வெள்ளி, 31 மே, 2013

கருப்பு இடைவார் தர தேர்வு - தேக்வாண்டோ - நெய்வேலி

கருப்பு இடைவார் தர தேர்வு - தேக்வாண்டோ : Black Belt Grading - Taekwondo

கடந்த 21-05-2013 அன்று தேக்வாண்டோவின் கருப்பு இடைவார் தர  நிகழ்வு நெய்வேலி நகர மன மகிழ் மன்றத்தில் நடைபெற்றது. இத்தர தேர்வு, ஒலிம்பியன் தோக்வாண்டோ கூட்டமைப்பு, நெய்வேலி-ன் செயலாளர் மாஸ்டர் திரு.K.வாசுதேவன் அவர்களது நேர்நிலையில், தமிழ் நாடு தேக்வாண்டோ அகாடமியின் தலைவர் மாஸ்டர் திரு.K.பாபு Vth Dan Black Belt அவர்களால் நடத்தப்பட்டது.
[திரு.K.வாசுதேவன், திரு.K.பாபு]

இந்நிகழ்ச்சியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி தர உயர்வு அடைந்த நமது ஒலிம்பியன் தேக்வாண்டோ சங்கத்தின் மாணவர்களுடைய புகைப்படம் இதோ.

நெய்வேலி தேக்வாண்டோ மாணவர்களிடம் ஒரு சிறப்பான விடயம் உண்டு. எந்த ஒரு வீரனும் நெய்வேலி வீரர்களிடம் போட்டியிடும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்ப்படுத்துவர். ஏனெனில் நெய்வேலி தேக்வாண்டோ மாணவர்களின் செயல்பாடு மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். நெய்வேலி மாணவர் எவர் ஒருவரையும் சாதாரணமாக எடை போட முடியாது.


        நன்றி : Olympian Taekwondo Association, Neyveli.

வெள்ளி, 17 மே, 2013

மறைந்துபோன சுவடுகள் : கீழுர் பாளையக்காரர்களின் அரண்மனை கிணறுகள்.



அரண்மனை கிணறுகள் :

       கீழுர் பாளையக்காரர்களின் அரண்மனையில் எஞ்சியுள்ள மிச்சங்கள் இந்த கிணறுகள்தான். எஞ்சியுள்ள மிச்சமும் மிக விரைவில் அழிந்துப்போகும் நிலத்தில் நீர் இல்லாமல்.

1.       அரண்மனை கிணறு :

அரண்மனையில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டுள்ள கிணறு/கேணி. இக்கிணறு அரண்மனையின் மையப்பகுதியில் இருந்துள்ளது. கீழுர் பாளையக்காரர்களின் வீட்டு பெண்களை வெளி ஆட்கள் யாரும் பார்த்துவிட கூடாது என்பது அவர்களின் எழுதப்படாத விதியாகவே இருந்துள்ளது. அதனாலேயே இக்கிணறு அரண்மனையின் மையத்தில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.




2.       கொட்டடி கிணறு :

இக்கிணறு அரண்மனையின் சமையலுக்கு தேவையான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்க்காக வெட்டப்பட்டுள்ளது. இக்கிணறு அரண்மனையின் தெற்கில் உட்புறமாக இருந்திருக்க வேண்டும்.



 3.       தங்கசாமி கிணறு :

இக்கிணற்றிற்க்கு தற்காலத்தில் மட்டுமே தங்கசாமி கிணறு என பெயர் வந்திருக்க வேண்டும். ஏனெனில் நான் சிறு பிள்ளையாக இருக்கும்போதுதான் இந்த தங்கசாமி பாளையக்காரர் இறந்தார். அவரின் பெயரால் தான் இக்கிணறு வழங்கப்பட்டு வருகிறது. ஆதியில் இது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது எனத் தெரியவில்லை. இக்கிணறு அரண்மனையின் கிழக்கு புறத்தில் இருந்துள்ளது.

இக்கிணறு இருளந்தோட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது. அதாவது இருளர்கள் கீழுர் பாளையக்காரர்களின் பல்லக்கு தூக்கிகள். அதனாலேயே இவர்கள் அரண்மனைக்கு மிக அருகில் கிழக்கு புறமாக குடி அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் இக்கிணறு அவர்களின் குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்டிருக்க வேண்டும்.




4.       துளுக்கன் கிணறு :

இங்கு துளுக்கன் என்பது இசுலாமியர்களை குறிக்கிறது. இவர்கள் வட நாட்டில் பாஞ்சால தேசத்தை ஆட்சி செய்து வந்த காலத்திலிருந்தே இவர்களுக்கும் இசுலாமியர்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்துள்ளது. இவர்களின் திருமண நிகழ்ச்சியின் போது இசுலாமியர்கள்தான் வெண்குடை ஏந்தி முன்செல்வார்களாம். மேலும் இவர்களுக்கு அரண்மனையின் கணக்கு வழக்கு சம்பந்தமான பொருப்புகளும் அளிக்கப்பட்டிருந்திருக்கிறது. அதனாலேயே இவர்களுக்கு அரண்மனையை ஒட்டி மேற்க்கு புறத்தில் இடம் ஒதுக்கி இவர்களை அருகிலேயே வைத்திருந்துள்ளனர். இக்கிணறு அரண்மனையின் மேற்க்கு புறத்தில் இருந்துள்ளது. இது இசுலாமியர்களின் குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்டிருக்க வேண்டும்.




5.       தெரு கிணறு :
இக்கிணறு அரண்மனையின் தெற்க்கில் இருந்துள்ளது. இது ஊர் மக்களின், வழிப்போக்கர்களின் குடிநீர் தேவைக்காக, தாகம் தீர்க்க வெட்டப்பட்டிருக்க வேண்டும். மேலும் இக்கிணறு தற்போது சுவடே இல்லாமல் துந்துபோயுள்ளது.

குறிப்பு : அரண்மனை மற்றும் கொட்டடி கிணற்றைத் தவிர்த்து ஏனைய கிணறுகள் அரண்மனையின் உட்புறத்தில் இருந்தனவா அல்லது அரண்மனைக்கு வெளிப்புறத்தில் இருந்தனவா என்பதும் அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் எனக்கு தெரியாது. ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். ஆனால், இவ்வைந்து கிணறுகளும் அரண்மனையை சார்ந்தவையே.

புதன், 15 மே, 2013

மறைந்துபோன சுவடுகள் : கீழுர் பாளையக்காரர்களின் கொடியும் போர்வாளும்



எந்த ஒரு நாட்டிற்க்கும் இன்றும் அன்றும் அடையாளமாக விளங்கியது/விளங்குவது அவர்களின் கொடிதான். அக்கொடியை வடிவமைப்பதில் மிக கவனமாக இருந்திருப்பார்கள்/இருப்பார்கள். ஒரு நாட்டின் கொடியின் விளக்கத்தை வைத்தே அந்நாட்டின் தன்மையையும் வளமையையும் அளவிடலாம்.

நான் இங்கே தெரிவிக்கப்போவது கீழுர் பாளையக்கார அரசின் கொடியைப்பற்றிதான். அக்காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் தங்கள் நாட்டின் கொடியை பெரும்பாலும் கிடைமட்டமான முக்கோண வடிவத்திலேயே அமைத்திருந்தனர். அதற்க்கான காரணம் எனக்கு தெரியாது. கீழுர் பாளையக்காரர்களின் கொடியும் அத்தகைய கிடைமட்ட முக்கோண வடிவிலான கொடிதான்.

கீழுர் பாளையக்காரர்களின் கொடியானது காவி வண்ணத்தில் கிடைமட்ட முக்கோண வடிவத்தில் நீண்டு காணப்படும். கொடியின் மையத்தில் வெள்ளை நிற பசு ஒன்று முன்னோக்கி நின்றவாறு காட்சி தரும். இதுதான் அக்கொடி. நானே வரைந்தது.



18ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தற்போது பாச்சாரபாளையம் என்று அழக்கப்படும் பகுதிக்கு வந்து பாளையம் அமைத்து வடகுத்து ஜமீனிடமிருந்து 8 கிராமங்களை சூழ்ச்சியால் கைப்பற்றி புகழ்பெற்ற பாளையக்காரராக விளங்கிய “ஆன தாண்டவ ராய பாச்சாள நயினார்” அவர்களின் போர்வாள்தான் இது.



கிட்டதட்ட 400 ஆண்டுகள் பழமையான இப்போர்வாள் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதுதான் வருத்தத்திற்குரிய சேதியாக இருக்கிறது.

இவ்வாளினைப் போலவே அளவில் இதை விட சற்று குறைவான இரண்டு போர்வாளும் ஒரு குத்து வாளும் இருக்கிறது. ஆனால், அது வேறொருவரிடம் இருக்கிறது. அதனால் அதனைப் பெறுவதில் ஒரு சிறு சிக்கல்.

பல பேரின் உயிர் குடித்த போர்வாள், சரியான பராமரிப்பு இல்லையென்றாலும் கூர் மங்காமலேயே இருக்கிறது.

இப்போர்வாளினை ஒத்த வார்த்தெடுக்கப்பட்ட போர்வாளினை கீழுர் பாளையக்காரர்களின் உறவு முறை ஜமீங்களான அரியலூர், வட கால் போன்ற ஜமீங்களிலும் காணலாம்.