வெள்ளி, 25 ஜனவரி, 2013

ஔவை ஆத்திச்சூடி - யாரேனும் விளக்கம் தர இயலுமா..?

ஆத்திச்சூடி, நான் நாலாவது படிக்கும்போது படிச்சது. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி எங்க மாமா பசங்க தமிழ் புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அதுல நவீன ஆத்திச்சூடிதான் இருந்துச்சு. எனக்கு நாம படிச்ச ஔவையார் எழுதிய ஆத்திச்சூடிதான் ஞாபகம் வந்துச்சு. மனசுகுள்ளையே சொல்லி பாத்தேன். ஔ வரைக்கும் சொல்லிட்டன். ஃ-க்கு என்ன வரும்னு தெரியல. எவ்வளவோ யோசிச்சு பாத்தேன். கடைசி வரைகும் ஞாபகம் வரல. அப்புறமா தேடிபுடிச்சு தெரிஞ்சிகிட்டேன்.

ஆனால், இப்ப ஒரு சிக்கல். எல்லா வரிகளுக்கும் எனக்கு விளக்கம் தெரியல. 1000 வருடங்கலுக்கு முன் எழுதப்பட்டாலும் இப்போதும் படித்தவுடன் புரிந்துகொள்ள எளிமையானதும் தெளிவானதுமான மொழி தமிழ் என அயல்நாட்டினர் புகழாரம் சூட்டுகின்றனர். ஆனால் தற்க்கால தலைமுறை தமிழனான எனக்கு மிக எளிமையான பாடலான ஆத்திச்சூடிக்குகூட சரியான விளக்கம் தெரியவில்லை.

நான் மட்டும் அல்ல, என்னைப் போல் மேலும் என்னை விட மோசமாக பல பேர் இருக்கின்றார்கள் என்பதுதான் வருந்தத்தக்க விடயம்.

சரி, நாம நம்ம கதைக்கு வருவோம்.. இங்க எனக்கு தெரிஞ்ச மாதிரியான விளக்கத்தை இங்க எழுதறன். விளக்கம் தெரியாத வரிகளுக்கு சிவப்பு மை இடுகிறேன். நான் சொல்லியிருக்குற விளக்கம் சரினா ஒன்னும் சொல்ல வேணாம். தப்புனா தப்ப சொல்லி விளக்கம் கொடுங்க. எனக்கு விளக்கம் தெரியாத வரிகளுக்கும் விளக்கம் கொடுங்க.

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்ப்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்
                                             - ஔவையார்

அறம் செய்ய விரும்பு - நல்லவற்றை செய்ய ஆசைகொள்
ஆறுவது சினம் - குறைத்துக்கொள்ள வேண்டியது கோபம்
இயல்வது கரவேல் -
ஈவது விலக்கேல் - கொடைத்தன்மையை விட்டுவிடக்கூடாது
உடையது விளம்பேல் -
ஊக்கமது கைவிடேல் -
எண் எழுத்து இகழேல் - 
ஏற்ப்பது இகழ்ச்சி - பிச்சை பெருவது இழி செயல்
ஐயம் இட்டு உண் - 
ஒப்புரவு ஒழுகு - நற்பண்புடன் நடந்துகொள்
ஓதுவது ஒழியேல் - படிப்பதை நிறுத்திவிடக்கூடாது
ஔவியம் பேசேல் - 
அஃகம் சுருக்கேல் -

நான் இங்க சொல்லியிருக்குற விளக்கம் அனைத்தும் சரியா  என தெரியவில்லை. செய்யுளில் எழுத்துப்பிழை ஏதேனும் செய்திருந்தால் தமிழ்ப்பெரியோர் பொருத்தருளி என் தவறுகளை சுட்டிகாட்டவும்.

நன்றி : கூகிள்[படம்]

வியாழன், 17 ஜனவரி, 2013

நாசமாய்போகட்டும் தமிழ்நாடு அரசு..!!


பின்ன என்னங்க எதுவும் ஒரு அளவுக்குதான். ஒவ்வொரு வருசமும் புதுசு புதுசா சாராயக் கடையை அதிகரிச்சிகிட்டே போனா என்ன அர்த்தம். அதிகாரம் கைல இருந்தா என்ன வேணும்னாலும் செய்யலாமா..!!?

மொதல்ல என்னடானா ஒரே ஒரு சாராயக்கடைதான் இருந்துச்சு இந்திரா நகர்ல(நெய்வேலி). அதுவும் சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில. இந்த நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையா வேற அறிவிச்சிருக்காங்க. அடுத்து கொஞ்ச வருசத்துல குடிகார மூதேவிங்க எண்ணிக்கை அதிகமாகி வருமானம் அதிகரிச்சதால பக்கத்துலயே இன்னொரு சாராயக்கடையை தொடங்கி இந்த வெளங்காவெட்டிகள ஊக்குவிச்சாங்க. இந்த மூதேவிகளும் குடிச்சே நாசமாபோறாங்க.

இந்திரா நகர பாத்தீங்கனா நல்லா வளர்ந்த நகர்(Town) புறம் மாதிரி இருக்கும். ஆனா, இந்த நாசமா போற அரசாங்கம் இப்ப என்ன பண்ணியிருக்குனா மூனாவதா ஒரு சாராயக்கடையை ஆரம்பிச்சிருக்காங்க. இந்த கடை இந்திரா நகர்ல இல்ல வடகுத்துல. இதுவும் அதே நெடுஞ்சாலை ஓரமாதான் இருக்கு. இந்த கடையோட பெயர் பலகைல பதிவு எண் எழுதப்படவில்லை. வாங்கும் சாராயத்திற்க்கு உரிய இரசீதும் கொடுக்கமாட்டாங்கலாம். இந்த கடையை ஆரம்பிச்சு கிட்ட தட்ட எட்டு மாசம் ஆகுதாம். மதுக்கூடம்(Bar) ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆகுதாம். இந்த எட்டு மாசமா பதிவு எண் இல்ல, இரசீதும் இல்ல.

வடகுத்து சுத்தமான கிராமம். இங்க சாரயக்கடை தேவையா..!!? ஒருவேளை குடிகாரர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்க இந்த திட்டமா..!!?. போறபோக்க பாத்தா “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”னு சொன்ன பழமொழிக்கு இணையா “சாரயக்கடை இல்லாத ஊருடன் சகவாசம் வேண்டாம்”னு தமிழக அரசு விளம்பரப்படுத்தும் போலிருக்கு.

சமீபத்துல தமிழக முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க, தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் அனைத்து சாராயக்கடைகளும் மூடப்படும்னு. ஒருவேளை தேசிய நெடுஞ்சாலையைத் தவிர மத்த நெடுஞ்சாலைகளில் அடிபட்டு செத்தா தப்பு இல்லனு நெனச்சிருப்பாங்க போலிருக்கு.

சரி அத விடுங்க, அறிவிப்பு வரவேற்க்க கூடியதுதான். ஆனால், எங்க பகுதியில இருக்குற இந்த சாராயக்கடைகளை கண்டிப்பா மூட மாட்டாங்க. ஒருவேளை அடிக்கடி போராட்டம் பன்னி தொந்தரவு கொடுத்துகிட்டே இருந்தா, கடையை வேற இடத்துக்கு மாத்துவாங்களே தவிர சுத்தமா மூடமாட்டாங்க. ஏன்னா நம்மாளுங்க வீணாபோறதுல அவ்ளோ சந்தோசம்.

குடியை வளர்க்கும் தமிழ்நாடு அரசு நாசமாய் போகட்டும்

நன்றி : கூகிள் [படம்]

வெள்ளி, 11 ஜனவரி, 2013

தமிழர் திருநாளாம் பொங்கல் : ஒரு சிறப்பு பார்வை


பொங்கல்னு சொன்னாலே கொண்டாட்டம்தாங்க.. தை(சுறவம்) மாசத்தோட முதல் மூனு நாளும் அப்டி ஒரு கொண்டாட்டமா இருக்கும்.  ஒவ்வொரு பகுதியிலேயும் இப்பண்டிகையை கொண்டாடுவதில் சிறு சிறு மாற்றங்கள் இருக்கலாம். இந்த பதிவுல எங்க வீடுகள்ல இந்த பண்டிகையை எப்படி சிறப்பா கொண்டாடுவோம்னுதான் இங்க சொல்லப்போறன்.

பொங்கல் பண்டிகைனா மார்கழி மாசமே கலைகட்ட ஆரம்பிச்சிடும். ஒரு சில சேதிகள் கூரைவீட்லயும், கிராமத்திலேயும் இருக்கிறவங்களுக்குதான் தெரியும்.

அதாவது, ஒவ்வொரு வருசமும் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதான் பல விசயங்கள் நடக்கும். வீட்டிற்க்கு வெள்ளை அடிப்பாங்க, வீட்டுல இருக்குற எல்லா வெங்கல, பித்தளை பாத்திரங்களையும் எடுத்து கழுவி வைப்பாங்க.
 

முக்கியமா மண்செவுரால(மண்சுவர்) ஆன வீடுகளை புதுப்பிப்பாங்க.
எப்டினா, வீடு முழுக்க(தரையில)  பூசுற அளவுக்கு செம்மண்ண வெட்டிவந்து ஒரு இடத்துல கொட்டி தண்ணீர் கலந்து நல்லா மிதிச்சு ஒரு குறிப்பிட்ட பக்குவத்திற்க்கு கொண்டு வந்து அரைக்கோள வடிவத்துல அமச்சி, அதோட உச்சியில ஒரு அரை அல்லது ஒரு படி(1 lt) தண்ணீர் புடிக்குற அளவுக்கு குழிய வச்சு பூசி ஒரு மூனு, நாலு நாளைக்கு ஊற வைப்பாங்க.

மண்தரை வீடுகள் எப்போதுமே மாட்டு சானத்தால் பூசி மொழுவியிருப்பாங்க. ஊறவச்ச புது மண்ணை போடறதுக்கு முன்னாடி, வீட்டு தரையை மேலோட்டமா செத்தி எடுப்பாங்க.எங்க வீட்டுல "புல் செத்தி" இருக்கும், அத வச்சிதான் நான் தரயை செத்துவேன். தரையை மேலோட்டமா செத்தி எடுத்துட்டு சுத்தமா பெருக்கி தண்ணி தெளிப்பாங்க. தண்ணி தெளிச்சிட்டு ஊற வச்சிருக்குற மண்ணை வெட்டி வந்து தண்ணி தெளிச்சிருக்குற இடத்துல கையால அழுத்தி பூசுவாங்க.

இத்தோட வேலை முடிஞ்சிடாது, இதுக்கு அப்புறம்தான் முக்கியமான வேலையே இருக்கு. மண்ணு போட்டதுக்கு அப்புறம் தரை பாதியளவு காயும் வரை காத்திருக்க வேண்டும். பாதி காஞ்சதுக்கு அப்புறம் ஒரு கூழாங்கல்ல(bubbles) எடுத்து தரையை தீத்தனும். அப்படி செஞ்சாதான் தரையில வெடிப்பு வராது. இப்படிதாங்க புது தரை போடுவாங்க.

எங்க ஊருல பொங்கலுக்கு எல்லா வீட்டுலயும் கண்டிப்பா வண்ண பூச்சு நடக்கும். புத்தாண்டுக்கு எல்லாத்தையும் புதுசா ஆரம்பிக்கனும்னு சொல்லுவாங்கல்ல, அதுமாதிரி தை 1 லேர்ந்து எல்லாமே புதுசுதாங்க. அதாவது, பழைய பொருட்கள் எல்லாத்துக்குமே புத்துயிர் குடுப்பாங்க. [எனக்கென்னமோ ஆதிகாலத்துல தை 1 தான் புத்தாண்டா கொண்டாடியிருப்பாங்கலோனு சந்தேகம் வருது]

சரி இனி நாம நம்ம பொங்கலுக்கு வருவோம். பொங்கலை முன்னிட்டு நான்கு நாட்கள் சிறப்பு நாட்களாக இருக்கின்றன. அவை போகி, பெரும்பொங்கல், மாட்டுப் பொங்கல், கரி நாள்.

போகி :
 
தை மாதம் பிறப்பதற்க்கு முந்தைய இறுதி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகையன்று என்ன செய்வாங்கனு கேக்கறவங்களுக்கு இந்த வரிதான் பெரும்பாலானவர்களிடமிருந்து பதிலாக வரும்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"

போகி அன்னைக்கு காலங்காத்தால முதல் கோழி(சேவல்) கூவும்போது எந்திரிச்சி கொல்லிக்கு(கொல்லை, வயல்,..) போய்ட்டு "போகியோ கொத்து" போட்டுட்டு வருவோம். போகியோ கொத்துனா ஒன்னுமில்லீங்க வேப்பிலை கொத்து. கொல்லையோட எல்லா மூலையிலயும் ஒரு கொத்த போடனும்.
மொதல்ல சனி மூலையிலதான் போடனும், அப்புறமா மத்த மூலைகளில் போட்டுட்டு வருவோம்.

நாம இந்த குளிருல கொல்லிக்கு போய்ட்டு போகியோ கொத்து போட்டுட்டு வீட்டுக்கு திரும்பி வந்தா, ஒவ்வொரு வீட்டுலையும் நெருப்பு மூட்டி குளிர் காஞ்சிகிட்டு இருப்பாங்க. நாமலும் நம்ம வீட்டுக்கு வந்து கூட்டத்தோட ஐக்கியமாகிடுவோம். அப்புறம் என்ன குளிர் உடம்ப விட்டு முழுசா போயி, சூரிய வெளிச்சம் மூஞ்சில சுரீர்னு அடிக்கிற வரைக்கும் எதையாவது போட்டு எரிய வச்சிகிட்டே இருப்போம்.
அப்புறம், சாயங்காலமா அம்மன் கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வருவோம். இது நம்ம விருப்பம்தான்.
அவ்ளோதாங்க, எனக்கு தெரிஞ்ச போகி முடிஞ்சிடிச்சு.

பெரும் பொங்கல் :
தை 1 - பொங்கல் : காலைல எழுத்திரிக்கறதுலேர்ந்து நேரம் ரொம்ப சுறுசுறுப்பா போகும். தை 1ம் தேதிய நாங்க பெரும் பொங்கல்னுதான் சொல்லுவோம். பொதுவா எல்லா குடும்பங்களிலும் பெரும்பொங்கலன்னைக்கு வாச பொங்கல் வக்க மாட்டாங்க. ஒரு சில வம்சத்தினர்தான் வாசல்ல பொங்கல் வைப்பாங்க. அப்படி பெரும்பொங்கலன்னைக்கு வாசலில் பொங்கல் வைப்பவர்களை "பெரும்பொங்ககாரங்க"னு சொல்லுவாங்க. அந்த வகையில நாங்க பெரும்பொங்ககாரங்க. இதுல பெருமைபடுவதற்க்கு ஒன்னுமில்ல, ஏன்னா இது அவங்கவங்க வம்ச வழக்கப்படி நடக்குற சாதாரண நிகழ்வு.

ஏனையோர் பெரும்பொங்கலன்னைக்கு அவர்களின் குல தெய்வ கோயிலுக்கு ஒட்டுமொத்த குடும்பமாக பங்காளிகளுடன் சென்று பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு வருவர்.

சரி, இனி பொங்கல் வைக்கறதுக்கு முன்னாடி என்னென்னசெய்வோம்னு சொல்றன். காலைலேயே குளிச்சு முடிச்சு புத்தாடை போட்டுகிட்டு கொண்டாட்டம் ஆரம்பமாகிடும். வாசலில் தோண்ட போற அடுப்புக்கு மேற்கு அல்லது தெற்கு பக்கமா சின்னதா சதுர வடிவுல ஒரு மேடை அமைப்போம். மேடை-னா பெருசா எதுவும் நெனச்சிடாதீங்க, தரையிலேயே ஒரு ரெண்டு, மூனு செ.மீ உயரத்துல மண்ணால ஒரு மேடை. இந்த மேடை கிழக்கு பார்த்த முகமாக இருக்கும். இதுல சாணம் போட்டு மொழுகி கோலம் போடுவாங்க. இதன் மேற்கு பக்க இறுதியின் மையத்தில் பசு மாட்டு சாணத்தால் கூம்பு வடிவத்தில் ரெண்டு உருண்டை(புள்ளையார்) புடிச்சு வைப்பாங்க. அதுதான் சாமி.

இந்த சாமிக்கு வெத்தல பாக்கு, அருகம்புல், பூ, பழம், தேங்காய், கரும்பு-லாம் வச்சு படச்சிட்டு, வாசலில் அடுப்பு தோண்ட ஆரம்பிப்பாங்க. கடந்த முறை தோண்டிய அதே இடத்துலதான் இப்பவும் தோண்டுவாங்க.

அடுப்பு தோண்டிட்டு, வெறுவ வச்சி புதுசா வாங்கி வச்சியிருக்குற ரெண்டு மண் பானை, ஒரு மண் சட்டிய வச்சி கற்ப்பூரத்தால அடுப்பு மூட்டுவாங்க. இந்த பானை, சட்டியோட கழுத்துல மஞ்சள் கொத்து கட்டுவாங்க. ஒரு பானை பெருசாவும், ஒரு பானை சின்னதாவும் இருக்கும். பெரிய பானையில வெண்பொங்கல், சின்ன பானையில சக்கரைப் பொங்கல், சட்டியில பரங்கிக்காய் கூட்டு வைப்போம்.

பானையில சோறு வேகும்போது பொங்கி வழியும. அப்படி பொங்கும்பொது நாங்க “பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்” அப்படினு சத்தம்போட்டு சொல்லுவோம். அப்பதான் பக்கத்துல இருக்குற எங்க சித்தப்பா, பெரியப்பா வீடுகளுக்கெல்லாம் தெரியும் எங்க வீட்டுல பொங்கல் பொங்கிடிச்சுனு.

பொங்கல் வெந்ததுக்கு அப்புறம் பானை, சட்டியை அடுப்புலேர்ந்து எறக்கி சாமி பக்கத்துல வச்சி, அதுலேர்ந்து சக்கரைப் பொங்கல் ஒரு பல்லயம், வெண்பொங்கல் ஒரு பல்லயம் எடுத்து சாமி முன்னாடி வச்சி மறுபடியும் படச்சிட்டு, அப்புறமா நாங்க சாப்பிடுவோம். சாமிகிட்ட வச்ச கரும்பை படச்சதுக்கு அப்புறம்தான் தொடவே விடுவாங்க. பொங்கல் வைக்கறது அந்தி சாயறதுக்கு முன்னாடியே வச்சிடனும்.

மாட்டுப் பொங்கல் :
தை 2 – மாட்டுப் பொங்கல் : கொண்டாடட்டத்தோட மூனாவது நாள். மாட்டுப் பொங்கலன்னைக்கு இருக்குற கொண்டாட்டம் கொஞ்சம் வித்தியாசமானது. ஆமாங்க, அன்னைக்கு மாட்ட கழுவி குளிப்பாட்டிவிடனும், மாட்டோட கழுத்துல போடறதுக்கு ஒரு மாலை தயாரிக்கனும். அந்த மாலையில என்னென்ன இருக்கும்னா, பொங்க பூ, ஆவாரம் பூ, வேப்பிலை, மா இலை. இதெல்லாம் வேணும். இங்க மாவிலையும், வேப்பிலையும் கெடச்சிடும் ஆனால் பொங்க பூவும், ஆவாரம் பூவும் கெடைக்காது. ஏன்னா, ஊருல இருக்கிறவன் எல்லாம் இதத்தான் தேடிகிட்டு இருப்பான். நமக்கு முன்னாடியெ பல பேரு பொங்க பூவும், ஆவாரம் பூவும் எங்க இருக்குனு செடியை தேடி புடிச்சி ஒடிச்சிகிட்டு போய்டுவான்.
எங்களுக்கு அந்த பிரச்சனை இருக்காது, நாவ பழம் பறிக்கறதுக்கு நாவ மரம் எங்க இருக்குனு தேடி தோப்புகுள்ள(முந்திரி) சுத்தும்போது ஆவாரம் செடியை பாத்து வச்சிருப்போம். தேவப்படும்போது போய் ஒடிச்சிகிட்டு வந்துடுவோம். எல்லத்தையும் தேடி புடிச்சி கொண்டு வந்து மாலை கட்டி வச்சிடுவோம்.
அதுக்கு அப்புறம் நல்ல நேரம் வந்ததும் வாசல்ல இருக்குற அடுப்புல சக்கரை, வெண் பொங்கல் வச்சு வெந்ததும் சாமிக்கும், மாட்டுக்கும் பல்லயத்துல பொங்கல் வச்சு படச்சிட்டு நாங்க சாப்பிடுவோம். எங்க மாடும் பொங்கல் சாப்பிடும்.
படைக்கும்போது, மாட்டுக்கு நாங்க செஞ்சு வச்ச மாலையை போட்டு பொட்டு வச்சி தீபாராதனை காட்டுவோம். மாட்டுப் பொங்கலன்னைக்கு மாடு மிரட்டனும். காளை மாடா இருந்தா விரட்டி புடிச்சி விளையாடலாம். ஆனால் எங்ககிட்ட இருந்தது பசு மாடு. ஆனாலும் மிரட்டுவோம். எப்படினா, மாட்டுக்கு தீபாராதனை காட்டிகிட்டு மாட்டை சுத்தி வரும்போது எங்க அம்மாவுக்கு பின்னாடியே எங்க வீட்டுல இருக்குற ஒரு பித்தளை தாம்பூலத்தை எடுத்து கைல வச்சிகிட்டு ஒரு குச்சியால தட்டிகிட்டே மாட்டை சுத்தி வருவோம். மாடு சத்தத்துல மிரளும். இப்படிதான் நாங்க மாடு மிரட்டுவோம்.
பசு மாடு சரி, வண்டி மாட்டுக்கு என்ன செய்வோம்னு சொல்றன் கேளுங்க. எங்க தெருவுல எங்க சித்தப்பா ஒருத்தர் வீட்டுல வண்டி மாடு இருந்தது. பொங்கல் பொங்கி சாமிக்கும் மாட்டுக்கும் படச்சி முடிச்சதும், மாட்ட வண்டியில பூட்டிகிட்டு தெருவுல இருக்குற சின்னப் பசங்கல்லாம் வண்டியில ஏத்திகிட்டு ஒரு சுத்து சுத்தி வருவோம். அப்படி சுத்தி வரும்போது, மாமன் மச்சான் உறவு முறையானவர்களது வீடு வரும்போதும், ஊரு முறைக்கு மாமன் மச்சான்னு கூப்பிட்டுக்குறவங்க வீடு வரும்போதும் ஒரு வாசகம் சொல்லி வம்புக்கு இழுப்போம். அது செம கொண்டாட்டமா இருக்கும். அந்த வாசகம் இதோ.

“போகியும் போச்சு, பொங்கலும் போச்சு பொண்ணு குடுறா XXXXXXXXX

இத்தோட மாட்டுப் பொங்கல் முடிஞ்சிடிச்சு.

அடுத்த நாள் கரி நாள். கரி நாள் பொழுது விடியறதுக்கு முன்னாடி செய்ய வேண்டிய முக்கியமான வேலை ஒன்னு மிச்சமிருக்கு. அது என்னனா, வாசல்ல தோண்டியிருக்குற அடுப்ப மூடனும். மாட்டுப் பொங்கல் முடிஞ்சு கரி நாள் ஆரம்பிக்கறதுகுள்ள அடுப்பை மூடிவிடனும். அப்படியே சும்மா மண்ண தள்ளி மூடிடக்கூடாது, சில்லரை காசு எதாவது அடுப்புல போட்டு அதுக்கு மேலதான் மண்ண தள்ளனும்.

கரி நாள் :
தை 3 – கரி நாள் : நாட்காட்டியில உழவர் திருநாள்-னு போட்டிருக்கும். ஆனால், நாங்க கரி நாள்-னு தான் சொல்லுவோம். கரி நாளுக்கு என்ன செய்யனும்னா பொங்கலுக்கு வாங்கின புத்தாடையை போட்டு அழுக்காக்கனும். அதாங்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் என அனைவருக்கும் விளையாடுவதற்க்கு முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ள நாள்.
எங்க வட்டாரத்துல கபடி, கோட்டி புல், ஓட்டப் பந்தயம், கும்மி.. இப்பலாம் மட்டைப் பந்துனு நாள் முழுக்க கொண்டாட்டம்தான். இப்பலாம் யாரும் கும்மி அடிக்கறதில்லை ஒரு சில ஊருல அதுவும் சில தெருக்கள்ல தான் கும்மி அடிக்கறாங்க.
எங்க தெருவுல மொத்தம் ரெண்டே குடும்பம்தாங்க. நான் ஆறாவது படிக்கும்போது எங்க குடும்பத்துல 12 வீடும், இன்னொரு குடும்பத்துல 6 வீடும் இருந்துச்சு. ஒவ்வொரு வீட்டுலயும் பசங்க பொண்ணுங்கனு நெறைய பேரு இருப்பாங்க. அதனால அப்பலாம் எங்க தெருவே செம கொண்டாட்டமா இருக்கும். அப்பலாம், என்ன மாதிரியான சின்ன பசங்களையெலலாம் நடுவுல உக்கார வச்சிட்டு பாட்டு பாடிகிட்டு கும்மி அடிப்பாங்க.
கரி நாள் எந்த அளவுக்கு கொண்டாட்டமான நாளோ அதே அளவுக்கு ஆபத்தான நாளும்தான். கரி நாள் அன்னைக்கு அடிதடி, வெட்டு குத்தெல்லாம் சர்வ சாதாரணமா நடக்கும். பொதுவா கபடி விளையாட்டுலதான் பிரச்சனை அதிகமா இருக்கும். எவ்வளவுதான் கொண்டாட்டமா இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள் இது.

குறிப்பு :
இந்த பதிவில் எங்கள் வட்டாரத்தில் பேசுகிற மாதிரியான வார்த்தைகள் நிறைய பயன்படுத்தியிருப்பதாக நினைக்கிறேன். புரியாத வார்த்தைகளுக்கு விளக்கமளிக்க காத்திருக்கிறேன்.


அன்புத் தமிழர் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
அன்புத் தமிழர் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

நன்றி : கூகிள் [படம்]