திங்கள், 3 டிசம்பர், 2012

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1999-2000] (எட்டாம் வகுப்பு 'ஈ' பிரிவு)


பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - 1992-1997

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1997-1998] (ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவு)

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1998-1999] (ஏழாம் வகுப்பு 'ஈ' பிரிவு)

எட்டாம் வகுப்பு:

ஒட்டுமொத்தமா நல்லா படிக்கிற எல்லா பசங்களும் ஒரே வகுப்புல இருக்கறதால எங்க பள்ளியில ஒரு மாற்றத்தை கொண்டுவந்தாங்க.. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்குற வழக்கமான நடைமுறைதான்.

எங்க பள்ளிக்கூடம் இருபாலர் பள்ளிக்கூடம் தான். ஆனால் எல்லா வகுப்புகளிலும் இருபாலர் முறை இல்லை.

அ,ஆ (A,B) -         பெண்பாலர் மட்டும்
இ (C) -               இருபாலர்
ஈ, உ, ஊ (D, E, F) -   ஆண்பாலர் மட்டும்
எ (G) - இருபாலர் [ஆங்கில வழி - English Medium]

நல்லா படிக்குற பசங்க ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு வகுப்புல போட்டாங்க . எனக்கு ஞாபகம் இருக்குற, நான் முந்தைய பதிவுல தெரிவிச்சிருக்குற ஒருசில பேர மட்டும் இங்க தெரிவிக்கிறேன்.

அருண்ராஜ் - 'இ' பிரிவு
கபிலன் - 'ஈ' பிரிவு
பாலசுப்ரமணியன், சத்யராஜ், குமரேசன்  - 'உ' பிரிவு
ஜேம்ஸ், நடராஜன், சுந்தரகனேசன்  - 'ஊ' பிரிவு

இப்படி பிரிச்சதுல நல்லா படிக்குற பசங்க வரிசையில் புதுசா ஒரு பையன் வந்தான்  'உ' பிரிவிலிருந்து. அவன் பெயர்  வெங்கடராம சுப்பிரமணியன்.

அ , ஆ பிரிவுகளிலிருந்து நல்லா படிக்குறவங்க வரிசைக்கு ஒரு பொண்ணு வந்தா. ஆனால் அவ பேரு ஒன்பதாவதுக்கு மேலதான் அடிபட்டுச்சு. அந்த பொண்ணு பேரு சரஸ்வதி. என்னோட மறக்கமுடியாத சம்பவங்களில் இந்த பொண்ணோட பேரும் வரும் அத ஒன்பதாவதுல சொல்றன்.

சரி, இனி ஆசிரியர்கள் அட்டவணைக்கு செல்வோம்..


எட்டாம் வகுப்பு [VII-D](1999-2000)
பள்ளிக்கூடம் : ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.
வ.எண் பாடம் ஆசிரியர்

     1                     தமிழ்          புலவர்.திரு.இளஞ்செழியன்
     2 ஆங்கிலம்         திரு.K.கார்த்திகேயன் (K.K)*
     3 கணிதம்         திரு.K.கார்த்திகேயன் (K .K)
     4 அறிவியல்         திரு. வேலாயுதம் 
     5 சமூக அறிவியல்         திருமதி.ஜனாபாய் 
     6 உடற்கல்வி (P.E.T)         திரு.செல்வம்
* : வகுப்பாசிரியர்

புலவர்.திரு.இளஞ்செழியன் : இவர ரொம்ப கண்டிப்பானவருனு சொல்ல முடியாது. ஆனால் சமயத்துல கடுகடுனு இருப்பார். இவருகிட்ட பலதடவை அடி வாங்கியிருக்கேன்.

திரு.K.கார்த்திகேயன் (K .K) : இவர் எங்களோட வகுப்பாசிரியர். எங்கள் பள்ளியின் கண்டிப்பான ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.

திரு. வேலாயுதம் : இவரும் கண்டிப்பான ஆசிரியர். எங்கள் வகுப்பாசிரியரைவிட இவரை பார்க்கும்போதுதான் பயம் அதிகமாக இருக்கும்.

திருமதி.ஜனாபாய் : நான் அதிகமா தூங்கியிருக்கறது இவங்களோட வகுப்புலதான். கண்டிப்பான ஆசிரியர் இல்ல.

திரு.செல்வம் : இவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல. இவர்கிட்ட நான் பேசினதே கெடையாது.


மறக்க முடியாத சம்பவங்கள் :

சம்பவம் 1:
                   முதல் பருவத்தேர்வு முடிந்து திருத்திய விடைத்தாள்களை கொடுத்து மதிப்பெண்களை அனைத்து ஆசிரியர்களும் அறிவித்துக்கொண்டிருந்தனர். சமூக அறிவியல் பாட வேளை, ஜனாபாய் டீச்சர் வகுப்பறையின் உள் நுழைந்தார். அவரைப் பார்த்த அடுத்த நொடி முதல் இதயத்துடிப்பு வெகுவாக அதிகரித்தது. காரணம், அவரது கைகளில் திருத்தப்பட்ட விடைத்தாட்கள். மதிப்பெண் பற்றிய பயம்.
                   ஒவ்வொருவருடைய பெயரையும் படித்து விடைத்தாட்கள் வழங்கப்பட்டது. கடைசிவரை என் பெயர் உட்பட சிலரது பெயர்கள் வாசிக்கப்படவில்லை.
                   இப்போது ஜனாபாய் டீச்சர், யாருடைய பெயரெல்லாம் வரலையோ, அவங்கலாம் எந்திரியுங்கள் என்றார். எழுந்து நின்றோம். இப்போது ஒருவர் பின் ஒருவராக அழைத்து அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி கண்டித்தார். இப்போதும் என் பெயர் கடைசியாகத்தான் வந்தது. என் விடைத்தாளை என்னிடம் கொடுத்தார். கொடுக்கும்போதே அடி வயிறு கலங்கினார்போல இருந்தது. கொடுத்துவிட்டு சில கேள்விகளை கேட்டார்:

ஜனாபாய்  டீச்சர் : மதிப்பெண்கள் எவ்வளவு ?

நான் : 31.

ஜனாபாய்  டீச்சர் : இந்த மதிப்பெண்கள் போதுமா..?

நான் : [மௌனம்]

ஜனாபாய்  டீச்சர் : விடைத்தாளின் கடைசிப் பக்கத்தை திருப்பு..

நான் : [திருப்புகிறேன்]

ஜனாபாய்  டீச்சர் : அங்க எழுதியிருக்கிற கேள்விய சத்தமா படி.

[அங்கு ஒரே ஒரு கேள்வியும் அதற்க்கான பதிலும் எழுதப்பட்டிருந்தது]

நான் : யாதேனும் நான்கு சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை கூறு.

ஜனாபாய்  டீச்சர் : இப்ப பதிலை படி.

நான் : வீர பாண்டிய கட்டபொம்மன், ...[மௌனம்]..

ஜனாபாய்  டீச்சர் : ம்ம்.. படி 

நான் : வீர பாண்டிய கட்டபொம்மன், எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் பலர் சுதந்திர போராட்ட வீரர்களாக இருந்தனர்.

அவ்வளவுதான் வகுப்பு முழுதும் ஒரே சிரிப்பலைகள்... கேள்வித்தாளில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் இரண்டு முறை பதில் எழுத சொல்லிவிட்டு என்னை அமரச் சொன்னார் மேலே உள்ள 31 மதிப்பெண் என்பது மொத்த மதிப்பெண்கள் 90 க்கு. 100க்கு 35 எடுத்தால் தேர்ச்சி. நான் மொத்தமாகவே 5 பக்கங்களுக்கு மட்டுமே எழுதியிருந்தேன் மேலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன் ஜனாபாய் ஆசிரியர் உதவியுடன்.

சம்பவம் 2:
                    எங்க வீட்டுல தொலைக்காட்சிப் பெட்டி வாங்குனாங்க. வண்ணத் தொலைகாட்சிப் பெட்டி விலை அதிகம் என்பதால் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார்கள். அது என்னவோ தெரியல எங்க வீட்டுக்கு தொலைக்காட்ச்சிப்பெட்டி வந்ததுக்கு அப்றம்தான் நான் நல்ல படிக்க ஆரம்பிச்சன். இந்த தொலைக்காட்சிப்பெட்டி உபகரணங்கள் வாங்கி கோர்க்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டி.

சம்பவம் 3:
                   ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் வழங்கப்பட்ட பின்னர் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடைபெறும். இங்கு தர அட்டையில் (Rank Card) முதல் பருவத்தேர்வு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் நாங்கள் பெற்ற மதிப்பெண்களும்(பாட வாரியாக), வகுப்பில் ஒவ்வொரு தேர்வுக்குமான எங்களது தரமும்(Rank) இருக்கும். 
                  வீட்டில் பையன் ஒழுங்கா படிக்கிறானா என ஆசிரியரும், பள்ளியில் புள்ள ஒழுக்கமா நடந்துக்குறானா என பெற்றோரும் மாறி மாறி கேட்டுக்குவாங்க.
                  இது வரை இல்லாத ஒரு அதிசயம் அரையாண்டுத் தேர்வில் நடந்தது. நான் 500 க்கு 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வகுப்பின் தர வரிசைப் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் வந்தேன். ஆம் ஆச்சரியமான நிகழ்வு. வகுப்பின் தர வரிசைப் பட்டியலில் எனக்கு 6வது இடம்.
                  மேலும் கணிதத்தில் நான் இதுவரைப் பெற்றிடாத அதிகப்படியான மதிப்பெண் 76. இந்த மதிப்பெண்தான் என்னையும் படிக்கற பசங்க வளையத்திற்குள் கொண்டு வந்தது. அன்று முதல் என் முதுநிலை படிப்பு முடியும் வரை என்னையும் படிக்குற பசங்க வளையத்துக்குள்ளேயே வச்சிருந்தது இந்த கணிதம்.

சம்பவம் 4:
                  எட்டாம் வகுப்ப பத்தி சொல்லும்போது கண்டிப்பா நான் என் வகுப்புல இருந்த ஒரு மாணவனைப் பற்றி சொல்லியே ஆகா வேண்டும். அவனோட பெயர் வீரமணி [He was a great Entertainer]. எங்களுக்கு ஓய்வு வகுப்புகள்[Free Period] வரும்போது அவனை நச்சரித்து கதை சொல்ல சொல்லுவோம். அவன் கதை சொல்ல ஆரம்பிச்சா அவ்வளவு விருவிருப்பா போகும். அவன் சொல்ற கதைய கேக்கறதுக்கு ஒரு பெரிய கூட்டமே அவன சுத்தி இருக்கும். கதையுடன் கூடவே எண் ஒலி முறையுடன்[Digital Sound System] கூடிய பின்னணி இசையும் வாய் வழியாக குடுப்பான். அவன் கதை சொல்ல ஆரம்பிச்சா அந்த பாடவேளை நேரம் முடியறதே தெரியாது.
                 ஓய்வு வகுப்பு நேரங்களில் இவனையல்லாத இன்னும் சில பொழுதுபோக்கும் எங்களுக்கு உண்டு. அது புத்தக மட்டைப் பந்தாட்டம்[Book Cricket] மற்றும் காகித திருடன் 'போலீஸ்' ஆட்டம், Etc..

சம்பவம் 5:
                 எங்கள் பள்ளியில் இரண்டு பாடவேளைகளுக்கு ஒருமுறை 10 நிமிடம் இடைவேளை விடுவார்கள். ஒரு நாள், இரண்டாவது பாடவேளை, சமூக அறிவியல் பாடம் ஜனாபாய் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். நான் ஏற்கனே சொன்னது போல ஜனாபாய் ஆசிரியர் பாடவேளை தூக்கம் தள்ளாடியது. கண்கள் சொருகுகிறது. 45 நிமிடங்கள் தாக்கு பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வகுப்பு முடிந்ததும் ஆசிரியர் சென்று விட்டார், நான் எனது சாப்பாட்டு கூடையை கையில் எடுத்துக்கொண்டு வழக்கமாக சாப்பிடும் இடத்திற்க்கு நகர ஆரம்பித்துவிட்டேன். சற்று தூக்கம் தெளிந்தவனாய், சுற்றும் முற்றும் பார்க்கும்போது எவர் கையிலும் சாப்பாட்டுக் கூடை இல்லை என் ஒருவனைத் தவிர. ஒரு நொடி சுதாரித்து எனக்கு நானே விமர்சனம் செய்துகொண்டு சாப்பாட்டு கூடையை வைத்துவிட்டு தண்ணீர் குழாயை தேடி முகம் கழுவிவிட்டு அடுத்த பாடவேளைக்கு ஆயத்தமானேன். கொஞ்சம் யோசிச்சு பாருங்க எந்த அளவுக்கு எனக்கு தூக்கம் வந்திருக்கும்னு..!! :-)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக