புதன், 23 ஜூலை, 2014

மது..! நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு.

எத்தனை எத்தனை
இழப்புகள் இந்த
இழவெடுத்த மதுவால்..!

அறிவாயா நீ..!?
அறிவை மது
அழிப்பது எப்படி என..!
அறிந்துகொள் இப்போதே.!

குடலின் வழியே
குருதியில் கலந்து
தலையில் அமர்ந்து
தகிடுதத்தம் செய்கிறது.

அது நேர் எதிர் என
அத்தனை சுரப்பிகளையும்
அவிழ்த்து விட்டு
ஆட்டம் போடுகிறது.

பதட்டம் பரபரப்பு என 
பலவற்றை தந்து மன
பலத்தை குறைக்கிறது..!

மன அமைதியை
மசிக்கிறது
மெய்யில் இரசாயன
மாற்றத்தால்.

அத்தனை கோளாறுகளும்
ஒற்றை மதுவால்
உன்னுள்..!
யோசி மனிதா
இனியும் இது தேவையா..!?

ஒவ்வொன்றாய்
உன் உறுப்புகள் 
உருக்குலையும்...
இன்றே விட்டுவிடு 
இந்த மதுவை.

உச்சந்தலையின்
உள்ளிருக்கும் மூளை தொடங்கி
உள்ளங்காலில் இழுத்துப்பிடிக்கும்
உன் நரம்புகள் வரை
அத்தனையும் ஆட்டம் காணும்..!

கண்பார்வை மங்கி
காதும் கெட்டு
தொண்டை துவண்டு
மூச்சயர்ந்து போவாய்..!

நுரையீரல் நொருங்கி
சிறுநீரகம் சிதைந்து
பிறப்புறுப்பு பாதித்து
பின் இல்லாமல்
போகும் உனக்கு சந்ததியே..!

குருதி கெட்டு
கொதிப்பு ஏறி
தசைகள் தளர்ந்து
இறுதியாய் இதயமும்
வீங்கி வெடிக்கும்..!

இரைப்பை அறுத்து
குடல் மண்டலம் குலைத்து
சர்க்கரை ஏற்றி
கல்லீரல், மண்ணீரல்,
பித்தப்பை பெருத்து,
வயிறு, கால்,முகம்
வீங்கி வடிவிழந்து
இறுதியாய் இறக்க நேரிடும்..!

இதுவரை சொன்னவைகள்
உன் உள் நிகழ்பவை
சொல்லவா.!? உன்னால்
வெளியே நடக்கும்
வேதனை நிகழ்வுகளை..!?

சாலையோரம் குப்பையோடு
கூலமாய் சரக்கடித்து
சாய்ந்து கிடக்கும் உன்னை
கேவலமாய் பார்க்கும்
எளியோர் எண்ணிக்கை
அதிகம் இங்கே..!

குலைந்துபோயிருக்கும் குடும்பம்,
குடித்தழிப்பாய் நீ..!
கொஞ்சமும் அக்கறை இருக்காது,
கொடும் கோபம் கொள்வாய்..!
மயக்கம் தெளிந்தாலும் மறுத்திடுவாய்
மதுவின் கொடூரம் அறிய..!

சமூக சீர்கேட்டுக்கு
சரிபாதி காரணம்
மதுவில் மயங்கிய
மனிதர்கள்தானாம்..!
ஏடுகள் எடுத்துரைக்கின்றன..!

சாலை விபத்துகள்
சன்னமாய் நடப்பதற்க்கு
மது குடித்து மதி இழந்த
மனிதர்கள்தான் காரணமாம்.!

அனாதையாய் குழந்தையொன்று
அழுதுகொண்டிருக்கிறது!
மது அருந்தி தகப்பன்
மாண்டதை எண்ணி..!
அடுத்து அங்கே உன் குழந்தைதான்..!
தெளிந்து உணர்..!

பாலியல் 'தீ'
பற்றி எரிகிறது
மது அரக்கனின்
மடி சேர்ந்த மடையர்களால்..!
உணர்ந்து நிமிர்..!
அதில் உன் குழந்தையும் அடங்கும் என்று..!

திங்கள், 16 ஜூன், 2014

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி : தேக்வாண்டோ




NLC  கல்வித் துறை 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவிகளுக்கும் தற்காப்பு கலையை கட்டாயமாக்கி சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு கடந்த 6 மாதங்களாக பயிற்சி அளித்து வருகிறது.

இப்பயிற்சி தொடர்பாக ஒலிம்பியன் தேக்வாண்டோ கூட்டமைப்பின் தலைவரும், தற்காப்புக் கலை பயிற்சியாளருமான திரு.கே.வாசுதேவன் அவர்கள் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு :

புதுடெல்லி மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட துயரத்திற்குப் பின் என்எல்சி நிர்வாகம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசித்து அதை சேவையாக செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. இதையடுத்து நெய்வேலியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தனித் தனி நேரம் ஒதுக்கி மாதம் ஒருமுறை பயிற்சி அளிக்கிறோம்.

இப்பயிற்சியில் பல மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் என்ன தான் சட்டங்கள் இயற்றி குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் குற்றம் குறைந்தபாடில்லை.

எனவே தற்போதுள்ள சூழலில் தனிமையில் இருக்கும் ஒரு பெண், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களிடம் சிக்கிக் கொண்டால் அதிலிருந்து விடுபடுவது இயலாத காரியம். எனவே பெண்கள் முதற்கட்டமாக ஆண் பிடியிலிருந்து வெளியேற வேண்டுமானால் தற்காப்புக் கலைகள் ஓரளவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் ஆபத்திலிருந்து விடுபட முடியும். அந்த நோக்கில் தான் தற்காப்பு கலை பயிற்சியை வழங்கி வருகிறோம். நெய்வேலி மட்டுமல்ல நெய்வேலியைச் சுற்றியுள்ள பெண்கள் பயிலும் பள்ளிகளிலும் தற்காப்புக் கலை பயிற்சி வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.

இன்றைய இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி :


மாஸ்டர் திரு.R.இரவிக்குமார் அவர்களுடன் செயல் விளக்கத்தின் போது :
 


இது தொடர்பான பத்திரிக்கை செய்தி : அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள்: மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி

   நன்றி :  
      1.   ‘The Hindu’ (தமிழ் நாளிதழ்)

சனி, 5 ஏப்ரல், 2014

மறைந்துபோன சுவடுகள் : கீழூர் பாளையக்காரர்களின் காவல் மற்றும் ஏவல் பணியாளர்கள்


கீழூர் ஜமீனைப் பற்றியும், அப்பாளையக்காரர்களைப் பற்றியும் ஏற்கனவே சிறிதளவு நாம் கண்டுள்ளோம். இந்த பதிவில் அவர்களுடைய படை பரிவாளங்களைப்பற்றி காணலாம்.

காவலர்களும், ஏவலர்களும் :
கீழுர் பாளையக்காரர்களின் காவலர்களையும், ஏவலர்களையும் அருகருகே உள்ள கிராமங்களில் குடியமர்த்தினர். அத்தகைய கிராமங்களையும் கீழூர் பாளையக்காரர்களுக்கு அம்மக்கள் என்னவாக இருந்துள்ளனர் என்பதையும் கிராமம் வாரியாக காணலாம்.

பாச்சாரபாளையம் :
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கலவரம் நடந்ததே அதே கிராமம்தான். கீழூர் பாளையக்காரர்கள் தங்களின் வீரம்மிக்க போர்படையை குடியமர்த்திய இடம். பாச்சாரபாளைய கிராமமக்கள் அனைவரும் கீழூர் பாளையக்காரர்களின் போர்படை வம்சத்தினர். நான் கேள்விப்பட்டவரை கீழூர் பாளையக்காரர்களின் படை மூர்கத்தனமான எதற்கும் அஞ்சாத படையாக இருந்துள்ளது.

பாச்சாரபாளையம் காலனி :
கீழூர் பாளையக்காரர்களின் போர்க்குதிரைகளை பராமரிக்கும் பணியாளர்களை குடியமர்த்திய இடம். கீழூர் பாளையக்காரர்களின் குதிரைகள் எப்போதும் நல்ல நலத்துடன் வலிமையானவைகளாக இருக்கும். குதிரைகள் கீழூர் பாளையக்காரர்களின் கௌரவத்திற்கு அங்கமாக விளங்கியுள்ளது. அவர்கள் குதிரைகள் மீது எப்போதும் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர்.

கீழூர் – இருளன் தோட்டம் :
இருளர்கள் : கீழூர் பாளையக்காரர்களின் பல்லக்கு தூக்கிகள். கீழூர் அரசரின் அரண்மனையை ஒட்டி கிழக்கில் இவர்கள் குடியமர்த்தப்பட்டனர். தற்போது இருளர் சமூகத்தவர் எவரும் கீழூரில் இல்லை. மேலும் இருளன் தோட்டம் என்றால் பெரும்பாலும் எவருக்கும் தெரியாது.
தற்போதைய ஜமீன்தாரின் தம்பிகளும் பாளைய வம்சத்தவர்களும் இவ்விருளன் தோட்ட பகுதியிலும் அதற்கு கிழக்கிலும் வசித்து வருகிறார்கள்.

கீழூர் – துலுக்கன் தெரு :
துலுக்கர்கள் அதாவது இசுலாமியர்கள். இவர்கள் வட நாட்டிலிருந்து இம்மன்னர்கள் மீது அன்புகொண்டு இவர்களுடன் வந்தவர்கள். அரசாங்க கணக்கு வழக்குகளை கவனித்துகொள்வதற்க்காக நியமிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு உள்ள ஒரு சிறப்பு பாளையக்காரர்களின் திருமண ஊர்வலத்தின்போது அனைவருக்கும் முன்பாக தவாலி அணிந்துகொண்டு முன்செல்வர். அவரை தொடர்ந்தே பிறர் செல்வர். இவர்கள் அரண்மனையை ஒட்டி மேற்கில் குடியமர்த்தப்பட்டனர். தற்போது கீழூரில் ஒரே ஒரு இசுலாமியர் குடும்பத்தினர் மட்டுமே இருக்கிறார்கள். இவர்கள் அரண்மனை சேவகம் செய்து வந்தவர்களின் வாரிசா என உறுதி செய்யப்பட வேண்டும்.

கீழூர் – மேற்கு தெரு :
இவர்கள் அரண்மனையில் என்ன விதமான பணிகளை செய்து வந்தனர் என்பது சரிவர தெரியவில்லை. இருப்பினும் இவர்கள் அரண்மனையில் உள்ள அனைவரிடத்திலும் நினைத்த நேரத்தில் எளிதில் பேச முடியும் என்ற நிலையில் இருந்திருக்கிறார்கள். தற்போது தங்களை “நயினார்” என்று அழைத்துகொள்ளும் இவர்களது முன்னோர் கீழூர் பாளையக்காரர்களால் “பூக்கட்டி பண்டாரத்தார்” என்றே அறியப்பட்டுள்ளனர்.

கீழூர் காலனி :
இவர்கள் கீழூர் பாளையக்காரர்களின் அரண்மனையின் தெற்கு புறத்தை காவல்காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்திருக்கிறார்கள். இரவு நேரங்களில் பறை இசைத்து வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்து வந்திருக்கின்றனர்.

கோவில் குப்பம் :
வண்ணார், வாணியர், மருத்துவர்(முடி திருத்துவோர்) போன்ற தொழிலாளர்களை அருகிலுள்ள கோவில்குப்பம் கிராமத்தில் குடியமர்த்தி அரண்மனைக்கு பணிபுரிந்து வர பணித்திருக்கின்றனர்.

விழப்பள்ளம் :
இது தற்போதைய குறிஞ்சிப்பாடி நகரின் வடக்கு எல்லையில் அமைந்துள்ளது. அரண்மனையின் பண்ணை வேலைகளை செய்வோரை விழப்பள்ளத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

பிள்ளை பாளையம் :

கீழூரையொட்டியுள்ள வேகாக்கொல்லை கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது இப்பிள்ளைபாளையம் கிராமம். பிள்ளை பாளையம் பகுதியானது தனது அமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டி அரசரால் தானமாக வழங்கப்பட்ட கிராமம். அமைச்சர் பிள்ளை சாதியை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதிக்கு பிள்ளைபாளையம் என பெயர்சூட்டி வழங்கியிருக்கிறார்.

திங்கள், 10 மார்ச், 2014

அரசியல் கூட்டனி - கோழி முட்டைகளும் சில காடை முட்டைகளும்




பா.ம.க இடம்பெற்றிருக்கும் கூட்டனியில் உள்ள அரசியல் கட்சிகளை முட்டைகளுடன் உருவகப்படுத்தி விமர்சித்து எழுதியிருப்பதுதான் இந்த பதிவு. 

அவை :
1.       நாட்டுகோழி முட்டை
2.       ‘பிராய்லர்’ கோழி முட்டை (மலட்டு முட்டை)
3.       ‘பிராய்லர்’/வாத்து முட்டை
4.       மாந்தரீக முட்டை
5.       காடை முட்டைகள்.

இந்த பெயர்களை பார்த்ததுமே கிட்டதட்ட எந்தெந்த கட்சி எந்தெந்த முட்டைனு தெரிஞ்சிருக்கும். சரி இனிமே முட்டைகளைப் பற்றி பார்ப்போம்.

நாட்டுக்கோழி முட்டை :

      நாட்டுக்கோழி முட்டை எவ்வளவு நல்லதுனு நாம எல்லோருக்கும் தெரியும். அளவுல சின்னதாகவும், வண்ணம் வெண்மையாக இல்லாமல் சற்று மங்கலானதாகவும் இருக்கும். இதை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். பச்சையாக அப்படியே உடைத்து குடிக்கலாம், அடுப்பில் வைத்து கறுக்கி சாப்பிடலாம், ‘ஆம்லேட்’,’ஆஃப் பாயில்’ என பல வகைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், முட்டையை அவையம் வைத்து குஞ்சு பொறிக்க செய்து பல மடங்காக பெருக்கலாம். வளர்ந்து வரும் நாகரிக மாற்றத்தால் நகர் புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பது வெகுவாக குறைந்துள்ளது. கிராமங்களில் மட்டுமே நாட்டுக்கோழி வீட்டுக்குவீடு இருக்கிறது.

மேலும் எனக்கு நாட்டுக்கோழி முட்டை ரொம்ப பிடிக்கும். இந்த நாட்டுக்கோழி முட்டை கூட்டனியில் யாருனா..!? பாட்டாளி மக்கள் கட்சி.

‘பிராய்லர்’ கோழி முட்டை (மலட்டு முட்டை) :

      பிராய்லர் கோழி முட்டையைப் பற்றி உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாம இன்னைக்கு கடைகளில் வாங்குற முட்டையெல்லாம் ‘பிராய்லர்’ கோழி முட்டைதான். அளவில் பெரியதாக வெள்ளையாக இருக்கும். இதை பச்சையாக அப்படியே உடைத்து குடிக்க முடியாது. ‘ஆம்லேட்’,’ஆஃப் பாயில்’ என பயன்படுத்த முடியும்.

மேலும், இது மலட்டு முட்டை என்பதால் இதை அவையம் வைத்து குஞ்சு பொறிக்க வைக்க முடியாது. இக்கூட்டனியில் இது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்.

‘பிராய்லர்’/வாத்து முட்டை :

      இது ‘பிராய்லர்’ முட்டையா இல்ல வாத்து முட்டையானு எனக்கு ஒரு சந்தேகம். அனேகமா இது வாத்து முட்டையாதான் இருக்கும். வாத்து, முட்டையை தண்ணிரில்தான் இடுமாமே..!! எப்போதோ கேள்விப்பட்ட ஞாபகம்.

மேலும், இது இன்னொரு சந்தேகம் வேறு இருக்கிறது. இது நல்ல முட்டையா அல்லது கூழை முட்டையா என்று. அதுக்கு ஒரு வழி இருக்கு. முட்டையை தண்னீரில் போட்டு பார்த்தால் தெரிந்துவிடும். தண்ணியில் போட்டவுடன் முட்டை மூழ்கிவிட்டால் அது நல்ல முட்டை. மாறாக, தண்ணீரில் அது மிதந்தால் அது கூழை முட்டை. அதை நாம் எதற்கும் பயன்படுத்த முடியாது. தூக்கிதான் எறிய வேண்டும்.

      கூட்டனியில் இம்முட்டை, தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

மாந்தரீக முட்டை :

      இது ஒரு மந்திர முட்டை. உண்மையில் இது முட்டையே கிடையாது வெறும் முட்டை ஓடு மட்டும்தான். அது என்ன மாந்தரீக முட்டை..!!? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா..!!? இதோ அதற்கான விடை :

      உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கலாம். சிறு வயதில் ஏதாவது பொருள் திருடுபோய்விட்டால் முட்டை மந்திரம் வைத்து கண்டுபிடித்துவிடுவார்கள் என்று. அது எப்படியென்று தெரியுமா..!!? இதோ :

      இவர்களுக்கு தேவையானது ஒரு முட்டை. அதுஎந்த முட்டையாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏன்..! அழுகிய முட்டையாக கூட இருக்கலாம்..! முட்டையின் கூர்மையான பகுதியில் ‘Injection ஊசியால் நுண்ணிய துளையிட்டு உள்ளிருக்கும் கருவை வெளியெடுத்துவிடுவார்கள். அதற்கு பின்னர் சுத்தமான எளிதில் ஆவியாகக்கூடிய சாராயத்தை அத்துளையின் வழியாக உட்செலுத்தி முட்டையை நிரப்புவார்கள். ஒபின் துளையிட்ட பகுதியை மெழுகால் பூசி அடைத்துவிடுவார்கள்.

      பெரும்பாலும் நல்ல வெயிலில், பொருள் களவாடப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களின் பார்வையில் சுடுமணலில் வைத்துதான் இந்த முட்டை மந்திர பூஜை நடைபெறும். ஒரு குறிப்பிட்ட அளவு முட்டை சூடானதும் உள்ளிருக்கும் சாராயம் ஆவியாகும். இதனால், முட்டை மேலெழும்ப தயாராகும். இது பார்ப்போரை அச்சப்பட வைக்கும். முட்டை மேலெழுந்துவிடாமல் தடுத்து எச்சரிக்கை விடுப்பார்கள். பொருளை எடுத்தவர்கள் யாராயினும் உடனே கொண்டுவந்து கொடுத்துவிடுங்கள். இல்லையேல், உங்களின் கை கால் இழுத்துவிடும் என பயமுறுத்துவார்கள்.

      பயந்தவன் கொடுத்துவிடுவான், தெரிந்தவன்  அமைதி காப்பான். ஏனெனில் தெரிந்தவன் சொன்னாலும் அவனது வாய்ச்சொற்க்கள் எடுபடாது. அதன்பிறகு முட்டை எந்த பக்கமாக பறந்து விழுகிறது என பார்த்து சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பேசி சமாளிப்பார்கள்.

இப்படிதான் முட்டை மந்திரம் நடக்கும். இதை எனக்கு சிறுவயதில் என் பள்ளி ஆசிரியர் சொன்னது. கூட்டனியில் பாரதிய ஜனதா கட்சிதான் இந்த மாந்தரீக முட்டை.

காடை முட்டைகள் :

காடை முட்டை அளவில் மிகச் சிறியதாக இருக்கும். வேக வைத்து சாபிடலாம். அவ்வளவுதான். இவர்கள் கூட்டனியில் இருக்கும் மற்ற சிறிய கட்சிகள்.
 
                                    X

அவ்ளோதாங்க விமர்சனம் முடிஞ்சிடிச்சு. இதுக்குமேல இப்போதைக்கு யோசிக்க முடியல.. அதுவுமில்லாம  எனக்கு நேரமில்லை..

குறிப்பு : கூட்டனி இன்னும் உறுதியாகவில்லையாம். எப்பொழுது வேண்டுமானாலும் பா.ம.க வெளியேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதாம்.



நன்றி : 'கூகிள்' (படம்).