செவ்வாய், 10 மே, 2011

என் பழைய நினைவுகள் : தொடக்கம்


 வணக்கம்,  என் சின்ன வயசுல என்னை பாதிச்ச மகிழ்ச்சியான தருணங்கள், வருந்தவைத்த நிகழ்வுகள், நான் விளையாடிய, கிராமங்களில் மட்டுமே இருக்கக்கூடிய விளையாட்டுகள் என பல விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்பதிவை ஒரு தொடர் போல எழுதலாமுன்னு நெனச்சிருக்கேன். ஒவ்வொரு பதிவும் ஒரு சிறுகதை போல இருக்கும். உதாரணமாக சில தலைப்புகள் :

நாய் வேட்டை :
எனது வருத்தம் :
என் தாத்தாவில் மரணம் :
வில் போட்டி :
உண்டி வில்(கவன் கல்) போர் :
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி :
ஐந்தாம் வகுப்பில் அடி வாங்கியது :
உயிர் தப்பியது :
விளையாட்டுகள் :
        உஸ்காபெரி :
        இட்டெல்லாம் பெட்டி  :
        ஓட்டடி அடிக்கறது :
வெங்கடாம்பேட்டை பெருமாள் கோயில் கோபுர தரிசனம் :
...
        இப்படி பல தலைப்புகளை என் சிறுவயது முதல் இன்று வரை யோசிச்சு வச்சிருக்கேன். நான் எழுத்துலகிற்கு புதியவன் என்பதால் எந்த அளவிற்கு சுவாரசியமாகவும் இனிமையாகவும் எழுதுவேன் எனத் தெரியாது மேலும் எழுத்துப் பிழை ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம்.  தயவு செய்து என் பிழைகளை பொருத்தருள வேண்டுகிறேன்.

         மேலும் அன்பின் சுய வரலாற்றில் வரும் சம்பவங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க உண்மையே, இவற்றில் சந்தேகங்களுக்கு துளியும் இடமில்லை.

அன்பின் சுய வரலாறு : என் பாவச் செயல்

           என்னடா எடுத்த உடனேயே பாவச்செயல்னு தலைப்பிட்டு ஆரம்பிக்கிரானு பாக்கிறீங்களா.. அது ஒன்னுமில்லைங்க, நான் செஞ்ச இந்த வேலை அடிக்கடி என் ஞாபகத்துக்கு வரும் ரொம்ப வருத்தமா இருக்கும். அறியாத வயசுல தெரியாம செஞ்சதா இருந்தாலும் அது என்னமோ எனக்கு உறுத்தலாவே இருக்கு.
            அப்படி என்னதான் பண்ணினேன்னு கேட்டிங்கனா.. சிரிப்பீங்க.. அது உங்களுக்கு சிரிப்பாதான் இருக்கும் ஆனா எனக்கு அது ரொம்ப வருடங்களாகவே வருத்தத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
              இந்த சம்பவம் நடந்தது நான் நாலாவது படிக்கும் போது. என்னை பாதித்த பல சம்பவங்கள் இந்த ஆண்டில் தான் நடைபெற்றன. சரி சம்பவத்துக்கு வருவோம்.
               ஒரு நாள், அன்று பள்ளி விடுமுறை ஞாயிற்று கிழைமையா சனிக் கிழைமையா எனத் தெரியவில்லை. மதிய வேளை விளையாடுவதற்கு எங்கள் தெருவில் யாருமே இல்லை. தனியாக இருந்தேன். பகலிலே எனக்கு தூக்கம் வராது அதே சமயம் எந்த வேலையும் செய்யாம சும்மா இருக்கவும் என்னால முடியாது. எங்கள் வீட்டிற்குப் பின்னால் ஒரு பாட்டி வீடு கட்டி தங்கியிருந்த பொட்டல் நிலம் இருக்கும்(வீடு இல்லை காலி நிலம் மட்டுமே).
                அந்த இடத்தில் தான் அச்சம்பவம் நடந்தேறியது. நான் கையில் ஒரு தடியை எடுத்துக்கொண்டு அலைந்துகொண்டிருந்தேன்.தடியின் நீளம் சுமார் மூன்றரை அடி இருக்கும். எங்கள் வீட்டிற்குப் பின்னால் அப்பொட்டல் நிலமருகே தொடர்ச்சியாக கருநொச்சி செடிகள் இருக்கும். அக்கருநொச்சி செடிகளின் அடிவாரத்திலேதான் ஆரம்பித்தது சம்பவம்..
                  நான் தடியுடன் அப்பக்கம் வரும்போது எதேச்சையாக அவைகளை காண நேரிட்டது. குடும்பத்தோடு குதூகலமாய் இருந்தன.
                  எங்கள் தெருவில் எல்லா சிறுவர்களுக்கும் உடனேயே அடிப்பதுதான் எங்களின் முதல் வேலையே. நானும் அதனை அப்படியே பின்பற்றினேன். எண்ணிக்கையில் அவை ஏழு அல்லது எட்டு இருக்கும்.
                 ஒன்று கூட தப்பிவிடாதபடி அனைத்தையும் வளைத்து வளைத்து அடித்தேன். அவற்றின் சிறுநீர் மேலே பட்டால் சொரி வந்துவிடும் என்பார்கள். அதற்க்கெல்லாம் அஞ்சியவனாக நான் இல்லை. பொதுவாக இவற்றை அடித்தே கொல்லுவதுதான் வழக்கம்.

ஆனால் நான் அப்படி செய்யவில்லை. நான் செய்த அந்த செயல் அதுதான் இத்தனை வருடங்களாக இப்படி வருத்தப்பட்டு கொண்டிருப்பதற்க்கு காரணம்.இந்த சம்பவத்திற்கு முன்பு பலவற்றை அடித்தே கொன்றிருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் என் மனதை பாதிக்கவில்லை.
                 ஒருவழியாக அவைகள் எங்கும் தப்பி ஓடாதபடி குற்றுயிரும் கொலையுயிருமாக அடித்துப்போட்டுவிட்டேன். சரி அடுத்து என்ன செய்யலாம் எப்படி கொல்லலாம் என யோசித்த போதுதான் என் சிந்தையில் சட்டென தட்டியது ஒரு பொறி. சுற்றும் முற்றும் தேடினேன் குழி பறிப்பதற்கு ஏதேனும் கிடைக்குமா என்று. கிடைத்தது சற்று வலுவான குச்சிகள். குழி தோண்ட ஆரம்பித்தேன். அச்சமயம் பார்த்து ஒன்று மட்டும் துள்ளி தாவி மறைவதற்கு முயற்ச்சிப்பதை கண்டேன். சட்டென எழுந்து என் கையில் இருந்த தடியால் மண்டையிலேயே ஒரு போடு போட்டேன். மல்லாந்து விழ்ந்தது. அதன் தொண்டையும் வயிறும் மாறி மாறி துடித்தன.
          பின் மீண்டும் குழியை தோண்ட ஆரம்பித்தேன். இறுதியாக குழியும் தோண்டி முடிக்கப்பட்டது.
                    நீங்கள் எல்லாம் நினைப்பீர்கள் நான் அவற்றை குழியில் போட்டு புதைக்கப்போகிறேன் என்று, அதுதான் இல்லை. மாறாக வேறொன்றை செய்தேன்.அப்படி புதைத்திருந்தாலும் என் மனம் ஆறியிருக்கும் என நினைக்கிறேன். அருகிலே கிடக்கும் காய்ந்த குச்சிகளை பொறுக்க ஆரம்பித்தேன்.பின்னர் எதோ யோசித்தவனாய் வீட்டிற்கு சென்று தீப்பெட்டி எடுத்துவந்தேன். அரை அடி ஆழம் தோண்டப்பட்ட அந்த குழியில் முதலில் இருண்டு சிறிய குச்சிகளை போட்டேன். பின் அவற்றின் மேல் நான் அடித்து துவம்சம் செய்து போட்டு வைத்திருக்கும் உயிர்களில் சிலவற்றை வைத்து, அவற்றின் மேல் மேலும் சில குச்சிகளை வைத்து பிற உயிர்களையும் அதன் மேல் இட்டு அடியில் கொளுத்த ஆரம்பித்தேன். 

அந்த அளவிற்கு ஒன்றும் சரியாக கொழுந்துவிட்டு எரியவில்லை. அதற்குமேல் அந்தவிளையாட்டை விளையாட பிடிக்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டேன்.
 
                     இரண்டு மூன்று  நாட்கள் கழித்து, நான் கொன்று போட்டவைகளின் நிலை என்னவென பார்க்க அவ்விடம் நோக்கி வந்தேன். மூன்று உயிர்கள் மட்டுமே காய்ந்த நிலையில் இறந்து கிடந்தன.
                       இப்படி என்னால் மிகக் கொடூரமான வன் கொடுமைகளுக்கு ஆளான அவ்வுயிர்கள் "தவளைகள்".

தொடரும் என் வரலாற்று நினைவுகள்... அன்புடன் அன்பு.

1 கருத்து: