திங்கள், 8 அக்டோபர், 2012

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1998-1999] (ஏழாம் வகுப்பு 'ஈ' பிரிவு)

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - 1992-1997

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1997-1998] (ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவு)

ஏழாம் வகுப்பு  "ஈ" பிரிவு : VII -D

இதுவரை ஆறாம் வகுப்பு முழுவதும் மரத்தடியிலேயே பாடம் படித்த எங்களுக்கு புதிதாக ஒரு தற்காலிக வகுப்பறை கிடைத்தது. பள்ளியின் தெற்கு நுழைவு வாயிலின் அருகிலுள்ள கட்டிடத்தின் மாடியில் உள்ள முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டது.
 
அடுத்த சில நாட்களில், எங்கள் பள்ளியில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட வகுப்புகளில் ஒன்று எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவும் தற்காலிகம்தான். ஓரிரு நாள்களில் இந்த வகுப்பும் மாற்றப்பட்டு எங்களுக்கான நிரந்தர வகுப்பு கிடைத்தது. அதே கட்டிடத்தின் தரைத்தளத்தில் படிக்கட்டுக்கு அருகிலுள்ள வகுப்பு எங்களின் VII - D.

எங்கள் வகுப்புக்கு ஒரு சிறப்பு இருந்துது. அது என்னனா..!? ஒட்டுமொத்த பள்ளியிலேயே ஏழாம் வகுப்பு தொகுப்புகளில் தர வரிசையில் முதல் பத்து இடங்களில் எங்கள் வகுப்பு மாணவர்கள்தான் இருப்பார்கள். என் நினைவுகளில் இருக்கும் அவர்களின் பெயர்கள்.

1. A.அருண்ராஜ் - I
2. S.கபிலன்  - II
3. ஜேம்ஸ் - III, IV
4. S.ஆனந்தவேலு - III , IV , V
5. நடராஜன் - III , IV , V
6. சிவானந்தம் -  III , IV , V , VI
7. குமரேசன் -  IV , V ,VI , VII,VIII , IX, X
8.  L.சுந்தரகணேசன்  -IV , V ,VI , VII ,VIII , IX, X
9. சத்யராஜ் - IV , V ,VI , VII ,VIII , IX, X
10. C.பாலசுப்ரமணியன் - V ,VI , VII ,VIII , IX, X
11. அந்தோனி ராஜ் (Antony Raj) -- V ,VI , VII ,VIII , IX, X

இதுல என் பேர் இருக்காது. எப்புடி இருக்கும். அதுக்கெல்லாம் நல்லா படிக்கனுமில்ல..!?
சரி விடுங்க. இங்க நான் ஒரு சாதனையை பண்ணியிருக்கன். அது என்னன்னா தொடர்ந்து, முதல் பருவத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு என அனைத்திலும் 15 வது இடத்தைப் பிடித்ததுதான். எல்லாம் சரி வகுப்புல மொத்தம் எத்தனை பேருன்னு தெரியனுமில்ல. அனால் அது சரியா எத்தனை பேருனு தெரியல. 60 லேர்ந்து 75 பேரு வரைக்கும் இருந்தோம்.


ஏழாம் வகுப்பு 'ஈ' பிரிவில் எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களின் பட்டியல் பாட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏழாம் வகுப்பு [VII-D](1998-1999)
பள்ளிக்கூடம் :ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.
வ.எண்பாடம்ஆசிரியர்

1

2
3
4
5
6
7
8
தமிழ்

ஆங்கிலம்
கணிதம்
அறிவியல்
சமூக அறிவியல்
ஓவியம்
தறி
உடற்கல்வி (P.E.T)
புலவர்.திரு.தேவராஜ் மற்றும்
திரு. இராஜமோகன் 
திரு.T.இராமசாமி (T.R)*
திரு.T.இராமசாமி (T.R)
திரு.C.முருகவேல் (C.M)
திரு.இரமேஷ்
திரு.இரவிச்சந்திரன்
---?---
திரு.வேலாயுதம்
* : வகுப்பாசிரியர்,                  ---?--- : பெயர் நினைவில் இல்லை.

எங்கள் பள்ளியின் மிகவும் கண்டிப்பான ஆசிரியர்களில் எங்களின் வகுப்பாசிரியர் திரு.T.இராமசாமி அவர்களும் ஒருவர். அவரைப் பார்த்தாலே ஒரே பயமாக இருக்கும். தமிழாசிரியர் புலவர்.திரு.தேவராஜ் அவர்களின் மகன் தான் திரு. இராஜமோகன் அவர்கள். அச்சமயம் அவர் எங்கள் பள்ளியில் தற்காலிகமாக சேர்ந்திருந்தார் என நினைக்கிறேன். அடுத்தது திரு.இரமேஷ் அவர்கள். பொதுவாக எங்கள் வகுப்பின் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்த ஆசிரியர்.

சரி, இனி ஏழாம் வகுப்பில் எனக்கு ஏற்ப்பட்ட சில மறக்க முடியாத சம்பவங்களைப் பார்க்கலாம்.

சம்பவம் 1 :

இந்த வகுப்பில் முதலில் ஒதுக்கப்பட்ட அறையில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இது. ஆறாம் வகுப்பிலிருந்து தேர்ச்சிபெற்று பள்ளி திக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், எங்களின் வகுப்பாசிரியர் எதோ ஒரு சூழ்நிலையில் ஆங்கில எழுத்துக்கள் மொத்தம் எத்தனை எனக் கேட்டார். அதாவது "A B C  D ..."  மொத்தம் எத்தனை எழுத்துக்கள் என வினவினார். வகுப்பிலுள்ளவர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவர்களை எழுப்பி பதில் அளிக்க சொன்னார். ஒருவன் 27 எழுத்துக்கள் என்றான். இன்னொருவன் 26 எழுத்துக்கள் என்றான். கேட்க்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் 26 என்றே சொன்னார்கள். எனக்கு மனசுக்குள் ஒரே பயம். எங்கே நம்மையும் கேட்டுவிடுவாரோ என்று. இதில் 26 எழுத்துக்களா 27 எழுத்துக்களா என்ற சந்தேகம் வேறு. விரல் விட்டு எண்ணி பார்த்து முடிவுசெய்தேன் 26 எழுத்துக்கள்தான் என்று. இருந்தாலும் பயமாகத்தான் இருந்தது. நல்லவேளை என்னை எந்த கேள்வியும் கேட்கவில்லை என சந்தோசம் அடைந்தேன் பாடவேளை முடிவில்.

சம்பவம் 2:


ஆங்கில வழி மாணவர்களுக்காக கட்டப்பட்ட வகுப்பில் அமர்ந்திருந்த சமயம், காலையில் இரண்டாவது பாடப்பிரிவின் போது ஆசிரியர் இரமேஷ் அவர்கள் எங்களை இது கணினி பாடவேளை என அழைத்துச்சென்றார். நாங்களும் அறையை நெருங்கினோம். நீல நிற பின்புலனில் வெள்ளை நிறத்தில் எழுதியிருந்தது "கணினி அறை" என்று.
ஒரு பாட வேலை என்பது 45 நிமிடங்கள். எங்கள் வகுப்பிலிருந்து 5 நிமிடத்தில் கணினி அறைக்கு வந்துவிட்டோம். அடுத்த 40 நிமிடங்கள் கணினி அறையில்தான் செலவிடப்பட்டது. அந்த அறையில் இருந்தது ஒரே ஒரு கணிப்பொறி. கணிப்பொறி இயக்கப்பட்டது 15 நிமிடங்களுக்குமேல் ஆனது கணினி திரையில் "Windows Loading Image " தெரிவதற்கு. சிறிது நேரத்தில் கணினி தானாகவே அணைந்துவிட்டது. மீண்டும் இயங்குவதற்க்குள் பாடவேளை நேரம் முடிந்துவிட்டது. 
நான் முதன் முதலாக கணிப்பொறியை கண்டது அப்போதுதான்.இன்னைக்கு என் பொழப்பே அதுலதான் ஓடிகிட்டிருக்கு. 

சம்பவம் 3:

இந்த சம்பவம் நடந்தது எங்களுக்கு இறுதியாக ஒதுக்கப்பட்ட அறையில். இங்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் பசுங்காரையால்(CEMENT) செய்யப்பட்டவை. ஒருமுறை இருக்கைகளின் மீது ஏறி விளையாடும்போது விழுந்து என் வலது முழங்காலிலும் இடது முழங்காலிலும் பெரிய காயங்கள் ஏற்ப்பட்டது. அந்த காயங்கள் என் முழங்காலில் எலும்பு வெளியே தெரியுமளவுக்கு இருந்தது. இன்றும் அந்த தழும்புகள் இந்த சம்பவத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். 


இந்த வகுப்புல நான் யாருகிட்டயும் பெருசா அடி வாங்கலிங்க. பெருசான்னு இல்ல கிட்டத்தட்ட யாருகிட்டையுமே அடி வாங்கல அப்படிதான் சொல்லணும்.
ஆனால் சில பசங்க கூட சண்டை சச்சரவு இருந்துச்சி. 
எல்லா வகுப்புலயும் ஒழுங்கா படிக்காம, ஒழுங்கா பள்ளிக்கு வராம ஒரு கெட்ட பசங்க குழு (Bad  Boys Team) இருக்குமில்ல. அந்த மாதிரியான ஒரு குழுவுல இருக்குற ஒருத்தனுக்கும் எனக்கும்தான் பிரச்சனையாயிடுச்சு. அன்னிலேர்ந்து எனக்கு அவனுங்கள புடிக்காது. ஆனால் இன்னைக்கு அந்த முழு குழுவும் என் அண்ணன் ஒருவரின் நண்பர்கள் அப்டிங்கறது ஒரு ஒரு வருசத்துக்கு முன்னாடிதான் தெரிய வந்துச்சு.

என்ன கொடுமை "Sir" இதெல்லாம்..!

சரி... மீண்டும் எட்டாம் வகுப்பில் சந்திப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக