புதன், 7 நவம்பர், 2012

I-T ACT SECTION 66 A- பதிவர்கள் ஒன்று படுவோம்


வலை தளங்களில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க தருமி வலைப்பூவின் முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்து இப்பதிவு .

*****************************************************************************************************************************************************************




 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

புதன், 17 அக்டோபர், 2012

வலிமை : உண்மையும் நேர்மையும்


இந்த பதிவு உண்மைக்கும் நேர்மைக்கும் இருக்குற வலிமையைப் பற்றியது.

நமது பேச்சில் உண்மையும் செயலில் நேர்மையும் இருக்கும்போது நமக்கு கிடைக்கும் ஒரு வலிமை, அதை மிஞ்ச உலகில் எதுவுமே இருக்காது. நமக்கு நேர்நிற்க ஒருவரும் இருக்கமாட்டார்கள்.

மேற்ச்சொன்ன பத்தியில் இருப்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். நாம் நேர்மையானவராகவும் உண்மையை உரைப்பவராகவும் இருக்கும்போது, தன் நேர்மையிலிருந்து தவறியவர்கள் பொய்யுரைப்பவர்கள் எவராயினும், எவ்வளவு பெரிய அதிகாரமுடையவராயினும் நமக்கு நேர் நின்று நம் கண்களைப் பார்த்து பேச அச்சமடைவர். அவர்களால் உண்மையின் நேர்மையின் வலிமையை, ஆற்றலை தாங்க முடியாது.

நேர்மை தவறுபவர்களின் மனம் நேர்மையானவர்களை காணும்போது கூனி குறுகவே செய்யும்.

ஒரு பொய் சொல்லிவிட்டு, அது சம்பத்தப்பட்டவர்க்கு நான் சொன்னது பொய் என தெரியவரும் பட்சத்தில் அவர் முகத்தில் கொஞ்சம் கூட நாணம் இல்லாமல் எப்படி விழிக்க முடியும்.

பொதுவாக நாம் செய்யும் தவறுகளை மறைப்பதற்காகவே பொய் சொல்ல முற்ப்படுகிறோம். இப்படி நாம் சொல்லுகிற பொய்கள் தான் நமது நேர்மையின் சறுக்கல்களுக்கு அடிகோலுகிறது.

ஆனால் நாம் செய்யும் தவறுகளை மறைப்பதற்கு பதிலாக, நம் தவறுகளை நாம் ஒப்புக்கொண்டால் அந்த பிரச்சனை அந்த இடத்திலேயே முடிந்துவிடுமல்லவா..!? அதன் தொடர்ச்சியாக அடுக்கடுக்கான பொய்களை சொல்லவேண்டிய அவசியமே இருக்காதே..! நமக்கு தலைகுனிவு ஏற்படும் நிலை எப்போதும் உருவாகாது.

நான் பொதுவா பொய் சொல்றதில்ல. அதுக்காக பொய்யே சொல்லமாட்டேன்னு சொல்லல. அப்பப்ப சின்ன சின்னதா பொய் சொல்லுவன்.

இந்தமாதிரியெல்லாம் கிறுக்குத்தனமா யோசிச்சுதான் முடிவு எடுத்தன், அறவே பொய் சொல்லக்கூடாதுன்னு. ஏதோ ஓரளவுக்கு பொய்யே சொல்றதில்லை. என்னோட நேர்மையையும் விட்டுகுடுக்கரதில்லை. சுத்தமாவே பொய் சொல்லக்கூடாதுன்னு முடிவு எடுத்ததுக்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கு. அது என்னன்னா..! எனக்கு சாமர்த்தியமா பொய் சொல்ல வராது. பொய் சொல்லும்போது உளறுவேன். எதிராளி சாமர்த்தியமாக இருந்தால் நான் சொல்வது பொய் என மிக எளிதாக கண்டறிந்துவிடலாம்.

அட, அத விடுங்க. நாம பொய் சொல்லாம நேர்மையாக இருக்கும்போது நமக்கு ஒரு கம்பீரம் கிடைக்கும் பாருங்க..!! வாய்ப்பே இல்லைங்க..!! அத உணர்ந்தா மட்டும்தான் புரிஞ்சுக்க முடியும். எனக்கு அந்த மாதிரியான அனுபவம் நிறையவே இருக்கு. இந்த மாதிரி இருந்தா நமக்கு கிடைக்குற மரியாதையே தனிங்க.

நீங்களும் வேணும்னா முயற்சி செஞ்சு பாருங்களேன். உண்மையும் நேர்மையும் எவ்வளவு வலிமையானது, கம்பீரமானது என தெரிந்துகொள்ளலாம்.

இத படிச்சிட்டு நான் ஏதோ புத்திமதி சொல்லியிருக்கேன்னு நெனச்சிடாதீங்க. இது எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம். இந்த அனுபவம் எனக்கு புடிச்சிருந்துச்சு. அதனால இங்க பகிர்ந்திருக்கிறேன் அவ்வளவே. தவறுகள் இருப்பின் அருள் கூர்ந்து என்னை திருத்தவும்.

குறிப்பு : எனது பள்ளி மற்றும் கல்லூரி தோழர்களுக்கு, தயவு செஞ்சு முகநூல்-ல வந்து உங்க கருத்த பதிவு செய்ய வேண்டாம். இந்த பகுதியிலேயே பதிவு செய்ய வேண்டுகிறேன்.


திங்கள், 8 அக்டோபர், 2012

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1998-1999] (ஏழாம் வகுப்பு 'ஈ' பிரிவு)

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - 1992-1997

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1997-1998] (ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவு)

ஏழாம் வகுப்பு  "ஈ" பிரிவு : VII -D

இதுவரை ஆறாம் வகுப்பு முழுவதும் மரத்தடியிலேயே பாடம் படித்த எங்களுக்கு புதிதாக ஒரு தற்காலிக வகுப்பறை கிடைத்தது. பள்ளியின் தெற்கு நுழைவு வாயிலின் அருகிலுள்ள கட்டிடத்தின் மாடியில் உள்ள முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டது.
 
அடுத்த சில நாட்களில், எங்கள் பள்ளியில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட வகுப்புகளில் ஒன்று எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவும் தற்காலிகம்தான். ஓரிரு நாள்களில் இந்த வகுப்பும் மாற்றப்பட்டு எங்களுக்கான நிரந்தர வகுப்பு கிடைத்தது. அதே கட்டிடத்தின் தரைத்தளத்தில் படிக்கட்டுக்கு அருகிலுள்ள வகுப்பு எங்களின் VII - D.

எங்கள் வகுப்புக்கு ஒரு சிறப்பு இருந்துது. அது என்னனா..!? ஒட்டுமொத்த பள்ளியிலேயே ஏழாம் வகுப்பு தொகுப்புகளில் தர வரிசையில் முதல் பத்து இடங்களில் எங்கள் வகுப்பு மாணவர்கள்தான் இருப்பார்கள். என் நினைவுகளில் இருக்கும் அவர்களின் பெயர்கள்.

1. A.அருண்ராஜ் - I
2. S.கபிலன்  - II
3. ஜேம்ஸ் - III, IV
4. S.ஆனந்தவேலு - III , IV , V
5. நடராஜன் - III , IV , V
6. சிவானந்தம் -  III , IV , V , VI
7. குமரேசன் -  IV , V ,VI , VII,VIII , IX, X
8.  L.சுந்தரகணேசன்  -IV , V ,VI , VII ,VIII , IX, X
9. சத்யராஜ் - IV , V ,VI , VII ,VIII , IX, X
10. C.பாலசுப்ரமணியன் - V ,VI , VII ,VIII , IX, X
11. அந்தோனி ராஜ் (Antony Raj) -- V ,VI , VII ,VIII , IX, X

இதுல என் பேர் இருக்காது. எப்புடி இருக்கும். அதுக்கெல்லாம் நல்லா படிக்கனுமில்ல..!?
சரி விடுங்க. இங்க நான் ஒரு சாதனையை பண்ணியிருக்கன். அது என்னன்னா தொடர்ந்து, முதல் பருவத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு என அனைத்திலும் 15 வது இடத்தைப் பிடித்ததுதான். எல்லாம் சரி வகுப்புல மொத்தம் எத்தனை பேருன்னு தெரியனுமில்ல. அனால் அது சரியா எத்தனை பேருனு தெரியல. 60 லேர்ந்து 75 பேரு வரைக்கும் இருந்தோம்.


ஏழாம் வகுப்பு 'ஈ' பிரிவில் எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களின் பட்டியல் பாட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏழாம் வகுப்பு [VII-D](1998-1999)
பள்ளிக்கூடம் :ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.
வ.எண்பாடம்ஆசிரியர்

1

2
3
4
5
6
7
8
தமிழ்

ஆங்கிலம்
கணிதம்
அறிவியல்
சமூக அறிவியல்
ஓவியம்
தறி
உடற்கல்வி (P.E.T)
புலவர்.திரு.தேவராஜ் மற்றும்
திரு. இராஜமோகன் 
திரு.T.இராமசாமி (T.R)*
திரு.T.இராமசாமி (T.R)
திரு.C.முருகவேல் (C.M)
திரு.இரமேஷ்
திரு.இரவிச்சந்திரன்
---?---
திரு.வேலாயுதம்
* : வகுப்பாசிரியர்,                  ---?--- : பெயர் நினைவில் இல்லை.

எங்கள் பள்ளியின் மிகவும் கண்டிப்பான ஆசிரியர்களில் எங்களின் வகுப்பாசிரியர் திரு.T.இராமசாமி அவர்களும் ஒருவர். அவரைப் பார்த்தாலே ஒரே பயமாக இருக்கும். தமிழாசிரியர் புலவர்.திரு.தேவராஜ் அவர்களின் மகன் தான் திரு. இராஜமோகன் அவர்கள். அச்சமயம் அவர் எங்கள் பள்ளியில் தற்காலிகமாக சேர்ந்திருந்தார் என நினைக்கிறேன். அடுத்தது திரு.இரமேஷ் அவர்கள். பொதுவாக எங்கள் வகுப்பின் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்த ஆசிரியர்.

சரி, இனி ஏழாம் வகுப்பில் எனக்கு ஏற்ப்பட்ட சில மறக்க முடியாத சம்பவங்களைப் பார்க்கலாம்.

சம்பவம் 1 :

இந்த வகுப்பில் முதலில் ஒதுக்கப்பட்ட அறையில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இது. ஆறாம் வகுப்பிலிருந்து தேர்ச்சிபெற்று பள்ளி திக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், எங்களின் வகுப்பாசிரியர் எதோ ஒரு சூழ்நிலையில் ஆங்கில எழுத்துக்கள் மொத்தம் எத்தனை எனக் கேட்டார். அதாவது "A B C  D ..."  மொத்தம் எத்தனை எழுத்துக்கள் என வினவினார். வகுப்பிலுள்ளவர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவர்களை எழுப்பி பதில் அளிக்க சொன்னார். ஒருவன் 27 எழுத்துக்கள் என்றான். இன்னொருவன் 26 எழுத்துக்கள் என்றான். கேட்க்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் 26 என்றே சொன்னார்கள். எனக்கு மனசுக்குள் ஒரே பயம். எங்கே நம்மையும் கேட்டுவிடுவாரோ என்று. இதில் 26 எழுத்துக்களா 27 எழுத்துக்களா என்ற சந்தேகம் வேறு. விரல் விட்டு எண்ணி பார்த்து முடிவுசெய்தேன் 26 எழுத்துக்கள்தான் என்று. இருந்தாலும் பயமாகத்தான் இருந்தது. நல்லவேளை என்னை எந்த கேள்வியும் கேட்கவில்லை என சந்தோசம் அடைந்தேன் பாடவேளை முடிவில்.

சம்பவம் 2:


ஆங்கில வழி மாணவர்களுக்காக கட்டப்பட்ட வகுப்பில் அமர்ந்திருந்த சமயம், காலையில் இரண்டாவது பாடப்பிரிவின் போது ஆசிரியர் இரமேஷ் அவர்கள் எங்களை இது கணினி பாடவேளை என அழைத்துச்சென்றார். நாங்களும் அறையை நெருங்கினோம். நீல நிற பின்புலனில் வெள்ளை நிறத்தில் எழுதியிருந்தது "கணினி அறை" என்று.
ஒரு பாட வேலை என்பது 45 நிமிடங்கள். எங்கள் வகுப்பிலிருந்து 5 நிமிடத்தில் கணினி அறைக்கு வந்துவிட்டோம். அடுத்த 40 நிமிடங்கள் கணினி அறையில்தான் செலவிடப்பட்டது. அந்த அறையில் இருந்தது ஒரே ஒரு கணிப்பொறி. கணிப்பொறி இயக்கப்பட்டது 15 நிமிடங்களுக்குமேல் ஆனது கணினி திரையில் "Windows Loading Image " தெரிவதற்கு. சிறிது நேரத்தில் கணினி தானாகவே அணைந்துவிட்டது. மீண்டும் இயங்குவதற்க்குள் பாடவேளை நேரம் முடிந்துவிட்டது. 
நான் முதன் முதலாக கணிப்பொறியை கண்டது அப்போதுதான்.இன்னைக்கு என் பொழப்பே அதுலதான் ஓடிகிட்டிருக்கு. 

சம்பவம் 3:

இந்த சம்பவம் நடந்தது எங்களுக்கு இறுதியாக ஒதுக்கப்பட்ட அறையில். இங்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் பசுங்காரையால்(CEMENT) செய்யப்பட்டவை. ஒருமுறை இருக்கைகளின் மீது ஏறி விளையாடும்போது விழுந்து என் வலது முழங்காலிலும் இடது முழங்காலிலும் பெரிய காயங்கள் ஏற்ப்பட்டது. அந்த காயங்கள் என் முழங்காலில் எலும்பு வெளியே தெரியுமளவுக்கு இருந்தது. இன்றும் அந்த தழும்புகள் இந்த சம்பவத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். 


இந்த வகுப்புல நான் யாருகிட்டயும் பெருசா அடி வாங்கலிங்க. பெருசான்னு இல்ல கிட்டத்தட்ட யாருகிட்டையுமே அடி வாங்கல அப்படிதான் சொல்லணும்.
ஆனால் சில பசங்க கூட சண்டை சச்சரவு இருந்துச்சி. 
எல்லா வகுப்புலயும் ஒழுங்கா படிக்காம, ஒழுங்கா பள்ளிக்கு வராம ஒரு கெட்ட பசங்க குழு (Bad  Boys Team) இருக்குமில்ல. அந்த மாதிரியான ஒரு குழுவுல இருக்குற ஒருத்தனுக்கும் எனக்கும்தான் பிரச்சனையாயிடுச்சு. அன்னிலேர்ந்து எனக்கு அவனுங்கள புடிக்காது. ஆனால் இன்னைக்கு அந்த முழு குழுவும் என் அண்ணன் ஒருவரின் நண்பர்கள் அப்டிங்கறது ஒரு ஒரு வருசத்துக்கு முன்னாடிதான் தெரிய வந்துச்சு.

என்ன கொடுமை "Sir" இதெல்லாம்..!

சரி... மீண்டும் எட்டாம் வகுப்பில் சந்திப்போம்...

புதன், 19 செப்டம்பர், 2012

அட போங்கப்பா..!

அட போங்கப்பா இன்னும் எத்தன பேருதான் இந்த மாதிரி சாக போறீங்க... உங்களுக்கு புரியலையா என்ன..!? இந்த அரசாங்கங்கள் எப்போதுமே ஏழைகளின் நடுத்தர வர்க்கத்தின் தேவைகளை எண்ணங்களை போராட்டங்களை புரிந்துகொள்ளாது. அதிலும் தமிழன் என்றால் மத்திய அரசாங்கம் இம்மியளவும் செவி சாய்க்காது.

இவ்வரசாங்கங்கள் நம் கோரிக்கைகளை கேட்பதற்கே நாம் பணக்கார வர்க்கத்தினராக, பெரிய பெரிய தொழிலதிபர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இப்போது நிலவுவதாகவே எனக்கு தோன்றுகிறது.

இராஜபக்சே நிச்சயம் வரத்தான் போகிறான், அவனுக்கு இந்த மத்திய அரசாங்கம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ப்பு அளிக்கத்தான் போகிறது. நம்மால் என்ன செய்ய முடியும். நாம் தமிழன் என்கிற ஒரு போர்வையில் பிரிவுகளின்றி சேரும் வரை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

நாம் பிரிந்து கிடக்கிறோம் நண்பர்களே, நம்மிடம் ஒற்றுமை இல்லை. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், இனத்தின் பெயரால், கட்சிகளின் பெயரால் நாம் பிரிந்து கிடக்கிறோம். நாம் ஒன்றிணைவதற்கு தலைவர்களை எதிர்பார்க்காதீர். அவர்கள் தங்களை முன்னிலைப் படுத்திக்கொள்ள ஒருசில பிரிவுகளை ஏற்ப்படுத்த முயற்ச்சிப்பர்.

இசுலாமிய நண்பர்களே என்னிடம் கோபித்துக்கொள்ள வேண்டாம். இசுலாமியர்களில் பாதிக்கு பாதி பேர் தங்களை தமிழினத்தை சேர்ந்தவர்கள் என்பதை ஏனோ ஏற்க மறுக்கிறார்கள். தாங்கள் தமிழர்கள், தங்களது இனம் தமிழினம், தங்களது மொழி தமிழ் மொழி என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதில்லை. 

சில ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர் என்னிடம் சொன்ன ஒரு விடயம். அவர் தமிழகத்தில் வசிக்கும் இசுலாமியர்களை இரு வகையாக பிரித்து சொன்னார். முதல் வகை. ஈரான் வழி வந்த இசுலாமியர்கள். இவர்களிடம் நாட்டுப்பற்றை விட, இனப் பற்றை விட, மொழிப்பற்றை விட மதப் பற்றுதான் மேலோங்கி இருக்கும். இரண்டாவது வகை, பாகிஸ்தான் வழி இசுலாமியர்கள். இவர்களிடம் இனப்பற்றும் நாட்டுப் பற்றும் மேலோங்கி இருக்கும். என சொன்னார். இது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது.

ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் தலைவர் மேதகு பிரபாகரனை, தன் நாடு, அயல் நாடு என எங்கும் வெடிகுண்டு வைத்து அப்பாவி பொது மக்களை கொன்ற ஒசாமா பின்லேடனோடு ஒப்பிட்ட போதுதான் மனசுக்கு உறுத்தலாக இருந்தது ஈரான் வழி இசுலாமியர்களை எண்ணி.

ஆண்டு 2010 வாக்கில் இணையத்தில் நான் படித்த ஒரு விடயம். இலங்கையில் ஊடகங்கள் ஒரு இசுலாமிய பெரியவரிடம் கேட்ட கேள்வியும் அதற்க்கான பதிலையும் இங்கே பகிர்கிறேன். 

கேள்வி : நீங்கள் ஒரு இசுலாமியரா இருந்துகொண்டு விடுதலை புலிகளை ஆதரிக்கிறீர்களே ஏன்?
பதில் : நான் இசுலாமியன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. என் மதம் இசுலாம்தான். நான் நினைத்தால் நாளை ஒரு கிறிஸ்துவனாகவோ ஒரு இந்துவாகவோ மாறி என் மதத்தை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், நான் தமிழன். என் இனம் தமிழினம். நான் இறந்தாலும் என் இனம் தமிழினம் என்பது மாறாது என்றார்.

எனக்கு மதம் தான் முக்கியம் என்று என்னும் அனைத்து மதத்தினரும் தெரிந்துகொள்ளுங்கள். நம் இனம் தமிழ் என்று. நாம் தமிழர்கள் என்று. என்னைப் பொருத்தமட்டில் தமிழனுக்கு மதம் என்ற ஒன்று கிடையாது. என் மதம்,மொழி, இனம் எல்லாமே தமிழ் தான்.

அதே மாதிரி வேற்று மொழி பேசும் தமிழர்கள்[பார்ப்பனர்கள் தவிர்த்து]. தமிழ்நாட்டிற்கு வந்து தலைமுறைகளை கடந்தாலும் தங்களின் தாய் மொழியை விட்டு கொடுக்காதவர்கள். ஆனாலும் உங்களுக்கான அடையாளம் தமிழ், தமிழர் என்பதுதான். தாய் தமிழகத்தை விட்டு நீங்கள் எங்கு சென்றாலும் தமிழராகத்தான் அடையாளம் காணப்படுவீர்கள். நீங்கள் தமிழராக மாறிவிட்டீர்கள் என்பதை மறக்க வேண்டாம். [அனைவரையும் சொல்வதாக என்ன வேண்டாம்].

தமிழராய் ஒன்றிணைய எண்ணம் வளர்ப்போம்...


குறிப்பு : நான் தவறுகள் செய்திருப்பின் என்னை திருத்த வேண்டுகிறேன்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

நமக்கு சூடு சொரணை இருக்கா..?

உலகின் முதல் மொழிக்கு சொந்தக்காரன்..
உலகின் முதல் முன்னேறிய நாகரிகத்திற்கு சொந்தக்காரன்..
உலகின் சிறந்த பண்பாட்டிற்கு சொந்தக்காரன்..
உலகத்திலேயே தன்மானத்தைப்பற்றி நான் அறிய அதிகமாக பேசுபவன்...

என, இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்களாகிய நமக்கு உண்மையிலேயே சூடு சொரணை இருக்கா..?

ஒருவேளை, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு மட்டும்தான் சூடு சொரணை இருக்குமோ..!!?

அனேகமா, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் தமிழ்நாட்டில் வாழும் நமக்கு சத்தியமா சூடு சொரணை கிடையாது..!!

கி.பி 2009 ல பக்கத்து நாட்டுல சண்டை நடந்துச்சு... நம்ம நாட்டுல இல்ல... அங்க யாரோ தமிழர்கள்ன்னு ஒரு இனம் இருக்காமே..!!??? அந்த இனத்துல இருக்கறவங்க நெறையா பேர அந்த நாட்டு சிங்கள இன ராணுவம் பச்ச குழந்தைகள்னு கூட பாக்காம சுட்டு கொன்னுச்சாம்.

அதுக்காக அந்த இனத்தை சேர்ந்த வெளிநாட்டுல வாழற மக்கள் பயங்கரமா போராட்டம்லாம் நடத்தினாங்களாம்... அந்த சிங்கள இன தலைவர் எந்த நாட்டுக்குப் போனாலும், அங்க இருக்குற அந்த இன மக்கள் அந்த நாட்டோட நல்லரசிடம் அனுமதி பெற்று பயங்கரமா போராட்டம் நடத்தி, நீதிமன்றத்துல வழக்கெல்லாம் போட்டு அந்த ஆள அந்த நாட்டுக்கெல்லாம் வர விடாம பன்னுனாங்களாம்.

அப்படியே, மீறி அந்த நாட்டுக்கு வந்தாலும், போராட்டத்தை வலுபடுத்தி அந்த ஆளு வந்த காரியத்தை நடத்த விடாம தொரத்தி அனுப்பிடுவாங்களாம்.

அந்தமாதிரிதான் ஒருதடவ, அந்த சிங்கள தலைவரு இங்கிலாந்து நாட்டுல இருக்குற இலண்டன் மாநகருக்கு போனாராம். அங்க என்னடானா பயங்கர போராட்டமாம். அவர் போய் இறங்குன விமான நிலையம் முழுக்க ஒரே போராட்டக்காரர்களாம். என்ன பண்றதுனே தெரியலாம் இங்கிலாந்து காவல்துறையினருக்கு, கடைசியா ஒரு வழியா அந்த விமான நிலையத்தோட பின் வாசல் வழியா யாருக்கும் தெரியாம பயங்கர பாதுகாப்போட கூட்டிட்டு போனாங்களாம். இதுவரைக்கும் அந்த நாட்டுல இப்புடி ஒரு சம்பவம் நடந்ததே இல்லையாம். எந்த தலைவரையும் இப்படி பின் வாசல் வழியா கூட்டிட்டு போனதே இல்லையாம்.

அதே சமயம் அவர் வந்த காரியத்தையும் நடத்த விடாம போராட்டக்காரர்கள் தொரத்தி அனுப்பிட்டாங்களாம்.

நம்ம பக்கத்து நாட்டுல சண்ட நடக்கும்போது சுத்தமாவே நம்ம நாட்டு ஊடகங்கள் கண்டுக்கவே இல்லையாம். ஏன்னா..! நம்ம நாட்டுல ஊரடங்கு உத்தரவு மாதிரி ஏதோ ஒரு சட்டம் போட்டு அங்க நடக்குற சண்டைய இங்க காட்ட கூடாது எழுத கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம். ஆனா ஏதோ ஒரு தொலைகாட்சி மட்டும் நீதிமன்றத்தோட அனுமதி பெற்று அங்க நடக்குற கொடுமைகளை நம்ம நாட்டுல ஒளிபரப்பு பண்ணினாங்களாம். அதையும் நம்ம நாட்டு காவல்துறை மிரட்டி தடை பண்ணிடாங்கனு கேள்விப்பட்டன்.
அதே மாதிரி அந்த தலைவரு திருப்பி அனுப்பப்பட்டத நம்ம ஊருல ஒரு வார பத்திரிகை " போர்க் குற்றவாளிகள் இராஜ மரியாதையுடன் வந்து செல்ல இலண்டன் என்ன தமிழ்நாடா " னு தலைப்பு போட்டு கிண்டலடிச்சாங்களாம்.

இப்படி எந்த நாட்டுக்கும் ஒழுங்கா போக முடியாத அந்த தலைவரு, ஒரு இடத்துக்கு மட்டும் ராஜ மரியாதையோட போயிட்டு வருவாராம். அது எந்த இடம்னா, உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்திய துணைக் கண்டம். இப்ப கூட அந்த தலைவரு அந்த துணைகண்டத்துல இருக்குற ஒரு நாட்டுல பௌத்த கல்வி மையம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்ட வரப்போறாராம். அத நம்ம நாட்டுல யாரோ ரெண்டு பேரு தனித்தனியா கூட்டத்தை கூட்டி எதிர்க்கப் போறதாவும் போராட்டம் நடத்த போறதாவும் கேள்விப்பட்டன். உள்ளூரு அரசியலுக்கு நான் ஒரு ஆள நம்பிகிட்டு இருக்கன். நெறைய திட்டம்லாம் வச்சிருக்காருபா.. அவரு ஏதாவது சொல்லுவாரானு பாக்கறான், ஏதும் சேதி கெடைக்கல. அப்பறம் அந்த இனத்துக்கு தலைவருன்னு நம்ம நாட்டுல ஒருத்தரு சொல்லிக்கிட்டு இருப்பாராமில்ல. அவரு அந்த சிங்கள தலைவரு வர்றதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிராராமா..,  ஆனா போராட்டம்லாம் நடத்த மாட்டாராம்.

இதுல எனக்கு என்னன்னா, நம்ம நாடும் அந்த துணைக்கண்டத்தை சேர்ந்தது-னு  சொல்றாங்கப்பா... நான் கெடையவே கெடையாதுன்னு சொல்லிட்டன். அட அத கூட ஏத்துக்கலாம்பா.. நாமளும் அந்த இனம் தான் அப்டின்னு சொல்றாங்க..
நான் செம கடுப்பாயிட்டான். நீங்களே சொல்லுங்க இத நான் எப்புடி ஒத்துக்கறது. அவங்களாம் போராட்டம் பண்றாங்க, அந்த தலைவர எதிர்க்கறாங்க. அவங்களுக்கு சொந்தமில்லாத நாட்டுக்குள்ளேயே நுழையவிடாம தடுக்கறாங்க.

நாமளும் அவங்களும் ஒரே இனமா இருந்திருந்தா, அந்த தலைவரு இலண்டன் போறதுக்கு கொஞ்ச நாளுக்கு முன்னாடி நம்ம பக்கத்துல இருக்குற ஆந்திரா நாட்டோட திருப்பதி கோவிலுக்கு வந்துட்டு போனமாதிரிலாம் கேள்விப்பட்டன்.
அதுவுமில்லாம அந்த சிங்கள நாட்டு ராணுவத்துக்கு நம்ம நாட்டுல வச்சி பயிற்ச்சிலாம் குடுத்தாங்களாம். இதெல்லாம் நடந்திருக்குமா..!!?

அதனால நான் என்ன சொல்றேன்னா, நாமளும் அவங்களும் ஒரே இனம் கிடையாது. அதுமட்டுமில்லாம அவங்களுக்கு சூடு, சொரணை, மானம், ஈனம், தன்மானம் அப்டின்னு நெறையவே இருக்கு நமெக்கெல்லாம் அது கெடையாது.
நாமளும் அவங்க இனம்னா நமக்கும் சூடு சொரணை இருக்கனுமில்ல..!!?

சரி நான் சொல்றத விடுங்க, நீங்களே சொல்லுங்க... நமக்கு சூடு சொரணை இருக்கா...!!!?????