வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பதினெட்டாம் போர் - ஆடிப் பெருக்கு - ஒரு சிறப்பு பார்வை

இந்த ஆடிப்பெருக்கு – ஆடி 18. இந்நாளை எங்கள் வட்டாரத்தில் (கிட்டதட்ட கடலூர் மாவட்டம் முழுமையும்) பதினெட்டாம் போர் என்றுதான் சொல்லுவாங்க. நான் என்னுடன் பழகிய நண்பர்கள் பலரிடம் விசாரித்த வரையில் பதினெட்டாம் போர் என்பது பலர்(எங்கள் வட்டாரம் தவிர்த்தவர்கள்) அறிந்திடாத தகவலாகவே இருக்கிறது.

அதென்ன பதினெட்டாம் போர்..!!? இதற்கான பதிலை அறிவதற்க்கு முன்பு ஆடிப்பெருக்கு எனும் இவ்விழாவை மற்றவர்கள் நான் அறிந்த வரையில் எப்படி கொண்டாடுகிறார்கள் மிக சுருக்கமாக பார்க்கலாம்.

ஆடிப் பெருக்கு :

ஒவ்வொரு பகுதியிலையும் இந்நாள் கிட்டதட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால் சொல்லப்படும் காரணங்கள் பலவாறாக இருக்கின்றன. எனக்கு தெரிஞ்ச சில தகவல்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
தகவல் 1: விக்கிப்பீடியா
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்புமுதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
தகவல் 2 : திருச்சி
விவசாயம் பெருக, வளமையோடு இருக்க இறைவனை வேண்டி ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படுகிறது. காவேரி, கொள்ளிடம் போன்ற ஆற்றங்கரைக்கு சென்று மணல் பிள்ளையார் பிடித்து அதனை காவேரி அம்மனாக நினைத்து, வாலா அரிசி/ பச்சரிசி-யை ஊர வைத்து வெள்ளம், எள்ளு போன்றவற்றை கலந்து கிண்டி அப்பிள்ளையாருக்கு/அம்மனுக்கு படையல் வைக்கப்படுகிறது.
இப்படையலில் வாழை, நாவல், கொய்யா ஆகிய பழங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. மேலும் நூலினை மஞ்சள் கரைசலில் நனைத்து மஞ்சள் கயிறாக்கி படையலின்போது வைத்து படைத்துவிட்டு படையல் முடிந்ததும் வெற்றிலையில் சூடம் ஏற்றி நீரில் விடுவார்கள். பின்னர் அந்த மஞ்சள் கயிறுகளை சுமங்கலி பெண்கள் தங்கள் கைகளில் கட்டியும் பிரசாத பழங்களை அங்கு வந்திருக்கும் மற்ற குடும்பத்தாருடன் பகிர்ந்து விவசாயம் செழிக்க காவிரி அன்னையை வேண்டி கொண்டாடுவார்கள். [நான் சேகரித்த பிற வட்டார தகவல்கள் போதுமான அளவில் இல்லை. அதனால இங்க பதிய முடியவில்லை]

பதினெட்டாம் போர் :

நான் அறிந்த வரையில் ஆடிப்பெருக்கு என்பது நாட்காட்டியில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். எங்க வீடுகளில்/வட்டாரத்தில் இந்நாளை பதினெட்டாம் போர் என்றுதான் சொல்லுவார்கள்.

ஏன் பதினெட்டாம் போர்-னு சொல்றாங்கனா, மகாபாரதப் போரின் இறுதி நாள் போர் பதினெட்டாவது நாள் போர். அந்த நாள் ஆடி மாதம் 18வது நாள் என்று எனக்கு எங்க வீட்டுல சொன்னாங்க. அதாவது ஆடி 1 தொடங்கி  18 நாட்கள்  பாரதப் போர் நடைபெற்றது. இப்போரின் இறுதி நாளான 18ம் நாள் போரில் கௌரவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு பாரதப்போர் முடிவுற்றது; கௌரவர்கள் அழிக்கப்பட்டு, போர் முடிவுற்று, தர்மம் நிலைநாட்டப்பட்ட அந்த நாள்தான் பதினெட்டாம் போர் என்று அழைக்கப்படும் ஆடி-18ம் நாள். இந்நாளில் துரியோதனனுக்கு வாய்க்கரிசி வைத்து படைக்கப்படுகிறது.

ஒருவேளை மகாபாரதப் போர் உண்மையாய் இருந்தால், நிச்சயமாக பதினெட்டாம் போரினை கொண்டாடுபவர்கள் அப்போரில் பங்குபெற்ற வீரர்களின் வம்சத்தினர்கள்தான்.
சரி, பதினெட்டாம் போர் பற்றிய விளக்கங்கள் போதுமென நினைக்கிறேன். இனி எங்கள் வீடுகளில் இப்பதினெட்டாம் போரினை எப்படி கொண்டாடுவோம் என சற்று விரிவாக காணலாம்.

படைக்கப்படும் பிரசாதங்கள் :

என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு மட்டும்தான் எங்க வீடுகளில் அவுல், பொரி கிண்டுவாங்க. எப்படினா..! வெல்லத்தை தண்ணி விட்டு காய்ச்சி கம்பி பதம் வந்ததும் இறக்கி பொரியோட கலந்து கிண்டி ஒரு பாத்திரத்துல எடுத்து வச்சிக்குவாங்க. இது இல்லாம, அரிசி, கம்பு, மற்றும் பல தானியங்கள்...

வழிபாடு :

இது துரியோதனனுக்கு வாய்க்கரிசி இட்டு படைக்கும் நாளாதலால் புனித நதி கரையில் தான் செய்ய வேண்டும்[அதுக்கு நாங்க எங்க போறது]. எங்க எல்லோருக்கும் பொதுவான ஒரு கிணறு/கேணி இருக்கு. அதுதான் எங்களுக்கு புனித நீர் தீர்த்தம். அட பெரிய பெரிய கோவில்களில் கங்கா தீர்த்தம், காவேரி தீர்த்தம் ஒரு சில கிணறுகளை சொல்லுவாங்கல, அந்த மாதிரி. அந்த கிணத்தடியிலதான் வழிபாடு நடக்கும்.

[காதுவளை கருவாமணி - நானே வரைஞ்சது]

முதலில் கிழக்கு திசையை பார்த்த படி மண்ணால புள்ளையார் புடிச்சி வைப்பாங்க. அதுக்கு மஞ்சள் பூசி பூ பொட்டு, அருகம்புல் வைப்பாங்க. அப்புறம் அவல் பொரி, பச்சரிசி, கம்பு முதலான தானியங்களை வச்சி; காதுவளை கருவாமணி (காப்பு), மஞ்சள் கயிறு(மஞ்சள் கரைசலில் நனைக்கப்பட்ட நூல்) வெத்தலை பாக்கு, பழம் வச்சி சூடம் ஏத்தி கிணத்தடியில் படச்சிட்டு; அதுக்கப்புறம் வீட்டுல சாமி அறையில வச்சி சாமி கும்பிடுவோம். அப்புறம் அந்த மஞ்சள் கயிறை பசங்க கையிலையும், பொண்ணுங்க கழுத்துலையும் கட்டிக்குவோம். சாமி கும்பிட்டு முடிஞ்ச அடுத்த கனம் கிண்டி வச்சிருக்குற அவல் பொரியில தான் கை இருக்கும். எனக்கு அது ரொம்ப புடிக்கும்.

கையில கட்டுற அந்த மஞ்சள் கயிறை அன்றிலிருந்து மூன்றாவது நாள் ஓடும் நீரில் அக்கயிற்றினை அவிழ்த்துவிட வேண்டும்.

இரத்தக் காட்டேரி :

இரத்தக் காட்டேரி. இது எங்க வீடுகளுக்காக மட்டும் இருக்கும் காவல் தெய்வம். பதினெட்டாம் போர், கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைகளின் போது இரத்தக்காட்டேரிக்கும் படைப்பது வழக்கம். வீட்டுல படச்சி முடிஞ்சதும், காதுவளை கருவாமணி, வத்தி, கற்பூரம், வெத்தலை பாக்கு-லாம் எடுத்துட்டுபோய் இரத்தகாட்டேரிக்கும் வச்சி படச்சிட்டு வந்திடுவோம்.

அவ்வளவுதான் பதினெட்டாம் போர் தின கொண்டாட்டம் முடிந்தது. இனி உங்களுக்கு இனிய ஆடி பெருக்கு கொண்டாட்ட வாழ்த்துக்கள்.

உபரி தகவல் : வன்னியர் புராணத்தில் வரும் ஒரு தகவல். வீரவன்னிய மகாராசன் வதாபியை அழிக்க போருக்கு புறப்படுகிறார். போரினை எண்ணி அவரது மனைவி வருந்துகிறார். அதற்கு அரசர் “என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்துவிட்டால் நாய் தனியே திரும்பி வரும், வீட்டில் ஏற்றப்பட்ட தா விளக்கு/ காமாட்சி விளக்கு அணையும், பூ வாடும்” என கூறி செல்கிறார். வழியில் அரசர் ஒரு நதியை கடக்கவேண்டி இருக்கிறது. அரசர் ஆற்றை கடந்து சென்றுவிடுகிறார், நாயினால் நதியை கடக்க முடியாமல் வீடு திரும்புகிறது.

நாய் தனியே வருவதை கண்ட அரசியார் விளக்கு அணையாததையும், பூ வாடாமல் இருப்பதையும் கவனிக்காமல் அரசர் இறந்துவிட்டதாக எண்ணி தாலியை அறுத்துவிட்டு விதவை கோலம் பூணுகிறார். போர் முடிந்து வெற்றியுடன் திரும்பிய அரசன் தன் மனைவியை கண்டு அதிர்ச்சியடைகிறார். பின் நடந்ததை கேட்டறிந்து மீண்டும் தாலி கட்டுகிறார். இதன் விளைவாக இன்றும் வன்னிய மக்களிடம் ஆடி 18 அன்று தாலியை அறுத்துகட்டும் வழக்கம் இருந்து வருகிறது.

எப்படி பார்த்தாலும் இந்த ஆடி-18-ஆனது போருடன் தொடர்புபடுத்தியே வருகிறது.


வன்னியர் புராண தகவல்: http://ta.wikipedia.org/wiki/பாரதம்_படித்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக