ஞாயிறு, 29 ஜனவரி, 2017

1987 - பொதுமக்களும் போராட்டமும் அரசியலும் காவல்துறையும்...




பா.ம.க  கட்சிகளின் கதை - 3 எனும் புத்தகத்திலிருந்து...  ஆசிரியர் : ஆர்.முத்துக்குமார்

எனக்கு தேவையில்லை என்று தோன்றிய சில பத்திகளையும் வரிகளையும் நீக்கியிருக்கிறேன்...

படிக்கட்டு 1 : அந்த ஏழு நாட்கள்

நள்ளிரவு மணி பன்னிரண்டைத் தொட்டு ஒரு நிமிடம் கடந்ததும் போராட்டம் தொடங்கலாம் என்று, வன்னியர் சங்க தலைவர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அது, தொடர் சாலை மறியல் போராட்டம்.

செப்டம்பர் 17, 1987. இதுதான் வன்னியர் சங்கம் அறிவித்திருந்த தேதி. அன்று தொடங்கி தொடர்ந்து ஏழு நாள்களுக்குச் சாலை மறியல் நடத்துவது என்று இருபது நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தார் ராமதாஸ். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.

சொன்னது போலவே போராட்டம் தொடங்கியது. வீட்டில் இருந்து சாலைக்கு வந்த வன்னிய இளைஞர்கள், வழியில் வந்த வாகனங்களை எல்லாம் தடுத்து நிறுத்தினர். ஒரே மூச்சில் அனைத்து வடமாவட்டங்களிலும் போராட்டம் தொடங்கியிருந்ததால் அதன் வீரியம் பலமாக இருந்தது. அனைத்து மாவட்டங்களையும் பதற்றம் ஆக்கிரமித்துக்கொண்டது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக, போராட்டத்தில் ஈடுபட்ட வன்னிய இளைஞர்களைக் கொத்துக் கொத்தாகக் கைது செய்தது காவல்துறை. நேரம் செல்லச் செல்ல போராட்டத்தின் வீரியம் ஏறுமுகத்திலேயே இருந்தது.


வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் முயற்சியாக, சாலை ஓரங்களில் நின்றுகொண்டிருந்த ஆகிருதியான மரங்கள் எல்லாம் வெட்டி வீழ்த்தப்பட்டன. அவ்வளவு பெரிய மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்ததால் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் திணறின. ( போலிசார் துப்பாக்கிகளை தூக்கி போராளிகளை சுட ஆரம்பித்ததற்க்கு பிறகே மரங்களை வெட்டி சாலையில் கிடத்தி போராட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்தனர்.)

தேசிய நெடுஞ்சாலைகள் செயலற்றுப் போயின. இதனால் காவல்துறை, கலவரக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தது. சாலையில் இறங்கிப் போராடியவர்களின் உடல்கள் மீது தோட்டாக்கள் பாய்ந்தன. குண்டடிப்பட்டவர்கள் எல்லாம் சாலையிலேயே சுருண்டு விழுந்தனர். முதல் நாள் மட்டும் நாங்கு பேர் இரையாகியிருந்தனர். ( போராட்டம் தொடங்கிய முதல் நாளே, போலிசார் துப்பாக்கி தூக்கி சுட்டார்கள் எனும் போது, ஆட்சியாளர்கள் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்க்கு பதிலாக வன்னிய மக்களை சுட்டுக் கொல்வதற்க்குதான் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. மக்கள் திலகத்திற்க்கு வன்னிய மக்களெல்லாம் மக்களாகவே திரிந்திருக்கவில்லை போல. ஒருவேளை தேர்தலில் வடமாவட்டங்களில் தி.மு.க-வின் வாக்கு வங்கியை வீழ்த்த முடியாமல் போனதற்க்கு வன்னிய மக்கள்தான் காரணம் என்ற எண்ணமாகக்கூட இருந்திருக்கலாம்.)

அடுத்தடுத்த நாள்களுக்கும் போராட்டம் தொடர்ந்தது. அப்போது ஐ.ஜியாக இருந்தவர் ஸ்ரீபால் ஐ.பி.எஸ். கலவரத்தீ அடுத்தடுத்த மாவட்டங்களுக்குப் பரவிக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் வன்முறை. ரகளை. கலவரம். தடியடி. கலவரத்தை அடக்க மீண்டும் மீண்டும் துப்பாக்கியைத் தூக்கியது காவல்துறை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குண்டடி பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.  ( ஆக, மக்கள் போராட்டத்தை ஒடுக்க இன்றுவரை ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபடுவதையே கொள்கையாக கொண்டுள்ளது தமிழக காவல்துறையும் அ.தி.மு.க அரசும்.)

பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், ஒரத்தூர் ஜெகநாதன் உள்ளிட்ட ஒன்பது உயிர்கள் பலியாகின. ' உண்மையில் பன்னிரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவல்துறையினரால் தாக்கப்பட்டு மேலும் ஒன்பது பேர் உயிரிழந்தனர்' என்றது வன்னியர் சங்கம். ( பொய் கணக்கு எழுத நம்ம காவல்துறைக்கு சொல்லியா கொடுக்கணும்! இவ்வளவு தொழிநுட்ப வளர்ச்சியுள்ள இந்த காலத்திலேயே காவல்துறை கன்னாபின்னானு நடந்துக்கிறாங்க, எந்த தொழில்நுட்ப வசதியுமில்லாத அந்த காலத்தில் அந்த சாதாரண குடியானவர்களுக்கு எதிராக எவ்வளவு அராஜகங்கள் அரங்கேறியிருக்கும். படிக்கும்போதே நெஞ்சமெல்லாம் பதறுது.)

தோட்டாக்களுக்கு பலியானவர்களில் ஒருவரான சித்தணி ஏழுமலை, இருபது வயது இளைஞர். கயத்தூர் முனியனுக்குத் திருமணமாகி வெறும் பத்து மாதங்களே ஆகியிருந்தன. போலீசாரால் தடியடிக்கும் குண்டடிக்கும் இலக்காகிக் கீழே சரிந்த இளைஞர்கள் வெகுநேரம் கழித்தே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், சம்பவ இடங்களிலும் மருத்துவமனிகளிலும் பலர் உயிரிழந்தனர். ( ஆக, நான் ஏற்கனவே சொன்னது போல, இவர்களுக்கு வன்னியர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்திருக்கிறதேயொழிய போராட்டத்தை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இருந்திருக்கவில்லை.)


'போதாக்குறைக்கு, வன்னியர்களின் வீடுகளுக்குள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் புகுந்து தாக்குதல் நடத்திய காவலர்கள், பெண்களை அவமானப்படுத்தியதோடு, வீட்டில் இருந்தவர்களை அடித்து உதைத்துள்ளனர். வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் சேதப்படுத்தியுள்ளனர்' என்றும் குற்றம் சாட்டியது வன்னியர் சங்கம். ( இன்று மெரினா அமைதி போராட்டத்தில் கலவரக்காரர்கள் புகுந்துவிட்டார்கள் என்று போராட்டத்தை கலவரக்காடாக்கி தேடுதல் வேட்டை எனும் பெயரில் நடந்தேரிய அராஜகங்களை இன்றைய தொழில்நுட்ப சாட்சியங்களாக கண்டிருப்பீர்கள்.. கோவத்தில் கொந்தளித்து பொருமியிருப்பீர்கள்... அன்றைய அராஜகங்களுக்கு ஏது சாட்சி...!!! எல்லாம் வல்ல அவன் மட்டுமே சாட்சி... அதர்மங்களுக்கும், அநீதிகளுக்கும் துணைபோனவர்களுக்கு நல்ல சாவு என்பதே கிடையாது. அதற்கான கண்கூடான சாட்சிகளாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மரணங்களையே கூறலாம் என்று கருதுகிறேன்!)

மொத்தம் ஏழு நாட்கள். நித்திய காண்டம் பூரண ஆயுசாக அந்த சாலை மறியல் போராட்டம் உக்கிரமாக நடந்து முடிந்தது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஸ்தம்பிக்கச் செய்ததோடு, வன்னியர் சங்கம் என்ற இயக்கத்தை தேசிய அளவில் அறிமுகம் செய்தது இந்தப் போராட்டம்.

எதற்காக இந்த போராட்டம்? இத்தனை உயிர்ப்பலிகளும் ஏன்?

அடுத்த பதிவில் ...

குறிப்பு: பதிவில் நீல நிற எழுத்துக்களில் உள்ளவை என் கருத்துக்கள்.

நன்றி: பா.ம.க கட்சிகளின் கதை வரிசை - 3 , "miniMAX", ஆர்.முத்துக்குமார்
நன்றி: இணையம் (படங்கள்)