உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 பிப்ரவரி, 2013

வேதனை : கொலைகாரன் வருகிறான்.. :-(



கொலைகாரன் இந்திய நாட்டிற்கு வருகிறான். அதுவும் நம் நாட்டின் வட எல்லையான வேங்கட 
மலைக்கு பெருமாள் தரிசனம் பெற நம் தாயகம் வருகிறான். என்ன செய்வது கோவமும் ஆத்திரமும் மட்டுமே எஞ்சி நிற்க்கிறது. நான் ஒன்றும் களம் காணும் களப்போராளி அல்லவே. 
முகநூலிலும், வலைப்பூவிலும் வசைபாட மட்டுமே முடிகிறது. எப்போதும் சந்தர்ப்பவாத சாதாரண குடிமகனாகவே இருக்க முடிகிறது.

கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா.!
              - பாவேந்தர் பாரதிதாசன்

ரொம்ப அழகா சொல்லிட்டு போயிட்டாரு.. இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படிச்சு பாருங்க.. உணர்ச்சி பொங்கும். ஆனாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
-          மகாகவி பாரதியார்

நான், என் வீடு, என் குடும்பம் என மட்டுமே இருக்க பிடிக்கவில்லை. ஆனாலும் அப்படிதான் இருக்க முடிகிறது. இதை ஒருவகையில் கையாலாகாத்தனம் என்றும் சொல்லலாம்.

எத்தகைய அரசியல் பதவிகளிலும் இல்லாத இடத்திலேயே உள்நுழைந்தவனை விரட்டியடிக்க முடிந்தது எம் ஈழத்து உறவுகளால். ஆனால், இங்கோ ஒட்டுமொத்த இந்திய அரசையும் புரட்டிபோடும் அரசியல் வல்லமையும், அறிவும் கொண்ட தலைவர்கள் இருந்தும் இங்கே தட்டுதடுமாறிக்கொண்டிருக்கிறோம்.

தலைவர்களை மட்டும் சொல்லி தவறில்லை. அவர்கள் தவறிழக்கும் போது சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் எப்பொழுதுமே பொய்த்துப்போகின்றன. ஆங்கிலேயன் அதிகமாக அச்சப்பட்டது அப்போதைய நம் ஊடகங்களைப் பார்த்துதான். ஆனால் இப்போதைய ஊடகங்கள் எம்மையே அழிக்கின்றன.

பெரியார் சொல்லியதாக ஒரு விடயம் கேள்விப்பட்டேன், தமிழர்களை அழிக்க தமிழையே ஆயுதமாக கொண்டு வந்தால் அந்த தமிழையும் எதிர்ப்பேன் என்று.

நேரடியாக இருக்கும் எம் எதிரிகள் தமிழ் எனும் ஆயுதம் கொள்ளவில்லை. ஆனால், எம்மினத் துரோகிகள் கொண்டிருக்கிறார்கள் தமிழை ஆயுதமாக. எம்மினத்தை நேரடியாக எதிர்க்க இயலாதவர்கள் எம்மினத்தினுள் துரோகிகளாக எம்முடனே வளர்ந்திருக்கிறார்கள்.
இன்னமும் கூட நம்மினத்தார் பல பேருக்கு நம் வரலாறு சரியாக தெரிவதில்லை. இன்னமும் தாய் தமிழகத்தில் வெகுமக்கள் அறியாமையில்தான் இருக்கிறார்கள். இவ்விருளை அகற்ற போதிய ஒளி கொடுக்க சரியான முன்னெடுப்புகளை எவருமே செய்வதில்லை.

இத்தனை தெரிந்தும் களம் காண இயலாதவனாகவே இருக்கிறேன். அடிமட்ட நடுத்தர வர்க்கத்தில் பிறந்துள்ளதாலேயே குடும்ப சூழ்நிலைகள் என் எண்ணங்கள் அனைத்தும் என்னுள்ளேயே முடக்கிவிடுகின்றன.

எல்லாம் நடந்த இறுதியில் புலம்ப மட்டுமே முடிகிறது. L

செவ்வாய், 11 டிசம்பர், 2012

எனக்கு அடிமையாய் வேண்டும் பெண்கள்..!?



எனக்கு ஒரு விசயம் சுத்தமாவே புரியலங்க..

பெண்களுக்கு சுதந்திரம் இருக்கா..!!? இல்லையா..!!?

இல்லைனா..! அத பத்தி பொறுமையா நேரம் கெடச்சா பாக்கலாம்.

இருக்குனா..!! அவங்களுக்கு என்ன மாதிரியான சுதந்திரம் இருக்கு..!!?

எனக்கு அடிப்படையிலேயே சில சந்தேகங்கள் இருக்கு, அத இங்க சொல்றன் உங்களுக்கு தெரிஞ்சா பதில் சொல்லுங்க...

பெண்கள் பண்பாட்டு பொம்மைகளாக பார்க்கப்படுவது ஏன்..!!? பண்பாட்டு பொம்மையாக அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படவில்லையா..!!?

உதாரணத்திற்கு, ஆண்கள்  T-Shirt , Jeans  அணிந்தால் பண்பாட்டு சீரழிவாக பார்க்காத நாம் பெண்கள் அணியும் போது ஏன் பண்பாட்டு சீரழிவாக பார்க்கிறோம்...!!?

ஆண்கள் மது, புகையிலை பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தும்போது சாதாரணமான தவறுகளில் ஒன்றாக தெரிபவை, பெண்கள் பயன்படுத்தும்போது மட்டும் ஏன் மாபெரும் குற்றங்களாக தெரிகின்றன...!!?


ஆடைகள் முதற்கொண்டு பெரும்பான்மையானவற்றில் ஆண்களுக்கு சௌகரியமானதாகவும் பெண்களுக்கு அசௌகரியமானதாகவும் உருவாக்கப்பட்டுள்ளமை ஏன்..!!?

இன்று ஓரளவிற்கு முன்னேறியுள்ள போதும், ஏன் பெண் எப்போதும் ஒரு ஆணை சார்ந்தே இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது..!!?

பொதுவாக வீட்டிலும் வெளியிலும் ஆணின் வார்த்தைக்கு இருக்கும் மதிப்பு பெண்ணுக்கு இருப்பதில்லையே ஏன்..!!?

ஏன் எப்போதும் ஒரு பெண் தன் கணவனுக்கு அடங்கியே இருக்க வேண்டும்.!!?

ஏன் சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு கீழானவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்..!!?

ஒரு ஆணுக்கு முன்னாள், கை நீட்டி பேசவோ, நாற்காலியில் அமரவோ(அ)கால்மேல் கால் போட்டு அமரவோ கூடாது என்பது பெண்களாலேயே சொல்லப்படுவது ஏன்..!!?

ஒரு ஆண் காதலிப்பதை பெரிய தவறாக பார்க்காத சமூகம் பெண் காதலிப்பதை மட்டும் தவறாக பார்ப்பது ஏன்..!!?

ஒவ்வொரு மதத்திலும் பெண்களுக்கு எதிராக இத்தனை கட்டுப்பாடுகள் எதற்க்காக இருக்கின்றன ..!!?

என் சில புரிதல்கள் :
இந்த பெண் அடிமைத்தனமும் சாதியும் கிட்ட தட்ட ஒன்றுதான். ஆண்கள் ஆதிக்க சாதியாகவும் பெண்கள் அடிமட்ட சாதியாகவும் இருக்கிறார்கள்.

இவை அனைத்திற்கும் நான் இப்போது சொல்லப்போவது ஓரளவிற்கு சரியான பதிலாக இருக்கும் என நினைக்கிறேன்..

" ஒருவனுக்கு மனைவியாக வரப்போகும் (அ) இருக்கும் பெண் தன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருப்பாளேயானால், அவளுடைய உற்றார் உறவினர் மத்தியிலும் அவன் உற்றார் உறவினர் மத்தியிலும் தான் ஆளுமை மிகுந்தவனாக பார்க்கப்படுவேன் என்ற எண்ணமும் தன்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்ற எண்ணமுமேயாகும்.

அதே சமயம் அவனுடைய இந்த செயலால் மற்ற ஆண்களையும் இவ்வாறு இருக்க மறைமுகமாக தூண்டுகிறான்.

இதன் காரணமாகவே தனக்கான ஒரு அடிமையை அடிமை என்று சொல்லாமல் உறவை வைத்து அடிமையாய் கொண்டிருக்கிறான். இதனிடையே பெண்மை கேள்வி கேட்டுவிடாமல் இருக்க பாசத்தைப் பொழிந்து பெண்கள் அடிமையாய் இருப்பதுதான் பெண்கள் பிறப்பிற்க்கே அழகு என்ற போதனையையும் அதன் அடி மனது வரை இறக்கிவிட்டிருக்கிறான்.

இன்னும் என்னென்னவோ தோணுது, சொல்லத்தான் முடியல..!!

எல்லாம் சரி இது என்னடா தலைப்பு-னு கேக்கரீங்களா..!! நான் வேற மாதிரி எழுதலாம்னு நினச்சேன். ஆனால், எழுத நெனைக்கும்போது எல்லாம் கேள்வியா வந்துச்சா.. அதனால அப்டியே விட்டுட்டன்.

குறிப்பு : நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுடுங்க..!! :-)

நன்றி : கூகிள்-படம்

புதன், 17 அக்டோபர், 2012

வலிமை : உண்மையும் நேர்மையும்


இந்த பதிவு உண்மைக்கும் நேர்மைக்கும் இருக்குற வலிமையைப் பற்றியது.

நமது பேச்சில் உண்மையும் செயலில் நேர்மையும் இருக்கும்போது நமக்கு கிடைக்கும் ஒரு வலிமை, அதை மிஞ்ச உலகில் எதுவுமே இருக்காது. நமக்கு நேர்நிற்க ஒருவரும் இருக்கமாட்டார்கள்.

மேற்ச்சொன்ன பத்தியில் இருப்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். நாம் நேர்மையானவராகவும் உண்மையை உரைப்பவராகவும் இருக்கும்போது, தன் நேர்மையிலிருந்து தவறியவர்கள் பொய்யுரைப்பவர்கள் எவராயினும், எவ்வளவு பெரிய அதிகாரமுடையவராயினும் நமக்கு நேர் நின்று நம் கண்களைப் பார்த்து பேச அச்சமடைவர். அவர்களால் உண்மையின் நேர்மையின் வலிமையை, ஆற்றலை தாங்க முடியாது.

நேர்மை தவறுபவர்களின் மனம் நேர்மையானவர்களை காணும்போது கூனி குறுகவே செய்யும்.

ஒரு பொய் சொல்லிவிட்டு, அது சம்பத்தப்பட்டவர்க்கு நான் சொன்னது பொய் என தெரியவரும் பட்சத்தில் அவர் முகத்தில் கொஞ்சம் கூட நாணம் இல்லாமல் எப்படி விழிக்க முடியும்.

பொதுவாக நாம் செய்யும் தவறுகளை மறைப்பதற்காகவே பொய் சொல்ல முற்ப்படுகிறோம். இப்படி நாம் சொல்லுகிற பொய்கள் தான் நமது நேர்மையின் சறுக்கல்களுக்கு அடிகோலுகிறது.

ஆனால் நாம் செய்யும் தவறுகளை மறைப்பதற்கு பதிலாக, நம் தவறுகளை நாம் ஒப்புக்கொண்டால் அந்த பிரச்சனை அந்த இடத்திலேயே முடிந்துவிடுமல்லவா..!? அதன் தொடர்ச்சியாக அடுக்கடுக்கான பொய்களை சொல்லவேண்டிய அவசியமே இருக்காதே..! நமக்கு தலைகுனிவு ஏற்படும் நிலை எப்போதும் உருவாகாது.

நான் பொதுவா பொய் சொல்றதில்ல. அதுக்காக பொய்யே சொல்லமாட்டேன்னு சொல்லல. அப்பப்ப சின்ன சின்னதா பொய் சொல்லுவன்.

இந்தமாதிரியெல்லாம் கிறுக்குத்தனமா யோசிச்சுதான் முடிவு எடுத்தன், அறவே பொய் சொல்லக்கூடாதுன்னு. ஏதோ ஓரளவுக்கு பொய்யே சொல்றதில்லை. என்னோட நேர்மையையும் விட்டுகுடுக்கரதில்லை. சுத்தமாவே பொய் சொல்லக்கூடாதுன்னு முடிவு எடுத்ததுக்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கு. அது என்னன்னா..! எனக்கு சாமர்த்தியமா பொய் சொல்ல வராது. பொய் சொல்லும்போது உளறுவேன். எதிராளி சாமர்த்தியமாக இருந்தால் நான் சொல்வது பொய் என மிக எளிதாக கண்டறிந்துவிடலாம்.

அட, அத விடுங்க. நாம பொய் சொல்லாம நேர்மையாக இருக்கும்போது நமக்கு ஒரு கம்பீரம் கிடைக்கும் பாருங்க..!! வாய்ப்பே இல்லைங்க..!! அத உணர்ந்தா மட்டும்தான் புரிஞ்சுக்க முடியும். எனக்கு அந்த மாதிரியான அனுபவம் நிறையவே இருக்கு. இந்த மாதிரி இருந்தா நமக்கு கிடைக்குற மரியாதையே தனிங்க.

நீங்களும் வேணும்னா முயற்சி செஞ்சு பாருங்களேன். உண்மையும் நேர்மையும் எவ்வளவு வலிமையானது, கம்பீரமானது என தெரிந்துகொள்ளலாம்.

இத படிச்சிட்டு நான் ஏதோ புத்திமதி சொல்லியிருக்கேன்னு நெனச்சிடாதீங்க. இது எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம். இந்த அனுபவம் எனக்கு புடிச்சிருந்துச்சு. அதனால இங்க பகிர்ந்திருக்கிறேன் அவ்வளவே. தவறுகள் இருப்பின் அருள் கூர்ந்து என்னை திருத்தவும்.

குறிப்பு : எனது பள்ளி மற்றும் கல்லூரி தோழர்களுக்கு, தயவு செஞ்சு முகநூல்-ல வந்து உங்க கருத்த பதிவு செய்ய வேண்டாம். இந்த பகுதியிலேயே பதிவு செய்ய வேண்டுகிறேன்.