வெள்ளி, 10 ஜூலை, 2015

பா.ம.க எனும் அரசியல் கட்சி - நேர் எதிர் முரண்.!

சில/பல மாதங்களுக்கு முன்பு வேறொரு தலைப்பில் கட்டுரையின் ஒரு பகுதியாக வரவேண்டிய பதிவு. இன்று தனிப்பதிவாக வெளியிடுகிறேன்.

பா.ம.க குறித்த என்னுடைய முந்தைய பதிவு : நான் பா.ம.க ஆதரவாளன்.. ஏன்?

பா.ம.க :
பிற கட்சிகளைப் போல் வேறொரு இயக்கத்திலிருந்து பிரிந்த கட்சி அல்ல பா.ம.க. இது ஒரு முதன்மைக் கட்சி. பா.ம.க விலிருந்து பிரிந்து தற்சமயம் தமிழக வாழ்வுரிமை கட்சி எனும் கட்சி பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களால் நிறுவப்பட்டுள்ளது.

பா.ம.க வின் வளர்ச்சி பாதை சற்று வித்தியாசமானது. கொஞ்சம் கொஞ்சமாக 1999 வரை நல்ல முன்னேற்றத்தைக் கொண்டிருந்த பா.ம.க., அதன் பிறகு மக்களவைத் தேர்தல்களில் சரிவை காண ஆரம்பித்தது, தனது கூட்டனி கொள்கைகளால்.

2009ம் ஆண்டு போட்டியிட்ட 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தோல்வியை தழுவி பேரிடியை சந்தித்தது. மக்களவைத் தேர்தல்களில் பா.ம.க வின் வாக்கு விகிதம் குறைந்து வந்த போதிலும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்கு விகிதம் தொடர்ச்சியாக அதிகரிக்கவே செய்திருக்கிறது.

2009-ம் ஆண்டு சந்தித்த படுதோல்விக்கு பிறகு பா.ம.க வின் நிலை பலரால் கேலிக்குள்ளாக்கப்பட்டது. பா.ம.க-வின் கதை முடிந்துவிட்டது இனி பா.ம.க வால் எழவே முடியாது என்று பலவாறாக பேச்சு அடிபட துவங்கியது. பா.ம.க-விற்கு நெருக்கடி நிலை. தனது நிலையை, செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக பொன்னாகரம் இடைத்தேர்தல் அமைந்தது.

வைகோ-வைப் போல வாய்ப்பை நழுவ விடாமல் மிகச் சரியான ஒரு முடிவை எடுத்து அரசியல் விமர்சகர்கள் அனைவரையும் வாயடைத்து திரும்பி பார்க்க வைத்தார் மருத்துவர் இராமதாசு. உண்மையிலேயே அத்தேர்தல் பா.ம.க விற்க்கு புத்துயிர் அளிப்பதாகவே இருந்தது. அவ்விடைத்தேர்தல் முடிவு பா.ம.க வினர் அனைவரையும் ஒரு செருக்குடனேயே பேச வைத்தது.                  

நிறைகள்:

பொதுவாக பா.ம.கவின் நிறைகள் அனைத்துமே ஊடகங்களால் மறைக்கப்பட்டவை மற்றும் திரிக்கப்பட்டவைகள் தான்.

பா.ம.க-வின் சில போராட்டங்களும் சாதனைகளும் :

  • *         பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வு இரத்து போராட்டம்
  • *         இலாட்டரி சீட்டு ஒழிப்பு போராட்டம்
  • *         மது ஒழிப்பு போராட்டம்
  • *         சமச்சீர் கல்விக்கான போராட்டம்
  • *         தமிழகம் முழுவதும் அகல இரயில்பாதை கொண்டுவந்தது
  • *         சேலம் ‘இரயில்வே’ கோட்டம்
  • *         அயோத்திதாசர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்
  • *         மத்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் தலித்களுக்கு இடஒதுக்கீடு
  • *         108 அவசர ஊர்தி சேவை திட்டம் அமலாக்கம்
  • *         கிராமப்புற சுகாதாரத் திட்டம்
  • *         பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடைச்சட்டம் ஏற்படுத்தியது
  • *         புகை, மது போன்ற பொருட்களில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்தது
  • *         தமிழக்த்தில் 2000 அரசு மதுபான கடைகளை மூட நீதிமன்றம் வரை போராடி வென்றது.
  • *         மேலும் பல போராட்டங்கள் சாதனைகள்...


(குறிப்பு : இத்தனை போராட்டங்களும் சாதனைகளும் ஆட்சிக் கட்டிலில் இல்லாமலே இணை கட்சியாக இருந்தே சாதித்தவைகள் என்பது கவனிக்கத்தக்கது.)

இப்போராட்டங்கள் வெறும் போராட்டங்களாக நின்றுவிடாமல், போராட்டங்களை வெற்றி பெற செய்திருக்கிறது பா.ம.க

குறைகள்:

பா.ம.க வைப் பொறுத்தமட்டில் சொல்லப்படும் குற்றசாட்டுகள் என பார்க்கும்போது மூன்று குற்றசாட்டுகள்தான் பெரும்பாலான எல்லோராலும் அதிகமாக பேசப்படுபவை. அவை, 1.சாதி அரசியல், 2.குடும்ப அரசியல், 3.கூட்டனி மாற்றம்.

நாம கீழிருந்து போகலாம்.

1.   கூட்டனி மாற்றம் :

எனக்கு இங்கதாங்க ஒரு விசயம் சுத்தமா புரியவே இல்லீங்க. என்னனா, தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் என எல்லா தமிழக அரசியல் கட்சிகளும் அதன் வரலாற்றை உற்றுநோக்கும் போது, தேர்தலுக்கு தேர்தல் தங்களது கூட்டனியை மாற்றிகொண்டே வந்துள்ளன. ஆனால் இங்கே பா.ம.க வின் மீது மட்டும் குற்றம் சுமத்தப்படுவது ஏன் எனதான் புரியவில்லை. இவர்கள் மட்டுமே கூட்டனிக்காக அலைந்தது போலவும், இவர்கள் மட்டுமே ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டனியை மாற்றியது போலவும் பேசுகின்றனர். அதிலும் பச்சோந்தி என அடைமொழி கொடுத்து அசிங்கப்படுத்தும் இழிவான செயலை செய்வது.
அதிலும் நாங்கள் கொள்கை ரீதியிலான கூட்டனி என பொய் சொல்லாமல் தேர்தலுக்காக்கதான் கூட்டனியில் இணைகிறோம் என உண்மையை சொல்லி கூட்டனி வைத்த இக்கட்சியை எதற்காக இப்படி விமர்சிக்க வேண்டும்.
எனக்கு தெரிந்த வரையில், ஆளுங்கட்சி கூட்டனியில் இருந்தாலும், எதிர்கட்சி கூட்டனியில் இருந்தாலும், ஆளும்கட்சியின் தவறுகளை சுட்டிகாட்டி தனது எதிர்ப்பை எப்போதும் பதிவுசெய்தே வந்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி. என் அறிவிற்கு எட்டியவரை ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு அதுதான் அழகும்கூட. மற்ற கட்சிகளை விட பா.ம.க இவ்விசயத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டுவருகிறது.
கூட்டணி மாற்றத்தைப் பொருத்தமட்டில் பா.ம.க கூட்டணிக்கு சென்றது என்பதை விட தூண்டில் போட்டு கூட்டணியில் இணைத்துக்கொண்டார்கள் என்பதுதான் சரியான பதமாக இருக்கும்.

2.   குடும்ப/வாரிசு அரசியல் :

“நானோ என் குடும்ப உறுப்பினர்களோ அரசியலுக்கு வந்தால் என்னை முச்சந்தியில் நிற்க்க வைத்து அடியுங்கள்” என மருத்துவர் இராமதாசு அறிவித்துவிட்டு பின்னர் தன் மகன் அன்புமணியை அமைச்சராக்கியது ஏன்..?

இந்த கேள்விக்கு எனக்கு கிடைத்த பதிலையும், என்னுடைய புரிதலையும் இங்க சொல்றன்.

முதலில் எனக்கு கிடைத்த பதில் : அன்புமணி அரசியலில் நுழைவது அமைச்சர் ஆகுவது மருத்துவர் இராமதாசுவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் பா.ம.க வின் வளர்ச்சிக்கு அன்புமணியின் நுழைவு மிக அவசியமானது என்றும், அன்புமணி வந்தால் மட்டுமே பா.ம.க விற்கு ஒரு பிடிப்பு இருக்கும் என்றும் மேலும் பண்ருட்டியார், தீரன் போன்று விலகாமல் பா.ம.க வை வழிநடத்த தங்களுக்கு பிறகான ஒரு நிலையான அரசியல் வாரிசு தேவை என்றும் அப்படி வருபவர் கட்சி உறுப்பினர்கள் அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட வேண்டும் என்பதாலும் அது அன்புமணியாக இருந்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்றும் பா.ம.கவின் கட்சி உறுப்பினர்களால் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் மருத்துவர், “என்னவோ செய்யுங்க ஆனால் எனக்கு இதுல கொஞ்சமும் விருப்பம் இல்லை” என சொல்லி வேண்டா வெறுப்பாக அன்புமணியின் விருப்பத்திற்க்கு இதனை விட்டுவிட்டதாக எனக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நேர்காணலின்போது கூட அன்புமணியும் இதைதான் தெரிவித்தார். தான் அரசியலுக்கு வருவதற்க்கு தன் தந்தை காரணம் அல்லவென்றும் மேலும் அவருக்கு விருப்பமில்லையெனவும், மக்கள் அழைத்ததால்தான் தான் அரசியலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

இவங்க என்ன விளக்கம் கொடுத்தாலும் அதை கேட்பதற்க்கு இங்கு யாரும் இல்லை. முழு விளக்கத்தையும் கேட்டுவிட்டு மீண்டும் சொல்வர் என் குடும்ப உறுப்பினர் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என சொல்லிவிட்டு அன்புமணியை அமைச்சர் ஆக்கினாரே என்று. ஏனென்றால் அவர்களுக்கு இந்த விசயம் தேவைப்படுகிறது பா.ம.க வையும் இராமதாசையும் கேலி செய்யவும், கிண்டல் செய்யவும்.

என் புரிதல் : எனக்கும்கூட இந்த விசயத்தில் கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது, என் நண்பர்கள் என்னிடத்தில் கேட்கும்போது. என்னதான் நாம விளக்கம் கொடுத்தாலும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வோர் எண்ணிக்கை குறைவுதான். சரி இப்ப கொஞ்சம் யோசிங்க.. மருத்துவர் இராமதாசுதான் அன்புமணியை அரசியலுக்குள் நுழைத்தார் என்றே வைத்துக்கொள்வோம்.

இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகளுடன் அன்புமணியை ஒப்பிடுங்கள். அன்புமணி அமைச்சராக இருந்தபோது அவர் செய்த எனக்கு தெரிந்த சில விசயங்களை இங்கே பகிர்கிறேன்.
  • ·         தேசிய கிராம புற சுகாதாரத் திட்டம்
  • ·         பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடை சட்டம்
  • ·         108 மருத்துவ ஊர்தி சேவை திட்டம்
  • ·         மதுரை மற்றும் சேலத்தில் அமைக்கப்பட்ட உயர் ரக சிறப்பு மருத்துவமனைகள் (Super Specialty Hospitals)
  • ·         புகையிலைக்கு எதிரான மிகக் கடுமையான நடைமுறைகள்
  • ·         மருத்துவ மாணவர்கள் கிராமப் பகுதிகளில் ஓராண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும் என்ற நிலைப்பாடு
  • ·         30 ஆண்டுகாலமாக இல்லாத, மருத்துவத்திற்க்கான All India Entrance Examல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு
  • ·         தேசிய சித்த மருத்துவ பயிற்சி நிலையத்திற்கு(National Siddha Institute) பண்டிதர் அயோத்தியதாசர்  பெயரை சூட்டியது
  • ·         பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அதிகாரம்.

என சிறப்பாக செயல்பட்ட ஒரு இளம் அரசியல்வாதியை புறக்கணிக்க நினைப்பது பொருத்தமாக இருக்குமா..!!? அதுவும் உலக அரங்கில் தமிழருக்கு பெருமை தேடிதந்த ஒரு இளம் அரசியல்வாதியை.! இவரது செயல்பாடுகள் ஐ.நா சபையாலும், உலக சுகாதார நிறுவனத்தாலும் பட்டம் கொடுத்து பாராட்டும் அளவிற்க்கு இருக்கும்போது ஒரு சப்பை சேதியை காரணம் காட்டி புறக்கணிப்பது எப்படி சரியாகும். இவரது செயல்பாடுகள் சரியில்லையென்றால் நானும்கூட எதிர்த்திருப்பேன்.

மேலும், அப்போதைய இந்திய பிரதமர் திரு.மன்மோகன்சிங் அவர்கள், 50 ஆண்டுகள் செய்யத்தக்க சேதிகளை ஐந்தே ஆண்டுகளில் செய்துவிட்டதாக பாராட்டியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு(2014) நமது குடியரசு தலைவர் திரு.பிரனாப் முகர்ஜி அவர்கள், இந்தியாவை போலியோ இல்லாத நாடாக மாற்றியமைக்காக விருது கொடுத்து கௌரவித்தார்கள் என்பது கருத்தில்கொள்ளப்பட வேண்டியது ( 2009ம் ஆண்டு அன்புமணி தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டார் என்பதை நினைவுகொள்க ).

இப்படிப்பட்ட திறமை வாய்ந்த ஒரு தலைவரைதான் சாதிய வட்டத்திற்க்குள் அடைத்து நம் தலையில் நாமே மண்ணை வாறி இறைத்துக்கொண்டிருக்கிறோம்.

இன்றைய இளைஞர்களின் வேக ஓட்டத்திற்க்கு ஈடு கொடுத்து செயல்படும்/ செயல்பட முடியும் என்கிற அளவில் எத்தனை இளம் தலைவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள், சொல்லுங்கள் பார்க்கலாம்..!!?

கொஞ்சம்கூட முன்யோசனை இல்லாமல் சப்பை சேதிகளை காரணம் காட்டி அன்புமணியை புறக்கணிப்பது என்பது நமது முன்னேற்றத்திற்க்கு நாமே தடை ஏற்படுத்துவதைப்போல என்பதே எனது கருத்து.

3.   சாதி அரசியல் :

பா.ம.க வின் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகளிலேயே மிகத்தீவிரமான குற்றசாட்டு இதுதான். என்னுடைய கணிப்பின்படி நம் தமிழகத்தில் இரண்டு வகையான அரசியல்தான் இருக்கிறது.

1. மறைமுக சாதி அரசியல்
2. வெளிப்படையான சாதி அரசியல் .

மேலும் இங்கு யாரும் ஒரு குறிப்பிட்ட சாதியை எதிர்த்து அரசியல் செய்துவிட முடியாது.

1.   மறைமுக சாதி அரசியல் :

இது மிகவும் ஆபத்தான அரசியல். நம்பவைத்து கழுத்தறுப்பது. கூடவே பழகி நமக்கு உறுதுணையானவன் போல நடித்து தக்க சமயத்தில் புறமுதுகில் குத்தும் அரசியல். இவ்வகை அரசியலை யார்யாரெல்லாம் மேற்கொள்கிறார்கள் என நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

2.   வெளிப்படையான சாதி அரசியல் :

இங்கு பா.ம.க-வின் மீது பூசப்படும் சேறானது சாதி அரசியல் என்று ‘தலித்’ மக்களுக்கு எதிரான அரசியல் என்றுதான். ஆனால் நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இங்கு எவராலேயும் ஒரு குறிப்பிட்ட சாதியை எதிர்த்து அரசியல் செய்துவிட முடியாது. இது தெரிந்தும் பலர் வேண்டுமென்றே மருத்துவர் மீது கொண்ட காழ்ப்புணர்வினால் அவதூறு பரப்புகின்றனர்.

இன்று தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவில் சாதி அரசியலை கையில் எடுக்காத ஒரே ஒரு அரசியல் கட்சியை உங்களால் சுட்டிகாட்ட இயலுமா..!!? முடியாது. ஆனால் உங்களைப் பொறுத்தவரை பா.ம.க மட்டுமே சாதி அரசியல் செய்கிறது. இதை எவனாவது எதிர்த்து பேசினால் அவன் சாதி வெறியன்.

இன்று PCR சட்டத்தில் திருத்தம் வேண்டும் என போராடும் இதே இராமதாசுதான் இந்த PCR சட்டம் அமல்படுத்தப்படுவதற்க்கு காரணமான முக்கிய  தலைவர்களில் ஒருவராக இருந்ததாக கேள்விப்பட்டேன். இதைப்பற்றியெல்லாம் யாரும் பேசி நான் பார்க்கவில்லை.

என் அறிவிற்கு புலப்பட்டவரை சாதி அரசியல் எனும் பதம் பா.ம.க வின் நற்பெயரை கலங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

[இப்போதெல்லாம் பா.ம.க வின் கூட்டனியைப் பற்றியும் வாரிசு அரசியலைப் பற்றியும் பெரிதாக யாரும் விமர்சிப்பதில்லை. ஏனென்றால் இணையத்திலிருக்கும் பா.ம.க இளைஞர்கள் தீயா வேலை செய்யுறாங்க. பா.ம.க வைப்பற்றி தப்பா ஒரு வார்த்தை யாரையுமே பேச விடுறதில்ல..]

பா.ம.க ஆதரவு ஏன் :
நான் எனக்கென்று தமிழக அரசியலுக்கு சில கோட்பாடுகளை வைத்திருக்கிறேன். அவற்றின் அடிப்படையில் எனும்போது பா.ம.க மட்டுமே முன்னிலை பெறும்.
  • 1.   முதல்வர் வேட்பாளர் தமிழராக இருத்தல் வேண்டும்.
  • 2.   தலைமைப் பண்பு, ஆளுமை திறன், நிர்வாகத் திறன் போன்றவை அவசியம் இருத்தல் வேண்டும்.
  • 3.   நிகழ்கால தொழில்நுட்பங்களைப் பற்றியும் அதன் வளர்ச்சி குறித்த அறிவும் இருத்தல் வேண்டும்.
  • 4.   குறிப்பாக தலையாட்டி பொம்மையாக இல்லாமல் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
  • 5.   சாதாரண மக்களும் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் இருத்தல் வேண்டும்.

தற்போதைய தமிழ்நாடு அரசியல் சூழலில் ஒரு தமிழன் முதல்வராக வேண்டுமானால் அது பா.ம.க வினால் மட்டுமே முடியும். தமிழர் அரசியலை விரும்பி, பா.ம.க-வுக்கு ஆதரவு தெரிவிக்காமல் யாதொரு கட்சியும் இயக்கமும் தனித்து செயல்படுமேயானால் அது தமிழர் வாக்குகளைப் பிரித்து அழிந்து வரும் திராவிடக் கட்சிகளுக்கு நீரிட்டு உரமிடுதலைப் போலாகும்.

சிந்திப்பீர்.! செயல்படுவீர்.! தமிழ்நாடு தமிழர் நாடு தமிழருக்கே.!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக