வியாழன், 7 பிப்ரவரி, 2013

வேதனை : கொலைகாரன் வருகிறான்.. :-(



கொலைகாரன் இந்திய நாட்டிற்கு வருகிறான். அதுவும் நம் நாட்டின் வட எல்லையான வேங்கட 
மலைக்கு பெருமாள் தரிசனம் பெற நம் தாயகம் வருகிறான். என்ன செய்வது கோவமும் ஆத்திரமும் மட்டுமே எஞ்சி நிற்க்கிறது. நான் ஒன்றும் களம் காணும் களப்போராளி அல்லவே. 
முகநூலிலும், வலைப்பூவிலும் வசைபாட மட்டுமே முடிகிறது. எப்போதும் சந்தர்ப்பவாத சாதாரண குடிமகனாகவே இருக்க முடிகிறது.

கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா.!
              - பாவேந்தர் பாரதிதாசன்

ரொம்ப அழகா சொல்லிட்டு போயிட்டாரு.. இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படிச்சு பாருங்க.. உணர்ச்சி பொங்கும். ஆனாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
-          மகாகவி பாரதியார்

நான், என் வீடு, என் குடும்பம் என மட்டுமே இருக்க பிடிக்கவில்லை. ஆனாலும் அப்படிதான் இருக்க முடிகிறது. இதை ஒருவகையில் கையாலாகாத்தனம் என்றும் சொல்லலாம்.

எத்தகைய அரசியல் பதவிகளிலும் இல்லாத இடத்திலேயே உள்நுழைந்தவனை விரட்டியடிக்க முடிந்தது எம் ஈழத்து உறவுகளால். ஆனால், இங்கோ ஒட்டுமொத்த இந்திய அரசையும் புரட்டிபோடும் அரசியல் வல்லமையும், அறிவும் கொண்ட தலைவர்கள் இருந்தும் இங்கே தட்டுதடுமாறிக்கொண்டிருக்கிறோம்.

தலைவர்களை மட்டும் சொல்லி தவறில்லை. அவர்கள் தவறிழக்கும் போது சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் எப்பொழுதுமே பொய்த்துப்போகின்றன. ஆங்கிலேயன் அதிகமாக அச்சப்பட்டது அப்போதைய நம் ஊடகங்களைப் பார்த்துதான். ஆனால் இப்போதைய ஊடகங்கள் எம்மையே அழிக்கின்றன.

பெரியார் சொல்லியதாக ஒரு விடயம் கேள்விப்பட்டேன், தமிழர்களை அழிக்க தமிழையே ஆயுதமாக கொண்டு வந்தால் அந்த தமிழையும் எதிர்ப்பேன் என்று.

நேரடியாக இருக்கும் எம் எதிரிகள் தமிழ் எனும் ஆயுதம் கொள்ளவில்லை. ஆனால், எம்மினத் துரோகிகள் கொண்டிருக்கிறார்கள் தமிழை ஆயுதமாக. எம்மினத்தை நேரடியாக எதிர்க்க இயலாதவர்கள் எம்மினத்தினுள் துரோகிகளாக எம்முடனே வளர்ந்திருக்கிறார்கள்.
இன்னமும் கூட நம்மினத்தார் பல பேருக்கு நம் வரலாறு சரியாக தெரிவதில்லை. இன்னமும் தாய் தமிழகத்தில் வெகுமக்கள் அறியாமையில்தான் இருக்கிறார்கள். இவ்விருளை அகற்ற போதிய ஒளி கொடுக்க சரியான முன்னெடுப்புகளை எவருமே செய்வதில்லை.

இத்தனை தெரிந்தும் களம் காண இயலாதவனாகவே இருக்கிறேன். அடிமட்ட நடுத்தர வர்க்கத்தில் பிறந்துள்ளதாலேயே குடும்ப சூழ்நிலைகள் என் எண்ணங்கள் அனைத்தும் என்னுள்ளேயே முடக்கிவிடுகின்றன.

எல்லாம் நடந்த இறுதியில் புலம்ப மட்டுமே முடிகிறது. L

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக