புதன், 25 செப்டம்பர், 2013

மக்கள் ஊடகமாக அறியப்படும் இணைய உலகத்திலும் ஏன் இந்த ஓரவஞ்சனை..!!?

பதிவர்களே இது ஒன்றும் அவ்வளவு முக்கிய செய்தி இல்லையா..!!??

இலங்கையில் பல ஆண்டுகளுக்கு பின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்து முடிந்து மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இது இலங்கையின் கொடுங்கோலனுக்கு நெருக்கடி தரும் சேதி.

இத்தகைய சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற ஒரு தமிழ் அரசியல்வாதி நம் தாயகத்திலிருந்து சென்று தனது அமைப்பின் சார்பாக கொடுங்கோலனுக்கு எதிராக குற்றசாட்டுகளை வைத்து பன்னாட்டு விசாரனையை கோரியிருக்கிறார். 



இலங்கை தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ள இந்த சூழ்நிலையில் ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணை கோரியிருப்பது, குற்றம் சாட்டியிருப்பது அவ்வளவு முக்கியமான செய்தியாக உங்களுக்கு தெரியவில்லையா..!!? 

ஒருவேளை அந்த அரசியல்வாதி அன்புமணி என்பதால்தான் நீங்கள் எழுத மறுக்கிறீர்களா..!!?

தமிழ் தேசியம் பேசும் கட்சியினரும், பொதுப்படைவாதிகளும் எங்கேயய்யா போனீங்க..!!? 

பா.ம.க வை பாராட்ட நேரிடுகிறதே என்பதால்தான் மௌனம் காக்கின்றீர்களா..!!?

தமிழகத்தில் உண்மையான ஊடகங்கள் செத்து போய் பல வருடங்கள் ஆகின்றன.

ஐ.நா சபையில் தமிழர் நலனுக்காக ஒரு நிகழ்வு நடக்கும்போது திரைத்துறையின் 100 ஆண்டு கொண்டாட்டம்தான் முக்கியம் என தலைப்பு செய்தியாக வாசிக்கும் ஊடகங்களை சாடியிருக்க வேண்டாமா நீங்கள்..!!?

மக்கள் ஊடகமாக அறியப்படும் இணைய உலகத்திலும் ஏன் இந்த ஓரவஞ்சனை..!!? 

அது சரி நீங்களேதான் இந்நிகழ்வை கண்டுகொள்ளவில்லை. இதில் எங்கிருந்து நீங்கள் மற்ற ஊடகங்களை சாடுவது. 

எப்படியோ வாழ்த்துக்கள் வலைப்பூ/இணைய/எழுத்து/ஊடக போராளிகளே..!! வெல்க உங்கள் பயணம்..!

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

"மூத்த குடி" மாத இதழில் எனது பதிவு.

இது கொஞ்சம் தாமதமான பதிவு. ஒரு பதிவு எழுதறதுக்கே நமக்கு போதும் போதும்னு ஆகுதுப்பா.. இதுல எப்படிதான் ஒரு நாளைக்கு 10,15னு எழுதறாங்களோ தெரியல.. இந்த பதிவு ஒன்னுமில்லைங்க.. போன மாசம்(ஆடி-August) என்னோட பதிவு ஒன்னு "மூத்த குடி" மாத இதழ்-ல வெளியாச்சு. அந்த நல்ல சேதியை உங்ககூட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சா அதுக்கு இவ்ளோ நாள் ஆகிடிச்சு.. 

வெறும் புகைப்படம் மட்டும்தான் போடனுமா..!!? நாலு வார்த்தை எழுதி போடலாம்னு நெனச்சேன்.. இப்போதைக்கு எதுவும் எழுத தோணல..

எனக்குள்ளேயும் ஒருத்தன் ஒளிஞ்சிகிட்டு இருக்கான்யா..!! இவ்ளோ நாள் தெரியாம போயிடிச்சு..!!

என்னுடைய பதிவை வெளியிட்டு எனக்கு பெருமை சேர்த்த மூத்த குடி பத்திரிக்கை ஆசிரியருக்கு என் நன்றி.





பதிவர் உலக நண்பர்களே நல்லா தெரிஞ்சிக்கோங்க.. என்னோட பதிவும் பத்திரிக்கையில வந்துடிச்சு.. நானும் பெரிய ஆளுதான் நல்லா பாத்துக்கோங்க நானும் பெரிய ஆளுதான்... 
குறிப்பு : யோவ் பிரபல பதிவர் எதாவது ஒரு கருத்த சொல்லிட்டு போயா.. இப்பதான் ஓரளவுக்கு பெரிய ஆளா, பிரபலமா 'form' ஆகியிருக்கேன். இப்ப மட்டும் நீ கருத்திடலனு வச்சிக்கோ ஒரு பயலும் நம்பமாட்டான்... :-)

வியாழன், 5 செப்டம்பர், 2013

நான் விரும்பும் நாலு பேரு - ஆசிரியர்கள்

இந்நன்நாளில் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு எனது ஆசிரியர்களை நினைவுகூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தலைப்பில் மட்டும்தான் நான்கு பேரு. உண்மையில் எனக்கு பிடித்த திறமைவாய்ந்த என்னுடைய ஐந்து ஆசிரியர்களைப்பற்றி சொல்லப்போகிறேன்.
என்னோட 18 வருட பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் என்னை மிகவும் கவர்ந்த எனக்கு பிடித்த ஆசிரியர்கள் இவர்கள். இவர்கள் அனைவருமே மிகவும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள்.

இப்பதிவு என்னுடன் பயின்ற பள்ளி, கல்லூரி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை தவிர்த்து ஏனையோருக்கு அலுப்பு தட்டலாம். இனி தொடர்வது உங்கள் விருப்பம்.

        1.       திரு.கோவிந்தசாமி, [1,2ம் வகுப்பு]
எங்களுக்கு தமிழ், கணிதம், ஆங்கிலம் ஆகியவற்றின் அரிச்சுவட்டை கற்றுகொடுத்தவர். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,கீழூர்-ல் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு ஆசிரியர். இவரை ஒன்னாவது வாத்தியார்னு சொல்லுவோம்.

சுவற்றில் ஓவிய தூரிகைகளை வைத்து அழகாக எழுதக்கூடியவர். எங்க ஊரு பேருந்து நிறுத்தத்தில் ஒரு முறை எழுதும்போது பார்த்திருக்கிறேன். அப்போதே சற்று வயதானவராக இருப்பார். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒருமுறை 2000 வரை 1,2 எழுத சொல்லியிருந்தார். 1200 வரை எழுதிவிட்டு சற்று நுணுக்கி எழுதி எழுதுவதை குறைத்து 2000 வரை காண்பித்துவிடலாம் என நினைத்தேன். அருகிலிருந்தவன் மாட்டிவிட்டுவிடுவேன் என மிரட்டியதால் முழுவதுமாக எழுதி முடித்தேன். படிக்கும்போது கண் கண்ணாடி அணிந்துதான் படிப்பார்.

இவருக்கு சொந்த ஊர் அருகில் இருக்கும் பாச்சாரபாளையம். அங்கிருந்து தினமும் மிதிவண்டியில்தான் வருவார். அவரை எப்போது எங்கே பார்த்தாலும் வணக்கம் சொல்லுவது என்னுடைய வழக்கம். நிச்சயமாக அவருக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை, இருப்பினும் பார்க்குமிடங்களிலெல்லாம் வணக்கம் செலுத்த தவறியதில்லை. கடந்த மூன்று, நான்கு வருடங்களாக அந்த வழக்கம் என்னிடம் இல்லாமல் போய்விட்டது.

        2.       திரு.சம்பத் குமார். [9,10ம் வகுப்பு]
எங்கள் பள்ளியின் [ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி] திறமை வாய்ந்த மிகச்சிறந்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர். எவ்வளவு பெரிய சேதியானாலும் மிக எளிமையாக கையாளுபவர். இவர் எங்களுக்கு பள்ளியில் வகுப்பெடுத்தது இல்லை. நான் இவரிடம் கணிதத்திற்க்கும் ஆங்கிலத்திற்க்கும் தனிப்படிப்பு(Tuition) பயின்றேன்.

எங்க தனிப்படிப்பு நிலையத்தில் 15 பசங்க, 75 பொண்ணுங்க-னு நூறு பேரு படிச்சோம். எங்க தனிப்படிப்பு நிலையத்தின் சுற்றுசூழலும், சூழ்நிலையியலும் எனக்கு ரொம்ப புடிக்கும். அதுவும் விடுமுறை நாட்களில் எனக்கு ரொம்ப கொண்டாட்டமா இருக்கும்.

இவருடைய ஊரு குறிஞ்சிப்பாடி. பள்ளிக்கு எப்போதும் தன்னுடைய பழைய மிதிவண்டியில்தான் வருவார். சில சமயங்களில் நடந்து வருவார். தனிப்படிப்பு நிலையம்: வீட்டிற்க்கு எதிர்த்தமாதிரி கொட்டகை அமைக்கப்பட்டிருக்கும். வீட்டுல தெலுங்குதான் பேசுவாங்க. முழுகை சட்டைதான் போடுவாரு ஆனால், கை பொத்தானை பூட்டாமல் அவிழ்த்துவிட்டிருப்பார். SKV பள்ளியை விட்டு வெளியே வந்தபின்னர் ஒரே ஒரு முறை மட்டுமே அவரை சந்தித்திருக்கிறேன். இப்பொழுது பார்த்தால் அவருக்கு என்னை அடையாளம் தெரியுமா என்பது சந்தேகமே. நாங்கள் வெளிவந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் பணி ஓய்வு அடைந்துவிட்டார் என கேள்விப்பட்டேன்.

        3.       திரு.ரெங்கா ரெட்டி [9,10ம் வகுப்பு]
மிகவும் பொறுமைசாலி. வயதானவர். திறமைமிக்க, சிறப்பு வாய்ந்த ஆசிரியர். எங்களுக்கு 9 மற்றும் 10 வகுப்புகளில் வகுப்பாசிரியர். இவர் எங்களுக்கு நடத்தியது ஆங்கிலம் மற்றும் கணிதம். [ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி].

9 மற்றும் 10ம் வகுப்புகளில் உண்மையிலேயே எல்லா நிகழ்வுகளிலேயும் நான் பாக்கியசாலிதாங்க. படிப்ப பத்தி மட்டும் சொல்றன். எல்லோருக்கும் கடினமான பாடமாக அமைவது  கணிதமும் ஆங்கிலமும்தான். இவ்விரண்டு பாடங்களையும் இரு வேறு சிறப்பான ஆசிரியர்களிடம் பயின்றதால் சந்தேகம் கேட்கின்ற வாய்ப்புகூட குறைந்தது. மங்கிய மாணவனையும் பிரகாசிக்க செய்யும் வல்லமை பொருந்திய ஆசிரியர்கள். எங்க ரெங்கா ரெட்டி ஆசிரியருக்கு என் மீது ஒரு வருத்தம் உண்டு. நான் அவருடைய தனிப்படிப்பு நிலையத்தில் இணையாமல் சம்பத்குமார் அவர்களுடைய தனிப்படிப்பு நிலையத்தில் இணைந்ததுதான் காரணம். அவர் என்னிடம் ஏன் அங்கு இணைந்தாய் என என்னிடம் வினவிய போது பதில் சொல்ல தெரியாமல் என் அண்ணன் சொல்லிதான் இணைந்ததாக சொல்லி தப்பித்தேன்.

இவருக்கு சொந்த ஊரு (வடலூர்/நெய்வேலி) எதுனு மறந்துபோச்சு. எப்பவும் சஃபாரி சட்டைதான் அணிவார். ஒரு பழைய Kinetic Honda Scooter-லதான் வருவாரு. நான் வெளிவந்த அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்றுவிட்டார் என நினைக்கிறேன். பள்ளியில் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார். இப்போது என்னை அடையாளம் கண்டுகொள்வாரா என்றால், அது கேள்விக்குறிதான்.

        4.       திரு.செல்வராஜ் [11,12 ம் வகுப்பு - இயற்பியல்]
அரசு மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி-ல் 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு இயற்பியல் ஆசிரியர். எதார்த்தமான ஆசிரியர். சற்றே எரிச்சலுடன் கோவப்படும் சுபாவம். மாணவர்கட்கு எப்படி பாடம்(இயற்பியல்) நடத்தினால் எளிதில் விளங்கிக்கொள்வர் என்பதை நங்கு அறிந்தவர். பாடம் நடத்தும்போது எதார்த்தத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் காரணிகளோடு ஒப்பிட்டு பாடம் நடத்துவார்.

இப்பள்ளியில் எனக்கு ரொம்ப பிடித்த ஒரே ஆசிரியர். மேலும் என்னை புரிந்துகொண்ட ஒரே ஆசிரியர். நான் படித்த அந்த இரண்டு ஆண்டுகளில் என்னை மொத்தமா இரண்டு/மூன்று முறைதான் திட்டியிருக்கிறார். இயற்பியல் பாடத்தின் மீது எனக்கு நல்லதொரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தியவர்.

இவரோட வீடும் குறிஞ்சிப்பாடியிலதான் இருக்கு. ஒரு மிதிவண்டி வச்சிருக்காரு. அதுலதான் வருவாரு. நான் படிக்கும்போது அவருக்கு ஒரு 35 வயசுக்குள்ளதான் இருக்கும்னு நெனைக்கிறேன். தன்னோட கடமையில் எந்த குறையும் வைக்காத ஒரு நல்ல ஆசிரியர். இவரை கடைசியாக பார்த்தது அப்பள்ளியில் மாற்று சான்றிதழ் வாங்கும்போதுதான்.

        5.       திரு.S.ஞானசேகரன் [SG] – [இளநிலை கணிதவியல்]
பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-ன் கணிதவியல் துறை விரிவுரையாளர்(2004-07). சிறப்பான ஆசிரியர். ஒரே ஒரு முறை இவருடைய வகுப்பில் இருந்தாலே போதும் இவர் எந்த அளவிற்க்கு திறமையான ஆசிரியர் என தெரிந்துகொள்ளலாம். இவர் கோவப்பட்டு திட்டினால்கூட அது திட்டுவதைப் போல இருக்காது. நல்லதொரு அறிவுரையாகத்தான் இருக்கும். இவர் எங்களுக்கு எடுத்த பாடம் இயற்கணிதம்(Algebra).

இவர் மீது கிட்டதட்ட எல்லா மாணவர்களுக்கும் நல்ல மரியாதை இருக்கும். பொதுவாக இவருடைய வகுப்பை மாணவர்கள் புறக்கணிப்பது மிக மிக குறைவு. வகுப்பு நேரங்களில் வகுப்பிற்கு வெளியே இவரை கண்டாலே அவ்விடத்திலிருந்து கணிதவியல் துறை மாணவர்கள் மறைந்துவிடுவர் மரியாதையினால்.

இவருடைய ஊரு கடலூர். “மாருதி-800” மகிழுந்துவுல வருவாருனு நெனைக்கிறேன். படிக்கும்போதே அவருக்கு என்னை தெரிஞ்சிருக்காது இப்பவா தெரியபோகுது. இத்தனைக்கும் நடு வரிசையில் முதல் வரியில் முதல் ஆளாக அமர்ந்திருப்பேன். எல்லா ஆசிரியரும் என் அருகில்தான் வந்து நிப்பாங்க. நான் தூங்கும்போதுகூட யாரும் என்னை கவனிக்க மாட்டாங்க.

1 முதல் 12ம் வகுப்பு வரை எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களின் பட்டியல்.
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழூர் [1 மற்றும் 2ம் வகுப்பு]
தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,சூழ்னிலை அறிவியல்
திரு.கோவிந்தசாமி
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழூர் [3,4 மற்றும் 5ம் வகுப்பு]
தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,சூழ்னிலை அறிவியல்
திரு.சுந்தரமூர்த்தி
ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி [6ம் வகுப்பு]
தமிழ்
திரு.தேவராஜ்
ஆங்கிலம்
திரு.சிவபெருமாள் (*)
கணிதம்
திரு.சிவபெருமாள் (*)
அறிவியல்
திரு.C.முருகவேல் [CM]
சமூக அறிவியல்
திரு.வேல்முருகன்
உடற்கல்வி
திரு.வேலாயுதம்
தறி
***********************
ஓவியம்
திரு.இரவிச்சந்திரன்
ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி [7ம் வகுப்பு]
தமிழ்
திரு.தேவராஜ்
ஆங்கிலம்
திரு.T.இராமசாமி [TR] (*)
கணிதம்
திரு.T.இராமசாமி [TR]   (*)
அறிவியல்
திரு.C.முருகவேல்
சமூக அறிவியல்
திரு.இரமேஷ்
உடற்கல்வி
திரு.வேலாயுதம்
தறி
***********************
ஓவியம்
திரு.இரவிச்சந்திரன்
ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி [8ம் வகுப்பு]
தமிழ்
புலவர் திரு.இளஞ்செழியன்
ஆங்கிலம்
திரு.K.கார்த்திகேயன் [KK] (*)
கணிதம்
திரு.K.கார்த்திகேயன் [KK] (*)
அறிவியல்
திரு.தேவனாதன்
சமூக அறிவியல்
திருமதி.ஜனாபாய்
உடற்கல்வி
திரு.செல்வம்
ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி [9ம் வகுப்பு]
தமிழ்
புலவர் திரு.இளஞ்செழியன்
ஆங்கிலம்
திரு.ரெங்கா ரெட்டி (*)
கணிதம்
திரு.ரெங்கா ரெட்டி (*)
அறிவியல்
திருமதி.மாலா
சமூக அறிவியல்
திரு.ஆழ்வார்
உடற்கல்வி
திரு.செல்வம்
ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி [10ம் வகுப்பு]
தமிழ்
புலவர் திரு.இளஞ்செழியன்
ஆங்கிலம்
திரு.ரெங்கா ரெட்டி (*)
கணிதம்
திரு.ரெங்கா ரெட்டி (*)
அறிவியல்
திரு.நவ ஜோதி
சமூக அறிவியல்
திரு.ஆழ்வார்
உடற்கல்வி
திரு.செல்வம்
அரசு மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி [11 மற்றும் 12ம் வகுப்பு]
தமிழ்
திரு.தர்மராஜ்
ஆங்கிலம்
திரு.குணசேகரன்
கணிதவியல்
திரு.U.தெய்வசிகாமணி [UD]
இயற்பியல்
திரு.செல்வராஜ் (*)
வேதியியல்
திரு.T.தமிழ்ச்செல்வன் [TT]
உயிரியல்-தாவரவியல்
திரு.மணிவண்ணன்
உயிரியல்-விலங்கியல்
திரு.தனசேகரன்
(*) - வகுப்பாசிரியர்

குறிப்பு : இப்பதிவில் என்னுடைய இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி ஆசிரியர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை. அவர்களுக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.