சனி, 18 ஜூன், 2016

கனவை விதைப்பவன் எனும் கவிதை நூல்


நூலின் பெயர்     : கனவை விதைப்பவன்
ஆசிரியர்          : கணேஷன் குரு
வகை             : கவிதை (பொது)
விலை            : ரூ.285 /-
நூலின் அட்டை    : 


இது இந்நூலுக்கான விமர்சனம் அல்ல. தொடக்கத்தில்(1 ஆண்டிற்கு முன்) விமர்சனம் எழுத வேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால், ஒரு கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை என்பதை நூலினை வாசிக்க வாசிக்க உணர்ந்துகொண்டேன்.

சாதாரன உரைநடையைப் போன்று கவிதைகளை வாசிக்கவியலாது. ஒரு கவிதையின் ஆழத்தை இனிமையை அதன் சாரத்தை முழுமையாக உணர அக்கவிதையோடு அக்கவிதை எழுதப்பட்ட சூழலோடு இரண்டற கலந்தால் மட்டுமே முடியும். பொதுவாக ஒவ்வொரு கவிதையும் அதன் முடிவில் நம்மை அத்தகைய சூழலுக்கு இட்டு சென்றுவிடும்.

மனம் ஒன்றி இலயித்து ஒரு மகிழ்ச்சி ததும்பும் கவிதையை வாசிக்கும் போது நம் மனமும் அதனூடே பயணித்து நம்மையும் அம்மகிழ்ச்சி கடலில் மூழ்கச் செய்யும் அவ்வானந்தத்தை சொற்களால் சொல்லிவிட முடியாது.

அதேபோல், புதுக்கவிதைகளில் “ஹைக்கூ” எனும் ஜப்பானிய கவிதை வடிவம், ஒரு எளிய வாக்கியத்தை மிக அழகாக பொருளுள்ளதாக தருவது.

ஏன்
இந்தப் பறவைகளை
சுட்டு
வீழ்த்துகிறார்கள்
கட்டற்ற
சுதந்திரத்தின் குறியீடாய்
எதுவும்
இருக்கக்கூடாது
என்றா?

ஒவ்வொரு புதுக்கவிதையும் எண்ணற்ற சங்கதிகளை உட்பொதிந்து வருகின்றன. அத்தகைய கவிதைகளின் உள்அர்த்தங்களை அறியும் போது கவிதையின் வலிமையையும் சேர்ந்தே உணரலாம். மேலயுள்ள கவிதையை படித்தவுடன் மனதில் சுதந்திரம் குறித்த பல்வேறு எண்ணங்கள் மனதில் எழும், அதே நேரம் சுட்டு வீழ்த்தும் மனிதனின் மீது ஒரு கோவமும், வீழ்த்தப்படும் பறவையின் மீது இரு இறக்கமும் தோன்றும். இப்படியாகத்தான் கவிதைகள் தாக்கத்தை தருகின்றன.

கவிதைகளில் மிக முக்கியமானது மறைவாய் சொல்லப்படும் சேதிகள்தான். மறைத்து சொல்வதால்தான் கவிதைகள் அழகு பெறுகின்றன. உண்மையில் கவிதைகள் நம் கற்பனைகளை விசாலமாக்குகின்றன. கீழுள்ள இக்கவிதையை பாருங்கள் :
“எனக்கு
நானே
எதிரி

நீ
வழிப்போக்கன்”

மிக எளிமையான ஒரு ஒற்றை வரியில் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது பாருங்கள். இதற்காக இக்கவிதை ஆசிரியரை எவ்வளவு போற்றினாலும் தகும். நிச்சயமாக இக்கவிதை அத்தனை மனிதருக்கும் 100 விழுக்காடு முழுமையாக பொருந்திப்போகிறது. “என் செயலகளே, எனக்கான நன்மை தீமைகளை முடிவு செய்கின்றன.”
இதோ பின்வரும் இக்கவிதையை காணுங்கள் :
“நீங்களெல்லாம்
உயர்ந்து விட்டதால்
மௌனம் போர்த்தி
பவிசாய்த் திரிகிறீர்கள்.

இப்போதுதான் விழித்துக்கொண்ட நான்
மௌனித்திருக்க முடியாது
கத்திக் கொண்டிருக்கிறேன்”
இக்கவிதையை ஒவ்வொருவரும் தன் வாழ்வில் நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள் என்றே கருதுகிறேன். நானும் சில பல சமயங்களில் கத்திக்க்கொண்டேயிருக்கிறேன்.

“திருமலர்” எனும் தலைப்பிட்ட ஒரு கவிதையில் உண்மை எங்கே எப்படியிருக்கிறது என கவிஞர் வெகு அழகாக வடித்திருக்கிறார். கவிதை இப்படிதான் தொடங்கும் :
“ஒரு பொய்க்கு முன்னால்
உண்மை மௌனமாக இருக்கிறது
... ... ...”
இந்த கவிதையை படித்தவுடன் எனக்கு தோன்றியது, “உண்மையை கொன்றுவிட்டு நாம் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறோம்”

அடுத்து “வனம்” எனும் கவிதையில் நாகரிகம் எனும் பெயரில் நாம் எவ்வளவு கொடூரமாக மாறிவிட்டிருக்கிறோம் என்பதை மிக ஆழமாக தெளிவாக உணர்த்தியிருக்கிறார். அக்கவிதையின் தொடக்க மற்றும் முடிவு வரிகள் :

“அவனை வனத்தில் கண்டுபிடித்தார்கள்
மனிதர்களைக்கண்டு
பயந்து
புலிகளுக்குப்பின் பதுங்கியவனை,
தோட்டாக்களை உபயோகித்து
விரட்டிப்
பிடித்தார்கள்.
...
...
...
...
நகரம் தப்பி
பிறந்த வனம் தேடி ஓடினான்.
வனம் காணவேயில்லை.
எங்கும்
‘விற்பனைக்கு இடம்’ என
வார்த்தைகள்
முளைத்துக் கிடந்தன.”

அடுத்து கடவுளை பலர் எங்கெங்கோ தேடியிருப்பர், நிம்மதி தேடி அலைந்திருப்பர். அவர்களுக்கெல்லாம் கடவுளின் தரிசனம் கிடைத்திருக்குமா என்றால் அதற்கு இல்லை/முடியாது என்பதாகதான் பதில் இருக்கும். ஆனால், இந்த கவிஞர் கடவுளை கண்டுவிட்டிருக்கிறார். கடவுளிடம் பேசியிருக்கிறார். அவ்வப்போது காணவும் செய்கிறார். இந்த கவிதையை படித்த பின் நீங்களும் கடவுளை காணும் பாக்கியம் வாய்க்கலாம்.! “இளைஞர்களின் கடவுள்” எனும் தலைப்பில் அக்கவிதை இடம்பெற்றிருக்கும்.

இதோ அடுத்து கவிதை “சாயல்” எனும் தலைப்பில், ஒவ்வொருவருக்குமான சாயல் இப்படிதான் இருக்கிறது. ஆனாலும் சிலரிடம் போலி வேடமும் தென்படும். சரி கவிதையை காணலாம்.

“எனக்கென்று குடும்பம்
எனக்கென்று உறவு
எனக்கென்று குலதெய்வம்
எனக்கென்று சாதி
எனக்கென்று மதம்
எனக்கென்று மொழி
எனக்கென்று நாடு
எனாக்கென்று நாகரீகம்
எனக்கென்று வரலாறு

இதில் எதுவும் என் தேர்வல்ல
என்றாலும் இருக்கட்டும் சாயல்”.

அடுத்ததாக “காதல்” எனும் தலைப்பிட்டு எழுதியிருக்கிறார் பாருங்க ஒரு கவிதை.!! ஒரு சின்ன சேதி, அதை எவ்வளவு அழகாக சொல்கிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது கவிதை. இந்த கவிதையில் கவிஞரின் இரசனையை நிரம்ப இரசிக்கிறேன்.

“பனிரெண்டாவது
தளத்தின்
கண்ணாடித்
தடுப்புகளைத்
தாண்டி
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்.

எல்லாம்
அழகாய்
தெரிகிறது
எல்லாம்
ஒழுங்காய்
நகர்கிறது.

தூரத்திற்குள்
இப்படி
ஒரு
அற்புதத்தை
கணித்
திருக்கவில்லை.”

இங்கு “எத்தனை காலம்தான்” எனும் தலைப்பிட்ட கவிதையின் கடைசி சில வரிகளை மட்டும் தருகிறேன்.
“...
...
...
நாட்கள் கடந்தன –
நல்ல கல்வி இல்லை
நல்ல மருத்துவம் இல்லை
நல்ல சாலை இல்லை
நல்ல உணவு இல்லை
நல்ல வேலை இல்லை
நல்ல பாதுகாப்பு இல்லை
நல்ல வாழ்க்கை இல்லை
நல்ல என்று எதுவுமே இல்லை
ஆனால், எனக்கொரு அரசாங்கம் இருக்கிறது.”

இறுதியாக “மொழி” எனும் தலைப்பிட்ட கவிதை. முழுமையாகவே தருகிறேன். என்னை மிகவும் ஆட்கொண்ட, பிடித்துவிட்ட கவிதைகளில் ஒன்றென கூறலாம். கவிதை இதோ:     

“என் தேசத்தின் மொழி, என்னுடையதல்ல
என் தேசிய கீதத்தின் மொழி, என்னுடையதல்ல

என் நாட்டின் கொடி, என்னுடையதல்ல
என் கொடியின் அடையாளம், என்னுடையதல்ல

என் நாட்டின் முதன்மை மந்திரிகள் பலரும், என் மொழியல்ல
என் நாட்டின் முதற்குடிமகன், என் மொழியல்ல

ஆயிரம் ‘இல்லைகள்’, என்னை ஆள்கின்றன
இலவசமாய் தொல்லைகள் தருகின்றன

ஆரியம், திராவிடம், தலித்தியம்...
என்று நூறு கதைகள் சுழல்கின்றன-
தமிழை குழி தோண்டி புதைக்கின்றன

முப்பாட்டன் பெருமை பேசி,
சாதிய பட்டம் சுமந்து,
சோழனின் எல்லை வியந்து,
கனவுக்குள் வாழ்கிறேன், இது என்னுடைய
வாழ்க்கையல்ல.
என் மொழியின் கீதமும்,
என் அடையாளத்தின் கொடியும்,
எனக்கான நாடும்,
என் இனத்தின் தலைமையும்,
எழுகவே என்று
என்னுயிரே முழங்கு.”

இப்படியாக பல கவிதைகளை கொண்டுள்ளது இப்புத்தகம். மேலும் பல கவிதைகளை சுட்டிக்காட்டவே விரும்புகிறேன். ஆயினும், பதிவின் அளவு மேன்மேலும் பெரிதாகிவிடும் என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.


நூல் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய இடம் :
Notion Press
5 Muthu Kalathy Street, Triplicane,
Chennai – 600 005.

இணையத்தில் பெற பின்வரும் இணைப்பை சொடுக்கவும்.
Flipkart.com, Amazon.in, amazon.com, paytm உள்ளிட்ட தளங்களின் மூலமாக பெற மேற்கூறிய இணைப்பில் இணைப்பு உள்ளது.

ஆசிரியரின் முகநூல் : https://www.facebook.com/ganeshan.guru?fref=nf6 கருத்துகள்:

 1. எனக்கென்று குடும்பம்
  எனக்கென்று உறவு
  எனக்கென்று குலதெய்வம்
  எனக்கென்று சாதி
  எனக்கென்று மதம்
  எனக்கென்று மொழி
  எனக்கென்று நாடு
  எனாக்கென்று நாகரீகம்
  எனக்கென்று வரலாறு

  இதில் எதுவும் என் தேர்வல்ல
  என்றாலும் இருக்கட்டும் சாயல்

  - எனக்கு பிடித்த கவிதை.... இதில் ஏதேனும் ஒன்றை பற்றிக்கொண்டு மற்றவற்றை எதிர்ப்பதே இன்றைய கள அரசியலாக உள்ளது.... ஆனால் எல்லோருக்கும் இவை எல்லாமும் உண்டு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

   உண்மைதான். பெரும்பான்மையானவர்களிடத்தில் இவற்றில் ஒன்றை மையப்படுத்தியே இன்றைய கள அரசியல் இருக்குகிறது.

   நீக்கு
 2. அருமை.பதிவின் நீளம் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும். முழுமையாக எழுதுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   பெரிய பதிவுகளை படிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டிருக்கிறது என எனக்குள் ஒரு எண்ணம் இருக்கிறது அதன் வெளிப்பாடுதான் இப்படி..

   நீக்கு