செவ்வாய், 12 அக்டோபர், 2010

தமிழ்த் தாய் வாழ்த்து

தமிழ்த் தாய் வாழ்த்து
********************

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்


தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.


                   - பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை

தமிழ்த் தாய் வாழ்த்து
********************

அன்னை மொழியே
      அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
      முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
      கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
      மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே!
      திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே!
      எண்தொகையே ! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே!
     மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
     முடிதாழ வாழ்த்துவமே!
சிந்தா மணிச்சுடரே!
       செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும்
       தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில்
      சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர்
      மூத்த சுமேரியத்தார்
செந்திரு நாவில்
     சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே !
     சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே!
      நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர்
      வாழ்த்தி வணங்குவமே
                         - பாவலரேறு  பெருஞ்சித்திரனார்

தமிழ்த் தாய் வாழ்த்து
********************

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
-------------------------------------------
வாழ்க நிரந்தரம் வாழ்கதமிழ் மொழி
வாழிய வாழியவே.
வான மளந்த தனித்து மளந்திடு
வண்மொழி வாழியவே.
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே.
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே.
சூழ்கலி நீங்க தமிழ் மொழி யோங்கத்
துலங்குக வையகமே.
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே.
வாழ்கதமிழ் மொழி வாழ்கதமிழ் மொழி
வாழ்கதமிழ் மொழியே
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே.
                  -மகாகவி பாரதியார்


  இன்று முதல் இனிதாய் ஆரம்பமாகிறது எனது பதிவுகள்...