சனி, 29 ஜனவரி, 2011

எனது ஊர் (My Village)


கீழூர்
முன்னுரை :-
                     வணக்கம் நான் எனது கிராமத்தை பற்றி சிலவற்றை இவ்வலைப்பூவில் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். எங்கள் ஊர் முந்திரிகாடுகளாலும் விவசாய நிலங்களாலும் சூழப்பட்ட ஒரு முழுமையான கிராமம். மேலும் இது கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் கீழூர் ஊராட்சியும் ஒன்று. கீழூர் ஊராட்சியின் கீழ் ஆயிப்பேட்டை, பாச்சாரப்பாளையம், பெரிய கோயில் குப்பம், சின்ன கோயில் குப்பம்,பெருமத்தூர், புது பெருமத்தூர் ஆகிய கிராமங்கள் அடங்குகின்றன. நகர் புறங்களிலிருந்து வருபவர்களால் கிராமிய மணத்தையும், பண்பாட்டு உணர்வையும், விவசாய நெடியையும் எளிதில் நிச்சயமாக எங்கள் கிராமத்தில் உணர முடியும் உணர முடியம்.

பண்பாட்டு விழாக்கள் :- 
                        எங்கள் ஊரில் அனைத்து கிராமங்களைப் போலவே ஆடி மாதம் மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊற்றுவதும் சாமி சிலைகள் வீதி உலா வரும் ஒரு விழாவும், கார்த்திகை மாதம் மூன்றாம் வெள்ளி அல்லது இறுதி வெள்ளியன்று மாவிளக்கு, கொழுக்கட்டையுடன் சென்று படைத்துவிட்டு வரும் ஒரு விழாவும்தான் நாங்கள் கொண்டாடும் சிறப்பான விழாக்கள்.
                        சாமி வீதி உலா வருவது என்பது எனக்கு நினைவுதெரிந்த நாட்களிலிருந்தே நடைபெறுவதில்லை. அது எங்கள் ஊரில் உள்ள இரு குடும்ப வம்சாவழிகளுக்கு கொடுக்கப்படவேண்டிய மரியாதையினால் ஏற்ப்பட்ட சண்டையினால் தடைப்பட்டு போயுள்ளதாக என் அம்மா கூற கேள்விப்பட்டேன்.
                        எங்கள் ஊரின் இந்த ஆடி மாத விழா தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும். இம்மூன்று நாட்களும் இரவு நேரங்களில் கண்டிப்பாக தெருக்கூத்து விடிய விடிய நடைபெறும். பெரும்பாலான கிராமங்களில் அழிந்தே போய்விட்ட இது வருடாவருடம் எங்கள் உயிர்ப்பெருவதை சற்று பெருமையாகவே பார்க்கிறேன்.


மக்களின் தொழில் :-
                       எங்கள் ஊரின் பெரும்பாலான மக்கள் ஏறக்குறைய 85%  கூலித் தொழிலாளிகளாகவும் விவசாயிகளாகவும் இருக்கிறார்கள்.ஏனையோர் அருகிலுள்ள நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தற்க்காலிக பணியாளர்களாக வேலைபார்க்கிறார்கள். மேலும் மற்றபிற கிராமங்களைப்போலவே விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அரசியல் மூலமாகவும், பெரிய ஒப்பந்ததாரர்களாக இருப்பதன் மூலமாகவும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டுள்ளனர்


இயற்கை வளங்கள் :-
            மண்வளம் :-
                                 மண்வளம் : செம்மண். வெயில் காலங்களில் புழுதி கொடிகட்டி பறக்கும் பொட்டல் மண் தான் எங்கள் ஊர் முழுமையும்.
            நீராதாரம் :-
                ௧) குடிநீர்:
                                 அரசாங்கத்தால் மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டி கட்டிக்கொடுக்கப்பட்டாலும், தெருவிற்கு இரண்டு அல்லது மூன்று குழாய்கள் மட்டுமே இருப்பதால் பெரிதாக எந்த பலனும் இருப்பதாக தெரியவில்லை மேலும் சரியான பராமரிப்பு இல்லாததால் குழாய்களில் அடைப்பு ஏற்ப்பட்டு தண்ணீர் வராது அப்படியே வந்தாலும் அது சகதியுடன் வரும். அதனால் அது குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது. 
                                கிராமம் என்பதால் தெருவிற்கு இரண்டு மூன்று கிணறுகள் இருக்கும். மேலும் விவசாயம்தான் பிரதான தொழில் என்பதால் ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் வசதி படைத்தோரால் அமைக்கப்பட்டிருக்கும்.
                               ஆகவே கிணறுகளும் ஆழ்துளை கிணறுகளும்தான் குடிநீர் வாழ்வாதாரம்.
                ௨) பாசன நீர் :
                                எங்கள் ஊரின் விவசாயத்திற்கான மிகப்பெரிய நீராதாரங்கள் இரண்டுதான். அவை : [௧]. சோழன் ஏரி [௨]. ஆழ்துளை கிணறுகள். இவை இரண்டையும் மழையையும் நம்பியே எண்களின் விவசாயம் உள்ளது.
                ௩) குளம் :
                                 நீங்கள் எங்குமே குளம் இல்லாத ஒரு கிராமத்தை பார்க்க முடியாது. எங்கள் ஊருக்கும் ஒரு குளம் உண்டு. ஆதிகாலத்தில் குடிநீருக்காகவும், பிள்ளையார் கொவிளுக்காகவும் வெட்டப்பட்ட குளம் இன்று மழைக்காலங்களில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை பெருக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.


விவசாயம் :-
               நிலக்கடலை , மரவள்ளி கிழங்கு, பன்னீர் கரும்பு, சக்கரை கரும்பு, வாழை, நெல்,உளுந்து, துவரை, கம்பு மற்றும் எள் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இவற்றில் நிலக்கடலையும், வாழையும், கரும்புமே அதிகமாக பயிரிடப்படுகின்றன. இவற்றிற்கு அடுத்தப்படியாக எள்ளும், கம்பும் அதிகமாக பயிரிடப்படுகிறது.பெர்ம்பாலும் உளுந்து நிலக்கடலையுடன் ஊடுபயிராக பயிரிடப்படுகிறது.
              மேலும் இவற்றின் நிலப்பரப்பிற்கு இணையாக முந்திரிக்காடுகள் இருக்கின்றன. ஆனால் பெருகிவரும் மக்கள்தொகையாலும் விலைவாசி ஏற்றத்தாலும் பணத்தை மட்டுமே குறியாக கொண்டு மனிதன் செயல்படுவதால் இம்முந்திரிக்காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாறிக்கொண்டு வருகின்றது.(மேலும் நெய்வேலி அருகே உள்ள முந்திரிக்காடுகள் பெரும்பாலானவை வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு கான்க்ரீட் காடுகளாக காட்சியளிக்கின்றன.)கல்வி :-
               ஒன்று முதல்  ஐந்து வரையிலான வகுப்புகளைக்கொண்ட துவக்கப்பள்ளிதான் எங்கள் ஊரின் கல்வி நிலையம். " ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழூர் ". இதுதான் என்னை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்ப்பாலும், சுயசிந்தனையும் ஊட்டி வளர்த்த என் பள்ளி.
               ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வேண்டுமானால் குறிஞ்சிப்பாடி, நெய்வேலி மற்றும் வடலூர் ஆகிய நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பை தொடர வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் குறிஞ்சிப்பாடிக்கு சென்றுதான் படித்தோம். இப்போதும் அதிகமானோர் படிக்க செல்வது குறிஞ்சிப்பாடிக்குதான்.
                எங்கள் ஊர் மட்டுமல்லாது சுற்றுவட்ட கிராமங்கள் அனைத்துமே கல்வியில் சற்று பின்தங்கிதான் இருக்கிறது.எங்கள் ஊரின் கல்வி இன்றைய இளையத்தலைமுறையினரால்தான் சற்று ஓங்கிய எழுச்சி கண்டுள்ளது. பெரும்பாலான குடும்பங்களின் வம்சத்தின் முதல் பட்டதாரி இன்றைய இளைய தலைமுறையினர்தான். ஆனாலும் பாதிக்கு இணையான இளையோர் சரியான விழிப்புணர்வு இல்லாமலும், பள்ளிக்கல்வியை பாதியிலேயே கைவிட்டும், வறுமையினால் மேற்ப்படிப்பை தொடங்க முடியாமலும், தொடர முடியாமலும் இருப்பது வேதனையான விடயம்தான்.சுகாதாரம் :-
                  எங்கள் ஊராட்சிக்கான ஆரம்ப சுகாதார நிலையம் எங்கள் ஊரில் இருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவிலுள்ள பாச்சாரப்பாளையம் கிராமத்தில் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கின்ற போதிலும் அது எங்கள் ஊரின் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி போல் சரியான பராமரிப்பும், அக்கறையும் இல்லாமல்தான் இருக்கிறது.                 
                   மற்றபடி எந்த ஒரு சுகாதார அடிப்படை வசதிகளும் எங்கள் ஊருக்கு கிடையாது.போக்குவரத்து :-
                   எங்கள் ஊருக்கு  தமிழக அரசால் ஏற்ப்படுத்திதர முடியாத ஒரு போக்குவரத்து வசதியை இராமவிலாஸ் என்ற தனியார் பேருந்து நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏற்ப்படுத்தி தந்தது. அப்பேருந்து ஒரு நாளைக்கு ஆறு முறை சிதம்பரத்திலிருந்து பண்ருட்டிக்கும், பண்ருட்டியிலிருந்து சிதம்பரத்திற்கும் எங்கள் ஊரை கடந்து செல்லும்.
                    மாணவர்களுக்கு இலவச பயண அட்டை கொடுத்ததாலேயோ என்னவோ காலையில் எட்டுமணியைப்போல் ஒரு அரசு பேருந்து வரும். அது பெருமத்தூர், கீழூர், பாச்சாரப்பாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை அழைத்துக்கொண்டு குறிஞ்சிப்பாடி நோக்கி விரையும். மாலையில் ஐந்து மணிபோல் குறிஞ்சிப்பாடிக்கு அப்பேருந்து வரும்.வராமலும் போகலாம். அப்படி வராத நாட்களில் நடந்துதான் வரவேண்டும். இப்படித்தான் இன்றும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
                     இராமவிலாஸ் பேருந்து நிறுத்தப்பட்ட பின்பு எங்கள் ஊர் பேருந்து போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டது. இதனால் சென்னை-கும்பகோணம் சாலையில் ஒரு 1 மணி நேர சாலைமறியலுக்குப்பின் எங்கள் ஊரின் கோரிக்கை அரசின் காதுகளுக்கு சென்று தற்போது மதியம் 1 .10 மணியளவில் பண்ருடியிலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு விரையும் பேருந்து எங்கள் ஊரை கடக்கும். அதே பேருந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் குறிஞ்சிப்படியிளிருந்து திரும்பி பண்ருட்டி நோக்கி நகரும்போது எங்கள் ஊரை கடக்கும்.
                     இடையில் பாச்சாரபாளையம் வரை வந்து செல்லும் சிற்றுந்து எங்கள் ஊருக்கும் நீண்டிருந்தது. ஆனால் அதுவும் இப்போது தடைப்பட்டுள்ளது.


வழித்தடங்கள் :-
                     வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய ஊர்களிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் எங்கள் ஊர் அமைந்துள்ளது.
           வடலூரிலிருந்து : 
                      கும்பகோணம் - சென்னை சாலையில் வடலூரிலிருந்து  பண்ருட்டி நோக்கி (சென்னை) ஒரு ஐந்து கி.மீ பயணித்தால் வடகுத்து எனும் கிராமம் வரும். அவ்வூரிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு மைல் கல் தூரம் நகர்ந்தால் எங்கள் ஊரை அடையலாம்.
          நெய்வேலியிலிருந்து :
                      நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து(2 கி.மீ ) இந்திரா நகரை அடைந்து அங்கிருந்து (சென்னை - கும்பகோணம் சாலை ) வடலூரை நோக்கி ஒரு கி.மீ பயணித்தால் வடகுத்து கிராமத்தை அடையலாம். அங்கிருந்து நான் ஏற்கனவே சொன்னதுபோல கிழக்குநோக்கி இரண்டு மைல் சென்றால் எங்கள் ஊர் வரும்.
          குறிஞ்சிப்பாடியிலிருந்து :
                       குறிஞ்சிப்பாடியிலிருந்து வடக்கு திசை நோக்கி மீனாட்சிப்பேட்டை(கிராமம்) வழியாக கன்னித்தமிழ்நாட்டை(கிராமம்) அடைந்து அங்கிருந்து மேற்கு நோக்கி செல்லும் சாலையில் சென்றால் பாச்சாரப்பாளையம் கிராமத்தை அடுத்ததாக எங்கள் ஊர் வரும்.


மதங்கள் :-
                      எங்கள் ஊரில்  ஒரே ஒரு இஸ்லாமிய குடும்பத்தை தவிர்த்து மற்ற அனைவரும் இந்து மதத்தை சார்ந்தவர்களே.


சமூகம் :-
                       வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த மக்கள் மட்டுமே பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.இங்கு வன்னியர்கள்  நயினார்,படையாட்சி என இரு சாதிப்பிரிவுகளாக உள்ளனர். இங்கு வசிக்கும் வன்னியர்களில் நான்கில் ஒரு பங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவர்களை தவிர்த்து இரண்டு செட்டியார் குடும்பங்கள் இருக்கின்றன.


திருத்தலங்கள் :-
                       பொதுப்படையாக  சொல்லும்படியாக இரண்டே இரண்டு கோவில்கள் தான் இருக்கின்றன. ௧.பிள்ளையார் கோயில், ௨.மாரியம்மன் கோயில். மாரியம்மன் கோயிலின் சிறப்பு அங்கிருக்கும் தலை மட்டுமே உள்ள மாரியம்மன் கற்ச்சிலையானது சுயம்பு என்பதே ஆகும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அக்கோவில் பாழடைந்த கோவிலாகவே உள்ளது.
                       இவற்றைத்தவிர பெரியாண்டவர் கோயில், பாவாடைராயன் கோயில், வீரன் கோயில் என ஒரு சில குலதெய்வ கோவில்களும் உள்ளன. இதில் பெரியாண்டவர் கோயில் எங்களின் குல தெய்வமாகும். இக்கோயில் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு ஐந்து ஏக்கர் அளவில் வளர்ந்துள்ள காட்டிற்கு நடுவில் உள்ளது.


அரசியல் கட்சிகள் :-
                        அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, காங்கிரஸ்,பா.ம.க, வி.சி ஆகிய கட்சிகள் எங்கள் ஊரில் இடம்பெற்றுள்ளன. இவைகளின் செல்வாக்கும் நான் எழுதியிருப்பதைப் போலவே இருக்கிறது.தற்ச்சமயம் தே.மு.தி.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் செல்வாக்கு குறைந்து பா.ம.க விற்கும், அதற்கு அடுத்தப்படியாக அ.தி.மு.க விற்கும் உயர்ந்துள்ளது.


முடிவுரை :-
                      என்னுடைய கிராமத்தைப்  பற்றி நான் அறிந்த அளவில் பதிந்திருக்கிறேன். இக்கட்டுரையில் நான் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் தயவு செய்து குறிப்பிடுங்கள். இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை, மனம் நோகும்படி என ஏதேனும் எழுதியிருந்தால் என்னைத்திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 


5 கருத்துகள்:

 1. தங்கள் கட்டுரையில் மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் தலைமட்டுமே உள்ளது
  என்று எழுதியுள்ளீர்கள்.சில ஊர்களில் மாரியம்மன் சிலையை நிறுவியுள்ளனர்.
  அதன் காரணத்தை மாரியம்மன் என்ற தலைப்பில் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியுள்ளேன் அதைப் படித்து அறிந்துகொள்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு நன்றி.

   நீங்கள் குறிப்பிடுவது இந்த கட்டுரையையா..!?
   http://ta.wikipedia.org/wiki/மாரியம்மன்

   முழுவதும் படித்தேன். அருமையாக தொகுத்து எழுதியிருக்கிறீர்கள். மாரியம்மன் புராண முரண்பாட்டையும், சமயபுரம் கோவிலில் சக்கிலி சமூகத்தவருக்கான உரிமையும் தெரிவித்திருப்பது புதிய தகவல்கள்.

   நீக்கு
 2. உங்கள் ஊரில் வன்னியர்கள் நயினார்,படையாட்சி என இரு சாதிப்பிரிவுகளாக உள்ளனர் என கூறியுள்ளிர்கள்.அப்படியானாள் உங்கள் ஊரில் உள்ள பாளையகாரர்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர்கள்.அவர்கள் வன்னியர்களா அல்லது வேற்று சமுகமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீழூர் பாளையக்காரர்கள் வன்னியர்கள். அவர்களுக்கான பட்டம் பாச்சாள நயினார்.

   நீக்கு
 3. குணவாசல்,கூத்தூர்,கடம்பூர்,நயினார்பாளையம்,இப்படி நயினார் பட்டம் உடையவர்கள் நிறைய இருக்கிறார்கள் நயினார் என்றால் தலைவர் என்று பொருள்.வேலூர் பக்கம் நயினார் எல்லாம் ஜெயின் மதத்திற்கு மாறியதால் நல்ல மரியாதை. சைவ உணவுமட்டுமே சாப்பிடுவர்.ஒருகுறிப்பிட்ட பகுதிக்கு தலைவராக இருந்தவர்கள் பாளையக்காரர்கள்!

  பதிலளிநீக்கு