புதன், 23 ஜூலை, 2014

மது..! நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு.

எத்தனை எத்தனை
இழப்புகள் இந்த
இழவெடுத்த மதுவால்..!

அறிவாயா நீ..!?
அறிவை மது
அழிப்பது எப்படி என..!
அறிந்துகொள் இப்போதே.!

குடலின் வழியே
குருதியில் கலந்து
தலையில் அமர்ந்து
தகிடுதத்தம் செய்கிறது.

அது நேர் எதிர் என
அத்தனை சுரப்பிகளையும்
அவிழ்த்து விட்டு
ஆட்டம் போடுகிறது.

பதட்டம் பரபரப்பு என 
பலவற்றை தந்து மன
பலத்தை குறைக்கிறது..!

மன அமைதியை
மசிக்கிறது
மெய்யில் இரசாயன
மாற்றத்தால்.

அத்தனை கோளாறுகளும்
ஒற்றை மதுவால்
உன்னுள்..!
யோசி மனிதா
இனியும் இது தேவையா..!?

ஒவ்வொன்றாய்
உன் உறுப்புகள் 
உருக்குலையும்...
இன்றே விட்டுவிடு 
இந்த மதுவை.

உச்சந்தலையின்
உள்ளிருக்கும் மூளை தொடங்கி
உள்ளங்காலில் இழுத்துப்பிடிக்கும்
உன் நரம்புகள் வரை
அத்தனையும் ஆட்டம் காணும்..!

கண்பார்வை மங்கி
காதும் கெட்டு
தொண்டை துவண்டு
மூச்சயர்ந்து போவாய்..!

நுரையீரல் நொருங்கி
சிறுநீரகம் சிதைந்து
பிறப்புறுப்பு பாதித்து
பின் இல்லாமல்
போகும் உனக்கு சந்ததியே..!

குருதி கெட்டு
கொதிப்பு ஏறி
தசைகள் தளர்ந்து
இறுதியாய் இதயமும்
வீங்கி வெடிக்கும்..!

இரைப்பை அறுத்து
குடல் மண்டலம் குலைத்து
சர்க்கரை ஏற்றி
கல்லீரல், மண்ணீரல்,
பித்தப்பை பெருத்து,
வயிறு, கால்,முகம்
வீங்கி வடிவிழந்து
இறுதியாய் இறக்க நேரிடும்..!

இதுவரை சொன்னவைகள்
உன் உள் நிகழ்பவை
சொல்லவா.!? உன்னால்
வெளியே நடக்கும்
வேதனை நிகழ்வுகளை..!?

சாலையோரம் குப்பையோடு
கூலமாய் சரக்கடித்து
சாய்ந்து கிடக்கும் உன்னை
கேவலமாய் பார்க்கும்
எளியோர் எண்ணிக்கை
அதிகம் இங்கே..!

குலைந்துபோயிருக்கும் குடும்பம்,
குடித்தழிப்பாய் நீ..!
கொஞ்சமும் அக்கறை இருக்காது,
கொடும் கோபம் கொள்வாய்..!
மயக்கம் தெளிந்தாலும் மறுத்திடுவாய்
மதுவின் கொடூரம் அறிய..!

சமூக சீர்கேட்டுக்கு
சரிபாதி காரணம்
மதுவில் மயங்கிய
மனிதர்கள்தானாம்..!
ஏடுகள் எடுத்துரைக்கின்றன..!

சாலை விபத்துகள்
சன்னமாய் நடப்பதற்க்கு
மது குடித்து மதி இழந்த
மனிதர்கள்தான் காரணமாம்.!

அனாதையாய் குழந்தையொன்று
அழுதுகொண்டிருக்கிறது!
மது அருந்தி தகப்பன்
மாண்டதை எண்ணி..!
அடுத்து அங்கே உன் குழந்தைதான்..!
தெளிந்து உணர்..!

பாலியல் 'தீ'
பற்றி எரிகிறது
மது அரக்கனின்
மடி சேர்ந்த மடையர்களால்..!
உணர்ந்து நிமிர்..!
அதில் உன் குழந்தையும் அடங்கும் என்று..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக