சொன்னா என்னடா பண்ணிகிட்டிருக்க"னு திட்டு வேற. அவசர அவசரமா பக்கத்துல இருந்தவன பார்த்தன். அவன் "U" வை கவுத்திபோட்ட மாதிரி தொடர்ச்சியா ஒரு வரியோட அடியில கோடு போட்டான். ஓ...! "Underline" னா இப்டி அடியில வளைச்சி வளைச்சி கோடு போடறதுபோல அப்டின்னு நெனச்சன். ஆனால் அந்த வகுப்புலேயே "Underline" னா அடிக்கோடிடுதல் அப்டின்னு தெரிஞ்சுகிட்டன்.

சம்பவம் 2:
இது அறிவியல் பாட வேளை, எங்களை அமைதியாக படிக்கும்படி உத்தரவிட்டிருந்தார் அறிவியல் ஆசிரியர் C.முருகவேல். நாமலாம் என்னைக்கி  வகுப்புல படிச்சிருக்கோம். என் பக்கத்துல கதிரவன்-னு ஒரு பையன் உக்காந்திருந்தான். நானும் அவனும் பேசிக்கிட்டிருந்தோம். ஒரு சமயத்துல எத பத்தி பேசிக்கிட்டிருந்தோம்னு தெரியல பேச்சு வாக்குல 1.மோளம் அடிச்சுக்கிட்டு வருவாங்க. 2. பொங்கல், தீபாவளி சமயத்துல காசு கேப்பாங்க. அப்டின்னு ஒரு ரெண்டு விடயத்த சொல்லிட்டன். அந்த பய புள்ள இந்த விடயத்த வாத்தியார் கிட்ட என்னனு சொல்லுச்சி எப்புடி சொல்லிச்சுன்னு தெரியல. அடுத்த ஒரு ரெண்டு நிமிடத்துல என்ன கூப்பிட்டு வச்சி ஒரு அஞ்சு நிமிடம், இந்த அஞ்சு நிமிடத்தில் மூணு நிமிடம் அடினா ரெண்டு நிமிடம் உதை. அஞ்சு நிமிடத்துல எவ்வளவு அடி அடிக்க முடியுமோ அவ்வளவு அடி அடிச்சிட்டாரு. ரெண்டாவது முறையா பயங்கரமாக அடி வாங்குரன். அன்னிலேர்ந்து நான் அந்த பையன்கிட்ட பேசறதே விட்டுடன்.
                                                                                       [1999 ம் ஆண்டு நான் ]
 1999 லையே இப்டி இருக்கறனா..! 1997 ல எப்டி இருந்திருப்பன். ஒரு பாவமும் அறியாத கள்ளங்கபடமற்ற இந்த பிஞ்சு முகத்த பாத்தாதுக்கப்பறமும் அடிச்சாரு. இருந்தாலும் எனக்கு அவரு மேல கோவம் இல்ல. நான் ஏதோ தப்பு பண்ணிட்டதா ஒரு உணர்வு. என் கோவம் அந்த பையன் மேல தான். என்ன இப்படி போட்டுகுடுத்து அடி வாங்கி குடுத்துட்டானேனு.


இதுதவிர வரைபட கையேடு (Graph Note) எடுத்து வராம தறி ஆசிரியரிடம் அடி வாங்கியது, ஓவிய கையேடு (Drawing Note) கொண்டு வராம ஓவிய ஆசிரியரிடம் அடி வாங்கியது என நெறைய இருக்கு. ஆனால் மேற்சொன்ன ரெண்டு சம்பவங்கள்தான் என்னை வெகுவாக பாதித்தது.

வியாழன், 21 ஜூன், 2012

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - 1992-1997

முதலாம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.கோவிந்தசாமி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

இரண்டாம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.கோவிந்தசாமி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

மூன்றாம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.சுந்தரமூர்த்தி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

நான்காம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.சுந்தரமூர்த்தி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

ஐந்தாம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.சுந்தரமூர்த்தி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

ஆறாம் வகுப்பு :
தமிழ் : திரு.தேவராஜ்
ஆங்கிலம், கணிதம் : திரு.சிவபெருமாள்
அறிவியல் :திரு. C .முருகவேல் (CM)
சமூக அறிவியல் : திரு.வேல்முருகன்
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

ஏழாம் வகுப்பு :
தமிழ் : திரு.தேவராஜ், திரு.ராஜமோகன்
ஆங்கிலம், கணிதம் :திரு.T.ராமசாமி
அறிவியல் :திரு.C .முருகவேல் (CM)
சமூக அறிவியல் : திரு.இரமேஷ்[Not Permanent . From English medium ]
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

எட்டாம் வகுப்பு :
தமிழ் : திரு.இளஞ்செழியன்
ஆங்கிலம், கணிதம் :  திரு.K . கார்த்திகேயன் [KK ]
அறிவியல் : திரு.தேவநாதன்
சமூக அறிவியல் : திருமதி.ஜனாபாய்
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

ஒன்பதாம் வகுப்பு :
தமிழ் :திரு.இளஞ்செழியன்
ஆங்கிலம், கணிதம் : திரு.ரெங்கா ரெட்டி
அறிவியல் :திருமதி.மாலா
சமூக அறிவியல் :  திரு.ஆழ்வார் 
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

பத்தாம் வகுப்பு :
தமிழ் :திரு. இளஞ்செழியன்
ஆங்கிலம், கணிதம் : திரு. ரெங்கா ரெட்டி
அறிவியல் :திரு. நவ ஜோதி
சமூக அறிவியல் :  திரு.ஆழ்வார் 
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

பதினொன்றாம் வகுப்பு :
தமிழ்  :திரு.தர்மராஜன்
ஆங்கிலம்: --, திரு.குணசேகரன்
கணிதம் : திரு.U.தெய்வசிகாமணி (UD)
இயற்பியல் : திரு.செல்வராஜ்
வேதியியல் : திரு.T.தமிழ்செல்வன் (TT)
உயிரியல் :-
          தாவரவியல் : திரு.மணிவண்ணன்
          விலங்கியல் :திரு.தனசேகரன்
[அரசு மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

பன்னிரண்டாம் வகுப்பு :
தமிழ்  :திரு.தர்மராஜன்
ஆங்கிலம்: திரு.குணசேகரன்
கணிதம் : திரு.U.தெய்வசிகாமணி (UD)
இயற்பியல் : திரு.செல்வராஜ்
வேதியியல் : திரு.T.தமிழ்செல்வன் (TT)
உயிரியல் :-
          தாவரவியல் :திரு.மணிவண்ணன்
          விலங்கியல் : திரு.தனசேகரன்
[அரசு மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை :
           "ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கீழூர்" இது தாங்க நான் ஒன்னாவதுலேர்ந்து அஞ்சாவது வரைக்கும் படிச்ச என்னோட பள்ளிக்கூடம்.

"கோவிந்தசாமி" எங்களோட ஒன்னாவது வாத்தியார். எங்க பக்கத்து ஊரான  பாச்சார பாளையம் தான் இவரோட ஊரு. ஒன்னாவது மற்றும் ரெண்டாவதுக்கு இவர் தான் வாத்தியார். அ,க,ங,ச... 1,2,3 ...லாம் இவர் தான் சொல்லிகொடுத்தார். எங்க பள்ளிகூடத்துல ஆங்கிலம் சொல்லிக்குடுத்து இவர் மட்டும் தான். A,B,C,D..., One, Two, Three... இது தான் எங்க பள்ளிகூடத்தோட ஆங்கிலம். எனக்கு ஒன்னாவது வாத்தியார ரொம்ப புடிக்கும், அவரு அவரோட வேலைல ரொம்ப தெளிவா இருப்பாரு. ஒரு நாள் கூட பள்ளிகூடத்துக்கு தாமதமா வந்தது இல்ல. இப்பகூட இவர எங்கயாவது பாத்தா நான் வணக்கம் சொல்லுவன். எனக்கு அவர அவ்ளோ புடிக்கும்.
           அடுத்தது "சுந்தரமூர்த்தி"  இவரு அஞ்சாவது வாத்தியார். பக்கத்துக்கு நகரம் குறிஞ்சிப்பாடிலேர்ந்து வருவாரு. மூணாவது, நாலாவது, அஞ்சாவது பசங்கள பாத்துகரதுதான் இவரோட வேல. எங்க ஊருல தமிழ் புலிகளையும், கணக்கு புலிகளையும் உருவாக்கியது இவருதான். அஞ்சாவது இறுதி வரைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் எனக்கு வந்தது இல்ல. ஐந்தாம் வகுப்பின் இறுதி காலகட்டம், சில மாதங்களில் ஐந்தாம் வகுப்பும் முடிந்துவிடும். அந்த நேரத்தில் "சுந்தரமூர்த்தி" வாத்தியார் பணிநிறைவா இல்ல பணி மாற்று இடம் பெற்று போனாரானு தெரியல, அவர் பள்ளிகூடத்துக்கு வரல.
         அவருக்கு பதிலாக தற்காலிகமாக ஒரு ஆசிரியரை நியமனம் செய்தார்கள். அவரோட பேரு "சுபாஷ்". இவரோட ஊரும் பாச்சார பாளையம் தான். அவரு வந்த நேரம் 'தேர்தல்(election time) நேரம். ஒரு நாள், மதிய வேளை பள்ளிகூடத்துல பசங்கலாம் ரொம்ப சத்தம் போட்டுகிட்டிருந்தாங்க. அன்னைக்கு அந்த சத்தம் எனக்கு சுத்தமா புடிக்கல, ரொம்ப எரிச்சலா வந்துச்சி.
           அன்னைக்கு ஒன்னாவது வாத்தியாரு வரல. அவரு விடுமுறைல இருந்தாரு."சுபாஷ்" வாத்தியாரு மட்டும்தான் வந்தாரு, அவரும் பள்ளிகூடத்துல இல்ல, தேர்தல் பத்தி பேச எங்கயோ வெளிய போய்ட்டாரு.
            பசங்க போடுற சத்தம் புடிக்காம, "என்னடா பள்ளிகூடத்த கவனிக்காம  தேர்தல் பத்தி பேச போய்ட்டாரு" னு எனக்கு நானே சொன்னன், இத பக்கதுல கூட யாருக்கிட்டயும் சொல்லல. அந்த மனுஷன் வந்தாரு, வந்த கொஞ்ச நேரத்துலையே என்ன இழுத்துபோட்டு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு, அதுவரைக்கும் அப்படி ஒரு அடிய யாருகிட்டயும் வாங்கனதில்ல. ஏன்டா நம்மள இந்த அடி அடிக்கராருனு பாத்தா..!!? ஒரு அயோக்கிய பய புள்ள நான் பொலம்புன அந்த விஷயத்த அவருகிட்ட மாத்தி போட்டு விட்டுட்டான்.
           "என்னடா பள்ளிகூடத்த கவனிக்காம  தேர்தல் பத்தி பேச போய்ட்டான்" னு நான் சொன்னதா அவன் அவருகிட்ட சொல்லிட்டான். நான் அப்படி சொல்லலன்னு எவ்வளவு சொல்லியும் அவரு கேக்கல. அடி பின்னிட்டாரு.
           அன்னைக்கு தான் நான் முடிவு பண்ணினன்.சாகறதுக்குள்ள என்னைக்காவது ஒரு நாள் அவரு மண்டைல கல்லால அடிச்சிடனும்னு. ஆனா இன்னைக்கு வரைக்கும் இன்னும் அடிக்கல. அன்னைலேர்ந்து அவருக்கு வாத்தியார்ன்ற மரியாதைய நான் குடுக்கறதே இல்ல.
            இப்ப இவரு இருக்காரா இல்லையானு கூட எனக்கு தெரியாது. ஆனா இன்னும் என் கோவம் அடங்கல...
            "செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கறது எவ்ளோ கஷ்டம்னு அத அனுபவிக்கரவனுக்குதான் தெரியும்."

அடுத்து...

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1997-1998] (ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவு)

செவ்வாய், 10 மே, 2011

என் பழைய நினைவுகள் : தொடக்கம்


 வணக்கம்,  என் சின்ன வயசுல என்னை பாதிச்ச மகிழ்ச்சியான தருணங்கள், வருந்தவைத்த நிகழ்வுகள், நான் விளையாடிய, கிராமங்களில் மட்டுமே இருக்கக்கூடிய விளையாட்டுகள் என பல விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்பதிவை ஒரு தொடர் போல எழுதலாமுன்னு நெனச்சிருக்கேன். ஒவ்வொரு பதிவும் ஒரு சிறுகதை போல இருக்கும். உதாரணமாக சில தலைப்புகள் :

நாய் வேட்டை :
எனது வருத்தம் :
என் தாத்தாவில் மரணம் :
வில் போட்டி :
உண்டி வில்(கவன் கல்) போர் :
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி :
ஐந்தாம் வகுப்பில் அடி வாங்கியது :
உயிர் தப்பியது :
விளையாட்டுகள் :
        உஸ்காபெரி :
        இட்டெல்லாம் பெட்டி  :
        ஓட்டடி அடிக்கறது :
வெங்கடாம்பேட்டை பெருமாள் கோயில் கோபுர தரிசனம் :
...
        இப்படி பல தலைப்புகளை என் சிறுவயது முதல் இன்று வரை யோசிச்சு வச்சிருக்கேன். நான் எழுத்துலகிற்கு புதியவன் என்பதால் எந்த அளவிற்கு சுவாரசியமாகவும் இனிமையாகவும் எழுதுவேன் எனத் தெரியாது மேலும் எழுத்துப் பிழை ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம்.  தயவு செய்து என் பிழைகளை பொருத்தருள வேண்டுகிறேன்.

         மேலும் அன்பின் சுய வரலாற்றில் வரும் சம்பவங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க உண்மையே, இவற்றில் சந்தேகங்களுக்கு துளியும் இடமில்லை.

அன்பின் சுய வரலாறு : என் பாவச் செயல்

           என்னடா எடுத்த உடனேயே பாவச்செயல்னு தலைப்பிட்டு ஆரம்பிக்கிரானு பாக்கிறீங்களா.. அது ஒன்னுமில்லைங்க, நான் செஞ்ச இந்த வேலை அடிக்கடி என் ஞாபகத்துக்கு வரும் ரொம்ப வருத்தமா இருக்கும். அறியாத வயசுல தெரியாம செஞ்சதா இருந்தாலும் அது என்னமோ எனக்கு உறுத்தலாவே இருக்கு.
            அப்படி என்னதான் பண்ணினேன்னு கேட்டிங்கனா.. சிரிப்பீங்க.. அது உங்களுக்கு சிரிப்பாதான் இருக்கும் ஆனா எனக்கு அது ரொம்ப வருடங்களாகவே வருத்தத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
              இந்த சம்பவம் நடந்தது நான் நாலாவது படிக்கும் போது. என்னை பாதித்த பல சம்பவங்கள் இந்த ஆண்டில் தான் நடைபெற்றன. சரி சம்பவத்துக்கு வருவோம்.
               ஒரு நாள், அன்று பள்ளி விடுமுறை ஞாயிற்று கிழைமையா சனிக் கிழைமையா எனத் தெரியவில்லை. மதிய வேளை விளையாடுவதற்கு எங்கள் தெருவில் யாருமே இல்லை. தனியாக இருந்தேன். பகலிலே எனக்கு தூக்கம் வராது அதே சமயம் எந்த வேலையும் செய்யாம சும்மா இருக்கவும் என்னால முடியாது. எங்கள் வீட்டிற்குப் பின்னால் ஒரு பாட்டி வீடு கட்டி தங்கியிருந்த பொட்டல் நிலம் இருக்கும்(வீடு இல்லை காலி நிலம் மட்டுமே).
                அந்த இடத்தில் தான் அச்சம்பவம் நடந்தேறியது. நான் கையில் ஒரு தடியை எடுத்துக்கொண்டு அலைந்துகொண்டிருந்தேன்.தடியின் நீளம் சுமார் மூன்றரை அடி இருக்கும். எங்கள் வீட்டிற்குப் பின்னால் அப்பொட்டல் நிலமருகே தொடர்ச்சியாக கருநொச்சி செடிகள் இருக்கும். அக்கருநொச்சி செடிகளின் அடிவாரத்திலேதான் ஆரம்பித்தது சம்பவம்..
                  நான் தடியுடன் அப்பக்கம் வரும்போது எதேச்சையாக அவைகளை காண நேரிட்டது. குடும்பத்தோடு குதூகலமாய் இருந்தன.
                  எங்கள் தெருவில் எல்லா சிறுவர்களுக்கும் உடனேயே அடிப்பதுதான் எங்களின் முதல் வேலையே. நானும் அதனை அப்படியே பின்பற்றினேன். எண்ணிக்கையில் அவை ஏழு அல்லது எட்டு இருக்கும்.
                 ஒன்று கூட தப்பிவிடாதபடி அனைத்தையும் வளைத்து வளைத்து அடித்தேன். அவற்றின் சிறுநீர் மேலே பட்டால் சொரி வந்துவிடும் என்பார்கள். அதற்க்கெல்லாம் அஞ்சியவனாக நான் இல்லை. பொதுவாக இவற்றை அடித்தே கொல்லுவதுதான் வழக்கம்.

ஆனால் நான் அப்படி செய்யவில்லை. நான் செய்த அந்த செயல் அதுதான் இத்தனை வருடங்களாக இப்படி வருத்தப்பட்டு கொண்டிருப்பதற்க்கு காரணம்.இந்த சம்பவத்திற்கு முன்பு பலவற்றை அடித்தே கொன்றிருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் என் மனதை பாதிக்கவில்லை.
                 ஒருவழியாக அவைகள் எங்கும் தப்பி ஓடாதபடி குற்றுயிரும் கொலையுயிருமாக அடித்துப்போட்டுவிட்டேன். சரி அடுத்து என்ன செய்யலாம் எப்படி கொல்லலாம் என யோசித்த போதுதான் என் சிந்தையில் சட்டென தட்டியது ஒரு பொறி. சுற்றும் முற்றும் தேடினேன் குழி பறிப்பதற்கு ஏதேனும் கிடைக்குமா என்று. கிடைத்தது சற்று வலுவான குச்சிகள். குழி தோண்ட ஆரம்பித்தேன். அச்சமயம் பார்த்து ஒன்று மட்டும் துள்ளி தாவி மறைவதற்கு முயற்ச்சிப்பதை கண்டேன். சட்டென எழுந்து என் கையில் இருந்த தடியால் மண்டையிலேயே ஒரு போடு போட்டேன். மல்லாந்து விழ்ந்தது. அதன் தொண்டையும் வயிறும் மாறி மாறி துடித்தன.
          பின் மீண்டும் குழியை தோண்ட ஆரம்பித்தேன். இறுதியாக குழியும் தோண்டி முடிக்கப்பட்டது.
                    நீங்கள் எல்லாம் நினைப்பீர்கள் நான் அவற்றை குழியில் போட்டு புதைக்கப்போகிறேன் என்று, அதுதான் இல்லை. மாறாக வேறொன்றை செய்தேன்.அப்படி புதைத்திருந்தாலும் என் மனம் ஆறியிருக்கும் என நினைக்கிறேன். அருகிலே கிடக்கும் காய்ந்த குச்சிகளை பொறுக்க ஆரம்பித்தேன்.பின்னர் எதோ யோசித்தவனாய் வீட்டிற்கு சென்று தீப்பெட்டி எடுத்துவந்தேன். அரை அடி ஆழம் தோண்டப்பட்ட அந்த குழியில் முதலில் இருண்டு சிறிய குச்சிகளை போட்டேன். பின் அவற்றின் மேல் நான் அடித்து துவம்சம் செய்து போட்டு வைத்திருக்கும் உயிர்களில் சிலவற்றை வைத்து, அவற்றின் மேல் மேலும் சில குச்சிகளை வைத்து பிற உயிர்களையும் அதன் மேல் இட்டு அடியில் கொளுத்த ஆரம்பித்தேன். 

அந்த அளவிற்கு ஒன்றும் சரியாக கொழுந்துவிட்டு எரியவில்லை. அதற்குமேல் அந்தவிளையாட்டை விளையாட பிடிக்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டேன்.
 
                     இரண்டு மூன்று  நாட்கள் கழித்து, நான் கொன்று போட்டவைகளின் நிலை என்னவென பார்க்க அவ்விடம் நோக்கி வந்தேன். மூன்று உயிர்கள் மட்டுமே காய்ந்த நிலையில் இறந்து கிடந்தன.
                       இப்படி என்னால் மிகக் கொடூரமான வன் கொடுமைகளுக்கு ஆளான அவ்வுயிர்கள் "தவளைகள்".

தொடரும் என் வரலாற்று நினைவுகள்... அன்புடன் அன்பு.