புதன், 3 ஜூலை, 2013

வண்ண இடைவார் தர தேர்வு - தேக்வாண்டோ - நெய்வேலி

சில நாட்களுக்கு முன்பு கருப்பு இடைவார் தர தேர்வு-தேக்வாண்டோ எனும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன் அல்லவா..!!? கிட்ட தட்ட அதன் தொடர்ச்சிதான் இந்த பதிவு. கடந்த 29-06-2013 அன்று நமது ஒலிம்பியன் தேக்வாண்டோ கூட்டமைப்பு,நெய்வேலி-ன் மாணவர்களுக்கான வண்ண இடைவார் தர தேர்வு(Color Belt Grading) நடந்தது. இத்தேர்வானது ஒலிம்பியன் தேக்வாண்டோ கூட்டமைப்பு, நெய்வேலி-ன் செயலாளர் மாஸ்டர் திரு.K.வாசுதேவன் மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் மாஸ்டர். திரு.R.இரவிக்குமார் ஆகியோர் நேர்நிலையில் தமிழ் நாடு தேக்வாண்டோ அகாடமியின் தலைவர் மாஸ்டர் திரு.K.பாபு Vth Dan Black Belt அவர்களால் நடத்தப்பட்டது. இனி தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் புகைப்படங்களை காணலாம். 

அதற்கு முன்பாக, தேக்வாண்டோவின் வண்ண இடைவார்களை பற்றி சுருக்கமாக காணலாம்.

        1.        வெள்ளை இடைவார் (White Belt)
        2.        மஞ்சள் பட்டை இடைவார் (Yellow Stripe)
        3.        மஞ்சள் இடைவார் (Yellow Belt)
        4.        பச்சை பட்டை இடைவார் (Green Stripe)
        5.        பச்சை இடைவார் (Green)
        6.        நீல பட்டை இடைவார் (Blue Stripe)
        7.        நீல இடைவார் (Blue Belt)
        8.        சிவப்பு பட்டை இடைவார் (Red Stripe)
        9.        சிவப்பு இடைவார் (Red Belt)

இதற்கு அடுத்தபடியாக கருப்பு இடைவார். கருப்பு இடைவாரினை அவ்வளவு எளிதில் தேக்வாண்டோவில் அடைந்துவிட முடியாது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை தேவைப்படும். இக்கருப்பு இடைவாரில் I DAN, II DAN, III DAN, IV DAN, V DAN, VI DAN என ஆறு இடைவார் நிலைகள் உள்ளன. இவற்றைப்பற்றி சந்தர்ப்பம் வாய்த்தால் வேறொரு பதிவில் விரிவாக காணலாம்.

[மாஸ்டர்.திரு.R.இரவிக்குமார்]

        1.        வெள்ளை இடைவார் :
அனைத்து தற்க்காப்பு கலைகளிலும் முதல் நிலையில் இருப்பது இந்த வெள்ளை இடைவார் தான். வெள்ளை காகிதமாக இருக்கும் நாம் கற்க ஆரம்பிக்கும் நிலைதான் இந்த வெள்ளை இடைவார்.

        2.        மஞ்சள் பட்டை இடைவார் :
வெள்ளை இடைவாரிலிருந்து கிடைக்கும் முதல் தர உயர்வு இந்த மஞ்சள் பட்டை. வெள்ளை இடைவாரில் இரு மஞ்சள் நிறை பட்டைகள் தைக்கப்பட்டிருக்கும். இம்மஞ்சள் பட்டையிலிருந்து நமக்கு அறிய கிடைப்பது, தேக்வாண்டோவின் அடிப்படைகளை இவர் அறிந்துகொண்டுள்ளார் என்பதாகும். விதைக்கப்பட்டுள்ள விதையின் நிலை இம்மஞ்சள் பட்டை இடைவார்.

        3.        மஞ்சள் இடைவார் :
அதிகாலையில் மேலெழும் ஆதவனின் நிறம். இடைவார் முழுமையும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். விதைக்கப்பட்ட விதையானது முளைவிட்டு வெளிவரும் நிலை மஞ்சள் இடைவார். தேக்வாண்டோவின் அடிப்படைகளிலிருந்து நுனுக்கங்களை அறிந்து மேலெழும் நிலை இந்த மஞ்சள் இடைவார்.

        4.        பச்சை பட்டை இடைவார் :
மஞ்சள் இடைவாரில் முனைகளில் இரு பச்சை நிற பட்டைகள் தைக்கப்பட்டிருக்கும். வளரும் செடிக்கு உரமிட்டு நீர் பாய்ச்சும் நிலை.

        5.        பச்சை இடைவார் :
வளரும் மரத்தின்/செடியின் பசுமையை குறிப்பது. ஒரு வளரும் செடியானது எந்த அளவிற்க்கு பசுமையாக இருக்கிறதோ, அதேபோல் பச்சை இடைவார் நிலையை அடைந்த ஒருவரின் தேக்வாண்டோ கலை நுனுக்கமும், மனமும் பசுமையாகவும் தெளிவாகவும் இருக்கும்.

        6.        நீல பட்டை இடைவார் :
பச்சை இடைவாரின் முனைகளில் இரு நீல நிற பட்டைகள். வானத்தை நோக்கிய வளர்ச்சியின் நிலை இது.

        7.        நீல இடைவார் :
இடைவார் முழுவதும் நீல நிறத்தில் இருக்கும். இந்த நீல நிறம் வானத்தை குறிக்கும். நன்கு வளர்ச்சி அடைந்த மரமானது வானத்தை நோக்கி நிற்கும் நிலைதான் இந்த நீல இடைவார். அதுபோல தேக்வாண்டோவின் நுனுக்கங்களை நன்கு அறிந்துகொண்டதை குறிக்கும் நிலை இது.

        8.        சிவப்பு பட்டை இடைவார் :
நன்கு கற்றறிந்த நுனுக்கங்களை மெருகேற்றும் நிலை இது. நீல இடைவாரின் முனைகளில் சிவப்பு பட்டை தைத்திருத்தல்.

        9.        சிவப்பு இடைவார் :

இவ்விடைவார் முழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது இவ்விடைவாரை அணிந்திருப்பவர் மிகவும் ஆபத்தானவர் என்பதை குறிக்கும். தனது எதிராளியை எச்சரிக்கும் நிறம் இது.

2 கருத்துகள்: