என் அன்பு கோவை மின்சார வாரியத்திற்க்கு,
ஒரு கடுமையான
தாழ்மையான.. யோவ் உங்கள கெஞ்சி கேட்டுகறன்.. தயவுசெஞ்சி இரவு நேரத்துல மின்சாரத்தை
நிறுத்தாதீங்க..
முடியல...
அலுவலக நேரம் முடிஞ்சி உணவகம் போய்ட்டு சாப்பிட்டுவிட்டு அறைக்கு
திரும்பும்போது சரியா மணி 10 ஆகிடும். அறைக்கு உள்ள நுழஞ்சு மின்விசிறி இணைப்பை
கொடுக்கறதும் நீங்க மின்சார இணைப்பை துண்டிக்கிறதும் சரியா ஒருசேர இருக்கு.
அடுத்த 1 மணி நேரத்துக்கு மின் இணைப்பு இல்லை. 11 மணி வரைக்கும் காத்திருக்கனும். கதவை திறந்து வச்சிட்டு உள்ள தூங்க
முடியாது; கொசு கொன்னுடும். சாத்திவச்சிட்டும் தூங்க முடியாது; வேர்த்து
விறுவிறுத்துடும்.
கதவை சாத்திட்டு வெளிய வந்து மீண்டும் மின்சாரம் வரும் வரை
மொட்டைமாடியில் உலாவிகிட்டு இருப்போம். சரியா 11 மணிக்கெல்லாம் மின்சாரம்
வந்திடும். உடனே உள்ள போயி மின்விசிறிக்கு இணைப்பு குடுத்திட்டு, எல்லா ஒளி
விளக்குகளையும் அணைச்சிட்டு படுத்திடுவேன்.
எனக்கு படுத்த உடனே தூக்கம் வராது. அதிகபட்சம் ஒரு அரைமணி நேரம் ஆகும்.
11.30 மணிக்குள்ள தூங்கிடுவேன்னு வச்சிக்கோங்களேன். இதுல என்னடா பிரச்சனைனு கேக்கறீங்களா..!!?
இதுவரைக்கும் இருந்தது பெரிய பிரச்சனை இல்ல இனிமேதான் பிரச்சனையே..!!!
சரியா 12 மணிக்கெல்லாம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அடுத்த 5, 10
நிமிசத்துல முழிச்சுக்குவன். கிட்டதட்ட அரை மணி நேரத்துக்கு தூங்கிட்டதால வெளிய
எழுந்துபோக மனசு வராது. உள்ளேயே படுத்து தூங்கவும் முடியாது. அறையில் விசிறி
மட்டையும் கிடையாது.
மறுபடியும் மின்சாரம் வரும்வரை கையாலேயே முகத்துகிட்ட விசிறிகிட்டு
காத்திருப்பேன். அலுவலகத்திலிருந்து ஏற்க்கனவே சோர்வாக வந்திருக்கும் எனக்கு தூக்கமும்
கெட்டு அதீத சோர்வுடன் இருப்பேன். 1 மணிக்கு மின்சாரம் வரும் அதிகப்படியான களைப்புடன்
இருப்பதால் அடுத்த 5 நிமிசத்துல தூங்கிடுவேன். இதுக்கு அப்புறம் எப்ப மின்சாரம்
போகும் வரும்னெல்லாம் தெரியாது. உடம்பு அதிக களைப்போட இருக்கறதால ஆழ்ந்த
தூக்கத்துக்கு போயிடுவேன்னு நெனைக்கிறேன்.
விடிஞ்சதும் காலைல 6.45க்கு நண்பர் தேனீர் தயாரித்துவிட்டு எழுப்புவார்.
எழுந்திருக்கும்போது மின்சாரம் இருக்கானு பார்ப்பேன். இருக்கும். வாய்
கொப்பளித்துவிட்டு வந்து தேனீர் அருந்திவிட்டு திரும்பும்போது மின்சாரம்
நிறுத்தப்பட்டிருக்கும் சரியாக 7 மணியளவில். மீண்டும் மின்சாரம் வராது. உடைகளுக்கு
இஸ்த்திரி போட முடியாது. நான் 9.30க்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்.
பொதுவா எல்லோருடைய வீடும் இந்த காலை 6 – 9 மணி வரைக்கும் ரொம்ப
சுறுசுறுப்பா இருக்கும். இந்த நேரத்துல மின்சார தேவை பல வீடுகளில் அவசியமானதா
இருக்கும். இந்த நேரத்துல மின்சாரத்தை துண்டிச்சு ஏன்யா கடுப்பேத்துறீங்க..!!?
எனக்கு காலைல கூட பெருசா பிரச்சனை இல்ல. ஆனா, இராத்திரி நேரத்துல
மின்சாரத்தை துண்டிக்கும்போது வரும் பாருங்க ஒரு கடுப்பு..!! அடிமட்டத்திலேருந்து “Line Man”,”Wire Man”,”AE”,”JE”, மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வனாதன்னு முதலமைச்சர் ஜெயலலிதா
வரைக்கும் கன்னா பின்னானு மோசமான வார்த்தைகளால திட்டனும் போல இருக்கும். உங்களோட
நல்ல நேரம் எனக்கு அந்தமாதிரியான வார்த்தைகள் இதுவரைக்கும் பேசி பழக்கம் இல்ல.
அதனால தப்பிசிட்டீங்க.
இருந்தாலும் உங்கள விடமாட்டேன். நல்லா கொடூரமா மோசமான வார்த்தைகள பேச
தெரிஞ்சவன கூப்பிட்டு வந்து ஒரு 10 ரூபாயை கொடுத்து ஒரு அரை மணி நேரம் உங்க
எல்லோரையும் காதே புளிச்சி போற அளவுக்கு கேவலமான வார்த்தைகளால பேச சொல்லுவேன்னு
எச்சரிக்கிறேன்.
நல்லாதான போய்கிட்டு இருந்துச்சி இப்ப திடீர்னு உங்களுக்கு என்ன ஆச்சு..!!?
என்னுடைய கோரிக்கையை மீண்டும் ஒரு முறை உங்களுக்கு
தெளிவுபடுத்துகிறேன். தயவுசெய்து இரவு நேரங்களில் மின்சாரத்தை துண்டிக்காதீர்கள்.
இப்படி நான் அல்லல்படும் பகுதி கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனை
பகுதி ஆகும். எனது கோரிக்கைக்கு ஆவண செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
நான் (ME).
இப்படிக்கு,
நான் (ME).