ஞாயிறு, 23 ஜூலை, 2017

பூரணி பொற்கலை – சிறுகதை 1 : பிராது - வாசகர் விமர்சனம்

நூலின் பெயர் : பூரணி பொற்கலை
ஆசிரியர் : கண்மணி குணசேகரன்
வகை : சிறுகதை தொகுப்பு (பொது)
விமர்சகர் : கீழூர் த.இளம்பருதி
விலை : ரூ.90 /-
நூலின் அட்டை : (முன் அட்டை)

ஆசிரியர் குறிப்பு:
நம்மில் பலருக்கு தெரிந்திருக்ககூடிய மிக பிரபலமான ஒரு எழுத்தாளர் கண்மணி குணசேகரன். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்தவர். எழுத்துலகின் நடுநாட்டின் (கடலூர் + விழுப்புரம்) ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

ஒரே ஒரு முறை நேரில் கண்டிருக்கிறேன். நெய்வேலி இந்திரா நகருக்கு (வடகுத்து) நாட்காட்டி விழா ஒன்றிற்கு வருகை தந்திருந்தார், அப்போதுதான் கண்டேன். பேசலாம் என்று நினைத்தேன், பின், வேண்டாம் என விட்டுவிட்டேன்.

விமர்சனம்:
நான் சமீபத்தில் படித்த சிறுகதைகளிலே இவ்வளவு விறுவிறுப்பாக எந்த கதையையும் படிக்கவில்லை. படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருந்தது. அதிலும் முழுக்க முழுக்க சொற்கோர்வைகள் அனைத்தும் கடலூர் மாவட்ட வட்டார வழக்கிலேயே இருப்பது மண்மனத்தை மனக்கண்ணில் விரவி கிடத்துகிறது.

இந்த சிறுகதையை சுருக்கமாக இப்படி சொல்லிவிடலாம், “தொலைந்துவிட்ட/திருடப்பட்ட நகையை கண்டறிந்து மீட்டு தருமாறு கடவுளிடம் கொடுக்கப்படும் புகார் மனு மீது நடவடிக்கை எப்படி எடுக்கப்படுகிறது! நகை மீட்கப்பட்டதா என்பதுதான் கதை.”

இக்கதையின் மாந்தர்கள் கண்களுக்குள் நிழலாடுகின்றனர். கதை வடித்திருக்கும் இயல்பு, படிக்கும்போது வெகுவாக ஈர்க்கிறது.

முக்கிய கதாபாத்திரங்கள்:
வேடப்பர் – குலதெய்வ கிராமிய கடவுள்.
தனமணி அம்மாள் – புகார் மனு கொடுப்பவர்.

புகார் மனுவை படிப்பதில் தொடங்கும் கதை, வேடப்பருக்கும், தனமணி அம்மாளுக்கும் இடையேவே அவர்களை சார்ந்தே நகர்கிறது. மனுவை படித்துவிட்டு அதிர்ந்து தன் குதிரையிடத்திலும், தமுக்கு வீரனிடத்திலும், நாயினிடத்திலும் கடிந்துகொள்ளும் வேடப்பரின் செயல் கதையின் தொடக்கத்திலேயே வேடப்பரோடு சேர்ந்து நமக்கும் படபடப்பை ஏற்ப்படுத்திவிடுகிறது. மயிர்கூச்செறியும் ஒரு திரைக்காட்சியில் இருக்கையின் நுனியில் நகர்ந்து அமர்ந்து கவனிப்போமல்லவா அப்படியொரு  உணர்வை கதையின் அடுத்தடுத்த ஒவ்வொரு நகர்வும் நமக்கு ஏற்படுத்துகிறது.

வேடப்பர் தன் மக்களுக்காக வருந்தும் நேயம் மனதை பிசைகிறது. வேடப்பர் பேசும் ஒரு சொற்றொடரை இங்கு தருகிறேன். கிராமங்களில் மக்கள் தங்கள் குலதெய்வங்களை இறை எங்கிற ஒரு நிலையை தாண்டி ஒரு பாசப் பிணைப்புகளுடனேயே வாழ்வதை வெகு அழகாக இச்சிறுகதையில் உணரலாம்.

வேடப்பர் பேசும் வசனம் :
“நம்ப சனங்க கஷ்டத்திலியும் நஷ்டத்திலியும் இடிபட்டுக்கிட்டுக் கெடக்கறப்ப, நமக்கு மட்டும் என்னா தூக்கம் வேண்டிக்கெடக்கு…”

வேடப்பருக்கும் குதிரைக்குமான உறவு வெகு அழகாக காட்டப்பட்டிருக்கிறது. காலம் எப்படியெல்லாம் மாறிவிட்டது என குதிரை நினைத்துப் பார்க்கும் நிகழ்வில் மக்கள் எப்படி மாறிவிட்டிருக்கிறார்கள் என்பது வெகு எளிமையாக படம் பிடித்துக்காட்டப்பட்டிருக்கிறது. 

வேடப்பரிடம் கோபித்துக்கொள்ளும் மனிதனின் செயலாக ஒரு வசனம் :
“என்னமோ ஒலகத்துல எவனும் செய்யாத தப்ப செய்ஞ்சிட்டான்னு என்னா ஏதுன்னு கேக்காம எடுத்த எடுப்புல கையக்கால இழுத்துட்டுது இந்த வேடப்பரு.”

இந்த வசனங்களையெல்லாம் பாருங்க, இந்த கிராமத்து மனிதர்களுக்கும், கடவுள்களுக்கும் இடையில்தான் எவ்வளவு அழகான ஒரு உறவு நிலை இருந்திருக்கிறது. ஆழமான பற்றுதலும், நெருக்கமும், அழகான உறவும், கடவுள்களிடத்தில் அவர்கள் கொள்ளும் உரிமையும் எண்ணிப்பார்க்க எவ்வளவு இரம்மியமாக இருக்கிறது.! கற்பனைகளில் ஒரு பேரானந்தம்.!

குதிரை, வேடப்பரை எழுப்ப முனையும்போது, வேடப்பர் விழித்துக்கொள்வது செம்மையான இரசனை. குதிரை பயணிக்கும் வேகத்தை சொர்க்கோர்வைகளில் மனக்கண்ணில் அழகாக நிகழ்வின் விறுவிறுப்பும் படபடப்பும் மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

வேடப்பரின் மனம் தன் தவறை எண்ணி துடித்துக்கொண்டே இருக்கிறது. தான் கடைசி நேரம் வரை பிராதை காணாமல் விட்டதை எண்ணி வெடிக்கிறார். குல கடவுளின் மனம் எவ்வளவு இளகியதாக இருக்கிறது பாருங்கள்.! தன் மக்களைப் பற்றி நன்கு உணர்ந்துள்ள வேடப்பர் குதிரையிடம் பேசும் இன்னொரு வசனம், இதோ:

“ஒனக்கு இந்த பொம்னேட்டிவுள பத்தி ஒண்ணும் தெரியாது. நொடிக்கு நொடி அவளுவுளுக்கு யோசன மாறும். அதனாலதான் எனக்கு அடிச்சிக்கிட்டுக் கெடக்கு. அதிலியும் ஆதுபாது அத்தவ அவ. மனங்கெட்டாப்ல ஒண்ணு…” அதற்கு மேல் அவரால் சொல்ல முடியவில்லை.

வேடப்பரும் அவர் சார்ந்த நிகழ்வுகளும் கற்பனை என்றாலும், தனமணி அம்மாளை சார்ந்த நிகழ்வுகள் அனைத்தும் எதார்த்தம்.  தனமணி மகள் அவளுடைய அண்ணன் மகனை விரும்புவதை அரசல்புரசலாக கேள்விப்பட்டு, மகள் செல்வராணியிடம் பேசும் வசனமாகட்டும், தனமணிக்கும் அவளுடைய அண்ணிக்கும் இடையேயான உரையாடலாகட்டும் அனைத்தும் யதார்த்தத்தை, இயல்பை அப்படியே தாங்கி வருகிறது.

" எனக்குன்னு யாரு இருக்கா அண்ணி? ஒங்கள வுட்டா எங்களுக்கு நாதி யாரு? எனுமோ களகாம்பு வெட்டி அஞ்சி பவுனு குருவி சேக்கற மாதிரி சேத்துவச்சிருக்கேன்...".
" என்னா நொள்ள அஞ்சி பவுனு. ஏம் முந்திரியில ஒத்த சிம்பு காய்க்கும் அது. " அண்ணிக்காரி ஓடரித்தாள்.

அடுத்து,

"நொட்டனா மாமனதான் நொட்டுவன் இல்லனா உயிர மாய்ச்சிக்குவன்னு சவடால் மயிறு வேற. தே பூட்டுது. வேடப்பன் பாப்பான்னு நடையா நடந்தன. சூத்து பெரிசா இருக்கற பொம்னேட்டி எழுதிக் கட்டியிருந்தா இந்நேரம் வந்து பாத்துருப்பான். என்னப் பாத்தா அவனுக்கு எளக்காரமா இருக்கு போல்ருக்கு."

கடுப்பாயிட்டா கடவுளா இருந்தாலும் மரியாதை கிடையாது.  "அந்த கடவுளுக்கு என்ன கண்ணா அவிஞ்சி போச்சுனு" சர்வ சாதாரணமாக நடுநாட்டு கிராமாங்களில் பேச கேட்கலாம்.  இப்படி கடவுளுக்கும் மக்களுக்கும் இடையேயான பாசமும், கோவமும், உரிமையும் வெகு இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.  பேராற்றல் கொண்ட மனிதர்கள் இந்த கடவுள்கள்.

இச்சிறுகதையின் உச்சக்கட்டம் வேடப்பரின் "சலங்கை சத்தம்".  இது கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் இம்மாதிரியான சலங்கை சத்தத்தைக்  கேட்க முடியும்.  இச்சிறுகதையை எளிதாக கற்பனை என்று கடந்துவிட முடியவில்லை. ஏனெனில் இயல்பில் இன்னமும்கூட இப்படிதான் அழகாக இருக்கின்றன சில கிராமங்கள்.

மற்றுமொரு முக்கிய சேதி, வேடப்பர் திருடனை கண்டுபிடித்து, அவன் மீது ஆந்திரங்கொண்டு வாள் வீசும் முன் சுதாரித்து முந்திக்கொண்டு திருடனை கண்டிப்பதுவும், அதற்கு சொல்லப்படும் காரணமும் மிக அருமை.

சிறப்பான ஒரு படைப்பு. நிச்சயம் படிக்கலாம்.

நன்றி.

==================================================
நூல் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய இடம் :

தமிழினி
67, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 14.
மின்னஞ்சல் : tamizhininool@yahoo.co.in
இணையதளம்:  www.tamizhini.com

இணையம் வழியாக பெற பின்வரும் இணைப்புகளை சொடுக்கவும்:
உடுமலை.கொம்   => https://www.udumalai.com/poorani-porkalai.htm
நூல் உலகம்      => http://www.noolulagam.com/product/?pid=27057#details

செவ்வாய், 7 மார்ச், 2017

1952 - இராமசாமி படையாட்சியார் - வன்னியர்கள்



படிக்கட்டு 2: யார் இந்த வன்னியர்கள்?

பிராந்தியத்துக்கு ஒரு பெயர் வைத்து இருக்கும் பல்வேறு இனங்களில் ஒன்று வன்னியர் இனம். தமிழ்நாட்டின் வடமாவட்டங்களே இவர்களுடைய பூர்வீகம். விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் வன்னியர்களை கவுண்டர்கள் என்று அழைப்பார்கள். இதுவே கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் படையாட்சிகள் என்பார்கள். சேலம் தர்மபுரியிலும் வன்னியர்கள். கொங்கு மண்டலத்தில் குறைந்த அளவிலும் வன்னியர்கள் இருக்கிறார்கள். அங்கே கவுண்டர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள்.
(சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வன்னியர்கள் நாயகர்/நாயக்கர் என்று அழைக்கப்படுகிறார்கள். கோபால் நாயக்கர், செங்கல்வராய நாயக்கர், ஆயிரங்கானி ஆளவந்தார் நாயகர் போன்ற பிரபலமான கொடை வள்ளல்கள் நாயகர்/நாயக்கர் பட்டம் கொண்ட வன்னியர்கள் ஆவார்கள்.)

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் நீக்கமற நிறைதிருக்கும் வன்னியர்களுக்கு, அரசர்கள் காலத்தில் தரப்பட்டிருந்த வேலை என்ன தெரியுமா? படைகளில் அணிவகுத்து நிற்க வேண்டும். மன்னர் அல்லது தளபதியின் வாயிலிருந்து, ‘ம், புறப்படுங்கள்என்ற வார்த்தைகள் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். வந்தும் குத்தீட்டி, வேல் கம்புடன் எதிரிகளோடு சண்டை போட தொடங்கிவிடுவார்கள். போர் முடிந்ததும் அரசர் கொடுக்கும் சம்பளம், மானியங்கள், பரிசுகள் இன்னபிறவற்றோடு திருப்தியடைந்து விடுவார்கள்.
(அதாவது வன்னியர்கள் போர்குடிகள், அரசர்கள் காலத்திய இராணுவம். கடுமையான பயிற்சிகளுடன் எப்போதும் போருக்கு தயார் நிலையிலேயே இருப்பார்கள். அரசன் சொல்லே அவர்களின் வேதவாக்கு. )

காலச்சக்கரத்தின் வேகத்தில் முடியாட்சிகள் மறைந்தன. மக்களாட்சி வந்தது. படைகளை ஆட்சி செய்து, யுத்தகளத்தைத் தவிர வேறு எந்தக் களத்திலும் வேலை செய்யத் தெரியாதவர்களாக இருந்தது அவர்களுடைய எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியது.

வன்னியர்கள் இப்படி ஒருபக்கம் எதிர்காலத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்க, வட மாவட்டங்களில் வசித்துக்கொண்டிருந்த ரெட்டியார்கள், முதலியார்கள், நாயுடுகள் பெரிய பெரிய நிலச்சுவான்தாரர்களாக, மிட்டா மிராசுகளாகக் கோலொச்சிக்கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு பண்ணையார் வசமும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைநிலங்கள், தோட்டங்கள் இருந்தன. ஆனால், வன்னியர்கள் வசம் இருந்ததோ வெட்டரிவாளும் வேல்கம்புகளுமே. அவற்றை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இனி வேறுவழியில்லை. பண்ணையார்களாகப் பகட்டாக வாழ்ந்துகொண்டிருக்கும் மிட்டா மிராசுதார்களிடம் போய் வேலை கேட்டு நின்றனர்.

இப்படித்தான் தொடங்கியது படையாட்சிகள் அல்லது வன்னியர்களின் வாழ்க்கை மாற்றம். போர்க்களத்தில் வீரம் காட்டியவர்கள், களத்துமேட்டில் இறங்கினர். ஆட்களை வெட்ட அரிவாள்களைத் தூக்கியவர்கள், நெற்கதிர்களை அறுக்க தொடங்கினர். முன்னுதாரணமாக படைகளில் பவனி வந்தவர்கள் முந்திரிக்காட்டுக்குள் பிரவேசிக்கத் தொடங்கினார்கள்.

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த சமயங்களில் எல்லாம் வன்னியர்களுக்கு சமுதாயத்தில் பெரிய அளவில் எந்த விதமான மரியாதையும் இல்லாத சூழல். கல்வி, வேலைவாய்ப்பு, சமுக உரிமை என்று எதுவுமே தங்களுக்கு கிடைப்பதில்லை என்ற வருத்தம் வன்னியர்களை ஆக்கிரமிக்க தொடங்கியது.

பழைய தலைமுறை வன்னியர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சமயத்தில் புதிய தலைமுறை இளைஞர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதையும் புறக்கணிக்கப்படுவதையும் நினைத்து ஆத்திரப்பட்டனர்.

வெறுமென அடிதடிக்கும் வன்முறைக்கும் மாத்திரமே அரசியல்வாதிகள் வன்னியர்களை பயன்படுத்தவது அவர்களை பொங்கியெழ வைத்தது குறிப்பாக தேர்தல் சம்யங்களில் வன்னியர்களை எல்லாம் அழைக்கும் வேட்பாளர்கள்.

கட்சிப் பிரமுகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையைப் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். ‘நீங்கள்லாம் கொடி கட்டுங்க. நீங்க துண்டுசீட்டு விநியோகம் பண்ணுங்க. அவங்கள்லாம் போஸ்டர் ஒட்டட்டும்.’ அத்தனையும் எடுபிடி வேலைகள்.

தேர்தல் முடிந்த பிறகு விடிய விடிய வேலை பார்த்த வன்னியர்களுக்கு மிஞ்சுவது இலவச சாராயமும் கொஞ்சம் பணமும் மட்டுமே. ஆண்டுகள் மாறினாலும் தேர்தல்கள் மாறினாலும் இதுதான் நிலைமை.

தொடர்ந்து மனப்புழுக்கத்திலேயே இருந்துவந்த வன்னியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் குரலெழுப்பினார் ஒருவர். பெயர், ராமசாமி. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவரை மரியாதை நிமித்தம் ராமசாமி படையாட்சியார் என்றுதான் வன்னியர்கள் அழைத்தனர்.


‘தொடர்ந்து புறக்கணிப்புக்கு ஆளாகும் வன்னிய இன மக்களுக்கு, வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவதுதான், என்னுடைய நோக்கம்’ என்று அறைகூவலிட்ட ராமசாமி, உடனடியாக அரசியல் இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். அதன் பெயர்,’உழவர் உழைப்பாளர் கட்சி‘.

முழுக்க முழுக்க உடலுழைப்பை மாத்திரமே நம்பியிருக்கும் என் மக்களுக்கான பாதையை நானே காட்டுவேன் என்று பேசினார் ராமசாமி. அவருடைய வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஏராளமான வன்னியர்கள் ராமசாமியின் இயக்கத்தில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள தொடங்கினர்.

அடுத்து வந்த தேர்தலில் உழவர் உழைப்பாளர் கட்சி களம் கண்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் காமராஜ். தென்னாற்காடு மாவட்டம் என்ற பெயரில் அப்போதைய வட மாவட்டங்கள் ஒருங்கிணைந்து இருந்தன.

மொத்தம் பதினெட்டு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார் ராமசாமி. அவர்களில் ராமசாமியும் ஒருவர். எந்தக் கட்சியும் இவருடன் கூட்டணி அமைக்கவில்லை. இவரும் கூட்டணிக்கு முயற்சிசெய்யவில்லை. தனித்தே களம் கண்டார்.

தேர்தல் முடிவுகள் ராமசாமியை ஆச்சரியப்படுத்தியதா என்று தெரியாது. ஆனால், உண்மையிலேயே காமராஜ் ஆடிப் போனார். காரணம், போட்டியிட்ட பதினெட்டு இடங்களில் ஒன்றைத் தவிர அனைத்திலும் வெற்றி பெற்றிருந்தனர் ராமசாமி நிறுத்திய வேட்பாளர்கள்.

அவ்வளவுதான். நம்முடைய சமுதாயத்துக்கு மீட்பர் கிடைத்துவிட்டார் என்று ஆனந்தப்பட்டனர் வன்னியர்கள்.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ வன்னியர்களின் வாக்கு வங்கியை நினைத்து யோசனையில் மூழ்கியது. வன்னியர்களுக்கு இவ்வளவு பெரிய வாக்குவங்கி வட மாவட்டங்களில் இருக்கும் என்று தெரிந்திருந்தால் அவர்களை நம் அணியிலேயே வைத்திருக்கலாமே என்று நினைத்தது. வெறுமனே நினைத்துக்கொண்டிருக்காமல் உடனடியாகக் காமராஜைக் களத்தில் இறக்கியது.

‘இங்கே வந்துவிடுங்கள் படையாட்சியாரே, உங்கள் சமுதாயத்தின் அத்தனை இன்னல்களையும் களைத்தெறிந்துவிடலாம். கூடவே, உங்களுடைய சமுதாயத்தைக் கௌரவப்படுத்தும் விதமாக, உங்களுக்கு அமைச்சர் பதவியையும் தருகிறோம்’ என்றார் காமராஜ்.
(காமராஜரும் சாதி அரசியல்தான் செய்திருக்கிறார். எளிய மனிதர் காமராஜர் என்று ஏமாந்துவிட்டார் படையாட்சியார், காமராஜரும் அரசியல்வாதிதான் என்பதை உணராமல்.)

ஆளுங்கட்சியே வலிய வந்து அழைக்கும்போது ராமசாமி மறுத்துப் பேச விரும்பவில்லை. அதேசமயம் அழைப்பு விடுத்தவர் காமராஜ் என்பதால், உடனடியாக உழவர் உழைப்பாளர் கட்சியையும் காங்கிரஸ் கட்சியோடு இணைத்துவிட்டார். அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.


தங்களுடைய மீட்பர், அமச்சர் அவதாரமும் எடுத்துவிட்டதால், இனி வன்னிய சமுதாயம் முன்னேர்ரப் பாதையில் பயணத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்த்தனர் வன்னியர்கள்.

ஆனால், வன்னியர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. ராமசாமி படையாட்சியாரும் காங்கிரஸ் என்ற கடலில் தன்னைக் கரைத்துக்கொண்டார்.
(இதே காலகட்டத்தில் காமன்வீல் கட்சியை தொடங்கிய தேர்தலில் நின்று வெற்றிபெற்ற ஐயா மாணிக்கவேலு நாயக்கரைப் பற்றி ஏன் இங்கு குறிப்பிடப்படவில்லை என்று தெரியவில்லை! ஒருவேளை அவருக்கு இது தெரியாமலுமிருந்திருக்கலாம். தென்னாற்காடு பற்றி எழுதியவர் ஏனோ வடாற்காடு பற்றி எழுதவில்லை! )

உரிமைக்குரலை அழுத்தந்திருத்தமாக எழுப்புவதற்கு எவருமே தயாராக இல்லாத சூழல் உருவானது. வெறுப்படைந்த வன்னியர்கள், மீண்டும் பழைய ‘புறக்கணிப்பு’ புராணத்தையே பாடத் தொடங்கினார்கள். மீண்டும் ஒரு தலைவர் தங்களைக் காப்பாற்ற வருவாரா என்று ஏக்கப்பெரு மூச்சுவிடத் தொடங்கியது வன்னியர் சமுதாயம்.


தலைவர் வருவார்… அடுத்த பதிவில்…



குறிப்பு : பா.ம.க  கட்சிகளின் கதை - 3 எனும் புத்தகத்திலிருந்து எனும் புத்தகத்திலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு தேவையில்லை என்று தோன்றிய சில பத்திகளை நீக்கியிருக்கிறேன். பதிவில் நீல நிற எழுத்துக்களில் உள்ளவைகள் என் கருத்துக்கள்.

நன்றி : கூகிள் (படம்)
நன்றி : பா.ம.க  கட்சிகளின் கதை - 3, "miniMAX", ஆர்.முத்துக்குமார்