வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
கார்த்திகை தீபத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதலாமென்றிருந்தேன், கால சூழல் எழுத
முடியாமல் போயிற்று. இருப்பினும் இந்த தீபத் திருநாளையொட்டி நடந்த ஒரு வரலாற்று
நிகழ்வை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன். இந்தப் பதிவை அதிக தகவல்களுடன் எழுதலாமென
நினைத்திருந்தேன் அதுவும் முடியாமல் போயிற்று.
சரி, இனி பதிவிற்க்கு போகலாம்.
திருவண்ணாமலை தீபம் – மோலாண்டிகுப்பம் (அழகப்ப சமுத்திரம்)
மோலாண்டிக்குப்பம் எனும் அழகப்ப சமுத்திரம் எங்கள் ஊருக்கு(கீழூர்) அருகிலுள்ள
மற்றொரு கிராமம். பல ஆண்டுகளுக்கு முன்பு அவ்வூரிலிருந்த ஒரு குடும்பத்தார்
அண்ணாமலையார் தீபம் காண திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர். அவ்வீட்டில் கர்ப்பிணி
ஒருவர் இருந்தார். அவரை அழைத்து செல்ல முடியாது என்பதால் அவரை வீட்டிலிலேயே
விட்டுவிட்டு புறப்பட தயாராயினர். ஆனால் அவருக்கோ தீபம் காண அளவில்லாத ஆசை.
வீட்டார் அனைவரும் தீபம் காண திருவண்ணாமலைக்கு புறப்பட்டுவிட்டனர்.
வீட்டிலிருந்த அப்பெண்மணிக்கு ஒரு யோசனை வந்தது எப்படியாவது தான் தீபத்தை
கண்டேயாவது என முடிவெடுத்தார். அதற்காக ஒரு குன்றினை ஏற்படுத்தி அதன் மீது நின்று
தீபத்தை காண்பதென முடிவெடுத்து அதன்படி ஆட்களை அமர்த்தி குன்றினை அமைக்கலானார்.
தீபமேற்றும் நாளுக்கு முன்னதாக குன்று அமைக்கப்பட வேண்டுமென்று வேலை
படு வேகமாக நடந்தது. நினைத்தபடியே வேலையும் முடிந்தது. அக்குன்றின் மீது ஏறி நின்று
அவர் தீபத்தை கண்டு களித்து அண்ணாமலையாரின் அருள் பெற்றார்.
குன்று அமைப்பதற்க்காக வெட்டப்பட்ட இடம் இன்று ஒரு குளமாக
காட்சியளிக்கிறது. நான் அவ்வூருக்கு செல்லமுடியாத காரணத்தால் மேலதிக தகவல்களை பெற
முடியவில்லை என்பது சற்று வருத்தமாகவே இருக்கிறது.
பெயர் தெரியா மரமும் 7 உரிகளும் :
அதே ஊரில் இருப்பதுதான் இந்த பெயர் தெரியா மரம். இம்மரத்தின் அடிவாரத்தில்
ஒரு சிறு கோவில் உள்ளது. எங்க பெரிய ஆயா(எங்க ஆயாவிற்க்கு அக்கா) எப்பவுமே அந்த கோயிலிலேயேதான்
இருப்பாங்களாம். மிகவும் தைரியசாலி. எந்நேரமானாலும் எங்க ஊருக்கு முந்திரி
காடுகளின் வழியே நடந்தே வந்துவிடுவார். ஒரு முறைகூட இவரை “முனி” சுத்தலில் விட்டதில்லை.
சுருக்கு பையில் எப்போதும் விபூதி இருக்கும். சிறந்த இறை நேசர். எனக்கு அவங்கள
ரொம்ப புடிக்கும். அவர் இறந்த்தை கூட அவர்கள் அண்ணன் தம்பி சண்டையால் எங்களுக்கு
அறிவிக்காமல் விட்டுவிட்டனர். அவர் எனக்கு சொன்னதுதான் இந்த பெயர் தெரியா மரத்தின்
கதை.
அது ஒரு பெரிய மரம். அம்மரத்தின் காய்கள் முருங்கைக்காயை போல
இருக்குமாம். எத்தனையோ வெளி நாட்டு அறிஞர்களெல்லாம் வந்து பார்த்தும் அம்மரத்தின்
பெயரை சொல்ல முடியவில்லையாம்.
அம்மரத்தில் ஏழு உரிகள் இருக்கிறதாம் அம்மரத்தின் பெயரை சொன்னவுடன்
அவைகள் கண்களுக்கு புலனாகுமாம். எவர் ஒருவர் அம்மரத்தின் பெயரை சரியாக
கூறுகின்றாரோ அவருக்கே அம்மரத்தில் இருக்கும் புதையல்(உரிகள்) சொந்தமாகும்
என்பதுதான் அங்கு நிலவி வரும் கூற்று. இதுவரை எவரும் அம்மரத்தின் பெயரை சொன்னதாக
எனக்கு எந்த தகவலும் இல்லை.
குறிப்பு : இப்பதிவில் இடம்பெற்றிருக்கும் தகவல்களைப்பற்றி உங்களுக்கு
ஏதேனும் தெரிந்திருந்தால் அல்லது நான் ஏதேனும் தவறான தகவலை தெரிவித்திருந்தால்
அன்புகூர்ந்து தெரியபடுத்தவும்.