புதன், 17 அக்டோபர், 2012

வலிமை : உண்மையும் நேர்மையும்


இந்த பதிவு உண்மைக்கும் நேர்மைக்கும் இருக்குற வலிமையைப் பற்றியது.

நமது பேச்சில் உண்மையும் செயலில் நேர்மையும் இருக்கும்போது நமக்கு கிடைக்கும் ஒரு வலிமை, அதை மிஞ்ச உலகில் எதுவுமே இருக்காது. நமக்கு நேர்நிற்க ஒருவரும் இருக்கமாட்டார்கள்.

மேற்ச்சொன்ன பத்தியில் இருப்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். நாம் நேர்மையானவராகவும் உண்மையை உரைப்பவராகவும் இருக்கும்போது, தன் நேர்மையிலிருந்து தவறியவர்கள் பொய்யுரைப்பவர்கள் எவராயினும், எவ்வளவு பெரிய அதிகாரமுடையவராயினும் நமக்கு நேர் நின்று நம் கண்களைப் பார்த்து பேச அச்சமடைவர். அவர்களால் உண்மையின் நேர்மையின் வலிமையை, ஆற்றலை தாங்க முடியாது.

நேர்மை தவறுபவர்களின் மனம் நேர்மையானவர்களை காணும்போது கூனி குறுகவே செய்யும்.

ஒரு பொய் சொல்லிவிட்டு, அது சம்பத்தப்பட்டவர்க்கு நான் சொன்னது பொய் என தெரியவரும் பட்சத்தில் அவர் முகத்தில் கொஞ்சம் கூட நாணம் இல்லாமல் எப்படி விழிக்க முடியும்.

பொதுவாக நாம் செய்யும் தவறுகளை மறைப்பதற்காகவே பொய் சொல்ல முற்ப்படுகிறோம். இப்படி நாம் சொல்லுகிற பொய்கள் தான் நமது நேர்மையின் சறுக்கல்களுக்கு அடிகோலுகிறது.

ஆனால் நாம் செய்யும் தவறுகளை மறைப்பதற்கு பதிலாக, நம் தவறுகளை நாம் ஒப்புக்கொண்டால் அந்த பிரச்சனை அந்த இடத்திலேயே முடிந்துவிடுமல்லவா..!? அதன் தொடர்ச்சியாக அடுக்கடுக்கான பொய்களை சொல்லவேண்டிய அவசியமே இருக்காதே..! நமக்கு தலைகுனிவு ஏற்படும் நிலை எப்போதும் உருவாகாது.

நான் பொதுவா பொய் சொல்றதில்ல. அதுக்காக பொய்யே சொல்லமாட்டேன்னு சொல்லல. அப்பப்ப சின்ன சின்னதா பொய் சொல்லுவன்.

இந்தமாதிரியெல்லாம் கிறுக்குத்தனமா யோசிச்சுதான் முடிவு எடுத்தன், அறவே பொய் சொல்லக்கூடாதுன்னு. ஏதோ ஓரளவுக்கு பொய்யே சொல்றதில்லை. என்னோட நேர்மையையும் விட்டுகுடுக்கரதில்லை. சுத்தமாவே பொய் சொல்லக்கூடாதுன்னு முடிவு எடுத்ததுக்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கு. அது என்னன்னா..! எனக்கு சாமர்த்தியமா பொய் சொல்ல வராது. பொய் சொல்லும்போது உளறுவேன். எதிராளி சாமர்த்தியமாக இருந்தால் நான் சொல்வது பொய் என மிக எளிதாக கண்டறிந்துவிடலாம்.

அட, அத விடுங்க. நாம பொய் சொல்லாம நேர்மையாக இருக்கும்போது நமக்கு ஒரு கம்பீரம் கிடைக்கும் பாருங்க..!! வாய்ப்பே இல்லைங்க..!! அத உணர்ந்தா மட்டும்தான் புரிஞ்சுக்க முடியும். எனக்கு அந்த மாதிரியான அனுபவம் நிறையவே இருக்கு. இந்த மாதிரி இருந்தா நமக்கு கிடைக்குற மரியாதையே தனிங்க.

நீங்களும் வேணும்னா முயற்சி செஞ்சு பாருங்களேன். உண்மையும் நேர்மையும் எவ்வளவு வலிமையானது, கம்பீரமானது என தெரிந்துகொள்ளலாம்.

இத படிச்சிட்டு நான் ஏதோ புத்திமதி சொல்லியிருக்கேன்னு நெனச்சிடாதீங்க. இது எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம். இந்த அனுபவம் எனக்கு புடிச்சிருந்துச்சு. அதனால இங்க பகிர்ந்திருக்கிறேன் அவ்வளவே. தவறுகள் இருப்பின் அருள் கூர்ந்து என்னை திருத்தவும்.

குறிப்பு : எனது பள்ளி மற்றும் கல்லூரி தோழர்களுக்கு, தயவு செஞ்சு முகநூல்-ல வந்து உங்க கருத்த பதிவு செய்ய வேண்டாம். இந்த பகுதியிலேயே பதிவு செய்ய வேண்டுகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக