செவ்வாய், 30 ஜூலை, 2019

சிறுதுளி சாதனை: 3 நிமிடங்களில் 10000 செடிகள் "பாரதி வனம்"



ஜூலை 25, 2019 எல்லோரையும்போல் அல்லாமல் ஒரு உயரிய பெருஞ்செயலில் பங்குபெறப்போகும் மகிழ்வோடு மலர்ந்தது.

ஆம், 

கோவையில் குளம், ஏரி, நொய்யல் ஆறு போன்ற நீராதாரங்களை புனரமைத்துவரும் அரசு சாரா அமைப்பான சிறுதுளி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் "மியாவாக்கி" முறையில் 5 நிமிடங்களில் 10000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். மரக்கன்றுகளை நடுவதற்காக பாரதியார் பல்கலையில் கீழ் இயங்கும் பல்வேறு கல்லூரிகளுக்கும், தன்னார்வலர் அமைப்புகளுக்கும், RAF-க்கும், வனத்துறையினருக்கும் மற்றும் பல அமைப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.

"மியாவாக்கி" என்பது குறுகிய காலத்தில் மண் சார்ந்த மரக்கன்றுகளை கொண்டு ஒரு வனத்தையே உருவாக்கும் முறையாகும்.

5000 ஆர்வளர்கள் மாணவர்களைக் கொண்டு நபருக்கு 2 மரக்கன்றுகள் வீதம், 5 நிமிடங்களில் 10000 மரக்கன்றுகளை நடுவதுதான் திட்டமாகும். இத்திட்டத்தில் உருவாக்கப்படும் வனத்திற்கு "பாரதி வனம்" எனப் பெயரிட்டிருந்தனர். 

பாரதி வனத்தை உருவாக்க வரும் மாணாக்கர்களையும் ஆர்வளர்களையும் ஒருங்கிணைப்பதற்காக ஒரு குழு அமைத்தார்கள். அக்குழு உறுப்பினர்களாகத்தான் நானும் நான் பணிபுரிந்துகொண்டிருக்கும் நிறுவனத்திலிருந்து (Hoffensoft) மேலும் 10 பேரும் சென்றிருந்தோம். இக்குழுவில் சிறுதுளி உறுப்பினர்களோடு Pricol நிறுவனத்தினர்கள் 20க்கும் மேற்பட்டோரும் இடம்பெற்றிருந்தார்கள்.  
இந்நிகழ்வில் பங்குபெற வருவோரை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும்? யார் யார் எங்கே நிற்க வேண்டும்? எந்த மாதிரியான வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்ல வேண்டும்? உள்ளிட்ட பல சேதிகளை முடிவு செய்வதற்காக முதல் நாள் பாரதியார் பல்கலையில் குழுமினோம். 

பாரதி வனம் அமையப்போகும் இடத்தை பார்வையிட்டோம்.

அப்பகுதி பல்கலையின் நுழைவுவாயிலிலிருந்து உட்புறத்தில் சுமார் 1 கி.மீ. தொலைவில் இருந்தது. பாரதிவன பகுதியை சுற்றிலும் மிதமான புதர்களும் சற்று இடைவெளிகளுக்கிடையில் மரங்களும் இருந்தன. வனத்தில் மேற்கிலிருந்து மருதமலையின் இடையில் இருந்தபடி அழகன் முருகன் சுப்பிரமணியன் அருள்பாலித்துக்கொண்டிருந்தார். வடக்குப்புறத்தில் புதர்களுடனேயான ஒரு ஓடை நீரற்ற நிலையில் உறங்கிக்கொண்டிருந்தது. கிழக்கில் குறிப்பிடும்படி ஏதுமின்றி சுற்றுசுவரும் தெற்கில் பல்கலையில் நிலப்பரப்பும் இருந்தது.

அங்கே,

செடிகள் நடப்படும் பகுதியில் ஒரு சீமைக் கறுவை மரமும் வேறு சில மரங்களும் இருந்தன (கருவேல மரம் என நினைக்கிறேன்). 10000 குழிகளையும் தோண்டியிருந்தார்கள். நிலம் 10 கட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அவைகளுக்கு A முதல் J வரையிலென பெயரிட்டிருந்தார்கள். ஆங்காங்கே செடிகளும் வைக்கப்பட்டிருந்தன. சொட்டு நீர் பாசன குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாரதியார் பல்கலை மாணவர்கள் சிலர் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த செடிகளை குழிகளில் இட்டுக்கொண்டிருந்தார்கள். எதிர்புறம் கிழக்கில் ஒரு சிறிய மேடை அமைத்துக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்து கொடியசைத்ததும் செடிகளை நடவேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. 

முதல்நாள், நெடுக்குவாட்டில் சொட்டு நீர்பாசன குழாய்களுக்கு இணையாக இரட்டை வரிசையிலிருந்து முன்னோக்கி நபருக்கு வலதுபுறமாக தலா இரண்டு செடிகளை நட செய்ய வேண்டும் என இறுதி  செய்யப்பட்டு அடுத்தநாள் முடிந்த மட்டும் சீக்கிரமாக வருவதென கிளம்பினோம்.

அடுத்தநாள்,

காலை அலுவலகம் சென்று, இருக்கும் பணிகளை இயன்ற மட்டும் முடித்து மதியம் 1 மணியளவில் அலுவலகத்திலிருந்து புறப்படுவதாக முடிவு செய்தோம். ஆனால், மதிய உணவு வருவதற்கு சற்று தாமதம் ஆனதால், 1.30 மணிக்குதான் கிளம்ப முடிந்தது. 2 மணிக்கெல்லாம் பல்கலைக்கு வந்துவிட வேண்டும் என நினைத்திருந்தோம், ஆனால், 2.15 மணிக்குதான் வர முடிந்தது. 

பல்கலைகழகத்தில் ஏற்கனவே ஏராளமான மாணாக்கர்கள் குழுமியிருந்தார்கள். 3 மணிக்கு கலையரங்கத்தில் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். கலையரங்கத்தில் பேச்சுரைகள் முடிந்து மாலை மணி 4.10 அளவில் செடிகளை நடுவதாயிருந்தது. நாங்கள் நேரடியாக வன களத்திற்க்கு சென்றோம். அங்கே ஒருங்கிணைப்பாளர்களுக்கான தன்னார்வலர் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு ஆளுக்கொரு கட்டத்தில் சென்று நிற்கலானோம். நான் முதலாவது கட்டத்தில் "A" நின்றேன். 

மாணவர்கள் கூட்டங்கூட்டமாக வந்துகொண்டிருந்தார்கள். எதிர்புறமைந்த மேடையிலிருந்து ஒலிப்பெருக்கியில் கல்லூரியின் பெயர்களை கூறி அவர்களுக்கான கட்டத்தை அறிவித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அறிவிப்புக்கும் மாணவர்கள் வயல்வெளியில் ஓடைகளின் கரைகளோரம் அமைந்திருக்கும் பனஞ்சாரைகளைப் (பனைமர வரிசை) போல் சாரை சாரையாக அவர்களுடைய கட்டங்களை நோக்கி சென்றார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே  ஒருங்கிணைப்பாளர்களாக நாங்கள் நின்றிருந்தோம். 

தொடக்கத்தில் 3500 மாணவர்கள் வரையில்தான் வருவார்கள் என்றே எண்ணியிருந்தோம். ஆனால், நேரம் செல்ல செல்ல 5000-ஐ கடந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். ஒரு நேரத்தில் சில கட்டங்களில் 100, 300 என ஆட்கள் பற்றாக்குறை இருந்தது. ஆனால், அதுவும் சற்று நேரத்தில் நிறைவடைந்தது. செடிகளை நடுவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டேயிருந்தது. சில மாணவர்கள் வெளியேறிச்சென்றார்கள். சிலர் புதிதாக வந்தார்கள். மாணவர்கள் மட்டுமல்லாது சில தன்னார்வலர்களும் வந்திருந்தார்கள். கிட்டதட்ட எல்லா செடிகளுக்குமே ஆட்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள். மேலும் ஒரு 500க்கும் மேற்பட்டோர் கலையரங்கத்திலிருந்து வந்துகொண்டிருந்தார்கள். 

ஏற்கனவே RAF-ம் வன காவற் படையினரும் வந்திருந்தார்கள். கலையரங்கத்தில் நிகழ்ச்சி முடிந்து சிறுதுளியின் நிறுவனர், 'சேர்மேன்' என எல்லோரும் வந்தனர். சற்று நேரத்தில் கொடி அசைக்கப்பட்டது. 

செடிகளை நட்டவுடன் இரண்டு கைகளையும் உயர்த்தி காண்பிக்க சொல்லி ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள் விறுவிறுவென செடிகளை நட்டனர். சற்று நேரத்தில் சிலர் மட்டும் ஆங்காங்கே தங்களின் கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்தனர். கொடி அசைத்து முடித்த மூன்றாவ்து நிமிடத்தில் எல்லோருமே தங்களின் கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்தனர். 

5 நிமிடங்களில் 10000 செடிகளை நடுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி மூன்றே நிமிடங்களில் பெரும் வெற்றி பெற்றது. 

செடிகளை நட்டு முடித்ததும் ஒவ்வொரு குழுக்களாக கலைந்து சென்றனர். வனத்துறையினரும் சிறுதுளி குழுவினரும் செடிகளை சுற்றியிருந்த நெகிழிப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர் மேலும் ஒவ்வொரு செடியும் சரியான முறையில் நடப்பட்டிருக்கிறதா என சரிபார்த்துக்கொண்டிருந்தனர். மேடையிலிருந்து ஒவ்வொரு கல்லூரிக்கும், பள்ளிக்கும், அமைப்புகளுக்கும் நன்றி செலுத்திக்கொண்டிருந்தார்கள். 

பத்திரிக்கையாளர்கள், சீருடை புடவை அணிந்திருந்த ஒரு குழுவினரை செடிகளை நடுவதைப் போல் நடிக்க வைத்து படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். பாவம், செடிகளை நடும்போது எங்கே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் எனதான் தெரியவில்லை. ஏனோ ஊடகங்களுக்கு கவர்ச்சியாய் ஒரு ஜோடிப்பு தேவைப்பட்டிருக்கிறது!

எல்லோரும் சென்றபின் சிறுதுளி குழுவினருடன் சில ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டு நாங்கள் எங்கள் அலுவலகத்திற்கு புறப்பட்டோம்.

அன்றைய தினம் அவ்வளவு அருமையாக அமைந்தது. சில நற்செயல்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்க்கப்பட்டவர்களில் ஒருவனாக நான். 

2 கருத்துகள்:

  1. நான் இந்த நிகழ்விற்கு எப்படியாவது வரவேண்டும் என யோசித்தேன் ஆனால் அதற்கான சூழலை ஏற்படுத்திக்கொண்டு நிகழ்விற்கு வரயிலவில்லை ஆனால் இந்த பதிவு என்னை அச்சூழலுக்கே அழைத்து சென்றுவிட்டது மிக்க நன்றி :))

    பதிலளிநீக்கு