புதன், 3 ஜூலை, 2013

வண்ண இடைவார் தர தேர்வு - தேக்வாண்டோ - நெய்வேலி

சில நாட்களுக்கு முன்பு கருப்பு இடைவார் தர தேர்வு-தேக்வாண்டோ எனும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன் அல்லவா..!!? கிட்ட தட்ட அதன் தொடர்ச்சிதான் இந்த பதிவு. கடந்த 29-06-2013 அன்று நமது ஒலிம்பியன் தேக்வாண்டோ கூட்டமைப்பு,நெய்வேலி-ன் மாணவர்களுக்கான வண்ண இடைவார் தர தேர்வு(Color Belt Grading) நடந்தது. இத்தேர்வானது ஒலிம்பியன் தேக்வாண்டோ கூட்டமைப்பு, நெய்வேலி-ன் செயலாளர் மாஸ்டர் திரு.K.வாசுதேவன் மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் மாஸ்டர். திரு.R.இரவிக்குமார் ஆகியோர் நேர்நிலையில் தமிழ் நாடு தேக்வாண்டோ அகாடமியின் தலைவர் மாஸ்டர் திரு.K.பாபு Vth Dan Black Belt அவர்களால் நடத்தப்பட்டது. இனி தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் புகைப்படங்களை காணலாம். 

அதற்கு முன்பாக, தேக்வாண்டோவின் வண்ண இடைவார்களை பற்றி சுருக்கமாக காணலாம்.

        1.        வெள்ளை இடைவார் (White Belt)
        2.        மஞ்சள் பட்டை இடைவார் (Yellow Stripe)
        3.        மஞ்சள் இடைவார் (Yellow Belt)
        4.        பச்சை பட்டை இடைவார் (Green Stripe)
        5.        பச்சை இடைவார் (Green)
        6.        நீல பட்டை இடைவார் (Blue Stripe)
        7.        நீல இடைவார் (Blue Belt)
        8.        சிவப்பு பட்டை இடைவார் (Red Stripe)
        9.        சிவப்பு இடைவார் (Red Belt)

இதற்கு அடுத்தபடியாக கருப்பு இடைவார். கருப்பு இடைவாரினை அவ்வளவு எளிதில் தேக்வாண்டோவில் அடைந்துவிட முடியாது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை தேவைப்படும். இக்கருப்பு இடைவாரில் I DAN, II DAN, III DAN, IV DAN, V DAN, VI DAN என ஆறு இடைவார் நிலைகள் உள்ளன. இவற்றைப்பற்றி சந்தர்ப்பம் வாய்த்தால் வேறொரு பதிவில் விரிவாக காணலாம்.

[மாஸ்டர்.திரு.R.இரவிக்குமார்]

        1.        வெள்ளை இடைவார் :
அனைத்து தற்க்காப்பு கலைகளிலும் முதல் நிலையில் இருப்பது இந்த வெள்ளை இடைவார் தான். வெள்ளை காகிதமாக இருக்கும் நாம் கற்க ஆரம்பிக்கும் நிலைதான் இந்த வெள்ளை இடைவார்.

        2.        மஞ்சள் பட்டை இடைவார் :
வெள்ளை இடைவாரிலிருந்து கிடைக்கும் முதல் தர உயர்வு இந்த மஞ்சள் பட்டை. வெள்ளை இடைவாரில் இரு மஞ்சள் நிறை பட்டைகள் தைக்கப்பட்டிருக்கும். இம்மஞ்சள் பட்டையிலிருந்து நமக்கு அறிய கிடைப்பது, தேக்வாண்டோவின் அடிப்படைகளை இவர் அறிந்துகொண்டுள்ளார் என்பதாகும். விதைக்கப்பட்டுள்ள விதையின் நிலை இம்மஞ்சள் பட்டை இடைவார்.

        3.        மஞ்சள் இடைவார் :
அதிகாலையில் மேலெழும் ஆதவனின் நிறம். இடைவார் முழுமையும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். விதைக்கப்பட்ட விதையானது முளைவிட்டு வெளிவரும் நிலை மஞ்சள் இடைவார். தேக்வாண்டோவின் அடிப்படைகளிலிருந்து நுனுக்கங்களை அறிந்து மேலெழும் நிலை இந்த மஞ்சள் இடைவார்.

        4.        பச்சை பட்டை இடைவார் :
மஞ்சள் இடைவாரில் முனைகளில் இரு பச்சை நிற பட்டைகள் தைக்கப்பட்டிருக்கும். வளரும் செடிக்கு உரமிட்டு நீர் பாய்ச்சும் நிலை.

        5.        பச்சை இடைவார் :
வளரும் மரத்தின்/செடியின் பசுமையை குறிப்பது. ஒரு வளரும் செடியானது எந்த அளவிற்க்கு பசுமையாக இருக்கிறதோ, அதேபோல் பச்சை இடைவார் நிலையை அடைந்த ஒருவரின் தேக்வாண்டோ கலை நுனுக்கமும், மனமும் பசுமையாகவும் தெளிவாகவும் இருக்கும்.

        6.        நீல பட்டை இடைவார் :
பச்சை இடைவாரின் முனைகளில் இரு நீல நிற பட்டைகள். வானத்தை நோக்கிய வளர்ச்சியின் நிலை இது.

        7.        நீல இடைவார் :
இடைவார் முழுவதும் நீல நிறத்தில் இருக்கும். இந்த நீல நிறம் வானத்தை குறிக்கும். நன்கு வளர்ச்சி அடைந்த மரமானது வானத்தை நோக்கி நிற்கும் நிலைதான் இந்த நீல இடைவார். அதுபோல தேக்வாண்டோவின் நுனுக்கங்களை நன்கு அறிந்துகொண்டதை குறிக்கும் நிலை இது.

        8.        சிவப்பு பட்டை இடைவார் :
நன்கு கற்றறிந்த நுனுக்கங்களை மெருகேற்றும் நிலை இது. நீல இடைவாரின் முனைகளில் சிவப்பு பட்டை தைத்திருத்தல்.

        9.        சிவப்பு இடைவார் :

இவ்விடைவார் முழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது இவ்விடைவாரை அணிந்திருப்பவர் மிகவும் ஆபத்தானவர் என்பதை குறிக்கும். தனது எதிராளியை எச்சரிக்கும் நிறம் இது.

வியாழன், 27 ஜூன், 2013

தலைவலி : ஸ்ஸ்ஸஸப்ப்பா.... மிடியல...


நமக்கு எப்பவும் பெரிய தொந்தரவா இருப்பவைகளில் மிக முக்கியமானது இந்த தலைவலி.. ஒரு சிலருக்கு அடிக்கடி வரும் ஒரு சிலருக்கு எப்பவாவது வரும். நான் இணையத்துல, முகநூல்ல-னு பாக்கும்போதெல்லாம் எழுதிவச்ச தீர்வுகளை இங்க கொடுத்திருக்கேன். படித்து தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்..

ஒரு தலைவலிக்கு எத்தனை தீர்வுகள்...!!!?? முழுவதும் படிச்சுபாத்து உங்களுக்கு அந்த தீர்வு சரியா இருக்கும்னு தெரிஞ்சிக்கோங்க..
       
  M  மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி ,தலை பாரம் குணமாகும் .

  M  மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலை வலி குணமாகும் .

  M  மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

  M  தேன் தவிர எலுமிச்சை, புதினா, போன்ற பொருட்களும் தலைவலிக்கு நிவாரணம் தரும் மருந்தாக செயல்படுகின்றன.

  M  எலுமிச்சையும், தேனும் கலந்து தண்ணீர் சேர்த்து ஜூஸ் சாப்பிடுவது தலைவலிக்கு சிறந்த மருந்தாக அமையும்.

  M  எலுமிச்சையை பிழிந்து தலையில் பற்று போட்டால் தலைவலி சிறிதுநேரத்தில் குணமடையும்.

  M  புதினா சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. புதினா இலையை டீ போட்டு குடித்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

  M  நொச்சி இலையைக் கசக்கித் தலையை வைத்துக் கட்டினால் தலைபாரம், கழுத்து நரம்புக் கசிவு போகும்.

  M  தலைவலி இருப்பவர்கள் சூடான 1 கப் காபியில் அரை எலுமிச்சைப் பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.

  M  தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

  M  ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

  M  தலைவலி, மூக்கடைப்பு நீங்க: நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.

  M தலைப்பாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

  M ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

  M தலைபாரம், நீரேற்றம் நீங்க: இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.

  M கடுமையான தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

            குறிப்பு : இத்தீர்வுகள் அனைத்தும் நான் இணையத்தில் படித்தவை.. இன்னும் எந்த தீர்வையும் முயற்ச்சி செய்யவில்லை.
.

வெள்ளி, 31 மே, 2013

கருப்பு இடைவார் தர தேர்வு - தேக்வாண்டோ - நெய்வேலி

கருப்பு இடைவார் தர தேர்வு - தேக்வாண்டோ : Black Belt Grading - Taekwondo

கடந்த 21-05-2013 அன்று தேக்வாண்டோவின் கருப்பு இடைவார் தர  நிகழ்வு நெய்வேலி நகர மன மகிழ் மன்றத்தில் நடைபெற்றது. இத்தர தேர்வு, ஒலிம்பியன் தோக்வாண்டோ கூட்டமைப்பு, நெய்வேலி-ன் செயலாளர் மாஸ்டர் திரு.K.வாசுதேவன் அவர்களது நேர்நிலையில், தமிழ் நாடு தேக்வாண்டோ அகாடமியின் தலைவர் மாஸ்டர் திரு.K.பாபு Vth Dan Black Belt அவர்களால் நடத்தப்பட்டது.
[திரு.K.வாசுதேவன், திரு.K.பாபு]

இந்நிகழ்ச்சியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி தர உயர்வு அடைந்த நமது ஒலிம்பியன் தேக்வாண்டோ சங்கத்தின் மாணவர்களுடைய புகைப்படம் இதோ.

நெய்வேலி தேக்வாண்டோ மாணவர்களிடம் ஒரு சிறப்பான விடயம் உண்டு. எந்த ஒரு வீரனும் நெய்வேலி வீரர்களிடம் போட்டியிடும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்ப்படுத்துவர். ஏனெனில் நெய்வேலி தேக்வாண்டோ மாணவர்களின் செயல்பாடு மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். நெய்வேலி மாணவர் எவர் ஒருவரையும் சாதாரணமாக எடை போட முடியாது.


        நன்றி : Olympian Taekwondo Association, Neyveli.

வெள்ளி, 17 மே, 2013

மறைந்துபோன சுவடுகள் : கீழுர் பாளையக்காரர்களின் அரண்மனை கிணறுகள்.



அரண்மனை கிணறுகள் :

       கீழுர் பாளையக்காரர்களின் அரண்மனையில் எஞ்சியுள்ள மிச்சங்கள் இந்த கிணறுகள்தான். எஞ்சியுள்ள மிச்சமும் மிக விரைவில் அழிந்துப்போகும் நிலத்தில் நீர் இல்லாமல்.

1.       அரண்மனை கிணறு :

அரண்மனையில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டுள்ள கிணறு/கேணி. இக்கிணறு அரண்மனையின் மையப்பகுதியில் இருந்துள்ளது. கீழுர் பாளையக்காரர்களின் வீட்டு பெண்களை வெளி ஆட்கள் யாரும் பார்த்துவிட கூடாது என்பது அவர்களின் எழுதப்படாத விதியாகவே இருந்துள்ளது. அதனாலேயே இக்கிணறு அரண்மனையின் மையத்தில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.




2.       கொட்டடி கிணறு :

இக்கிணறு அரண்மனையின் சமையலுக்கு தேவையான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்க்காக வெட்டப்பட்டுள்ளது. இக்கிணறு அரண்மனையின் தெற்கில் உட்புறமாக இருந்திருக்க வேண்டும்.



 3.       தங்கசாமி கிணறு :

இக்கிணற்றிற்க்கு தற்காலத்தில் மட்டுமே தங்கசாமி கிணறு என பெயர் வந்திருக்க வேண்டும். ஏனெனில் நான் சிறு பிள்ளையாக இருக்கும்போதுதான் இந்த தங்கசாமி பாளையக்காரர் இறந்தார். அவரின் பெயரால் தான் இக்கிணறு வழங்கப்பட்டு வருகிறது. ஆதியில் இது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது எனத் தெரியவில்லை. இக்கிணறு அரண்மனையின் கிழக்கு புறத்தில் இருந்துள்ளது.

இக்கிணறு இருளந்தோட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது. அதாவது இருளர்கள் கீழுர் பாளையக்காரர்களின் பல்லக்கு தூக்கிகள். அதனாலேயே இவர்கள் அரண்மனைக்கு மிக அருகில் கிழக்கு புறமாக குடி அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் இக்கிணறு அவர்களின் குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்டிருக்க வேண்டும்.




4.       துளுக்கன் கிணறு :

இங்கு துளுக்கன் என்பது இசுலாமியர்களை குறிக்கிறது. இவர்கள் வட நாட்டில் பாஞ்சால தேசத்தை ஆட்சி செய்து வந்த காலத்திலிருந்தே இவர்களுக்கும் இசுலாமியர்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்துள்ளது. இவர்களின் திருமண நிகழ்ச்சியின் போது இசுலாமியர்கள்தான் வெண்குடை ஏந்தி முன்செல்வார்களாம். மேலும் இவர்களுக்கு அரண்மனையின் கணக்கு வழக்கு சம்பந்தமான பொருப்புகளும் அளிக்கப்பட்டிருந்திருக்கிறது. அதனாலேயே இவர்களுக்கு அரண்மனையை ஒட்டி மேற்க்கு புறத்தில் இடம் ஒதுக்கி இவர்களை அருகிலேயே வைத்திருந்துள்ளனர். இக்கிணறு அரண்மனையின் மேற்க்கு புறத்தில் இருந்துள்ளது. இது இசுலாமியர்களின் குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்டிருக்க வேண்டும்.




5.       தெரு கிணறு :
இக்கிணறு அரண்மனையின் தெற்க்கில் இருந்துள்ளது. இது ஊர் மக்களின், வழிப்போக்கர்களின் குடிநீர் தேவைக்காக, தாகம் தீர்க்க வெட்டப்பட்டிருக்க வேண்டும். மேலும் இக்கிணறு தற்போது சுவடே இல்லாமல் துந்துபோயுள்ளது.

குறிப்பு : அரண்மனை மற்றும் கொட்டடி கிணற்றைத் தவிர்த்து ஏனைய கிணறுகள் அரண்மனையின் உட்புறத்தில் இருந்தனவா அல்லது அரண்மனைக்கு வெளிப்புறத்தில் இருந்தனவா என்பதும் அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் எனக்கு தெரியாது. ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். ஆனால், இவ்வைந்து கிணறுகளும் அரண்மனையை சார்ந்தவையே.

புதன், 15 மே, 2013

மறைந்துபோன சுவடுகள் : கீழுர் பாளையக்காரர்களின் கொடியும் போர்வாளும்



எந்த ஒரு நாட்டிற்க்கும் இன்றும் அன்றும் அடையாளமாக விளங்கியது/விளங்குவது அவர்களின் கொடிதான். அக்கொடியை வடிவமைப்பதில் மிக கவனமாக இருந்திருப்பார்கள்/இருப்பார்கள். ஒரு நாட்டின் கொடியின் விளக்கத்தை வைத்தே அந்நாட்டின் தன்மையையும் வளமையையும் அளவிடலாம்.

நான் இங்கே தெரிவிக்கப்போவது கீழுர் பாளையக்கார அரசின் கொடியைப்பற்றிதான். அக்காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் தங்கள் நாட்டின் கொடியை பெரும்பாலும் கிடைமட்டமான முக்கோண வடிவத்திலேயே அமைத்திருந்தனர். அதற்க்கான காரணம் எனக்கு தெரியாது. கீழுர் பாளையக்காரர்களின் கொடியும் அத்தகைய கிடைமட்ட முக்கோண வடிவிலான கொடிதான்.

கீழுர் பாளையக்காரர்களின் கொடியானது காவி வண்ணத்தில் கிடைமட்ட முக்கோண வடிவத்தில் நீண்டு காணப்படும். கொடியின் மையத்தில் வெள்ளை நிற பசு ஒன்று முன்னோக்கி நின்றவாறு காட்சி தரும். இதுதான் அக்கொடி. நானே வரைந்தது.



18ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தற்போது பாச்சாரபாளையம் என்று அழக்கப்படும் பகுதிக்கு வந்து பாளையம் அமைத்து வடகுத்து ஜமீனிடமிருந்து 8 கிராமங்களை சூழ்ச்சியால் கைப்பற்றி புகழ்பெற்ற பாளையக்காரராக விளங்கிய “ஆன தாண்டவ ராய பாச்சாள நயினார்” அவர்களின் போர்வாள்தான் இது.



கிட்டதட்ட 400 ஆண்டுகள் பழமையான இப்போர்வாள் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதுதான் வருத்தத்திற்குரிய சேதியாக இருக்கிறது.

இவ்வாளினைப் போலவே அளவில் இதை விட சற்று குறைவான இரண்டு போர்வாளும் ஒரு குத்து வாளும் இருக்கிறது. ஆனால், அது வேறொருவரிடம் இருக்கிறது. அதனால் அதனைப் பெறுவதில் ஒரு சிறு சிக்கல்.

பல பேரின் உயிர் குடித்த போர்வாள், சரியான பராமரிப்பு இல்லையென்றாலும் கூர் மங்காமலேயே இருக்கிறது.

இப்போர்வாளினை ஒத்த வார்த்தெடுக்கப்பட்ட போர்வாளினை கீழுர் பாளையக்காரர்களின் உறவு முறை ஜமீங்களான அரியலூர், வட கால் போன்ற ஜமீங்களிலும் காணலாம்.