ஞாயிறு, 23 ஜூலை, 2017

பூரணி பொற்கலை – சிறுகதை 1 : பிராது - வாசகர் விமர்சனம்

நூலின் பெயர் : பூரணி பொற்கலை
ஆசிரியர் : கண்மணி குணசேகரன்
வகை : சிறுகதை தொகுப்பு (பொது)
விமர்சகர் : கீழூர் த.இளம்பருதி
விலை : ரூ.90 /-
நூலின் அட்டை : (முன் அட்டை)

ஆசிரியர் குறிப்பு:
நம்மில் பலருக்கு தெரிந்திருக்ககூடிய மிக பிரபலமான ஒரு எழுத்தாளர் கண்மணி குணசேகரன். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்தவர். எழுத்துலகின் நடுநாட்டின் (கடலூர் + விழுப்புரம்) ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

ஒரே ஒரு முறை நேரில் கண்டிருக்கிறேன். நெய்வேலி இந்திரா நகருக்கு (வடகுத்து) நாட்காட்டி விழா ஒன்றிற்கு வருகை தந்திருந்தார், அப்போதுதான் கண்டேன். பேசலாம் என்று நினைத்தேன், பின், வேண்டாம் என விட்டுவிட்டேன்.

விமர்சனம்:
நான் சமீபத்தில் படித்த சிறுகதைகளிலே இவ்வளவு விறுவிறுப்பாக எந்த கதையையும் படிக்கவில்லை. படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருந்தது. அதிலும் முழுக்க முழுக்க சொற்கோர்வைகள் அனைத்தும் கடலூர் மாவட்ட வட்டார வழக்கிலேயே இருப்பது மண்மனத்தை மனக்கண்ணில் விரவி கிடத்துகிறது.

இந்த சிறுகதையை சுருக்கமாக இப்படி சொல்லிவிடலாம், “தொலைந்துவிட்ட/திருடப்பட்ட நகையை கண்டறிந்து மீட்டு தருமாறு கடவுளிடம் கொடுக்கப்படும் புகார் மனு மீது நடவடிக்கை எப்படி எடுக்கப்படுகிறது! நகை மீட்கப்பட்டதா என்பதுதான் கதை.”

இக்கதையின் மாந்தர்கள் கண்களுக்குள் நிழலாடுகின்றனர். கதை வடித்திருக்கும் இயல்பு, படிக்கும்போது வெகுவாக ஈர்க்கிறது.

முக்கிய கதாபாத்திரங்கள்:
வேடப்பர் – குலதெய்வ கிராமிய கடவுள்.
தனமணி அம்மாள் – புகார் மனு கொடுப்பவர்.

புகார் மனுவை படிப்பதில் தொடங்கும் கதை, வேடப்பருக்கும், தனமணி அம்மாளுக்கும் இடையேவே அவர்களை சார்ந்தே நகர்கிறது. மனுவை படித்துவிட்டு அதிர்ந்து தன் குதிரையிடத்திலும், தமுக்கு வீரனிடத்திலும், நாயினிடத்திலும் கடிந்துகொள்ளும் வேடப்பரின் செயல் கதையின் தொடக்கத்திலேயே வேடப்பரோடு சேர்ந்து நமக்கும் படபடப்பை ஏற்ப்படுத்திவிடுகிறது. மயிர்கூச்செறியும் ஒரு திரைக்காட்சியில் இருக்கையின் நுனியில் நகர்ந்து அமர்ந்து கவனிப்போமல்லவா அப்படியொரு  உணர்வை கதையின் அடுத்தடுத்த ஒவ்வொரு நகர்வும் நமக்கு ஏற்படுத்துகிறது.

வேடப்பர் தன் மக்களுக்காக வருந்தும் நேயம் மனதை பிசைகிறது. வேடப்பர் பேசும் ஒரு சொற்றொடரை இங்கு தருகிறேன். கிராமங்களில் மக்கள் தங்கள் குலதெய்வங்களை இறை எங்கிற ஒரு நிலையை தாண்டி ஒரு பாசப் பிணைப்புகளுடனேயே வாழ்வதை வெகு அழகாக இச்சிறுகதையில் உணரலாம்.

வேடப்பர் பேசும் வசனம் :
“நம்ப சனங்க கஷ்டத்திலியும் நஷ்டத்திலியும் இடிபட்டுக்கிட்டுக் கெடக்கறப்ப, நமக்கு மட்டும் என்னா தூக்கம் வேண்டிக்கெடக்கு…”

வேடப்பருக்கும் குதிரைக்குமான உறவு வெகு அழகாக காட்டப்பட்டிருக்கிறது. காலம் எப்படியெல்லாம் மாறிவிட்டது என குதிரை நினைத்துப் பார்க்கும் நிகழ்வில் மக்கள் எப்படி மாறிவிட்டிருக்கிறார்கள் என்பது வெகு எளிமையாக படம் பிடித்துக்காட்டப்பட்டிருக்கிறது. 

வேடப்பரிடம் கோபித்துக்கொள்ளும் மனிதனின் செயலாக ஒரு வசனம் :
“என்னமோ ஒலகத்துல எவனும் செய்யாத தப்ப செய்ஞ்சிட்டான்னு என்னா ஏதுன்னு கேக்காம எடுத்த எடுப்புல கையக்கால இழுத்துட்டுது இந்த வேடப்பரு.”

இந்த வசனங்களையெல்லாம் பாருங்க, இந்த கிராமத்து மனிதர்களுக்கும், கடவுள்களுக்கும் இடையில்தான் எவ்வளவு அழகான ஒரு உறவு நிலை இருந்திருக்கிறது. ஆழமான பற்றுதலும், நெருக்கமும், அழகான உறவும், கடவுள்களிடத்தில் அவர்கள் கொள்ளும் உரிமையும் எண்ணிப்பார்க்க எவ்வளவு இரம்மியமாக இருக்கிறது.! கற்பனைகளில் ஒரு பேரானந்தம்.!

குதிரை, வேடப்பரை எழுப்ப முனையும்போது, வேடப்பர் விழித்துக்கொள்வது செம்மையான இரசனை. குதிரை பயணிக்கும் வேகத்தை சொர்க்கோர்வைகளில் மனக்கண்ணில் அழகாக நிகழ்வின் விறுவிறுப்பும் படபடப்பும் மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

வேடப்பரின் மனம் தன் தவறை எண்ணி துடித்துக்கொண்டே இருக்கிறது. தான் கடைசி நேரம் வரை பிராதை காணாமல் விட்டதை எண்ணி வெடிக்கிறார். குல கடவுளின் மனம் எவ்வளவு இளகியதாக இருக்கிறது பாருங்கள்.! தன் மக்களைப் பற்றி நன்கு உணர்ந்துள்ள வேடப்பர் குதிரையிடம் பேசும் இன்னொரு வசனம், இதோ:

“ஒனக்கு இந்த பொம்னேட்டிவுள பத்தி ஒண்ணும் தெரியாது. நொடிக்கு நொடி அவளுவுளுக்கு யோசன மாறும். அதனாலதான் எனக்கு அடிச்சிக்கிட்டுக் கெடக்கு. அதிலியும் ஆதுபாது அத்தவ அவ. மனங்கெட்டாப்ல ஒண்ணு…” அதற்கு மேல் அவரால் சொல்ல முடியவில்லை.

வேடப்பரும் அவர் சார்ந்த நிகழ்வுகளும் கற்பனை என்றாலும், தனமணி அம்மாளை சார்ந்த நிகழ்வுகள் அனைத்தும் எதார்த்தம்.  தனமணி மகள் அவளுடைய அண்ணன் மகனை விரும்புவதை அரசல்புரசலாக கேள்விப்பட்டு, மகள் செல்வராணியிடம் பேசும் வசனமாகட்டும், தனமணிக்கும் அவளுடைய அண்ணிக்கும் இடையேயான உரையாடலாகட்டும் அனைத்தும் யதார்த்தத்தை, இயல்பை அப்படியே தாங்கி வருகிறது.

" எனக்குன்னு யாரு இருக்கா அண்ணி? ஒங்கள வுட்டா எங்களுக்கு நாதி யாரு? எனுமோ களகாம்பு வெட்டி அஞ்சி பவுனு குருவி சேக்கற மாதிரி சேத்துவச்சிருக்கேன்...".
" என்னா நொள்ள அஞ்சி பவுனு. ஏம் முந்திரியில ஒத்த சிம்பு காய்க்கும் அது. " அண்ணிக்காரி ஓடரித்தாள்.

அடுத்து,

"நொட்டனா மாமனதான் நொட்டுவன் இல்லனா உயிர மாய்ச்சிக்குவன்னு சவடால் மயிறு வேற. தே பூட்டுது. வேடப்பன் பாப்பான்னு நடையா நடந்தன. சூத்து பெரிசா இருக்கற பொம்னேட்டி எழுதிக் கட்டியிருந்தா இந்நேரம் வந்து பாத்துருப்பான். என்னப் பாத்தா அவனுக்கு எளக்காரமா இருக்கு போல்ருக்கு."

கடுப்பாயிட்டா கடவுளா இருந்தாலும் மரியாதை கிடையாது.  "அந்த கடவுளுக்கு என்ன கண்ணா அவிஞ்சி போச்சுனு" சர்வ சாதாரணமாக நடுநாட்டு கிராமாங்களில் பேச கேட்கலாம்.  இப்படி கடவுளுக்கும் மக்களுக்கும் இடையேயான பாசமும், கோவமும், உரிமையும் வெகு இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.  பேராற்றல் கொண்ட மனிதர்கள் இந்த கடவுள்கள்.

இச்சிறுகதையின் உச்சக்கட்டம் வேடப்பரின் "சலங்கை சத்தம்".  இது கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் இம்மாதிரியான சலங்கை சத்தத்தைக்  கேட்க முடியும்.  இச்சிறுகதையை எளிதாக கற்பனை என்று கடந்துவிட முடியவில்லை. ஏனெனில் இயல்பில் இன்னமும்கூட இப்படிதான் அழகாக இருக்கின்றன சில கிராமங்கள்.

மற்றுமொரு முக்கிய சேதி, வேடப்பர் திருடனை கண்டுபிடித்து, அவன் மீது ஆந்திரங்கொண்டு வாள் வீசும் முன் சுதாரித்து முந்திக்கொண்டு திருடனை கண்டிப்பதுவும், அதற்கு சொல்லப்படும் காரணமும் மிக அருமை.

சிறப்பான ஒரு படைப்பு. நிச்சயம் படிக்கலாம்.

நன்றி.

==================================================
நூல் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய இடம் :

தமிழினி
67, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 14.
மின்னஞ்சல் : tamizhininool@yahoo.co.in
இணையதளம்:  www.tamizhini.com

இணையம் வழியாக பெற பின்வரும் இணைப்புகளை சொடுக்கவும்:
உடுமலை.கொம்   => https://www.udumalai.com/poorani-porkalai.htm
நூல் உலகம்      => http://www.noolulagam.com/product/?pid=27057#details