சனி, 5 ஏப்ரல், 2014

மறைந்துபோன சுவடுகள் : கீழூர் பாளையக்காரர்களின் காவல் மற்றும் ஏவல் பணியாளர்கள்


கீழூர் ஜமீனைப் பற்றியும், அப்பாளையக்காரர்களைப் பற்றியும் ஏற்கனவே சிறிதளவு நாம் கண்டுள்ளோம். இந்த பதிவில் அவர்களுடைய படை பரிவாளங்களைப்பற்றி காணலாம்.

காவலர்களும், ஏவலர்களும் :
கீழுர் பாளையக்காரர்களின் காவலர்களையும், ஏவலர்களையும் அருகருகே உள்ள கிராமங்களில் குடியமர்த்தினர். அத்தகைய கிராமங்களையும் கீழூர் பாளையக்காரர்களுக்கு அம்மக்கள் என்னவாக இருந்துள்ளனர் என்பதையும் கிராமம் வாரியாக காணலாம்.

பாச்சாரபாளையம் :
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கலவரம் நடந்ததே அதே கிராமம்தான். கீழூர் பாளையக்காரர்கள் தங்களின் வீரம்மிக்க போர்படையை குடியமர்த்திய இடம். பாச்சாரபாளைய கிராமமக்கள் அனைவரும் கீழூர் பாளையக்காரர்களின் போர்படை வம்சத்தினர். நான் கேள்விப்பட்டவரை கீழூர் பாளையக்காரர்களின் படை மூர்கத்தனமான எதற்கும் அஞ்சாத படையாக இருந்துள்ளது.

பாச்சாரபாளையம் காலனி :
கீழூர் பாளையக்காரர்களின் போர்க்குதிரைகளை பராமரிக்கும் பணியாளர்களை குடியமர்த்திய இடம். கீழூர் பாளையக்காரர்களின் குதிரைகள் எப்போதும் நல்ல நலத்துடன் வலிமையானவைகளாக இருக்கும். குதிரைகள் கீழூர் பாளையக்காரர்களின் கௌரவத்திற்கு அங்கமாக விளங்கியுள்ளது. அவர்கள் குதிரைகள் மீது எப்போதும் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர்.

கீழூர் – இருளன் தோட்டம் :
இருளர்கள் : கீழூர் பாளையக்காரர்களின் பல்லக்கு தூக்கிகள். கீழூர் அரசரின் அரண்மனையை ஒட்டி கிழக்கில் இவர்கள் குடியமர்த்தப்பட்டனர். தற்போது இருளர் சமூகத்தவர் எவரும் கீழூரில் இல்லை. மேலும் இருளன் தோட்டம் என்றால் பெரும்பாலும் எவருக்கும் தெரியாது.
தற்போதைய ஜமீன்தாரின் தம்பிகளும் பாளைய வம்சத்தவர்களும் இவ்விருளன் தோட்ட பகுதியிலும் அதற்கு கிழக்கிலும் வசித்து வருகிறார்கள்.

கீழூர் – துலுக்கன் தெரு :
துலுக்கர்கள் அதாவது இசுலாமியர்கள். இவர்கள் வட நாட்டிலிருந்து இம்மன்னர்கள் மீது அன்புகொண்டு இவர்களுடன் வந்தவர்கள். அரசாங்க கணக்கு வழக்குகளை கவனித்துகொள்வதற்க்காக நியமிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு உள்ள ஒரு சிறப்பு பாளையக்காரர்களின் திருமண ஊர்வலத்தின்போது அனைவருக்கும் முன்பாக தவாலி அணிந்துகொண்டு முன்செல்வர். அவரை தொடர்ந்தே பிறர் செல்வர். இவர்கள் அரண்மனையை ஒட்டி மேற்கில் குடியமர்த்தப்பட்டனர். தற்போது கீழூரில் ஒரே ஒரு இசுலாமியர் குடும்பத்தினர் மட்டுமே இருக்கிறார்கள். இவர்கள் அரண்மனை சேவகம் செய்து வந்தவர்களின் வாரிசா என உறுதி செய்யப்பட வேண்டும்.

கீழூர் – மேற்கு தெரு :
இவர்கள் அரண்மனையில் என்ன விதமான பணிகளை செய்து வந்தனர் என்பது சரிவர தெரியவில்லை. இருப்பினும் இவர்கள் அரண்மனையில் உள்ள அனைவரிடத்திலும் நினைத்த நேரத்தில் எளிதில் பேச முடியும் என்ற நிலையில் இருந்திருக்கிறார்கள். தற்போது தங்களை “நயினார்” என்று அழைத்துகொள்ளும் இவர்களது முன்னோர் கீழூர் பாளையக்காரர்களால் “பூக்கட்டி பண்டாரத்தார்” என்றே அறியப்பட்டுள்ளனர்.

கீழூர் காலனி :
இவர்கள் கீழூர் பாளையக்காரர்களின் அரண்மனையின் தெற்கு புறத்தை காவல்காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்திருக்கிறார்கள். இரவு நேரங்களில் பறை இசைத்து வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்து வந்திருக்கின்றனர்.

கோவில் குப்பம் :
வண்ணார், வாணியர், மருத்துவர்(முடி திருத்துவோர்) போன்ற தொழிலாளர்களை அருகிலுள்ள கோவில்குப்பம் கிராமத்தில் குடியமர்த்தி அரண்மனைக்கு பணிபுரிந்து வர பணித்திருக்கின்றனர்.

விழப்பள்ளம் :
இது தற்போதைய குறிஞ்சிப்பாடி நகரின் வடக்கு எல்லையில் அமைந்துள்ளது. அரண்மனையின் பண்ணை வேலைகளை செய்வோரை விழப்பள்ளத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

பிள்ளை பாளையம் :

கீழூரையொட்டியுள்ள வேகாக்கொல்லை கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது இப்பிள்ளைபாளையம் கிராமம். பிள்ளை பாளையம் பகுதியானது தனது அமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டி அரசரால் தானமாக வழங்கப்பட்ட கிராமம். அமைச்சர் பிள்ளை சாதியை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதிக்கு பிள்ளைபாளையம் என பெயர்சூட்டி வழங்கியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக