வியாழன், 26 டிசம்பர், 2013

காந்தவராயனும் சேந்தவராயனும் - தமிழனின் வீரமும் பாசமும்



இது உண்மையான வரலாற்று கதை நண்பர்களே. நமது வரலாற்றில் சகோதரர்கள் என்றாலே நமக்கு தெரிந்தவர்கள் கட்டபொம்மன் ஊமத்துரை, பெரிய மருது சின்ன மருது, பொன்னர் சங்கர் போன்றவர்கள்தான். ஆனால், இந்த காந்தவராயனும் சேந்தவராயனும் எப்படி மறைந்துபோனார்கள் என்பதுதான் புரியவில்லை. 
காந்தவராயன் சேந்தவராயன் என உச்சரிக்கும்போது சாதாரணமாக உச்சரித்துவிடாதீர்கள். ஒரு மிடுக்குடன், ஒரு இறுமாப்புடன், ஒரு கர்வத்துடன், ஒரு திமிருடம்,  ஒரு செருக்குடன், என் தமிழர்கள் என்ற பெருமையுடன் கம்பீரமாக உச்சரியுங்கள். 

அப்பப்பா.!! எப்பேர்பட்ட ஆளுமை, எப்பேர்பட்ட வீரம், நெஞ்சை உருக்கும் பாசம் என விளங்கிய இவர்களை பலவாறாக போற்றி புகழ்ந்திருக்க வேண்டும். தென்னிந்தியா முழுமையும் ஆட்சி அதிகாரம் செலுத்திய கிருஷ்ணதேவராயனை கதிகலங்க வைத்தவர்கள். கிருஷ்ணதேவராயனுக்கும், காந்தவராயன் சேந்தவராயன் சகோதரர்களுக்குமிடையேயான சண்டைப்பற்றிய கதையைதான் இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன். ஆனால், என்னால் எந்த அளவிற்க்கு விறுவிறுப்பாகவும் சுவையாகவும் எழுதமுடியும் எனத் தெரியவில்லை. இருப்பினும் என் முயற்சியை தொடர்கிறேன்.

முதலில் யார் இந்த காந்தவராயன் சேந்தவராயன் சகோதரர்கள் என்பதை பார்க்கலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டிற்க்கு கிழக்கில் செங்கல்பட்டு-திருப்போரூர் சாலையில் வல்லத்திலிருந்து கிட்டதட்ட நான்கு மைல்கல் தொலைவில் உள்ளது “திருவடி சூலம்” எனும் ஊர். இவ்வூருக்கு 16ம் நூற்றாண்டில் இருந்த பெயர் “திருவிடைச்சுரம்”. இத்திருவிடைச்சுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்துவந்த குறுநில மன்னர்கள்தான் இந்த காந்தவராயன் சேந்தவராயன் சகோதரர்கள்.

இச்சகோதரர்களது அரண்மனை அதாவது காந்தவராயன் சேந்தவராயன் கோட்டை எத்தகைய சிறப்பானது என்றால், 1149 அடி நீளமும், கிழக்கிலும் மேற்கிலும் 2000 அடியும் கொண்ட மதில் சுவரும், கோட்டையை சுற்றி கிட்டதட்ட 50 அடி ஆழம்கொண்ட அகழியும் உடைய அரண்மனை. அகழியை அடுத்து கோட்டை மதில்சுவரும் அதனை கடந்து அரண்மனையும் அமைக்கப்பட்டுள்ளது என “கிருஷ்ணதேவராயன் சேந்தவராயன் சண்டை” எனும் நாடக இலக்கியம் தெரிவிக்கிறது. 

இச்சகோதரர்களுக்கும் கிருஷ்ணதேவராயனுக்குமிடையேயான சண்டையைப் பற்றி இந்த நாடக இலக்கியமும் (M.N.காத்தமுத்து, நாடக ஆசிரியர், ‘கிருஷ்ணதேவராயன் சேந்தவராயன் சண்டை’ - 1968), மெக்கன்ஸி என்ற ஆங்கிலேயர் ஒருவருடைய குறிப்பும் ( “மெக்கன்ஸி குறிப்பு” - Mackenzie Manuscripts Vol-II, ‘Thiruvidaicchuram Kottaiyanda Kandavarayan, Sendavarayan’ - 1815) தெறிவிக்கின்றது. இவ்விரு குறிப்புகளும் சில இடங்களில் வேறுபடுகின்றன.

சரி, இனி கதைக்குள் செல்வோம்.

அது 16ம் நூற்றாண்டின் தொடக்க காலம், ஒட்டுமொத்த தமிழகமும் கிருஷ்ணதேவராயரின் ஆளுமையின்கீழ் இருந்தது. கிட்டதட்ட தமிழகத்தின் அனைத்து அரசுகளுமே கிருஷ்ணதேவராயருக்கு கப்பம் கட்டி வந்தனர். அந்தசமயத்தில் “திருவிடைச்சுரம்” எனும் பகுதியை மிகச்சிறப்பாக ஆட்சிசெய்து வந்தனர் வீரத்திற்க்கு புகழ்பெற்ற இரு சகோதரர்கள். பேர்பெற்ற பண்பாளர்களாக, கண்ணியவான்களாக, கொடையாளர்களாக, வீரமிக்கவர்களாக விளங்கினர் அச்சகோதரர்கள். அவர்கள்தான் “காந்தவராயனும் சேந்தவராயனும்”. இவர்களுடைய கொடை வளத்தையும் ஆளுமையையும் பற்றி “திருக்கை வளம்”,”காந்தவராயன் கலம்பகம்”,”சேந்தவராயன் போர்க்கெழுவஞ்சி” போன்ற நூல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் சிறப்பானதொரு ஆட்சியமைப்பை கொடுத்துக்கொண்டிருக்கும் அதே நேரம், தொண்டைமான் சக்கரவர்த்தியவர்களால் குறும்பர்களுக்கு பதிலாக அப்பகுதியில் அமர்த்தப்பட்டிருந்த வெள்ளால பிரபுக்கள் காந்தவராயன் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்க முற்ப்பட்டதன் விளைவாக காந்தவராயன் சகோதரர்களால் கடுமையான விளைவுகளுக்கு ஆளாகினர்.

வள்ளல் குணமும் தாளார மனமும் கொண்ட காந்தவராயன் சேந்தவராயன் சகோதரர்கள், கிருஷ்ணதேவராயனுக்கு கப்பம் கட்ட மறுத்தனர்.

இவர்கள் தொடர்ச்சியாக கப்பம் கட்ட மறுத்துவரும் சேதியும் வெள்ளால பிரபுகளுக்கு தொல்லைகொடுத்துவரும் சேதியும் அரசர் கிருஷ்ணதேவராயரை வந்தடைகிறது. காந்தவராயன் சேந்தவராயன் சகோதரர்கள் கப்பம் கட்ட முடியாது என திட்டவட்டமாக அறிவிக்கின்றனர். 

கடும் கோபமடைந்த கிருஷ்ணதேவராயர் உய்யாள்வார் பாளையக்காரரை அனுப்புகிறார். காந்தவராயன் சேந்தவராயனை வென்று சிறைபிடித்து வருமாறு ஆணையிடுகிறார். திருவிடைசுரத்தை முற்றுகையிடுகிறார் உய்யாள்வார் பாளையக்காரர். கடுமையான போர் கிட்டதட்ட ஆறு மாத காலங்களுக்கு நடக்கிறது. காந்தவராயனை நோக்கி ஒரு அடிகூட முன்னேறமுடியாமல் பின்வாங்குகிறது உய்யாள்வார் படை. காந்தவராயன் சேனையின் உக்கிர தாக்குதலை தாக்குபிடிக்க முடிக்க முடியாமல் சிதறி ஓடுகிறது எதிரியின் படை. உய்யாள்வார் பாளையக்காரர் விஜயநகரம் நோக்கி ஓட ஓட விரட்டப்படுகிறார்.

உய்யாள்வார் பாளையக்காரரின் தோல்வியை அறிந்து கிருஷ்ணதேவ ராயருக்கு கோபம் பீறிடுகிறது. காந்தவராயன், சேந்தவராயனது திமிரை அடக்கி கைது செய்து அழைத்துவர இராமராயர் என்பாரை ஒரு பெரும்படையுடன் அனுப்புகிறார் கிருஷ்ணதேவராயர். 

[இங்கே இராம ராயரைப் பற்றிய ஒரு குறிப்பு அவசியம் என நினைக்கிறேன் நண்பர்களே. இராம ராயரின் முழுப்பெயர் “அலிய ராம ராயர்” என்பதாகும். இவர் கிருஷ்ணதேவராயரின் மூத்த மருமகனார். மேலும் இராம ராயர் ஒரு வெற்றிகரமான போர் தளபதி, சிறந்த நிர்வாகி மற்றும் திறமையான இராஜதந்திரி. கிருஷ்ணதேவராயரின் பல வெற்றிகரமான படையெடுப்புகளுக்கு காரணம் இந்த இராமராயர் என்றால் அது மிகையாகாது.]

அத்தகைய இராமராயர் தலைமையில் ஒரு பாரீய படையானது திருவிடைச்சுரத்தை அடைகிறது. அங்கே முகாமிட்டு கோட்டையை காண்கிறார் இராமராயர். கோட்டையின் வளமையை கண்டு மிரட்சியடைகிறார். அகழியை கடந்து மதிலை தாண்டி கோட்டையை பிடிப்பது சாத்தியமானதாக இராமராயருக்கு தோன்றவில்லை. இருப்பினும் போருக்கு தயாராகிறார். கிருஷ்ணதேவராயரின் போர்படை தளபதியாயிற்றே விடுவாரா என்ன.?!

இங்கே கோட்டையிலிருந்து, காந்தவராயனின் ஆனைக்கிணங்க சேந்தவராயன் தலைமையில் ஒரு படை தயாராகிறது. போர் தொடங்குகிறது. இரு படையினரும் மிகக் கடுமையாக மோதிக்கொள்கின்றனர். சேந்தவராயனை வெல்வது அவ்வளவு சாதாரண காரியாமா என்ன.!? பெருத்த பின்னடைவை சந்திக்கிறது இராமராயர் படை. போரில் தோற்று கைது செய்யப்படுகிறார் இராமராயர். 

போரில் வென்று கிருஷ்ணதேவராயனுக்கு சேதி அனுப்புகின்றனர் காந்தவராயனும் சேந்தவராயனும் வார்த்தைகள் ஏதும் எழுதப்படாமல் இராமராயரின் மூலம். ஆம், எப்படியென்றால் இராமராயருக்கு மொட்டை அடித்து, தலைமயிர் மூன்றாக பிரித்து,  கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதைமீது பின்புறமாக அமரச்செய்து கட்டி விரட்டியடிக்கின்றனர் கிருஷ்ணதேவராயனை நோக்கி.
சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்தை வெல்வது என்ன அவ்வளவு எளிதா..!!? வீர வேங்கைகள் அல்லவா காந்தவராயனும் சேந்தவராயனும். வெற்றிக் கனவு கண்ட கிருஷ்ணதேவராயனுக்கு பேரதிர்ச்சியை அளித்தது இராமராயருக்கு ஏற்பட்ட முடிவு.

எவ்வளவு முயன்றும் அவர்களை வெல்ல முடியாததால் செய்வதறியாது கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தார் கிருஷ்ணதேவராயர். விஜயநகரப் பேரரசின் பொற்காலம் என்றால் அது கிருஷ்ணதேவராயர் காலம்தான். அவர்காலத்தில்தான் மாபெரும் பேரரசாக விளங்கியது விஜய நகரப் பேரரசு. அப்பேர்பட்ட பேரரசை எள்ளி நகையாடினர் நம் காந்தவராயனும் சேந்தவராயனும். 

நேருக்கு நேர் நின்று எமனை எதிர்க்க முடியுமா .?! அதுவும் அவர்களது கோட்டையில். அவர்கள் வீரர்கள், அவர்களை நேரடியாக மோதி வெல்ல முடியாது என்பதை அறிந்து செய்வதறியாது தவித்தார். கணவனின் துயர்போக்க யோசனை ஒன்றை தெரிவித்தார் விஜயநகர பேரரசியாகிய கிருஷ்ணதேவராயரின் மனைவி. மனைவியின் யோசனை பிடித்துப்போக, மாவீரர்களை கொலை செய்ய ஒரு கோழையை போல சூழ்ச்சியில் இறங்கினார் தோல்வியால் துவண்ட கிருஷ்ணதேவராயர்.

தாசிகுல தேவதை, பார்ப்போர் மதி மயங்கும் பேரழகி, அழகென்றாலும் அழகு அப்படியொரு அழகியான விஜய நகரத்து எழிலி “குப்பிச்சியை” அழைத்துவரப் பணித்தார் கிருஷ்ணதேவராயர். வந்த குப்பிச்சியிடம், காந்தவராயன் சேந்தவராயன் ஆகிய இருவரது தலையை கொண்டுவந்தால் இரண்டு இலட்சம் பொன்னும், இருவரில் எவரேனும் ஒருவரது தலையை கொண்டுவந்தால் ஒரு இலட்சம் பொன்னும் தருவதாக ஒப்பந்தம் செய்தார். 

குப்பிச்சிக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உய்யாள்வார் பாளையக்காரரையும், வெள்ளால பிரபுக்களையும் பணித்தார் கிருஷ்ணதேவராயர். உய்யாள்வார் பாளையக்காரர் மற்றும் வெள்ளாள பிரபுக்களால் திருவிடைச்சுரம் அடைந்து அரண்மனையினுள் நுழைந்துவிடுகிறாள் குப்பிச்சி.

உள்நுழைந்த குப்பிச்சி தன் வசீகரிக்கும் அழகால் காந்தவராயனை மதி மயங்க செய்துவிடுகிறாள். குப்பிச்சியின் அழகில் மயங்கிய காந்தவராயன் கோட்டையிலிருந்து சற்று தொலைவில் ஒரு குன்றின் மீது அரண்மனைக்கு ஒப்பானதொரு மாளிகையை கட்டி தந்து அவளை அங்கே குடியமர்த்துகிறான். இன்று அவ்விடம் “குப்பிச்சி குன்று” என்று அழைக்கப்படுகிறது.

சரியானதொரு நாள் பார்த்து உணவில் நஞ்சு சேர்த்து காந்தவராயனை உண்ண செய்து கொலை செய்கிறாள் குப்பிச்சி. தான் உண்டது நஞ்சு என அறியாமலேயே இறந்துபோகிறார் காந்தவராயன். யாருக்கும் அஞ்சாத சிங்கமென வாழ்ந்தவன் பெண்ணழகில் மயங்கியதால் பிணமாய் கிடக்கிறான். எதிரி எவராயினும் எகத்தாளத்தோடு வென்றவனை கொன்று போட்டாள் குப்பிச்சி. வந்தவேளை முடிந்ததென தலையறுத்து காணச் சென்றாள் கிருஷ்ணதேவராயனை.

வெட்டப்பட்ட காந்தவராயனின் தலையை கண்ட கிருஷ்ணதேவராயன் மனம் மகிழ்ந்து ஒரு இலட்சம் பொன்னையும் வழங்கியதுமட்டுமல்லாது ஏகப்பட்ட பொருளும் வசதியும் செய்துகொடுத்தான் குப்பிச்சிக்கு.

விஜயநகரம் காந்தவராயன் மரணத்தால் கோலாகலமாயிருக்க, தமையனின் இறப்பை அறிந்து துடிதுடித்துபோகிறார் சேந்தவராயன். தமையன் மீது கொண்ட பாசம் தாளாது வெறி கொண்ட வேங்கையாய் சினம் கொண்ட சிங்கத்தின் சீற்றத்துடன் வஞ்சித்தவளை வஞ்சம் தீர்க்கவும் ஏவியவனை ஏறி மிதித்து சங்கை நெறிக்கவும் கடுங்கோவத்துடன் கட்டற்று ஓடும் காட்டாற்றைப்போல வெறிகொண்டு தேடினான். சிக்கினாள் தாசியவள். 

பிடிபட்ட குப்பிச்சி, அவளது குடும்பத்தினர், உறவினர், அவளது வம்சத்தினர் மற்றும் அப்பகுதியிலுள்ள அத்தனை தாசிகளையும் சிறைபிடித்து அருகிலுள்ள ஏரியில் வைத்து தலையை துண்டித்து அவ்வேரியில் வீசுகிறார் சேந்தவராயன். ஒருவர் விடாது அனைவரது தலையையும் கொய்து ஏரியில் வீசியதால் ஏரி முழுவதும் குருதியால் நிறைந்து காணப்படுகிறது. இன்று அவ்வேரி “புணை ஏரி/பிண ஏரி” என்று அழைக்கப்படுகிறது.

மேலும் வெறி அடங்காமல் கோபம் குறையாமல் கிருஷ்ணதேவராயனை எதிர்த்து போர் புரிந்து இறந்துபோகிறார் சேந்தவராயன்.

குறிப்பு : நாடக இலக்கியமும், மெக்கன்ஸி குறிப்பும் சில இடங்களில் மாறுபடுகிறது. குப்பிச்சியை அமர்த்தியது கிருஷ்ணதேவராயன் என்கிறது நாடக குறிப்பு. உய்யாள்வார் பாளையக்காரரும் வெள்ளால பிரபுக்களும்தான் குப்பிச்சியை ஏற்பாடு செய்தனர் என்கிறது மெக்கன்ஸி குறிப்பு. மேலும் நாடக இலக்கியத்தில் சேந்தவராயன் கிருஷ்ணதேவராயனை வென்று விடுகிறார். மெக்கன்ஸி குறிப்பில் சேந்தவராயன் இறந்துவிடுகிறார். இப்படி சில முரண்பாடுகள் இவ்விரு குறிப்புகளிலும் இருக்கிறது.

நான் இப்பதிவில் பாதியை எழுதிவிட்டபின் திடீரென ஒரு யோசனை தோன்றியது. இவர்கள் பெரும் சிறப்பு வாய்ந்தவர்களாக இருக்கிறார்களே, இவர்களைப் பற்றி ஏற்கனவே பலர் சிரப்பாக எழுதியிருப்பார்களே, அவர்களை விட ஓரளவிற்கேனும் சிறப்பாக எழுதினால்தானே கொஞ்சமாவது நல்லாயிருக்கும் என ‘கூகிளில்’ காந்தவராயன் சேந்தவராயனைப் பற்றி தேடினேன். மிஞ்சியது பெரிய ஏமாற்றம், வருத்தம். 

விக்கிப்பீடியாவில் கூட காந்தவராயன் சேந்தவராயனைப் பற்றி ஏதும் இல்லை.

இவர்களைப்பற்றி ஏன் எவரும் எழுதவில்லை என தெரியவில்லை. அந்நியர்கள் தாய்மண்னை ஆள்வதை விரும்பாத வீரத்திற்க்கு விளக்கமாக இருந்தவர்களைப் பற்றி ஏன் எவரும் எழுதவில்லை. ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு நான் இங்கு எழுதியிருக்கிறேன். இணையத்தில் எனக்கு கிடைத்த நிரலிகளை இங்கு தருகிறேன் காணுங்கள்.

 இவ்விணைப்பில் வெகு அழகாக இனிமையாக சொற்சுவையுடன் எழுதியிருக்கிறார்.

இவ்விணைப்புகளில் காணொளிகள் மட்டும்தான் இருக்கும். அவசியம் காணுங்கள். உய்யாள்வாரையும், இராமராயரையும் எப்படி வெற்றிகொண்டார்கள் என திரு.ஆறு அண்ணல் அவர்கள் கள ஆய்வு செய்து தெளிவாக விளக்கியிருக்கிறார். 

நன்றி :
                       1.        மேனாள் தமிழ் நாடு தொல்லியல் துறை இயக்குனர், தொல்லியல் நிபுனர் திரு. நடன.காசினாதன், ‘வன்னியர்’ (வரலாற்று ஆவண நூல்) [இரண்டாம் பதிப்பு- டிசம்பர் 2007]
                       2.        விக்கிப்பீடியா [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D ]
          3.   படம் : வன்னியர் தளம்
3.         


3 கருத்துகள்:

  1. நல்ல தேடல். பழந்தமிழர்களின் புதைந்த வரலாற்று தகவல்கள். உங்கள் நியாமான கேள்விகளுக்கு தேர்ந்த தமிழ் வரலாற்று வல்லுணர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
    பகிர்வுக்கு நன்றி அன்பு துரை.

    பதிலளிநீக்கு